பார்க்கப் பார்க்கத்தான் காதல் வரும்!



கீர்த்தி சுரேஷ் பன்ச்

பிங்க் ரோஸ் பொக்கே போலிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். முதல் படம், ‘இது என்ன மாயம்’ இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அதற்கு முன்பே பிரபுசாலமன் டைரக்‌ஷனில் தனுஷ் நடிக்கும் படம், சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினி முருகன்’, பாபி சிம்ஹாவுடன் ‘பாம்பு சட்டை’ என அடுத்தடுத்த படங்களில் பொண்ணு இப்போ பிஸி. கீர்த்தியின் அம்மா மேனகா, தமிழில் ஓல்ட் இஸ் கோல்ட் ஹீரோயின். அப்பா சுரேஷ், கேரளாவில் பெரிய தயாரிப்பாளர்.

‘‘கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும். இல்லாட்டி அறிமுகம் ஆகுறதுக்கு முன்னாடியே இப்படி அடுத்தடுத்து வாய்ப்பு வருமா? மலையாளத்தில் எங்க அப்பாவோட ஃப்ரெண்ட்ஸ்தான் எனக்கும் ஃப்ரெண்ட்ஸ். அதனால அங்கே படங்கள் எனக்கு ஈஸியா இருந்துச்சு. ஆனா, தமிழுக்கு நான் புதுப் பொண்ணு. கதை, அதுல என் கேரக்டர் என்ன என எல்லாத்தையும் பார்த்துத்தான் கமிட் பண்றேன். சின்னப் படம்னாலும் எனக்கு நல்ல ஸ்கோப் இருக்கான்னு பார்க்கறேன். இந்த வருஷம் என்னோட ஆண்டா இருக்கணும்னு விரும்பி உழைக்கிறேன்!’’

‘‘மலையாளத்தில் மோகன்லால், திலீப் படங்கள் பண்ணியிருக்கீங்க... எப்படி இருக்கு கோலிவுட்?’’‘‘வெரி நைஸ். அம்மா, அப்பாவைப் பார்த்து வளர்ந்ததால சினிமாதான் என் கேரியர்னு சின்ன வயசுலயே தோணிடுச்சு போல. +2 படிக்கிறப்ப, நடிக்க ஆசை வந்துச்சு. ஆனா, வீட்ல பர்மிஷன் குடுக்கல. கிரியேட்டிவான துறையில இருக்கணும்னு ஃபேஷன் டிசைனிங் படிக்க அனுப்பிட்டாங்க. 3வது வருஷம் படிக்கிறப்ப, நான் லண்டன்ல இருந்தேன். அப்போ பிரியதர்ஷன் அங்கிள் எனக்கு போன் பண்ணினார். ‘என்னோட ‘கீதாஞ்சலி’யில நீதான் ஹீரோயின்’னு அவர் சொன்னார்.

 செட்டுக்கு போயி, ஒரு வாரம் கழிச்சுதான் எனக்கு அதோட கதையே தெரியும். அதுல மோகன்லால் அங்கிள் கூட எந்த பயமும் இல்லாமல் நடிச்சேன். அப்புறம் திலீப் சேட்டனோட ‘ரிங்மாஸ்டர்’ சான்ஸும் அப்பாவோட ஃப்ரெண்ட்ஷிப்ல வந்ததுதான். டைரக்டர் விஜய் சார், ப்ரியதர்ஷன் அங்கிள்கிட்ட அசோசியேட்டா இருக்கும்போதே எனக்குத் தெரியும். அப்படிக் கிடைச்சதுதான் ‘இது என்ன மாயம்’. இதுல என்னோட கேரக்டர் பெயர் மாயா. மலையாளத்தை விட தமிழ்ல நடிக்கும்போதுதான் ரொம்பக் கஷ்டப்பட்டேன். அந்த மாயா கேரக்டர் அப்படி!’’

‘‘அம்மா அட்வைஸ் ஏதும்…’’‘‘ ரஜினி சாரோட ‘நெற்றிக்கண்’, பிரபு சாரோட ‘நலம்தானா’ படங்கள்ல எங்க அம்மா நடிச்சிருக்காங்க. அம்மா பிறந்தது தமிழ்நாட்டுலதான். தமிழ் இண்டஸ்ட்ரி பத்தி அவங்களுக்குத் தெரியும்.

 இங்கே அவங்களுக்கு ஃப்ரெண்ட்ஸும் நிறைய. நான் இங்கே யூனிட்ல எல்லார்கிட்டயும் மரியாதையா நடந்துக்கணும்; காலையில ஏழு மணிக்கு ஷூட்டிங்னா, ஆறே முக்காலுக்கே ஸ்பாட்ல மேக்கப்போட இருக்கணும்னு சின்னச் சின்ன அட்வைஸ் கொடுத்திருக்காங்க. என்னோட முதல் பட ஹீரோ சிவாஜி சார் ஃபேமிலின்னதும் எங்க வீட்ல எல்லாருக்குமே ஹேப்பி.

 ஷூட்டிங் அன்னிக்கு ஒருநாள் பிரபு சார் ஸ்பாட்டுக்கு வந்திருந்தார். ‘க்யூட் கேர்ள்’னு பாராட்டி என்னோட ரொம்ப க்ளோஸ் ஆயிட்டார். அவர் அந்தக் கால நினைவுகள், அனுபவங்களை எல்லாம் ஷேர் பண்ணினது செம எனர்ஜி கொடுத்துச்சு. விக்ரம் பிரபுவுக்கும் எனக்கும் நடிப்பில செம போட்டி இருக்கும். ‘யார் நல்லா பண்ணியிருக்காங்க? நானா? விக்ரமா?’னு டைரக்டர் விஜய் சார்கிட்ட கேட்டுக்கிட்டே இருப்பேன். அவர் சிரிப்பைத்தான் பதிலா சொல்வார். ‘தமிழ் பேசக்கூடிய ஒரு நல்ல ஹீரோயின் இண்டஸ்ட்ரிக்கு கிடைச்சிருக்காங்க’னு என்னைப் பத்தி விஜய் சார் சொல்லியிருக்கார். அதுவே பெரிய பெருமை!’’‘‘சிவகார்த்திகேயன்..?’’

‘‘செட்ல என்னை கலாய்ச்சுக்கிட்டே இருப்பார் சிவா. ‘ரஜினி முருகன்’ படத்துக்காக அதோட டைரக்டர் பொன்ராம் சார்தான் என்னை அப்ரோச் பண்ணினார். சிவா, சூரி அண்ணான்னு செம ஜாலியான செட். படத்தில் நான் மதுரைப் பொண்ணு.

நிஜத்தில் நான் கேரளாதானே… தமிழ் தெரியாதுனு நினைச்சிக்கிட்டு சிவாவும் சூரியும் ஓவரா கலாய்ச்சாங்க. நான்தான் தமிழ்ல பொளந்து கட்டுவேனே... அது தெரிஞ்சப்புறம் ரெண்டு பேருக்கும் செம பல்பு.  ‘பாம்பு சட்டை’ இப்போதான் ஷூட் போயிட்டிருக்கு. ‘இது என்ன மாயம்’ புரொடியூசர்ஸ்தான் அதுக்கும். அதுல நான் சார்லி சார் பொண்ணா நடிச்சிருக்கேன்!’’‘‘காதல்..?’’

‘‘நல்ல விஷயம். ஒருசில வார்த்தைகள்ல அதை விவரிக்க முடியாது. பார்த்த உடனேயே வர்றது இல்ல காதல். பார்க்கப் பார்க்கத்தான் அது வரும். நான் படிக்கிறப்ப எங்க காலேஜ்ல பசங்க ரொம்ப கம்மி. அதனால அப்போ யாரும் என்கிட்ட லவ் ப்ரபோஸ் பண்ணினதில்லை!’’‘‘கீர்த்தி கிச்சன் குயினாமே?’’‘‘ஆமாம்… ஐ லவ் குக்கிங். ரொம்ப என்ஜாய் பண்ணி சமைப்பேன். வெஜிடேரியன்தான் பிடிக்கும்.

ஆனா, காரம் வேணும். படிப்புக்காக நான் லண்டன்ல ஆறு மாசம் இருந்தப்போ குக்கிங் எக்ஸ்பர்ட் ஆகிட்டேன். கேரளாவில் இருந்து சாம்பார் பொடி, ரசப்பொடின்னு எல்லாமே அங்கே கொண்டுபோய் சமையல் பண்ணினேன். சாப்பாடு தவிர, பெட் அனிமல்ஸ்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா, அதை ஒழுங்கா பார்த்துக்க மாட்டேன். அதுக்காகவே எதையும் வளர்க்காம இருக்கேன்!’’

- மை.பாரதிராஜா
படங்கள்: புதூர் சரவணன்