ரோமியோ ஜூலியட்



பேச்சுலராக இருந்து காதல் புரமோஷனுக்குப் போகிறார்கள் ‘ஜெயம்’ ரவியும், ஹன்சிகாவும். ஹன்சிகாவுக்கு முக்கியம் பணம். ரவிக்கு காதல். கடைசியில் எது ஜெயித்தது? அதுதான் ‘ரோமியோ ஜூலியட்’!எல்லா தமிழ்த் திரைப்படங்களிலும் பார்த்துப் பார்த்து ‘டும் டும் டும்’ கொட்டப்பட்ட காதல் கதைதான். பணமா? காதலா?

 என காதலுக்கு முன்பே ஈகோ உரச, ஊடலும் காதலும் மோதலும் கொண்டு படத்தைக் கொண்டு செல்லவும், அதிலேயே காதல் சொல்லவும் முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் லக்‌ஷ்மன். இன்றைய காதலின் உண்மைத் தன்மையை பேசிய வகையிலும், சுடச்சுட ஒரு காதல் கதையைச் சொன்ன விதத்திலும் ‘முயற்சி செய்திருக்கிறார்’ எனத்தான் சொல்ல வேண்டும்.

பேய்களும், ஆவிகளும் ஆட்சி செய்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் காதல் இப்போது மெல்லப் பரவி வருவது கொஞ்சம் ரிலீஃப். ஆரம்பத்திலேயே பாகவதர் காலத்திலிருந்து வரும் காதல் காட்சிகளைக் காட்டும்போது எதிர்பார்ப்பு எகிறுவது உண்மை! ஜிம் கோச் வேடத்தில் அருமையாகப் பொருந்துகிறார் ரவி.  காதலில் விழுவது, நொறுங்குவது, சளைக்காமல் மறுபடியும் ரீ-ஸ்டார்ட்  செய்வது, கேட்டுப் பார்த்து பல்பு வாங்குவது, முறைப்பது எனப் பல  இடங்களில் ரசிக்க வைக்கிறார். அவரை பணக்காரராக நம்பி ஹன்சிகா சந்தோஷப்படும் இடங்கள் உண்மையிலேயே நம்பும்படியாக இருப்பது இயல்பு.

காதலைக் கொண்டே காதலின் ஏற்ற இறக்கங்களைச் சொல்வதற்கு நன்றாக உதவுகிறார் ரவி. கலகல காமெடி, காதல், கலர்ஃபுல் ஒளிப்பதிவு, திடுக் ட்விஸ்ட் என செம ஜோர் ஆரம்பம்தான். ஆனால், அதையே காரண காரியத்தோடு கொண்டு போவதில் கொஞ்சம் நொண்டியடிக்க விட்டுவிட்டார் டைரக்டர்.கொழுக்மொழுக் ஹன்சிகா, செம ஸ்லிம் பேபி ஆகிவிட்டார். அது ஓகே. ஆனால் ரவியைப் பார்த்து ஏமாந்துவிட்டு கடுப்படிக்கும் நேரங்களில், நடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள் போல. நொந்து நூடுல்ஸ் ஆகி, வெந்து சமாளிக்கிறார்!

கடைசியில் வரும் பூனம் பாஜ்வா முதல், எப்பவும் ஹன்சிகாவுடனேயே இருந்து நல்ல  ஐடியாக்களை அள்ளித் தரும் பெண்கள் வரை சில முகங்கள் பளிச்!
ஹீரோ, ஹீரோயின் என்றால் கல்யாண குணங்களோடு இருப்பார்கள் என்ற வழக்கமான இலக்கணத்தை கொஞ்சம் உடைத்துப்போட்டு இருப்பது ஆச்சரியம்.

ஜெயம் ரவி முன்னர் சந்தோஷ நெருக்கத்தில் இருந்த படங்களை எதிர்காலக் கணவருக்கு அனுப்பி வைத்துவிடுவேன் என ஹன்சிகாவை மிரட்டுவதும், அவரை மாதிரியே தனக்கு ஒரு பெண்ணை ‘செட்’ பண்ணிவிட்டு போகச் சொல்வதும் ஷாக்! ‘இப்படியெல்லாம் காதல் இருக்கிறதா’ எனக் கலங்கவும் வைக்கிறார்கள். ரவியைக் கலாய்க்கும்போதெல்லாம் ஜாலி ரைடு அடிக்கிறார் விடிவி கணேஷ். கரகர குரலில் அவர் என்ன பேசினாலும் சிரிப்பு வெடி வைத்திருப்பாரோ எனத் தோன்ற ஆரம்பித்துவிடுகிறது.

முதல் பகுதி கலகலப்பு சினிமாவை கடைசியில் சீரியஸாக மாற்றிவிடுவதில் கொஞ்சம் நீளமாகக் காக்க வைக்கிறார்கள். சில ரசனை வசனங்கள் வசீகரிக்கின்றனதான். ஆனாலும், ரவியும் ஹன்சிகாவும் பேசிக்கொண்டே வரும் கார் காட்சி... ஆவ்வ்வ்! பாடல்களில் ‘டண்டணக்கா...’ உண்மையிலேயே மாஸ் ஹிட்டு. இமானுக்கு ஷொட்டு. ஒளிப்பதிவில் செளந்தர்ராஜன் பளீர்! எடுத்த பொறுப்பை அழகாக சுமக்கிறார்.முதல் பாதி ரசிப்பு... மறுபாதி முறைப்பு!

- குங்குமம் விமர்சனக் குழு