நியூஸ் வே
ராகுல் காந்தி இப்போது போகும் இடங்களிலெல்லாம் காங்கிரஸ் கட்சியினரை போராட்டங்கள் நடத்தச் சொல்கிறார். ‘‘உங்களோடு சேர்ந்து போராட்டங்களில் பங்கேற்று போலீஸ் கையில் அடி வாங்கவும் தயாராக இருக்கிறேன்’’ என அவர் உசுப்பி விட்டாலும், இந்தப் பேச்சுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடைப்பதில்லை.
 திருமண வதந்தியால் பதறி விட்டார் ப்ரியாமணி. ‘‘நான் நடிக்க வேண்டிய கேரக்டர்கள் இன்னும் நிறைய இருக்கு. அப்புறம்தான் கல்யாணம். அந்த குட் நியூஸை உலகம் முழுக்க கூப்பிட்டு சொல்லிட்டுத்தான் பண்ணுவேன்’’ என படபடத்திருக்கிறார் ப்ரியா!
இது ஒரு கல்வி புள்ளிவிவரம். இந்தியாவில் படிக்கும் அத்தனை பேரும் செலவழிக்கும் கல்விக் கட்டணத்தை விடவும், அமெரிக்காவில் படிக்கும் பல்லாயிரம் இந்திய மாணவர்கள் செலவிடும் கல்விக் கட்டணம் அதிகம்!
 கடந்த நான்கு ஆண்டுகளில் இந்திய ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து பிடிபட்டவர்கள் நான்கரைக் கோடி பேர்.
கேரளாவில் கடல் நடுவே... அழகான படகு வீடு ஒன்றில் தங்களது முதலாமாண்டு திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது இயக்குநர் விஜய்-அமலாபால் ஜோடி. கலக்குங்க!
தூர்தர்ஷன் மகாபாரதத்தில் திரௌபதியாக நடித்து புகழ்பெற்ற ரூபா கங்குலி இப்போது பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவர். மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸை எதிர்த்து தினம் தினம் போராட்டங்கள் நடத்தி வருகிறார். ஆனால் அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் விரோதம் பாராட்டாமல் கலந்துகொள்கிறார்கள்.
இதில் எரிச்சலாகி இருக்கிறார் ரூபா. ‘‘மோடியா இங்கே வந்து அரசியல் செய்யப் போகிறார்? நாங்கள்தான் இங்கே கட்சியை நடத்துகிறோம். எந்த சமரசமும் இல்லாமல் மம்தாவை எதிர்க்கிறோம்’’ என அவர் கொதிப்போடு பிரதமரை எதிர்த்தது கட்சியினரை திடுக்கிட வைத்திருக்கிறது.
நம்ம ஊர் ஐ.பி.எல் போலவே மேற்கிந்தியத் தீவுகளில் ‘கரீபியன் பிரீமியர் லீக்’ போட்டிகள் நடக்கப் போகின்றன. ஷாருக் கான் அங்கும் சென்று ட்ரினிடாட் அண்டு டொபாகோ அணியை வாங்கியிருக்கிறார். ஹாலிவுட் நடிகர்கள் பலரும் அங்கே அணி உரிமையாளர்கள்.
ஜீவாவுடன் நடிக்கும் ‘திரு நாள்’ படத்திற்காக மொத்தமாக 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் நயன்தாரா. ஷூட்டிங் பிரேக்கில் கூட கேரவன் சென்று ஏ.சி.யில் இருக்காமல், வெயிலில் காயும் நயன் தாராவை யூனிட்டே ஆச் சரியமாகப் புகழ்கிறது!
‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக 14 கிலோ கூட்டியிருக்கிறார் அனுஷ்கா. அந்த பெரிய உயரம் இருப்பதால் ‘குண்டு’ என்ற வார்த்தையிலிருந்து தப்பிக்கிறார் அனுஷ்.
‘ஈரம்’ அறிவழகன், நாவல் ஆசிரியர் ராஜேஷ்குமாரின் கதையோடு வருகிறார். அதே ‘ஈரம்’ ஹீரோக்கள்தான் நடிக்கிறார்கள்.
இந்தியில் ரன்தீப் ஹூடாவுடன் நடிக்கும் படத்திற்காக மலேசியா சென்றிருக்கிறார் காஜல் அகர்வால். இந்தப் படத்தின் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்புகிறார்.
சந்தானம் மறுபடியும் சொந்தப் படம் தயாரிக்கிறார். அவரது நண்பர் சேதுதான் டைரக்ட் செய்கிறார். இப்படி அவரது நண்பர்களை வரிசையாக அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு இருக்கிறார்.
தெலுங்கு ‘நாயகி’ படத்தில் 20 வயது பெண் கேரக்டரில் வருகிறார் த்ரிஷா. இந்த கேரக்டருக்காக 6 கிலோ வரை எடை குறைத்து, செம ஸ்லிம் ஆகியிருக்கிறார் த்ரிஷ்.
ராஜஸ்தானை ஆளும் பி.ஜே.பி. கட்சியின் முதல்வர் வசுந்தரா ராஜே கோடை விடுமுறையை ஜில் ஆக்க சிம்லா போனார். ஆனால் இமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி இருப்பதால், முறைப்படி எந்தத் தகவலும் சொல்லவில்லை.
வேறு மாநில முதல்வர்கள் வரும்போது அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பது மாநில அரசின் கடமை. ‘‘எங்களுக்குத் தகவல் சொல்லாமல் வந்தால் நாங்கள் எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும்’’ என இமாசலப் பிரதேச தலைமைச் செயலாளர் ராஜஸ்தானுக்கு போன் போட்டு கொதிக்க, ‘‘அவர் டூர் போவது எங்களுக்கே தெரியாது’’ என பரிதாபமாகச் சொன்னாராம் ராஜஸ்தான் தலைமைச் செயலாளர்.
கமலின் ‘தூங்காவனம்’, Sleepless Night என்ற பிரெஞ்ச் படத்தின் ரீமேக்காம். போலீஸ் அதிகாரியின் மகன் போதைக்கு அடிமையாக, அவரை மீட்பதுதான் கதை. ஒரே ராத்திரியில் கதை நடக்கிறது.
ஸ்வீடனில் நடந்த சைக்கிள் ரேஸில் கலந்து கொண்டு பதக்கத்தோடு சென்னை திரும்பியிருக்கிறார் ஆர்யா. ‘‘இதுக்காக 8 மாதங்கள் ப்ராக்டீஸ் பண்ணினேன். முந்நூறு கி.மீ. தூரத்தை 15 மணி நேரத்தில் கடந்தது மறக்க முடியாத அனுபவம்’’ என சிலிர்க்கிறார் ஆர்யா. ‘‘நீ ஹீரோ. இப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து ஹாபி வேணாம்பா’’ என அவரது நலவிரும்பிகள் அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.
|