பெருந்தன்மை
விசாலத்துக்கு இருப்பே கொள்ளவில்லை. ‘அநாவசியமாக வேலைக்காரியிடம் மருமகள் கலாவைப் பற்றி ஏன் பேசினேன். என்னதான் கோபம் வந்தாலும் மனதைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டாமா?’ - தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள்.
 ‘‘எனக்கு உடம்பே முடியலை... அவ ஆபீஸ் போயிடறா. வேலைகளை நானே செய்ய வேண்டியதா இருக்கு. அவ எதையும் மதிக்கறதே இல்லை’’ - இதுதான் விசாலம் புலம்பிய வார்த்தைகள். பேத்தி ரேஷ்மா மறைந்திருந்து இதை தன் செல்போனில் பதிவு செய்வாள் என விசாலம் எதிர்பார்த்தாளா? இல்லையே! கலா இதைக் கேட்டதும் எப்படி வெடிப்பாளோ!
தாய் வந்ததும், ‘‘அம்மா... உன்னைப் பத்தி பாட்டி என்ன சொல்றாங்க பார்!’’ என்று ‘செல்’லை ஒலிக்கவிட, அப்படியே அதைப் பிடுங்கியெறிந்தாள் கலா. ‘‘நான் உன்னை ரெஸ்ட் எடுக்கச் சொன்னேனா? பாட்டி பேசுறதை டேப் பண்ணச் சொன்னேனா? அவங்க யாரு... உங்கப்பாவோட அம்மா...
எனக்கும் அம்மா. பெரியவங்க ஏதோ மன வருத்தத்துல அப்படித்தான் சமயங்கள்ல பேசுவாங்க. அதை ரெக்கார்டு பண்ணி என்கிட்ட காட்றது தப்பு. போய் பாட்டிகிட்ட மன்னிப்பு கேள்!’’ என்றாள் கலா. மருமகளின் பெருந்தன்மையைக் கண்டு உருகி விட்டாள் விசாலம். பேத்திக்கு மட்டுமா அறிவுரை..? தனக்கும்தான் எனப் புரிந்துகொண்டாள்!
மன்னை ஜி.நீலா
|