தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா ரயில்வே?
தீபாவளி, பொங்கலுக்கு சொந்த ஊருக்குப் போக நினைக்கும் பலரும் வயிறு எரிவது ஆம்னி பஸ்களின் கட்டணக் கொள்ளையால்! அத்தனை பேருக்கும் ஒரே ஆறுதல், ரயில் பயணம்தான். முன்பதிவு செய்து வசதியாகவோ, முன்பதிவு செய்யாமல் நெருக்கியடித்தோ ஊர் போய்ச் சேர்ந்துவிடலாம். ஆனால் எதிர்காலத்தில் இதுவும் சாத்தியமாகாது போகலாம். ரயில்வே ஸ்டேஷன்களில் பல நிறுவனங்கள் இயக்கும் தனியார் ரயில்கள் நின்றிருக்கும்.
 அவையும் ஆம்னி பஸ் போல கட்டணக் கொள்ளை நிகழ்த்தலாம். இந்திய ரயில்வே துறையை மேம்படுத்தும் வழிகளைத் தேடுவதற்காக மத்திய அரசு அமைத்த குழு, மறைமுகமாகச் சொல்வது இதைத்தான்! பயணிகள் ரயில்களால் ஆண்டுக்கு ரூ.21 ஆயிரம் கோடி, புறநகர் ரயில்களால் ரூ.4,600 கோடி, கிளைப்பாதை ரயில்களால் ரூ.1600 கோடி இந்திய ரயில்வேக்கு நஷ்டம்.
வருடா வருடம் ரூ.10 ஆயிரம் கோடி கடன். இப்படி கடனிலும் நஷ்டத்திலும் தத்தளிக்கும் ரயில்வேயை மீட்டு மேம்படுத்துவது பற்றி ஆராய்வதற்காக நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினரும், பொருளாதார வல்லுனருமான விவேக் தேவ்ராய் தலைமையில் 8 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
கடந்த மார்ச்சில் இடைக்கால அறிக்கையை வழங்கிய அந்தக்குழு, கடந்த வாரம் இறுதி அறிக்கையை வழங்கியது. அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே துறையை மேம்படுத்துவதற்கான பல்வேறு வழிமுறைகளை இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது. அத்தனை பரிந்துரைகளிலும் படிமமாக இருப்பது தனியார்மயம்.
 12,617 பயணிகள் ரயில்கள், 7,421 சரக்கு ரயில்கள், 7,172 ரயில்வே ஸ்டேஷன்கள், 1.16 லட்சம் கி.மீ ரயில் பாதை, 13 லட்சம் ஊழியர்களைக் கொண்டது இந்திய ரயில்வே. தினமும் 2.30 கோடி மக்கள் பயணிக்கும் ரயில்வே, நிர்வாகக் குளறு படிகள், தொலைநோக்கற்ற திட்டங்கள் காரணமாக பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது. ரயில்வேயைக் காப்பாற்ற வேண்டிய அரசு, மொத்தமாகக் கைகழுவி தனியாருக்குக் கதவைத் திறந்து விட நாள் பார்த்துக்கொண்டிருக்கிறது.
விவேக் தேவ்ராய் குழு பரிந்துரைப்படி தனியாருக்கு ரயில்வேயை தாரை வார்த்தால், பெரும்பாலான தண்டவாளங்களில் புல் முளைத்துவிடும் என்று பதறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். ‘‘ரயில்வே என்பது வெறும் போக்குவரத்து சார்ந்த துறை மட்டுமல்ல. நாட்டின் வளர்ச்சி யில் தொடர்புடைய துறை. ஒவ்வொரு இந்தியனும் ஏதோ ஒரு வகையில் ரயில்வேயோடு சம்பந்தப்பட்டிருக்கிறான். இது ஒரு சேவைத்துறை. இந்தத் துறையை மீட்டுருவாக்கம் செய்ய அரசு முதலீடு செய்யவேண்டும். அதைச் செய்யாமல் தனியார் கையில் தருவதற்கான முயற்சியில் இறங்குவதை ஏற்கமுடியாது.
இப்போது ரயில்களை சுத்தம் செய்வது, கேட்டரிங், குளிர்சாதனப் பெட்டிகளில் கம்பளிப் போர்வை கொடுப்பது, ரயில் நிலைய கழிவறையைப் பராமரிப்பதை தனியார்தான் செய்கிறார்கள். இதெல்லாம் எந்த லட்சணத்தில் நடைபெறுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கெல்லாம் வரையறை இன்றி கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. மொத்தமாக ரயில்வேயை தனியாருக்குத் தந்தால் ஆம்னி பஸ்களில் நடப்பதுபோல ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்கும். மக்கள் ரயிலையே வெறுக்கும் நிலை ஏற்படும்’’ என்கிறார் குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் செயலாளர் எட்வர்ட் ஜெனி.
நமது தென்னக ரயில்வேயில் 470 பயணிகள் ரயில்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. 100 ரூபாய் வருமானம் பெற 130 ரூபாய் செலவு செய்கிறார்கள். கிழக்கு ரயில்வேயில் 100 ரூபாய் வருமானத்துக்கு 140 ரூபாய் செலவு. கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலை இன்னும் மோசம். அங்கு 100 ரூபாய் வருமானத்துக்கு 300 ரூபாய் செலவு... ஆனால் பிற ரயில்வேக்களில் சரக்கு ரயில்கள் மூலம் கணிசமான வருமானம் வருகிறது.
அதைக்கொண்டுதான் நஷ்டம் ஈடுகட்டப்படுகிறது. ரயில்வே மண்டலங்களின் கணக்குகளைத் தனித்தனியாக நிர்வகிக்க வேண்டும் என்றும், சரக்குப் போக்குவரத்தை தனியாரிடம் வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது தேவ்ராய் குழு. சரக்கு வருமானத்தை தனியார் அள்ளிக்கொண்டு போனால் மொத்தமாக ரயில்வே துறை படுத்துவிடும் என்கிறார்கள்.
‘‘கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேயை மேம்படுத்த எந்த புதிய திட்டங்களும் உருவாக்கப்படவில்லை. புதிய முதலீடுகள் இல்லை. அருகில் இருக்கும் சீனாவில் வருஷத்துக்கு 7 லட்சம் கோடி ரூபாயை அரசு முதலீடு செய்கிறது. வருஷத்துக்கு 1000 கி.மீ புதிய பாதை போடப்படுகிறது. நாம் 200 கி.மீ கூட போடுவதில்லை. லூதியானா-கொல்கத்தா, மும்பை துறைமுகம்-டெல்லி இடையே தனியார் பங்களிப்போடு பாதை போடுவதற்கு திட்டம் தீட்டினார்கள். அது நிறைவுற்றால் 55% சரக்குப் போக்குவரத்து அந்தப் பாதையில் போய்விடும். நல்ல லாபம் தரும் அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கே வரவில்லை.
ரயில்வே பாதைகள், வேகன்கள் போதுமான அளவில் இல்லாததால், கால தாமதம் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. பல பகுதிகளில் இன்னும் ஒற்றைப்பாதையை வைத்துத்தான் சமாளிக்கிறோம். இந்த நிலையில் தனியாரையும் ரயில் ஓட்டச் சொன்னால், யாருக்கு முன்னுரிமை கொடுப்பது? சில பகுதிகளின் முன்னேற்றத்துக்காக முற்றிலும் சேவை மனப்பான்மையில் பல கிளை ரயில்களை ரயில்வே இயக்குகிறது. தனியார் வந்தால் இந்த ரயில்கள் எல்லாம் நிறுத்தப்படும். கட்டணம் பல மடங்கு உயரும். ரயில்களின் எண்ணிக்கை குறையும். தொழிலாளர்கள் குறைக்கப்படுவார்கள். மக்கள் ரயில்வேயை புறக்கணித்துவிடுவார்கள்...” என்கிறார் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் செயல் தலைவர் இளங்கோவன்.
2012ல் அமைக்கப்பட்ட அனில் ககோத்கர் கமிட்டி, பாதுகாப்பு மேம்பாட்டுக்காக அரசு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. பிட்ரோடா கமிட்டி, நவீனமயமாக்குதலுக்காக ரூ.5.69 லட்சம் கோடி முதலீடு செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தது. தேவ்ராய் கமிட்டியின் அறிக்கைக்கு முன்னால் பிரதமர் இந்த அறிக்கைகளையும் படிப்பது நாட்டுக்கு நல்லது!
பயங்கர பரிந்துரைகள்!
* ரயில்வேக்கு தனி அமைச்சகம், தனி பட்ஜெட் தேவையில்லை. அதை மத்திய போக்கு வரத்துத் துறையுடன் இணைத்து விடலாம்.
* இந்திய ரயில்வே உள்கட்டமைப்புக் கழகம், ரயில்வே போக்கு வரத்துக் கழகம் என இரண்டாகப் பிரிக்க வேண்டும். உள்கட்டமைப்புக் கழகத்தை அரசு நிர்வகிக்கலாம். தண்டவாளம், ரயில் நிலையங்கள், சிக்னல்கள் இதில் அடங்கும். போக்குவரத்துக் கழகத்தில் தனியாரை இணைக்கலாம். ஏர்போர்ட் போல ரயில் நிலையம் அரசிடம் இருக்கும் (இதையும் படிப்படியாக தனியாருக்குத் தரவேண்டும்). ரயிலை தனியார் நிறுவனங்கள் ஓட்டலாம்.
* புறநகர் ரயில்கள் போன்ற நஷ்டம் ஏற்படுத்தும் ரயில்களை மாநில அரசுகளிடம் தந்துவிட வேண்டும். அல்லது, மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து இயக்கலாம். அல்லது தனியார்...
* சரக்குப் போக்கு வரத்தை தனியார் கையில் தர வேண்டும்.
* ரயில் போக்கு வரத்தில் மட்டுமே ரயில்வே துறை கவனம் செலுத்த வேண்டும். பள்ளி, மருத்துவமனை, ரயில்வே பாதுகாப்புப் படை போன்றவற்றை தனியாரிடம் தந்து விடவேண்டும்.
* கட்டண நிர்ணயிப்பில் அரசு தலையிடக்கூடாது. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தனியாரே நிர்ணயித்துக் கொள்ளலாம்.
* ஓய்வுபெறும் ஊழியர்கள், பணியின்போது மரணம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கு பணிக்கொடை உள்ளிட்ட செட்டில்மென்ட்டுகளை பணமாகத் தராமல், ‘புல்லட் பாண்ட்’டாக தரவேண்டும். (இதை 30 ஆண்டுகள் கழித்தே பணமாக்க முடியும்)
* தனியாருக்கும் ரயில்வே துறைக்கும் உள்ள பிரச்னைகளைத் தீர்க்கவும், கட்டணத்தைக் கண்காணிக்கவும் ரயில்வே ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க வேண்டும். * அடுத்த 4 ஆண்டுகளில் ஓய்வுபெறவுள்ள 2.25 லட்சம் தொழிலாளர்களுக்கு மாற்றாக ஆட்களைத் தேர்வு செய்யக்கூடாது.
ஒரு உதாரணம்!
உலகின் எட்டாவது பெரிய ரயில்வேயாக இன்றும் இருப்பது அர்ஜென்டினா. 47 ஆயிரம் கி.மீ தூரத்துக்கு ரயில் இயக்கியது அந்நாட்டு ரயில்வே. 95,000 ஊழியர்கள் பணிபுரிந்தார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வேயை தனியாரிடம் வழங்கியது அந்நாட்டு அரசு. எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை என்று பல ரயில்களை தனியார் நிறுவனங்கள் நிறுத்தின.
ரயில் பாதைகளையும் ஸ்டேஷன்களையும்கூட சரியாகப் பராமரிக்கவில்லை. நிறுத்தியது. கிட்டத்தட்ட 70 ஆயிரம் பேர் வேலை இழந்தனர். ரயில்கள் இயங்காததால் பல நகரங்களிலிருந்து மக்கள் வெளியேறினர். விவசாய உற்பத்திப் பொருட்களை கிராமங்களிலிருந்து நகரங்களுக்குக் கொண்டுவரவும் வழியில்லை. இப்போது அரசு விபரீதத்தைப் புரிந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ரயில்வேயை நாட்டுடமையாக்கி வருகிறது!
- வெ.நீலகண்டன்
|