தமிழக காய்கறி, பழங்களுக்குத் தடை!



பழிவாங்குகிறதா கேரளா?

நூடுல்ஸ் சர்ச்சை சற்றே ஓய்ந்த நிலையில் இப்போது காய்கறி சர்ச்சை. தொடங்கி வைத்திருப்பது கேரளா. தமிழகத்திலிருந்து வரும் காய்கறி, பழங்களில் அதிகமாக பூச்சிக்கொல்லி, ரசாயனக் கலப்பு இருப்பதால் அவற்றை தடை செய்யப்போவதாகக் கூறியுள்ளது கேரளா.

ஏற்கனவே கோவை பகுதியிலிருந்து போன பாலில் அதிக ரசாயனம் இருப்பதாக தடை விதித்த கேரளா, தற்போது தமிழக காய்கறிகள் பற்றி டெல்லியில் நடந்த இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுக் கழக கூட்டத்தில் புகார் கூறியிருக்கிறது. கேரள காய்கறிக்கடைகளில் திடீர் சோதனை நடத்தி காய்கறிகளை அள்ளிச் செல்வதோடு, கேரளாவுக்குள் நுழையும் அத்தனை காய்கறி வாகனங்களும் உணவுத்துறை அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் விதி வகுத்துள்ளது. 

தமிழகத்திலிருந்து தினமும் 2000 டன் காய்கறிகள் கேரளா போகின்றன. ஓணம் பண்டிகை நேரத்தில் சுமார் 10 ஆயிரம் டன்னுக்கு மேல் செல்வதுண்டு. தமிழக காய்கறி விவசாயிகள் கேரள வணிகத்தையே பிரதானமாக நம்பியுள்ள சூழலில், கேரளாவின் இந்த நடவடிக்கை அதிர்வை உருவாக்கியிருக்கிறது.

 முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நதி நீர் விவகாரங்களில் தமிழர்களை வஞ்சம் தீர்க்கவே, இப்போது இந்த விவகாரத்தை கேரளா எழுப்புகிறது என்று ஒரு தரப்பினர் குமுற, சூழலியல் மற்றும் வேளாண் ஆராய்ச்சியாளர்கள் கேரளாவின் நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் 193 பூச்சிக்கொல்லிகள் பயன்பாட்டில் உள்ளன. ஆண்டுதோறும் சுமார் 90 ஆயிரம் டன் பூச்சிக்கொல்லிகள் இந்திய நிலங்களில் கொட்டப்படுகின்றன. பூச்சிக்கொல்லிகளை ஆசியாவில் அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா என்றால், இந்தியாவில் அதிகம் உபயோகிப்பது நம் தமிழகம். பசுமைப்புரட்சிக்கு முன்பு  பூச்சிக்கொல்லி என்ற இடுபொருளே நமக்கு அறிமுகமில்லை. 100 பூச்சிகளில் 10 பூச்சிகள் மட்டுமே அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த பூச்சிகள்தான் பிற நல்ல பூச்சிகளுக்கு உணவு.

இதனால் ஒரு ஆரோக்கியமான உயிர்க்கோள சமநிலை வயல்காடுகளில் இருந்தது. பூச்சிக்கொல்லிகள் முதலில் சமாதி கட்டியது நல்ல பூச்சிகளுக்குத்தான். கெடுதல் செய்யும் பூச்சிகள் புதுப்புது வடிவம் எடுக்கின்றன. இவற்றை சமாளிக்க இப்போது நாம் பயன்படுத்துவது ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகள்.

அதென்ன ஐந்தாம் தலைமுறை?
முதல் தலைமுறை பூச்சிக்கொல்லி, பட்டாலே நஞ்சாகும். ‘ஆர்கனோ குளோரைடு’ என்றழைக்கப்படும் அவ்வகை மருந்துகள் இரண்டாம் உலகப்போரில் மிஞ்சிய ஆயுதங்களின் வெடிப்பொருட்களில் இருந்து உருவாக்கப்பட்டவை. இவை பூச்சிகளின் உடலில் பட்டவுடன் சுவாசத்தில் கலந்து உயிரிழக்கச் செய்யும். காலப்போக்கில் இதை பூச்சிகள் கிரகித்துக்கொண்டு விட்டன.

அடுத்து உருவாக்கப்பட்டது, ‘ஆர்கனோ பாஸ்பரஸ்’. இது குடல் நஞ்சு. இதன் சுவையை விரும்பி ருசிக்கும் பூச்சிகள், விஷம் பாய்ந்து இறக்கும். இதையும் தின்று செரித்து வாழப் பழகி விட்டன பூச்சிகள். அடுத்து இதைவிட வீரியமாக  தயாரிக்கப்பட்டது, ‘சிந்தடிக் பைரித்ராய்டுகள்’. இது புகை நஞ்சு. இதையும் தாக்குப் பிடித்தன பூச்சிகள்.

இதன்பிறகு தயாரிக்கப்பட்ட நான்காம் தலைமுறை பூச்சிக்கொல்லி, ஊடுருவிப் பாயும் நஞ்சு. இதற்கும் பூச்சிகள் அடங்க மறுத்தன. இதையடுத்து மிகக்கடும் விஷத்தன்மையோடு உருவாக்கப்பட்ட ஐந்தாம் தலைமுறை மருந்துகள்தான் இப்போது புழக்கத்தில் இருக்கும் ‘நியோ நிக்கோடினாய்ட்’. இதை ‘நரம்பு நஞ்சு’ என்கிறார்கள். இது பூச்சி களின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி, அவற்றைச் செயலிழக்கச் செய்து அழிக்கும். இதைத்தான் வயல்களில் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறார்கள் நம் விவசாயிகள்.

“தற்போது நிறுவனங்கள் விற்பனை செய்கிற ஒட்டுரக விதைகள் பூச்சிக்கொல்லியில் ஊற வைத்தே வருகின்றன. அதை விதைத்துவிட்டு சில வாரங்களில் மீண்டும் அதே பூச்சிக்கொல்லியை அடிக்கிறார்கள். திரும்பத் திரும்ப அடிக்கப்படும் விஷத்தை பூச்சிகள் கிரகித்துக்கொண்டு சக்தி பெறுகின்றன. வேறு வழிதெரியாமல் விவசாயி மேலும் மேலும் அளவைக் கூட்டுகிறார். இதனால் காய்கறிகளில் அளவுக் கதிகமாக விஷம் சேர்கிறது. கேரள மக்கள் மட்டுமில்லாமல் நாமும் இந்தக் காய்கறிகளைத்தான் சாப்பிடுகிறோம்.

விவசாயிகள் வாழ்வாதாரம், ஆரோக்கியம் சார்ந்த இந்த விவகாரத்தில் தமிழக அரசு மௌனம் காப்பது நல்லதல்ல. நம் அண்டை மாநிலங்களில் இயற்கை வேளாண் கொள்கை வகுக்கப்பட்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இன்னும் அதற்கான முயற்சிகள் கூட தொடங்கப்படவில்லை.

காய்கறி சாகுபடிக்கான மிகச்சிறந்த தட்பவெப்பம் கொண்ட மாநிலம் நம்முடையது. ஊட்டி முதல் கடலூர் வரை 7 வகையான வேளாண் பருவநிலை நிலப்பிரிவுகள் இருக்கின்றன. ‘ஃபெர்டிலைசர் லாபி’யை உடைத்து, இயற்கை வேளாண்மை கொள்கையை வகுத்து விவசாயிகளை உற்சாகப்படுத்தினால் தமிழகம் பொருளாதாரத்தில் வலுவடையும்...” என்கிறார் வேளாண் பொறியியலாளர் பாமயன்.

தமிழகத்தில் பூச்சிக்கொல்லி விற்பனையில் எவ்வித கட்டுப்பாடும் இல்லை. ஒரு காலத்தில் வேளாண் அலுவலர்கள் வரப்பு வரப்பாக நடந்துசென்று பயிர்களைப் பார்வையிட்டு பரிந்துரை செய்வார்கள். இப்போது வேளாண் துறையில் கடுமையான ஆள் பற்றாக்குறை. உரக்கடைக்காரர்தான் ‘டாக்டர்’.

எந்தக் கம்பெனி அதிக கமிஷன் தருகிறதோ அவர்களின் பூச்சிமருந்தை விவசாயி தலையில் கட்டுகிறார் அவர். அதைக் கொண்டு போய் வயலில் கொட்டுகிறார் விவசாயி. பச்சை மாறாமல் இருக்க, விற்பனையாகும் வரை பூச்சி தாக்காமல் இருக்க, கெட்டுப்போகாமல் இருக்கவென ஏகப்பட்ட ராசயனங்களைக் கொட்டுகிறார்கள். கேரளா இதைத்தான் சுட்டிக்காட்டுகிறது.

இதைக் கடந்து வேறேதேனும் நோக்கம் கேரளாவுக்கு உண்டா?அம்மாநிலத்தின் இயற்கை வேளாண் அறிஞர்களில் ஒருவரான ‘தணல்’ ்தரிடம் கேட்டோம்.
“இதில் துளியளவும் அரசியல் இல்லை. தமிழர்களுக்கும் சேர்த்தே கேரளா இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. பூச்சிக்கொல்லி விஷங்களால் தமிழர்களின் நிலம்தான் கெட்டுப்போகிறது. கேரள மக்களின் விழிப்புணர்வே அரசுக்கு இப்படியான நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. கேரளாவில் ஒரு ஆண்டுக்கு 50 ஆயிரம் புதிய புற்றுநோயாளிகள் உருவாகிறார்கள். காரணம், உணவில் கலந்துள்ள விஷம்.

அதிர்ச்சி தரும் இந்த புள்ளிவிவரம் திகைப்பை உருவாக்கி இருக்கிறது. அண்மையில் வெளிவந்த ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ திரைப்படமும் மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை உருவாக்கி விட்டது. 2010ம் ஆண்டிலேயே கேரளா இயற்கை வேளாண் கொள்கையை உருவாக்கி விட்டது. அதன் அடிப்படையில் 10 ஆண்டுக்குள் முற்றிலும் விஷமற்ற இயற்கை உணவுக்கு மாறுவதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அபாயகரமான 14 பூச்சிக்கொல்லிகளை கேரளா தடை செய்துவிட்டது. ஆனால் அவற்றை தமிழக விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள்.

மாற்றத்துக்கு தமிழக விவசாயிகள் தயாராகத்தான் வேண்டும். மிகச்சிறப்பான இயற்கை விவசாயிகள் அங்கே இருக்கிறார்கள். பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்து, விஷமற்ற நல்ல உணவுப்பொருட்களை தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்ய வேண்டும். அதைத்தான் கேரளா எதிர்பார்க்கிறது...” என்கிறார் தர்.

ஏற்கனவே ஐரோப்பிய யூனியன் நாடுகள் நம் பழங்களையும், காய்கறிகளையும் விஷம் என்று கூறி நிராகரித்தன. இப்போது கேரளாவும் புறக்கணிக்கிறது. மாற்றத்திற்கு நாம் தயாராகா விட்டால் உலகம் நம்மைப் புறக்கணிக்கத்தான் செய்யும்!திரும்பத் திரும்ப அடிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளால் அளவுக்கதிகமாக விஷம் சேர்கிறது. கேரள மக்கள் மட்டுமில்லாமல் நாமும் இந்த காய்கறிகளைத்தான் சாப்பிடுகிறோம்!

வீட்டிலேயே விளையும் காய்கறி!

கேரளாவின் நிலப்பரப்பும், தட்பவெப்பமும் காய்கறி சாகுபடிக்கு சாதகமாக இல்லை. காபி, தேயிலை, நெல் மட்டுமே அங்கே விளைகிறது. 95% காய்கறி மற்றும் பழங்கள் தமிழகத்தில் இருந்தே செல்கின்றன. தற்போது எழுந்துள்ள பிரச்னையை அடுத்து, வீட்டுத்தோட்டம் மூலம் காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்ள திட்டங்களை உருவாக்கியுள்ளது கேரள அரசு. முதற்கட்டமாக, 50 லட்சம் வீடுகளுக்கு இலவசமாக காய்கறி விதைகள் வழங்கப்பட உள்ளன. அபார்ட்மென்ட்களில் மாடித்தோட்டம் போட 15 லட்சம் பைகளும் வழங்கப்பட உள்ளன.

தொழில்நுட்ப உதவிகள் செய்யவும், தேவை போக மீதமிருக்கும் காய்கறிகளை கொள்முதல் செய்து சந்தையில் விற்கவும் ‘குடும்பஸ்திரீ’ என்ற தொண்டு நிறுவனத்தை நியமித்துள்ளது அரசு. ‘‘வரும் ஓணத்துக்கு மக்கள் தங்கள் சொந்தத் தோட்டத்தில் விளைந்த காய்கறி களால் ‘சத்ய’ செய்ய வேண்டும்’’ என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறார் கேரள வேளாண் அமைச்சர் ஜே.பி.மோகனன்.
 

- வெ.நீலகண்டன்