சூரிய நமஸ்காரம்
எனர்ஜி தொடர் 9
சூரிய நமஸ்காரத்தின் முதல்நிலையைப் பார்த்துவிட்டு அடுத்தடுத்து வேறு விஷயங்களைப் பேச ஆரம்பித்துவிட்டோம். யோகா ஆசிரியர்களே, ‘‘எப்போது அடுத்த நிலை?’’ என்று கேட்டு விட்டார்கள். அதனால் மட்டுமல்ல, இயல்பாகவே மீண்டும் பயிற்சிக்கு வரவேண்டிய நேரம் இது.
 ‘சமஸ்திதி’ என்கிற முதல் நிலையை அறிந்ததுமே, பலருக்கு இது சுலபமான பயிற்சியாகத் தெரிந்திருக்கும். ‘இது கஷ்டம் போலிருக்கே’ என்று சிலர் நினைத்திருக்கலாம். சிலர், ‘நின்ற நிலையில் சூரிய நமஸ்காரத்தைச் செய்ய முடியாதோ’ என நினைத்திருக்கலாம். ஆனால் இப்படி நிற்க முடியாதவர்களுக்கு சூரிய நமஸ்காரப் பயிற்சி சரிப்பட்டு வராதா?
அப்படியெல்லாம் இல்லை. பல நாடுகளில் வழக்கமான சூரிய நமஸ்காரத்தையே தங்களுக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றின் பலனை ஒரு நிலையில் அடைய முடியாதபோது வேறு நிலையில் பெற முடியும்.
அதற்கு சற்று கற்பனையும் திறமையும் ஆழமான முன் அனுபவமும் நிறைய உதவும். நின்று செய்யும் ஒரு ஆசனம் ஒருவருக்கு வரவில்லை என்றால், அதைப் படுத்த அல்லது அமர்ந்த நிலையில் செய்து அதே பலனைப் பெற முடியும். அதற்கு சரியான ஆசனத் தேர்வும், அதைத் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் திறனும் இருந்தால் போதும்.
இந்த சூரிய நமஸ்காரத்தையே எளிது என்று நினைப்பவர்களுக்கு குதித்துச் செய்யும் சூரிய நமஸ்காரம் இருக்கிறது. அதிலும் இரண்டு வகை உண்டு. சூரிய நமஸ்காரம் ‘ஏ’ மற்றும் ‘பி’ என்று. மைசூரிலுள்ள ‘அஷ்டாங்க யோகா’ மையத்தில் இது பிரபலம். வெளிநாடுகளிலிருந்து பலரும் இதற்காக மைசூருக்கு வந்து தங்கிப் பயிற்சி பெறுகிறார்கள். குறிப்பாக ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் ஆஸ்திரேலியர்களும் இப்படிப்பட்ட கடினமான பயிற்சிகளை விரும்புகிறார்கள். இந்த முறையில் சில மாதங்கள் பயிற்சி செய்த அனுபவம் எனக்கு உண்டு.
ஒரு முறை, மராத்தான் ஓட்டங்களில் பங்கு பெறும் அமெரிக்கர் ஒருவருக்கு யோகா வகுப்புகள் தர வேண்டி இருந்தது. எனது ஆசிரியர் என்னை வகுப்பெடுக்கச் சொன்னார். அவருக்கு உள்ள சிறுசிறு பிரச்னைகளை மனதில் கொண்டு முதலில் சற்று எளிமையாக பயிற்சி அமைக்கப்பட்டது. அதில் அவர் நிறைவு பெறவில்லை. ‘‘பயிற்சிகள் இன்னும் ஸ்ட்ராங்க் ஆக இருக்கலாம்’’ என்றார். அடுத்த நாள் சற்று கடினமான ஆசனங்களைத் தந்தேன்.
‘‘இன்னும் ஸ்ட்ராங் ஆக இருக்கலாம்’’ என்றார். பிறகுதான் எனக்கு அவரின் எதிர்பார்ப்பு புரிந்தது. வியர்வை உடலை நனைக்கும்படியான ஆசனங்களை மறுநாள் முதல் தந்தேன். அவரது பாராட்டும் மகிழ்வும், அன்றைய வகுப்பு முடிவில் வெளிப்பட்டது. இப்படி தொடர்ந்து அறுபது நாட்கள் வகுப்பு! அவரது சிறு சிறு பிரச்னைகள் வெகு விரைவில் காணாமல் போயின.
அந்த வலிமையான பயிற்சி அவரது உடலை மட்டுமல்லாது, மனதையும் வாழ்வையும் கூட ரொம்பவே மாற்றி விட்டது. பிறகு அவரது அலுவலகத்திலிருந்து சிலர் யோகாவுக்கு வந்தார்கள். அதன் பிறகு அவரது தாயார் இந்தியா வந்து, எனது சக யோகா ஆசிரியர் உஷா வெங்கட்ரமணியிடம் வகுப்புகள் எடுத்துக் கொண்டார். இப்போது நாம் அந்த அளவு வலிமைக்குப் போகப்போவதில்லை.
நின்று செய்யக்கூடிய சூரிய நமஸ்காரத்திற்கு பதிலாக, இன்னும் எளிமையாக செய்யக்கூடிய ஒரு பயிற்சியை இப்போது பார்க்க உள்ளோம். சிரசாசனம் செய்ய முடியாதவர்கள் சர்வாங்காசனம் செய்வது போல, சர்வாங்காசனமும் செய்ய முடியாதவர்கள் விபரீதகரணி என்ற இன்னும் எளிமையான ஓர் ஆசனத்தைச் செய்வது போல இது மாற்றுப் பயிற்சி. இந்தப் பயிற்சி, நின்ற நிலையிலிருந்து செய்யும் நமஸ்காரத்திற்கு ரொம்பவே உதவும். ஆகவே புதிதாகச் செய்பவர்களும் சுலபமாக இதில் இறங்கி விடலாம்.
இதை ‘முட்டியிட்டு செய்யும் ஆசன வரிசை’ (kneeling sequence) என்றும் சில யோகா ஆசிரியர்கள் சொல்வது உண்டு. இதுவும் குறுகிய நேரத்தில் முழு உடலுக்கும் பலன் தரக்கூடிய ஒரு பயிற்சியே!பயிற்சியைத் தொடங்கலாமா?வஜ்ராசன நிலையில் உட்கார்ந்து கொள்ளுங்கள். அதாவது முட்டியிட்ட நிலையிலிருந்து உடலை கீழ்ப்பக்கம் கொண்டு சென்று, கால்களை மடக்கி, கெண்டை சதை குதிகால்களின் மேல் உட்காரும் நிலை இது. இரு முட்டிகளுக்கு இடையில் சற்று இடைவெளி இருக்கலாம். இரு கைகளையும் இரு தொடைகள் மீது வைத்துக்கொள்ளுங்கள்.
முதுகு நேராக இருக்கட்டும். பார்வை சற்றுக் கீழ் நோக்கி இருக்கட்டும். சிறிது அமைதிக்குப் பிறகு, நன்கு மூச்சை இழுத்து, மூச்சையும் மனதையும் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
(படம்: 1)இந்த வஜ்ராசனத்தில் இருந்தபடி, மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு, கைகளையும் உடலையும் ஒரே நேரத்தில் முன்புறமாக மேலே உயர்த்தி, முட்டியில் நிற்பது போன்ற நிலையை அடைய வேண்டும். முழங்காலுக்கு மேலுள்ள முழு உடலும் நேராக இருக்கும். கைகள் இரண்டும் தலைக்கு மேல் நீண்டிருக்கும் உள்ளங்கைகள் முன்பக்கம் பார்த்தபடி இருக்கும். விரல்கள் சேர்ந்திருக்கும். முதுகெலும்பு நேராக இருக்கும்.
(படம்: 2)இந்த நிலையிலிருந்து ஓரிரு வினாடிகளுக்குப் பிறகு மூச்சை வெளியே விட்டபடி, முன்புறமாக உடலை நீட்டியபடியே குனிய வேண்டும். கைகளை முன்புறமாக நீட்டித் தரையில் வைக்க வேண்டும். உடலின் பின்புறம் கெண்டை சதைகள் மேல் நன்கு அழுந்தியிருக்கும். வயிறு நன்கு அமுங்கி தலை லேசாகத் தரையைத் தொடும்.
(படம்: 3)ஓரிரு வினாடிகளுக்குப் பிறகு மூச்சை உள்ளிழுத்தபடியே உடலை முன்னுக்குக் கொண்டு சென்று கைகளால் தரையில் ஊன்றிய நிலைக்குக் கொண்டு வரவேண்டும். கைகள் தோள் அளவு இடைவெளியில் இருக்கும். இப்போது முதுகெலும்பு சற்று வளைந்திருக்கும். மார்பு சற்று விரிவடையும். முட்டியிலிருந்து இடுப்பு வரையுள்ள பகுதி நேராக இருக்கும். கைகள் நேராக இருக்கும். பார்வை சற்று மேல் நோக்கி இருக்கும்.
(படம்: 4)அந்த சக்ரவாகாசனா நிலையில் ஓரிரு வினாடிகள் இருந்து விட்டு, மூச்சை வெளியே விட்டபடி, மேல் உடலை கீழ்ப்புறமாகக் கொண்டு சென்று கால் விரல்களை வெளிப்புறமாகக் கொண்டு சென்று, கால்களை மடக்கி, தொடைகளின் மேல் மார்பு அழுந்துமாறு அமரவும். (இது புதிய நிலை அல்ல. படம்: 3ல் உள்ள இதற்கு முந்தைய நிலைதான்).இந்த நிலையில் ஓரிரு வினாடிகள் இருந்து விட்டு, முழு மேல் உடலையும் மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே மேல்புறமாகத் தூக்கி நேராக நிறுத்த வேண்டும். இப்போது கால் முட்டிகளுக்கு மேல்பகுதிகள் செங்குத்தாக இருக்கும்.
முழு உடலின் எடையும் முட்டிகளில் இருக்கும். உள்ளங்கைகள் முன்பக்கமாக பார்த்து இருக்கும். விரல்கள் சேர்ந்து இருக்கும். பார்வை சற்றுக் கீழ்நோக்கி இருக்கும்.இந்நிலையிலிருந்து மூச்சை வெளியே விட்டபடி வஜ்ராசன நிலைக்கு வரவும். அதாவது மேல் உடலையும் கைகளையும் ஒரே நேரத்தில் கீழிறக்கி, துவக்கிய முதல் நிலைக்கு வரவேண்டும்.
இந்த சுற்றுகளை ஒரு ஆறு முறை செய்யலாம். பிறகு படுத்தோ அல்லது உட்கார்ந்தோ ஓய்வெடுக்கலாம். அதன்பிறகு மூச்சுப்பயிற்சி செய்யலாம். இது முழுமையான (kneeling sequence) சுற்று அல்ல. இன்னும் நிலைகள் உள்ளன. அவற்றைப் பார்க்கும் முன், மூச்சின் மகிமையை ஒரு பார்வை பார்த்துவிட்டு வரலாம்.
(உயர்வோம்...)
படங்கள்: புதூர் சரவணன் மாடல்: கீகோ
ஏயெம்
|