இடையழகி!



விநோத ரஸ மஞ்சரி

எட்டு அடி சுற்றளவு... ஆல மரத்துக்கா அரச மரத்துக்கா என்கிறீர்களா? ரெண்டும் இல்லை, மிக்கெல் ருஃபனெல்லி எனும் இந்த அமெரிக்கப் பெண்ணின் இடுப்புதான் எட்டு அடி. ‘உலகின் மிகப்பெரிய இடுப்பைக் கொண்டவர்’ என்ற சாதனை இப்போது இவரிடம்! பெண் குண்டாக இருந்தால் ஆண்களுக்குப் பிடிக்காது என்ற கருத்தை அடியோடு மறுக்கிறார் மிக்கெல். அதற்கேற்ற மாதிரியே மிக்கெலின் கணவர் ரெகி, அன்பை அள்ளிப் பொழிகிறார்!

‘‘இடுப்பு பெருசாதான் இருக்கணும். இடுப்பிலிருந்து வயிறு குறுகலாகி வர்ற இடம் இருக்கு பாருங்க... மணல் கடிகாரம் மாதிரி... அந்த வளைவுதான் ஆண்களுக்குப் பிடிக்கும். அதுதான் கவர்ச்சி. அந்த வகையில் எனக்கு ரொம்பவே கவர்ச்சியான இடுப்பு!’’ எனக் கூசாமல் சொல்கிறார் மிக்கெல். 42 வயதாகும் இவர், தனக்கென ஒரு ட்ரக் வாங்கி அதை கொஞ்சம் மாற்றியமைத்துத்தான் பயன்படுத்துகிறார். காரணம், சாதாரண கார்களில் இவரால் உட்கார முடியாது.

‘‘இதனால் கொஞ்சம் அசௌகரியம் இருக்கத்தான் செய்யுது. வீட்டுல நடமாடும்போது கதவோரம் எங்கேயும் இடுப்பு இடிச்சிடாம ஜாக்கிரதையா இருக்கணும். ஷவர்ல குளிக்கும்போது கூட முழு உடம்பு நனையாது. பாத்ரூம்ல உள்ள சின்ன இடத்துல எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணிட்டு நின்னுதான் குளிக்கணும்!’’ என்கிறபோது கூட மிக்கெல் வார்த்தைகளில் வருத்தம் இல்லை.

‘‘பெண்மையும் நளினமும் மிகுந்திருக்கும் ஒருத்தியாக என்னைக் காட்டுவது இந்த இடுப்புதான். இது இறைவன் எனக்குக் கொடுத்திருக்கும் சொத்து. இதை நெகட்டிவா எடுத்துக்கிட்டு கவலைப்படுறதைவிட, சந்தோஷப்படுறது நல்லதுதானே!’’ எனக் கேட்கிறார் மிக்கெல்.நம்மளையும் மீறி ஒரு மெசேஜ் வந்துடுச்சோ!

- ரெமோ