அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை... கலக்கும் கட்டம்போட்ட சேலைகள்!
நளதமயந்தி காலம் முதல் நயன்தாரா வரையிலும் கூட இன்றும் கம்பீரமாக நிற்கின்றன இந்த கட்டம் போட்ட சேலைகள். கண்டாங்கி முதல் மாடர்ன் ப்ரொஃபஷனல் வரையிலும் கூட இப்போதும் எப்படி இவை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன..? எப்படி சாத்தியம்..?
 பொதுவாகவே ஆண், பெண் என இருவரிலும் இந்த கட்டம் போட்ட சேலைகளும், கட்டம் போட்ட சட்டைகளும் எக்காலத்திலும் டிரெண்டு மாறாமல் இருப்பதற்கு என்ன காரணம்..? ‘‘சதுர வடிவம் எப்போதுமே ஒரு சீரான தெளிவான வடிவமா நம்ம கண்ணுக்கு தெரியும். இந்த வடிவத்தை உடைகள்ல கொண்டு வரும்பொழுது ஒருவித கம்பீரமும், தனித்துவமும் தானாகவே வந்துடும்.
 அதிலும் இந்திய பாரம்பரிய உடைகள் அப்படின்னாலே சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம்... இப்படியான பளிச் கலர்கள்தான். ஒரே உடையில் இரண்டு முதல் ஐந்தாறு கலர்கள் வரையிலும் கூட பயன்படுத்தி ஒரு மெட்டீரியலை உருவாக்கலாம் அப்படின்னா அது கட்டம் போட்ட மெட்டீரியல்களால மட்டும்தான் முடியும்...’’ என்றபடி புன்னகையுடன் பேசத் தொடங்கினார் டிசைனர் அனந்தலட்சுமி.
 ‘‘மத்த எந்த டிசைன்கள்லயும் இந்த அளவுக்கு கலர்களை தெளிவா காட்ட முடியாது. அதேபோல கட்டம் போட்ட சேலைகள்ல பிளவுஸ்க்கு நாம மெனக்கெட வேண்டிய அவசியமே இல்லை. பெரும்பாலும் பிளைன் சிம்பிள் பிளவுஸ் மேட்ச் செய்தாலே புடவை கலர்ஃபுல்லா இருக்கிறதால கிராண்ட் லுக் கொடுத்திடும். அதேபோல வீட்டில் விசேஷம் அல்லது ஒரு கல்யாண வீடு அப்படின்னா பிளவுஸ்களில் ஆரி வேலைப்பாடுகள், எம்ப்ராய்டரி, புடவையில் ஜமிக்கி ஜரிகை... என எதுவுமே இல்லாம வெறுமனே காட்டன் மற்றும் பல கலர்களைக் கொண்டு கூட்டத்தில் பளிச்சென தெரிய முடியும்.
 கட்டம் போட்ட சேலையில் மட்டும்தான் கண்டாங்கி சேலையும் கட்டலாம். அதேசமயம் நல்ல ப்ரொஃபஷனல் பொண்ணுங்க மாடர்ன் லுக்கிலும் கூட இந்த புடவையை கட்டலாம். சின்னச் சின்ன கட்டங்கள் தொடங்கி, உடலின் பாதி பகுதியைக் கூட மறைக்கக் கூடிய ஒரு பெரிய கட்டம் அப்படின்னு இந்த புடவைகள் நிறைய சைஸ் கட்டங்களுள்ள டிசைன்கள் மற்றும் நிறைய கலர்கள்ல வருது.
 இடையிலே திடீர்னு ஒண்ணு ரெண்டு வருஷம் மட்டும் இந்த பாஸ்டல் கலர்கள் பீச், பெய்ஜ் மாதிரியான வெளிர் கலர்கள் டிரெண்ட் ஆச்சு. அந்த சமயம் மட்டும் இந்த கட்டம் போட்ட சேலைகள் ட்ரெண்ட் கொஞ்சம் குறைஞ்சது. மறுபடியும் பளிச் கலர்கள் படையெடுக்க ஆரம்பிச்ச உடனே இந்த கட்டம் போட்ட சேலைகளும் தன்னுடைய இடத்தை தக்க வச்சிக்கிச்சு. அந்தக் காலத்துல கைத்தறியில் பெரிய டிசைன்களோ அல்லது நுணுக்கமான மிஷின் பிரிண்டிங் முறையோ எதுவும் கிடையாது. நெசவாளர்களுக்கு கொஞ்சம் சுலபமான டிசைன் அப்படின்னா இந்த கட்டங்கள்தான்.
அதனாலேயே கூட கைத்தறி உடைகள் நெசவு மெட்டீரியல்கள் அப்படின்னாலே அந்தக் காலத்தில் இருந்து இப்போ வரையிலும் இந்தக் கட்டங்களுக்கு தனிச் சிறப்பு உண்டு...’’ என அனந்த லட்சுமி முடிக்க, கட்டம் போட்ட சேலைகளுக்கு ஸ்டைலிங் மற்றும் நகைகள் எப்படி அணியலாம் எனத் தொடர்ந்தார் ஸ்டைலிஸ்ட் லோகேஸ்வரி புருஷோத்தமன். ‘‘கழுத்து நிறைய நகை, மூக்கில் பெரிய மூக்குத்தி, பெரிய ஜடை, தலை நிறைய பூ... இதெல்லாம் கண்டாங்கி சேலை பெண்கள் முதல் வீட்டு விசேஷத்திற்கு ரெடி ஆகும் ஹவுஸ் வைஃப் வரையிலும் போட்டுக்கலாம்.
அதை ஆபீசுக்கு போகும் பெண், ஆபீஸில் ஒரு மீட்டிங் என்றால் போட் நெக் பிளவுஸ், கூட இந்த கட்டம் போட்ட சேலை, ஒரு சின்ன சிம்பிள் செயின் மற்றும் காதில் சின்ன தோடு போட்டுக்கொண்டு தலைமுடியை லூசாக விட்டுவிட்டு சென்றாலே ஹை ப்ரொஃபைல் லுக் கிடைக்கும். அனந்தலட்சுமி சொன்ன மாதிரி கட்டம் போட்ட சேலைகளுக்கு பெருசா மெனக்கெட்டு நாம் எதுவுமே செய்ய வேண்டாம். நம்ம ஸ்டைல் என்னவோ அதையே ஃபாலோ செய்து எந்த நகைகள் போட்டுக்கிட்டாலும் எப்படி ஹேர் ஸ்டைல் செய்துக்கிட்டாலும் அதுக்குன்னு ஒரு தனித்துவத்தை கொடுத்திடும்.
சிங்கிளாக புடவையை விட்டுவிட்டு ஒரு சின்ன சாண்டல் ஹீல் போட்டு நடந்தால் ஆபீஸில் உயரதிகாரி தோரணை ஒட்டிக்கொள்ளும்...’’ கண்சிமிட்டியபடி லோகேஸ்வரி முடிக்க அவர் சொன்ன ஸ்டைலிங் விபரங்களுடன் மேக்கப் டிப்ஸ்களை இணைத்தார் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மற்றும் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆன சீதா. ‘‘பொதுவாகவே எந்த மேக்கப் கட்டுக்குள்ளேயும் அடங்காதது இந்த கட்டங்கள்தான். யார் என்ன கேரக்டரோ... யார் எப்படிப்பட்ட ஸ்டைலை ஃபாலோ செய்வார்களோ... அவங்கவங்க ஸ்டைலுக்கு இந்த கட்டம் போட்ட சேலை தன்னை மாத்திக்கும்.
நல்லா எண்ணெய் தடவி சீவி, சும்மா முகத்தை கழுவி குங்குமத்தில் பொட்டு வெச்சு, தலை நிறைய பூ வைத்து இந்த புடவையைக் கட்டிட்டு போனால் பழங்கால சோழ தேசத்து பெண்களுக்கே நாம் சவால் விடலாம். அதே சமயம் புடவைக்கு ஏத்த மாதிரி பிரைட் நிறத்தில் ஐஷேடோ, பளிச் கலரில் லிப்ஸ்டிக், முகத்தின் வடிவத்தை ஹைலைட் செய்யும் மேக்கப் என போட்டுக் கொண்டால் பார்ட்டி முதல் திருமணம் வரை நாமதான் ஹீரோயின். இதுவே சிம்பிள் மேக்கப் உடன் லைட் கலரில் லிப்ஸ்டிக், ஒரு சின்ன பொட்டு வச்சுகிட்டால் ஆபீஸ் மீட்டிங்கில் நாமதான் கெத்து.
ஹேர் ஸ்டைலும் அப்படித்தான். நம்ம பாட்டி எல்லாம் அள்ளி முடிஞ்சு கொண்ட... போட்டு தூக்கி செருகி கண்டாங்கி சேலை கட்டியதை பார்த்திருப்போம்.அப்போதெல்லாம் புடவை கட்ட ஊக்கு, பின் இதெல்லாம் பயன்படுத்தவே மாட்டாங்க. எதுவுமே இல்லாமல் அவ்வளவு நீட்டா புடவை கட்டுவாங்க. அதிலும் இந்த கட்டம் போட்ட சேலை கட்டும் பொழுது மடிப்பு சரியா வைக்கலைனா கூட இந்த கட்டங்கள் அது தெரியாத அளவுக்கு மறைச்சிடும்.
நீண்ட ஜடை, கொண்டை, அள்ளி முடிஞ்ச தேங்காப்பூ கொண்டை... அதைச் சுத்தி மல்லிகைப்பூ... இதெல்லாம் கிராமத்து அல்லது வீட்டு விசேஷ லுக்குகள் எனில் பக்கவாட்டில் பின்னப்பட்ட சைட் ஃபிஷ் டெயில், ஹை ஹாஃப் போனி, லூஸ் ஹேர், ஃபிரெஞ்சுபிளேட்... இதெல்லாம் நகரத்து ஸ்டைல் ஹேர் ஸ்டைல்களா போட்டுக்கலாம். உங்க ஸ்டைல் என்னவோ அந்த ஸ்டைலுடன் இந்தக் கட்டம் போட்ட சேலைய மேட்ச் செய்யுங்க. எல்லாருக்கும் கலக்கல் லுக் கொடுக்கும்...’’ புன்னகைக்கிறார் சீதா. மாடல்கள்: லோகிதா கண்ணன், மேகலா, ரோஷிகா, எலிசபெத் ஷிப்ரா, சாரிகா ஜெகதீஷ்.
மாடலிஸ்ட்: சஃபி பேர்ரி.
செய்தி: ஷாலினி நியூட்டன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|