முதல் சம்பளம் ரூ.250...இன்று இந்தியாவின் ஃபேமஸ் ஹேர் ஸ்டைலிஸ்ட்!



‘‘சலூனில் கீழே விழுற முடிய கூட்டித் தள்ளிவிடுவேன். என்னுடைய முதல் சம்பளம் வெறும் ரூ.250. ஆனால், இன்னைக்கு...’’ இப்படி ஆரம்பித்து அவர் சொல்லும் விஐபிகளின் லிஸ்ட்டும், படங்களின் பட்டியலும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன. ‘வாரணம் ஆயிரம்’, ‘காப்பான்’, ‘கபாலி’, ‘காலா’ தொடங்கி ‘இந்தியன் 2’ வரை ஜாமி ஃபெர்னாண்டோ மற்றும் அவரது தலைமையிலான குழுதான் ஹேர் ஸ்டைலிஸ்ட்டுகள்.

இந்தியாவிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய ஹேர் ஸ்டைலிஸ்ட்டுகள் வரிசையில் ஜாமி மிகவும் முக்கியஸ்தர். அபிஷேக், ரன்பீர் தொடங்கி, பெரும் அரசியல் புள்ளிகள் வரையிலும் கூட ஜாமியின் டைமிங்கிற்காகக் காத்திருக்கிறார்கள். ‘‘சொந்த ஊர் சென்னைதான். இங்கேதான் பிறந்து வளர்ந்தேன். படிப்பெல்லாம் ஆறு, ஏழு தாண்டல. என்னைய படிக்க வைக்க எவ்வளவோ முயற்சி செய்தாங்க. ஆனாலும் எனக்கு அதிலே இன்ட்ரஸ்ட் இல்ல.

எங்க வீட்ல எல்லாருமே நல்லா படிச்சு செட்டில் ஆனவங்க. என் அப்பாவுடைய நண்பர் ஹபிபுல்லா ரோட்ல ‘சலூன் நயனா’ அப்படின்னு ஒரு சலூன் ஓபன் செய்தார். அதுதான் தமிழ்நாட்டிலேயே முதல் யுனிசெக்ஸ் சலூன். அதுவரை பெண்களுக்கு பார்லர், பசங்களுக்கு சலூன், ஹைடெக் பார்லர் - சலூன் எல்லாம் பசங்களுக்குக் கிடையாது.
1990கள்ல அந்த சலூன் நயனாவில் எனக்கு வேலை. இந்த வேலையிலேயும் எனக்கு பெரிய ஆர்வம் எல்லாம் இல்லை. என் அப்பா கிட்ட நான் சொன்னேன், இந்த வேலை பிடிச்சிருந்தா நான் தொடர்ந்து வேலை செய்வேன், இல்லைன்னா வந்திடுவேன்னு சொல்லியிருந்தேன்.

வீட்டிலே கடைக்குட்டி என்கிறதால் செல்லம் அதிகம். ஒரு கட்டத்தில் செல்லப்பிள்ளை, தலைவலி பிள்ளையா மாறிட்டேன். ரொம்ப அட்டகாசம். வீட்ல காசெல்லாம் எடுத்துட்டுப் போயி ஊர் சுத்த ஆரம்பிச்சிட்டேன். ‘இவன என்ன செய்யப் போறோம்’னு அப்பாவுக்குக் கவலை. ஏன்னா என்னுடைய அக்கா, அண்ணா எல்லாரும் நல்லா படிச்சு வெளிநாடுகள்ல செட்டில் ஆகிட்டாங்க. நான் என்ன ஆகப்போறேன்னு அப்பாவுக்குக் கவலை.

அதனால் அவருடைய நண்பர்கிட்டே சொல்லி என்னை வேலைக்கு சேர்த்துவிட்டார்...’’ என்னும் ஜாமி ஃபெர்னாண்டோவுக்கு முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
‘‘ரூ.250 என்னுடைய முதல் சம்பளம். சலூன் நயனாவில் எனக்கு க்ளீனர் பாய் வேலை. ஹேர் கட் செய்து விழுற முடிகள் தொடங்கி அங்கே விழும் குப்பைகளை நான் கூட்டி சுத்தப் படுத்தணும். ஆனால், பெரிதா என்னால் எதுவும் கத்துக்க முடியாது.

காலையிலே ஒன்பது மணிக்கு வேலை. க்ளீனர் பாய். அங்கே வேடிக்கை பார்க்கலாம். ஆனால், மூணு, நாலு மாதங்கள்ல எனக்கு இந்த வேலை பிடிச்சிருச்சு. ஆனால், கத்துக்கதான் வாய்ப்பு கிடைக்கலை. என் ஓனரும் ஒரு வருஷம் இதுதான் உனக்கு வேலைன்னு சொல்லிட்டார். அதனால் இன்னொரு பார்பர் ஷாப்ல சாயங்காலத்திலே டிரெயினிங்குக்காக மட்டுமே சேர்ந்தேன். 7 மணிக்கு இங்கே நயனாவில் வேலை முடியும், 8 மணிக்கு சலூனுக்குப் போயிடுவேன். அங்கே டம்மி ஹேர் இருக்கும். அதிலே பழகலாம்.

நாள் முழுக்க நயனாவிலே என்ன வேடிக்கை பார்த்தேனோ அதை மாலை சலூனில் டம்மி ஹேர் வெச்சு செய்து பார்ப்பேன். கொஞ்சம் கொஞ்சமா நயனாவில் எனக்கு ஃபேஷியல், மெனிக்கியூர், பெடிக்கியூர், வேக்ஸிங் வேலை எல்லாம் கொடுத்தாங்க. பிரபலமான கஸ்டம்ர்கள் கூட என்னுடைய பெடிக்கியூர், மெனிக்கியூர்க்கு ஃபேன்ஸ் ஆனாங்க. ஆனால், ஹேர்கட் மட்டும் வரவே இல்லை.

 2001ல் என் ஓனர் கிட்டே ‘எனக்கும் ஹேர் ஸ்டைல் கத்துக்கணும்’னு சொன்னேன்; கேட்டேன். ‘சரி உனக்கு இந்த மாசத்தில் இருந்து ரூ.500 சம்பளம்... ஆனால், அதிலே ரூ.250 டிரெயினிங்கு சார்ஜ் செய்துக்குவேன்’னு சொன்னார். ஓகேன்னு சொன்னேன்...’’ என்னும் ஜாமி ஆங்கிலம் தெரியாத காரணத்தினாலேயே பல இடங்களில் இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துள்ளார்.

‘‘அப்போதான் யுனிசெக்ஸ் பார்லர்கள், ஸ்பா, சலூன்கள் எல்லாம் ஒவ்வொண்ணா வந்திட்டு இருந்த வேளை. ஹை புரொஃபைல் கஸ்டமர்கள் வேணும்னா இங்கிலீஷ் தெரியணும். என் அக்கா மலேசியாவில் ஜர்னலிஸ்ட், அண்ணன் மெடிக்கல் ஆய்வாளராக இருக்கார். அவங்கதான் இங்கிலீஷ் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சாங்க. இங்கிலீஷ் தெரியலைன்னா மதிக்கவே மாட்டாங்க. குறிப்பா சலூன், ஸ்பா தொழிலுக்கு கம்யூனிகேஷன் ரொம்ப முக்கியம். ஒருவழியாக எல்லாம் செட்டில் ஆகி வெள்ளைக்காரங்களுக்கு முடி வெட்டுற வாய்ப்பும் கிடைச்சது.

ஆனால், முதல் வாய்ப்பு மோசமான வாய்ப்பா அமைஞ்சது. அவங்களுக்கு சுத்தமா பிடிக்கலை என்னுடைய ஸ்டைல். ‘வாட் கைண்ட் ஆஃப் ஹேர் ஸ்டைலிங் ஈஸ் திஸ்?’ அப்படின்னு கேட்டு கத்திட்டாங்க. நான் அப்படியே மயங்கிட்டேன். வீட்டுக்கு வந்தும் அழுகை அடங்கலை. அம்மாதான் என்னை ஆறுதல்படுத்தினாங்க. அடுத்த நாள் அம்மா கொடுத்த தைரியத்திலே மறுபடியும் போனேன். அடுத்த நாள் ஒரு ஃபாரினர் ஹேர் கட் செய்துக்க வந்தார். அவர் செம ஹேப்பியாகி எனக்கு 50 டாலர் டிப்ஸ் கொடுத்தார்.

அப்பறம் தேடி வந்த எல்லாருமே செலிபிரிட்டிகள்தான். தொடர்ந்து பிரம்மாண்ட படங்களும் வந்திச்சு...’’ என்றவர் ‘சந்திரமுகி’ ரஜினிகாந்த் தொடங்கி கை வைத்த இடமெல்லாம்
மாஸ்தான். ‘‘இதுக்கு மேலேயும் சும்மா இருக்கக் கூடாதுன்னு லண்டன்ல போயி ஹேர் ஸ்டைலிங் கத்துக்கிட்டேன். தொடர்ந்து பல நாடுகள், பல படிப்புன்னு ஹேர் ஸ்டைலிங், ஸ்பாவிலேயே அத்தனையும் தேடித் தேடிக் கத்துக்கிட்டேன்.

என்னுடைய நயனா சலூன் ஓனர் அடிப்படையிலே ஒரு இலங்கைக் காரர். தொடர்ந்து நிறைய பயணம் செய்திட்டே இருந்தார். அவருடைய சலூனை முழுமையா பார்த்துக்க வேண்டிய சூழல் உருவாக என் பெயர் வெளியே தெரிய ஆரம்பிச்சது. அடுத்து என் ஓனர் இலங்கைக்காரர் என்கிறதால அவரால் தொடர்ந்து இந்தியாவில் பிஸினஸ் செய்ய முடியாத சிக்கல் உருவாச்சு. நயனாவை குளோஸ் செய்தார். நான் தொடர்ந்து சென்னையின் பிரபல ஹைடெக் சலூன்கள்ல வேலை செய்யத் தொடங்கினேன். என்னுடைய சம்பளமும் ஏறத் தொடங்கி ரூ.30,000, ரூ,40,000னு இப்படி அதிகரிச்சது.

ஒண்ணு ரெண்டு முக்கிய சலூன்கள் என்னை அவங்க கூட பார்ட்னரா சேரச் சொன்னாங்க. பல படங்கள் தேடி வந்துச்சு. இப்போ என்னுடைய சொந்த பிராண்ட் ‘வின்க் சலூன்’ இங்கே சென்னையிலே ரொம்ப பிரபலம். ‘சந்திரமுகி’ ரஜினி சார், கமலஹாசன் சார், அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், ‘வாரணம் ஆயிரம்’, ‘அயன்’, ‘காப்பான்’ சூர்யா சார், மாதவன் சார்... என்னுடைய டீம் நபர்தான் ‘இந்தியன் 2’ படத்துக்கு ஸ்டைலிங் செய்யறார். அர்ஜுன் சாருடைய எல்லா படங்களுக்கும் நான்தான் ஹேர் ஸ்டைலிங்.

இப்போ லோகேஷ் கனகராஜ், பாலா சார், ‘கபாலி’, ‘காலா’ படங்கள் உட்பட 50 - 60 படங்கள் வேலை செய்தாச்சு. குறிப்பா பல முக்கிய அரசியல் பார்ட்டி மெம்பர்கள், மினிஸ்டர்கள், அவங்க ஃபேமிலி... இப்படி நிறைய என்னுடைய ஸ்டைலிங்தான். அவங்களுடைய பிரைவஸி காரணமா பெயர்கள் சொல்ல முடியாது...’’ என்னும் ஜாமி ஃபெர்னாண்டோ ஹேர் ஸ்டைல் எங்கே கற்றுக்கொள்கிறோம் என்பது முக்கியமல்ல நாம் என்ன திறமையை நமக்குள் வளர்த்துக்கொள்கிறோம் என்பதே முக்கியம் என்கிறார்.

‘‘எங்கே வேணும்னாலும் பார்லர், சலூன் டிரெயினிங் எடுத்துக்கோங்க. ஆனால், அத்தனைக்கும் மேலே எந்த மண்ணில் யார் நமக்கு கஸ்டமர்களோ அவங்க திருப்தியாகுற அளவுக்கு நாம என்ன பெஸ்ட் கொடுத்தோம் என்கிறதுதான் முக்கியம். சில வருஷங்களுக்கு முன்னாடி ஜோதிகா மேடம் என் கிட்ட ஹேர்கட் செய்துக்கிட்டாங்க. அப்போ பலரும் இந்த ஸ்டைலுக்கு என்ன பெயர்னு கேட்டாங்க.  நான் சொன்ன வார்த்தை ‘இது ஜோதிகா ஸ்டைல்’!

ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கும். அதுக்கேத்த மாதிரி ஸ்டைலிங்கும், கட்டிங்கும் இருக்கணும். அப்போதான் கஸ்டமர்கள் வருவாங்க...’’ தன்னம்பிக்கையாகச் சொல்கிறார் மோஸ்ட் வான்டட் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஜாமி ஃபெர்னாண்டோ.  

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்