விஜய் கொடுத்த திருப்பதி ட்ரீட்!
புலி ஸ்பெஷல்
எதிர்பார்த்தபடியே தன் ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட் கொடுத்துவிட்டார் விஜய். ‘புலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர்... ஜூன் 22ல் சரியாக ரிலீஸ். படத்தின் இயக்குநரான சிம்பு தேவனின் ஸ்பீட் இதற்கு முக்கிய காரணம். ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’, ‘அறை எண் 305ல் கடவுள்’, ‘இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம்’, ‘ஒரு கன்னியும் 3 களவாணியும்’ என ஃபேன்டஸி காட்டும் இயக்குநர். ஏவி.எம். ஸ்டூடியோவில் ‘புலி’யின் டப்பிங் பரபரப்பில் இருந்த சிம்புதேவன் செம எனர்ஜி மூடில் இருக்கிறார்... நம் செல்போன் உடனடியாக ரெக்கார்டிங் மோடில்..!
 ‘‘ உங்களோட முந்தைய படங்கள்ல படத் தலைப்புகள் நீளமா இருக்கும். ‘புலி’ மட்டும் எப்படி ரெண்டெழுத்தில்..?’’‘‘அதுக்கு சிறப்பான காரணம் எல்லாம் ஒண்ணுமில்லை. இதில் விஜய் சாரோட ஒரு கேரக்டர் பெயர் புலி. அதனால அதையே டைட்டிலா வச்சோம்! இது ஒரு வீர சாகசப் படம். இது விஜய் சார் ரசிகர்களுக்கான படம் மட்டுமில்ல.
அவங்க பெருமையா தங்களோட நண்பர்கள் எல்லாருக்கும் ரெஃபர் பண்ற மாதிரியான படம். சின்னக் குழந்தையில இருந்து சின்னப்பா ரசிகர் வரை எல்லாருக்குமான அட்ராக்ஷன் இதில் இருக்கும். ஆக்ஷன், காதல், பிரமாண்டம் எல்லாமே உண்டு. விஜய் சார், மற்ற ஆர்ட்டிஸ்ட்டுகள், நீங்க, நான்... எல்லாருக்குமே இது புது அனுபவமா இருக்கும்!’’‘‘ஒரு நட்சத்திரப் பட்டாளமே இருக்கே..?’’
 ‘‘யெஸ். ‘கத்தி’ படம் போயிட்டிருந்தப்பவே இந்தக் கதையை விஜய் சார்கிட்ட சொன்னேன். முழுக்கதையையும் கேட்டதும் சந்தோஷமாகிட்டார். ‘உடனே தொடங்கிடலாம்’னு கிரீன் சிக்னல் கொடுத்தார். நானும் ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் சாரும் சேர்ந்து காஸ்ட்யூம்ல இருந்து கெட் அப்கள் வரை ஒரு வருஷமா ப்ரீ ப்ளானிங் பண்ணித்தான் இந்த ஸ்கிரிப்ட்டை வடிவமைச்சோம். 3 மாசமா தேடித் தேடி ஒவ்வொரு லொகேஷனா தேர்ந்தெடுத்தோம். அந்தந்த துறையில் ஜாம்பவான்களா இருக்கற எல்லோரும் இணைஞ்சா, அது நிச்சயம் வலுவான டீம். அப்படி ஒரு டீமை உருவாக்குறது விஜய் சாருக்குத்தான் சாத்தியம்.
தேவி மேம், சுதீப் சார், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, பிரபு, சங்கிலிமுருகன், விஜயகுமார், தம்பிராமையா, சத்யன், இமான் அண்ணாச்சி, ரோபோ சங்கர் தவிர பாலிவுட்ல இருந்து டினு ஆனந்த், டோலிவுட்ல இருந்து ஆலின்னு எத்தனை பேர் இருந்தாலும் இது முழுக்க முழுக்க விஜய் சார் படம் மட்டுமே!
அதேபோல டெக்னீஷியன்கள் சைடுல புரொடக்ஷன் டிசைனர் டி.முத்துராஜ், கேமராமேன் நட்டி, இசையமைப்பாளர் தேவி பிரசாத், ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்ராயன், எடிட்டர் கர் பிரசாத், கம்ப்யூட்டர் கிராபிக்ஸுக்கு கமலக்கண்ணன்னு ஒரு வலுவான டீம் அமைஞ்சிருக்கு. இதை உருவாக்கிக் கொடுத்தவங்க, இந்தப் படத்தோட தயாரிப்பாளர்களான சிபு, பி.டி.செல்வகுமார். இப்ப முழுப்படப்பிடிப்பு முடிஞ்சு, டப்பிங் வேலைகள்ல இறங்கிட்டோம். இன்னும் சி.ஜி வொர்க் போர்ஷன் இருக்கு!’’ ‘‘ஹன்சிகா, ஸ்ருதிஹாசன்..?’’
‘‘ம்ம்... இந்த காம்பினேஷன் ரொம்ப நல்லாவே ரீச் ஆகும் பாருங்க. விஜய் - ஹன்ஸிகா ஒரு ஜோடி, விஜய் - ஸ்ருதி இன்னொரு ஜோடி. இந்த ரெண்டில் எது பெஸ்ட்னு பெரிய போட்டியே இருக்கும். ஹன்சிகாவும், ஸ்ருதியும் இதுவரை இப்படி கேரக்டர்கள் செய்ததில்லை. கெமிஸ்ட்ரியில கலக்கியிருக்காங்க. அதைப் பார்த்துட்டு சொல்லுங்க!’’‘‘தேவி..?’’
‘‘ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தேவி மேம் தமிழுக்கு வந்திருக்காங்க. ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ல இல்லத்தரசியா சிம்பிளான கேரக்டர். இந்தியாவையே பேச வச்சிட்டாங்கல்ல. இதுல மகாராணியா வர்றாங்க. ரிஸ்க் எடுத்து கத்திச் சண்டை எல்லாம் கத்துக்கிட்டு பர்ஃபார்ம் பண்ணியிருக்காங்க.
அதே மாதிரி சுதீப் சாரைப் பத்தி சொல்லியாகணும். கன்னட சூப்பர் ஸ்டாரான அவர்கிட்ட இந்தக் கேரக்டரைச் சொன்னதும், உடனே ஓகே சொல்லி நடிக்க வந்தார். ரொம்ப பலசாலியான நெகட்டிவ் கேரக்டர் அவரோடது. அவர் போட்டுக்கிட்டு நடிச்ச உடைகள், ஆபரணங்கள் எல்லாம் ரொம்ப வெயிட். தாங்கிட்டு நிக்கிறதே பெரிய விஷயம். எதையும் பொருட்படுத்தாம நடிச்சுக் கொடுத்தார்!’’
‘‘என்ன சொல்றார் இளைய தளபதி?’’‘‘ஆரம்பத்தில இருந்தே விஜய் சார் காட்டின ஆர்வம்தான் இந்தப் படம் இவ்வளவு சீக்கிரம் முடியக் காரணம். கத்திச் சண்டை, குதிரையேற்றம்னு இந்தப் படத்துக்காக இளைய தளபதி பல ரிஸ்க்குகளை எடுத்திருக்கார். படப்பிடிப்பு நடந்த ஒவ்வொரு நாளும் எல்லோரையும் அவர் உற்சாகப்படுத்திட்டே இருந்தார்.
காட்டுலயும், காடுகள் சார்ந்த பகுதிகள்லயும்தான் சுத்தி வந்திருக்கோம். கண்ணுக்கு விருந்து கேரன்டி. திருப்பதி பக்கம் தொடர்ந்து 40 நாட்கள் ஷூட்டிங். யூனிட்டையே வெயில் வறுத்தெடுத்துடுச்சு.
எங்க ஆட்கள் கொஞ்சமும் முகம் சுளிக்காம வேலை செய்ததைப் பார்த்து விஜய் சார் ரொம்பவே இம்ப்ரஸ் ஆகிட்டார். எல்லாருக்கும் ஒரு கோல்டு காயினும், திருப்பதி லட்டும் பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இன்னிக்கும் யூனிட்ல அந்தப் பரவசப் பேச்சு அடங்கல!’’
‘‘தேவி மகாராணின்னா விஜய் இதில் இளவரசரா?’’‘‘விஜய் சாருக்கு எத்தனை கேரக்டர்கள்... என்னென்ன கெட்டப்புகள்... இதெல்லாம் இப்போ சொல்றது சரியா இருக்காது. ஆனா, அவர் இதுவரைக்கும் இப்படி ஒரு ஃபேன்டஸி கதை பண்ணினதில்லை. படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் இன்னும் சில மாதங்கள் போகும்.
அதுவரைக்கும் சில விஷயங்கள் சஸ்பென்ஸா இருக்கட்டுமேனு நினைக்கிறோம். எங்க சுயநலத்துக்காக சொல்லலை. ரசிகர்கள் படத்தைப் பார்க்கும்போது ஃப்ரேமுக்கு ஃப்ரேம் புதுசா இருக்கணும் இல்லையா? அந்த சுவாரஸ்யத்தைத் தக்க வைக்கத்தான்.
படத்தில் 6 பாடல்கள். எல்லாமே வைரமுத்து எழுதியிருக்கார். தேவிபிரசாத் இசை அற்புதமா வந்திருக்கு. விஜய் சார் பாடின ‘வானமே கிட்ட வருதே... வானவில் வட்டமாகுதே!’ பாடலுக்கு ஒருசில வாரம் முன்னாடிதான் ரெக்கார்டிங் போச்சு. வெறும் ஒரு மணி நேரத்துக்குள்ளேயே விஜய் சார் அதைப் பாடி அசத்திட்டார். அந்தப் பாட்டு இந்த வருஷத்தோட ஹிட்டா அமையும்!’’
- மை.பாரதிராஜா
|