சீசன் காய்ச்சலா.. டெங்குவா.. டைபாய்டா..? பரவும் நோய்... தடுப்பது எப்படி..?காலநிலை மாற்றத்தால் அதிகப்படியான பனியும், குளிரும் பல்வேறு நோய்களைத் தோற்றுவித்து வருகின்றன. இப்போது வீடுகள்தோறும் சளி, காய்ச்சல், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் அதிகம் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. இதில், குளிர்கால சீசன் காய்ச்சல் என்று நினைத்து மருந்து எடுப்பவர்களுக்கு மூன்று நாட்கள் கழித்து பரிசோதனையில் டெங்குவாக வெளிப்படுகிறது. அது ஆபத்தை நோக்கி நகர்த்துகிறது. சிலருக்கு டைபாய்டு காய்ச்சல் சத்தமில்லாமல் வந்துபோகிறது.

இதனால் இது சீசன் காய்ச்சலா, டெங்குவா, டைபாய்டா என்கிற குழப்பம் பெரும் பதற் றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்நோய்களால் குழந்தைகளும், முதியவர்களும் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளனர்.‘‘இந்தக் குளிர்காலத்துல நான்கு விதமான கேஸ்களை நாங்க தினமும் பார்க்கிறோம். ஒண்ணு பொதுவாக வர்ற வைரஸ் தொற்று.
இதை ஃப்ளூ காய்ச்சல்னு சொல்வோம். ரெண்டாவது டெங்கு காய்ச்சல். மூன்றாவது குளிர் அதிகம் உள்ளதால் சைனஸ், ஆஸ்துமா, இளைப்பு, மூச்சுக்குழாய் அழற்சி உள்ளிட்ட நோய்கள். நான்காவது டைபாய்டு...’’ என்றபடி பேசத் தொடங்கிய சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் எம்.வி.சுரேஷ்குமார், அது குறித்து விளக்கத் தொடங்கினார்.

சீசன் காய்ச்சல் ‘‘இப்ப வைரஸால் வருகிற சீசன் காய்ச்சல்தான் அதிகம் பார்க்கறோம். பொதுவாக இந்தத் தொற்று வந்ததும் காய்ச்சல், கை, கால்கள் வலி, தலைவலி இருக்கும். பசியிருக்காது. குறிப்பாக, குழந்தைகள் பசியின்மையால் ரொம்ப துவண்டு போயிடுவாங்க. ரொம்ப சோர்வாகவும் இருப்பாங்க. சிலநேரம், மூக்குல இருந்து சளி நீராக வரலாம். இருமல் இருக்கலாம். இது எல்லாம் வைரஸ் தொற்றின் அறிகுறிகள்.  இதுவே பாக்டீரியா தொற்றாக இருந்தால் சளி கெட்டியாகிடும். சிலநேரம் சளி பச்சை அல்லது மஞ்சளாக இருக்கும். பாக்டீரியா தொற்று பிறருக்குப் பரவாது. ஆனா, வைரஸ் தொற்று பரவும்.

வீட்டில் ஒரு குழந்தைக்கு வந்தால் மற்ற குழந்தைகளுக்கு வரும். பிறகு, பெரியவங்களுக்கும் வந்திடும். இந்த வேறுபாட்டை வச்சே வைரஸ் காய்ச்சலா, பாக்டீரியாவானு கண்டறியலாம்.
அப்புறம், வைரஸ் தொற்றுல ஒரு பகுதி மட்டும் பாதிக்கப்படாது. எல்லாமே பாதிக்கப்படும். உதாரணத்திற்கு ஒரு குழந்தைக்கு சளி பிடிச்சிருந்தால் அந்தப் பாப்பாவுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட வேறு உபாதைகளும் வரும். அதுவே பாக்டீரியா தொற்றுனா சளி பிடிச்சிருந்தால் அதுமட்டும்தான் இருக்கும். சுவாசம் சார்ந்த பகுதிகள் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கும். வயிறு சார்ந்த பகுதிகள் பாதிக்கப்பட்டிருக்காது.  

அதனால, உடனே மருத்துவர்களைப் பார்ப்பது நல்லது. ஆனா, நிறைய பேர் காய்ச்சல் வந்ததும் மருந்துக்கடைகளை அணுகி மருந்து எடுத்துக்கிறாங்க. இந்த வைரஸ் தொற்றுக்கு பார சிட்டமால்தான் சிறந்த மருந்து. ஆனா, தேவையில்லாத மருந்துகள் எல்லாம் சாப்பிடுறாங்க.  சிலர் ஆன்டிபயாடிக் போடுறாங்க. வைரஸ்க்கு ஆன்டிபயாடிக் போடவே கூடாது. அப்படி போட்டால் தேவையில்லாமல் வயிற்றில் உள்ள gut microbiome னுசொல்லப்படுற நுண்ணுயிர்கட்டு பாதிக்கப்படும். இதனால, எதிர்காலத்தில் தேவையில்லாத நோய்கள் வரலாம்.
 
அப்புறம், ஆன்டிபயாடிக் எதிர்ப்பு நிலை வந்திடும். அப்படினா எந்த மருந்துக்கும் கேட்காததுபோல் ஆகிடும். இதுதவிர உடனடியாக வயிற்றுப்போக்கு, வாய்ப்புண் எல்லாம் வரும். அதனால, வைரஸ் தொற்றுக்கு ஆன்டிபயாடிக் எடுக்கக்கூடாது. பாக்டீரியா கிருமியால் ஏற்படும் தொற்றுக்குத்தான் ஆன்டிபயாடிக் போடணும். இது மருத்துவர்களை அணுகும்போதே
தெரியவரும்.

அப்புறம், வைரஸ்ல முதல் ரெண்டு நாட்கள் காய்ச்சல் அதிகமாக இருக்கும். அப்புறம், மூன்றாவது, நான்காவது நாட்களுக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்.  
இதற்கு பாரசிட்டமால் மருந்து எடுக்கும்போதுகூட உடல் எடைக்கு ஏற்பதான் கொடுக்கணும். இதுவும் எவ்வளவு டோஸ்னு மருத்துவர்களை அணுகும்போதே தெரியவரும். இதிலும் நூறு டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மட்டுமே மருந்து எடுத்துக்கணும். இல்லனா வேண்டாம்.

ஆனா, மக்கள் தங்களை தாங்களே தொட்டுப்பார்த்து காய்ச்சல் அதிகமிருக்குனு முடிவெடுத்து மருந்து கொடுக்கிறாங்க. அப்படி கொடுக்கக்கூடாது. ஏன் சொல்றேன்னா, எடையைப் பொறுத்து கொடுக்கலனா அது நேரடியாக கல்லீரலைப் பாதிச்சு மஞ்சள் காமாலைக்கு வழிவகுத்திடும். அப்புறம் காய்ச்சல் குறையலேனு மணிக்கொரு முறை மருந்து கொடுக்கக்கூடாது. குறைஞ்சது ஐந்து முதல் ஆறு மணி நேரம் இடைவெளி இருக்கணும்.

ஃப்ளூ வைரஸுக்கு தடுப்பூசி இருக்கு. இதை அனைவரும் போட்டுக்கணும். குழந்தைகள், பெரியவர்கள்னு அனைவரும் போட்டுக்கலாம். ஆண்டுக்கு ஒருமுறை போட்டால் ஃப்ளூ வர்றதை தடுக்கலாம். இந்த ஃப்ளூ தடுப்பூசி மாரடைப்பை தடுக்கும்னு ஆய்வுல நிரூபிச்சிருக்காங்க. இதுதவிர, பனியில் வெளியில் போவதைத் தவிர்க்கணும். அப்படியே போனாலும் காது, கழுத்துப் பகுதிகளை மூடியபடி போகலாம். அதிகாலையில் சிலர் குளிர்ந்த காற்றில் நடைப்பயணம் போவாங்க. அப்ப அந்த குளிர்ந்த காற்றை சுவாசிக்கிறது மூலம் வைரஸ் உள்ளே போய் சளி உண்டாகிறது.

அடுத்து, இந்த குளிர்காலத்துல ஜில் ஆகாரங்களை தவிர்க்கணும். அடிக்கடி வெந்நீர் குடிப்பது நல்லது. அப்புறம், உப்பு போட்ட தண்ணீரில் கொப்பளிப்பது சிறந்தது. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதைச் செய்ய வேண்டாம்.

டெங்கு காய்ச்சல்

காலையில் கடிக்கிற கொசுவால் பரவக்கூடிய நோய் இது. இந்த வைரஸ் சாதாரண காய்ச்சல் மாதிரிதான் வரும். ஆனா, உடல்வலி, முதுகுவலி, தலைவலி ரொம்ப அதிகமாக இருக்கும். ரொம்ப கவனமாக பார்த்துக்க வேண்டிய நோய். இந்நோய்க்கும் பாரசிட்டமால் மட்டும்தான் மருந்து. வேறு எதுவும் கிடையாது. நிலவேம்பு. பப்பாளி இலைச் சாறு குடிக்கலாம். இதுல முக்கியமானது மருத்துவரை அணுகணும்.

வீட்டுலயே சுயமாக மருந்துகளை எடுக்கக்கூடாது. சிலர் அப்படிச் செய்து காய்ச்சலை ரொம்ப மோசமாக்கிடுறாங்க. குறிப்பாக, ரத்த அணுக்கள் குறைஞ்சிடுது. நார்மலாக ரத்த தட்டை அணுக்கள் ஒன்றரை லட்சம் கவுன்ட் இருக்கணும். இது டெங்குல குறைந்திருக்கும். நான் சில கேஸ்கள்ல 5 ஆயிரம், 10 ஆயிரம் எல்லாம் பார்க்கிறேன். அேதபோல 4,5வது நாட்கள் காய்ச்சல் சட்டென குறைந்து உடல் ஜில்லென்று ஆனால் அது டெங்குவின் அறிகுறிதான்.

இந்நோயில் வயிற்றிலுள்ள ரத்தக்குழாயில் இருந்து நீர் வெளியேறி வயிற்றில் சேர்றதால் வயிறு உப்புசம் இருக்கும். அதனால, உடல் வீக்கம் ஏற்படும். பிறகு, டெங்கு ஷாக் சிண்ட்ரோம் வந்திடும். அதன்பிறகு ரத்தக் கசிவு, மலம் கறுப்பாக போதல், மூக்கில் இருந்து ரத்தம் வருதல், உடம்புல சின்ன சிவப்பு புள்ளிகள் தோன்றுதல் வரும். இதெல்லாம் டெங்கு கொஞ்சம் சீரியஸ் கேஸ்னு அர்த்தம்.

இந்த சிவப்பு புள்ளிகள் வருவதைப் பார்த்து சிலர் அம்மை நோய்னு வீட்டுல வச்சுக்கிட்டே இருப்பாங்க. அது தவறு. டாக்டரிடம் சரியான சிகிச்சை எடுக்கிறப்ப கொஞ்சம் கொஞ்சமாக டெங்கு பாதிப்பு குறைஞ்சிடும். பயம் தேைவயில்லை. அடுத்து, டெங்கு காய்ச்சல்ல வயிறு உப்புசம் ஏற்படுகிற போது ஸ்கேன் பண்ணி பார்த்தால் பித்தப்பையும், அப்பெண்டிசைடிஸ்னு சொல்லப்படுற குடல்வாலும் வீங்கியிருக்கும்.

இந்தமாதிரி சூழல்ல அப்பெண்டிசைடிஸ் ஆபரேஷனோ, பித்தப்பை அழற்சி ஆபரேஷனோ பண்ணக்கூடாது. இவை டெங்கு அறிகுறிகள்ல ஒன்று. டெங்கு சரியாகும்போது இவை சரியாகிடும். இதுமாதிரி ஆபரேஷன் தியேட்டருக்குப் போன கேஸ்களையும் நான் தடுத்திருப்பதால் சொல்றேன். அதனால, டெங்குவை தவிர்க்கணும்னா சுகாதாரமாக இருக்கணும். பகல் கொசுக்கடியிலிருந்து விலகி இருக்கணும். கொசு வராமல் இருக்க வேண்டிய விஷயங்களை செய்யணும்.

தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளணும். வீட்டுல நெட் அடிக்கணும். குழந்தைகள் பள்ளிகளுக்கு போகும்போது ஓடோமஸ் க்ரீம் தடவி விடணும்.இதுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கிறாங்க. ஆனா, அது தோல்வியாகவே இருக்கு. தடுப்பூசி வரும்பட்சத்தில் வருங்காலங்களில் இந்நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

டைபாய்டு

டைபாய்டு காய்ச்சலும் நிறைய பேருக்கு வருது. கொரோனாவிற்குப் பிறகு இப்ப மக்கள் அதிகமாக வெளிய சந்திக்கிறாங்க. ஃபங்ஷன்ல கலந்துக்கிறாங்க. வெளி உணவுகளை சாப்பிடுறாங்க. சிலருக்கு வீட்டுல பண்ற உணவுகள் பிடிக்கிறதில்ல. அதனால ஹோட்டல்ல சாப்பிடுறாங்க. வெளி உணவுகளை சாப்பிடும்போது டைபாய்டு வர வாய்ப்பு அதிகம்.
இதிலும் முதல்ல காய்ச்சல் வரும். பிறகு, காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும். வயிற்று வலி இருக்கும். ரத்தப் பரிசோதனை மூலம்தான் கண்டறிய முடியும். இதுக்கு சரியான மருத்துவ சிகிச்சை அளித்தால் குணமாக்கிடலாம்.

இதைத் தடுக்க ஹோட்டல் உணவுகளைத் தவிர்த்து வீட்டு உணவுகளைச் சாப்பிடறது நல்லது. குறிப்பாக, கை கழுவிட்டு சாப்பிடணும். சிலர் பச்சை முட்டையை அப்படியே சாப்பிடுவாங்க. பொதுவாக முட்டையில் கீறல் இருக்கானு பார்த்து வாங்கணும். ஏன்னா, அதன்வழியா டைபாய்டு கிருமி போக வாய்ப்பு இருக்கு. எல்லாமே கொதிக்க வச்சு சாப்பிடணும். தண்ணீர் கூட வெந்நீர் குடிப்பது நல்லது.

இப்ப வாட்டர் கேனிலும் சில தரமாக இருப்பதில்ல. கிருமி வர வாய்ப்பு இருக்கு. அதனால, சூடு பண்ணி குடிக்கிறது நல்லது. ஃப்ரீட்ஜ்ல வச்ச உணவும் சூடு பண்ணி சாப்பிடுறது சிறந்தது. டைபாய்டு தடுப்பூசி போட்டுக்கிறதும் பயன்தரும். இது 90 சதவீதம் வரை நோய் வராமல் தடுக்கும்.

சுவாச அழற்சி பிரச்னை

சுவாச அழற்சி, ஆஸ்துமா உள்ளவங்களுக்கு இந்த கிளைமேட் ஒத்துக்கல. மூச்சுவிடுவதில் சிரமம், இருமல், மூக்கில் சளினு பிரச்னைகள் அதிகமாகுது. சளி அதிகம் சேரும்போது தானாகவே காய்ச்சல் வந்திடுது. மூச்சுவாங்குவதல் அதிகமிருந்தால் அது நிமோனியாவாகக்கூட இருக்கலாம்.அதனால, இவங்க முக்கியமாக பனியில் போவதைத் தவிர்க்கணும். வெந்நீரில் ஆவி பிடிக்கலாம். பி.பி இல்லாதவங்க வெந்நீர்ல உப்புப் போட்டு கொப்பளிக்கலாம். பிராணாயாமம் உள்ளிட்ட மூச்சுப் பயிற்சிகளை முறையாக கத்துக்கிட்டு செய்யலாம். அப்பதான் இந்த சீசன்ல சுவாச நோய்களைத் தவிர்க்க முடியும்.

முக்கியமான விஷயம் சிலர் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க கொசுபத்தி காயில், லிக்யூட் பயன்படுத்துவாங்க. இதுவும் ஆஸ்துமா உள்ளவங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். அப்புறம், சென்ட் அடிப்பது, அடிக்கடி தலைக்குக் குளிப்பது உள்ளிட்டவற்றைத் தவிர்க்கணும். இவங்க ஒவ்வொரு ஆண்டும் ஃப்ளூ மற்றும் நிமோனியா தடுப்பூசிகளைப் போட்டுக்கணும்.

உணவு

ப்ளூ காய்ச்சலுக்கு, குறிப்பாக வைட்டமின் ஏ, சி உள்ள உணவுகள் சாலச் சிறந்தது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். தவிர, உணவில் இஞ்சி எடுத்துக்கலாம். அதிமதுரம், மஞ்சள் உள்ளிட்டவற்றை பாலில் கலந்து குடிக்கலாம். நாட்டு வைத்தியத்திலும் நல்ல பலன் இருக்கு. இதனுடன் நிலவேம்பு, பப்பாளி இலைச் சாறு அருந்தலாம். பொதுவாக, நார்மல் உணவு கொடுத்தால் போதுமானது. புதுசாக எதுவும் கொடுக்க வேண்டாம். ஆனா, அடிக்கடி... அதேநேரம் கொஞ்சம் கொஞ்சமாக உணவு எடுத்துக்கணும். கொஞ்சம் சாப்பிட்டாலும் சத்துணவாக சாப்பிடறது முக்கியம்.

சத்து மாவு தரலாம். பருப்பு சாதத்துல கொஞ்சம் நெய் சேர்த்துக்கொடுக்கலாம். அப்பதான் எதிர்ப்பு சக்தி கூடும். இல்லனா, சோர்வு ரொம்ப அதிகமாக இருக்கும். தண்ணீர் அப்பப்ப குடிக்கணும். டெங்கு இருந்தால் மருத்துவரை அணுகி தண்ணீர் எவ்வளவு குடிக்கலாம்னு கேட்டுக்கலாம்.

பேராச்சி கண்ணன்