சிரிக்கப் பிடிக்காதவர்கள் உண்டா?



ராதாமோகன் With ‘உப்பு கருவாடு’

“எல்லோருக்குமே சிரிக்கப் பிடிக்கும். அப்படி விருப்பப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சினிமாவோட அடிநாதம் நகைச்சுவைதான்னு கூட சொல்வேன். சார்லி சாப்ளின் தன் மெல்லிய ஆனால், அழுத்தமான நகைச்சுவையில் சொல்லாதது எதையும் இப்ப வரைக்கும் யாரும் சொல்லிடலை!’’ - அர்த்தபூர்வமாகப் பேசுகிறார் இயக்குநர் ராதாமோகன். ‘மொழி’, ‘அபியும் நானும்’ என இதயத்தை வருடியவர். இப்போது ‘உப்பு கருவாடு’ படத்தோடு வருகிறார்.

‘‘உங்க படத்தலைப்புன்னா கவிதையா இருக்குமே... கருவாட்டுக்கு மாறிட்டீங்க..?’’ ‘‘இருக்கணும்ல. வெரைட்டி இருந்தாத்தானே நல்லது. இந்தப் பேருக்கான அடையாளம் படத்தில் இருக்கு. ஒரு சுவாரசியமான சினிமாவுக்கான பொறுப்பு எனக்கு இருக்குறதா எப்பவுமே நினைப்பேன். ராதா மோகன்னா நம்பி வரலாம்னு ஒரு பேச்சு இருக்கணும். அப்படி நான் நினைச்சு பண்ணினது  அரிதாகத்தான் தவறியிருக்கு.

ஒரு படம்னா அது மனதில் நல்ல விதமான உணர்வுகளை எழுப்பணும். நல்ல திறமை இருந்தும் இன்னும் பெரிய இடத்துக்கு வராத நடிகர்களை வைத்துப் படம் பண்ணுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு இயக்குநரா வேறு வேறு உலகத்தையும் அனுபவங்களையும் தரவேண்டியது என் கடமை.

 இங்கே மனசில் இருக்கிற எதையும் வெளிக்காட்டிக்காம சிரிக்க வேண்டியிருக்கு. பர்ஃபெக்ட்டா இருக்கறது கூட இங்கே முட்டாள்தனம். சர்வ சாதாரணமான மனிதர்களை வச்சு, அவங்க குணநலன்களை முன்னிறுத்தி எடுக்கிற படம் இது.

நல்லா இருக்கும்!’’  ‘‘நீங்களும் முழுக்க காமெடியில் இறங்கிட்டீங்களா?’’‘‘சிரிப்புப் படம்தான். அதுவும், உணர்வோடு இருக்கணும். அச்சு பிச்சு நகைச்சுவைக்கு இடமில்லை. என் முந்திய படங்களில் எப்பவும் நகைச்சுவைக்கு இடம் உண்டு. எந்த உரையாடலையும் நகைச்சுவைக்குத் திருப்பிட முடியும். அப்படித்தான் இதிலும் இருக்கும்.

உணர்வுபூர்வமாக இருக்கும்போது, நகைச்சுவையும் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். ரொம்ப சிம்பிளா, சிரிப்புக்கு அதிக இடம் கொடுத்து பண்ணியிருக்குற படம். சிரிக்கும்போது யாருமே வேறொரு அழகில் வந்துடுவாங்க. கண் மூடி, முகம் சுருங்கி சிரிச்சாலும் அது அழகுதான். தினம் இந்த இந்த நேரத்தில் சிரிக்கப் போறோம்...

அழகாகப் போறோம்னு நமக்கு முன்கூட்டியே எதுவும் தெரியாது. ஆனால், அப்படி நடக்கும். திட்டமிட்டு யாரும் சிரிக்க மாட்டாங்க. அது இயல்பானது. எதையும் ஆற்றுகிற அழகு நகைச்சுவைக்கு உண்டு. டான்ஸ் பிடிக்காதவர்கள் இருக்கலாம். ஆக்‌ஷனை விரும்பாதவர்கள் உண்டு. அழுகையை வெறுப்பவர்கள் உண்டு. சிரிக்கப் பிடிக்காதவர்கள் உண்டா?’’‘‘கருணாகரன்... ஹீரோவா?’’

‘‘எனக்கு இந்த இளைஞனைப் பிடித்திருந்தது. நடிப்பென்று பெரிதாக எதையும் சுமை மாதிரி எடுத்துப் போட்டுக்கொள்ளாமல் அவர் இயல்பாக நடிப்பது இன்னும் நன்றாக இருந்தது. அவரையே எனது கதைநாயகனாக ஆக்கிவிட்டேன்.

அவரிடம் இமேஜ் எதுவும் இல்லை. அப்படி ஒன்றைத் தன்னிடம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற நெருக்கடியும் அவரிடம் இல்லை. ஒரு எஞ்சினியராக இருந்துவிட்டு சினிமா மீதான ஆர்வம் காரணமாக வந்தவர். இன்னும் நல்ல முன்னேற்றப் பாதையில் போவார். இதிலும் ஏராளமான நடிகர்கள்... என்னுடைய வழக்கமான நடிகர்களும் இருக்கிறார்கள். வித்தியாசமான ரோல்களில் அவர்கள் பரிமளிப்பதை நீங்கள் பார்க்க முடியும்!’’

‘‘உங்கள் படங்களில் வழக்கமாக இருக்கும் பிரகாஷ்ராஜ், விஜி இல்லாத படமாக இது இருக்கிறதே..?’’‘‘பிரகாஷ் இந்திய அளவில் படங்கள் செய்துகொண்டு பிஸியாக இருக்கிறார். அவரே டைரக்டராகவும் மாறிவிட்டார். அவரின் சினிமா மீதான ஈடுபாடு குறைந்த மதிப்பீட்டுக்கு உட்பட்டது அல்ல. விஜி இப்போதுதான் ‘36 வயதினிலே’ படத்தில் பளிச்சென்று தெரிந்தார். என்னோட அடையாளம் நிச்சயம் ‘உப்பு கருவாட்டில்’ இருக்கும். நல்ல இணக்கமான உணர்வுகளை இதில் நீங்கள் அடைய முடியும். இன்னும் பெரிய அளவில் என்னுடைய வெளிப்பாடு இது.

 எங்கோ கண்காணாத பிரதேசத்தில் நடக்கிற கதையல்ல. நம் கண்முன்னே இருக்கிற வாழ்வுதான். என் எந்தப் படமும் சம காலத்திலிருந்துதான் எடுக்கப்படுகிறது. மிகை உணர்வோடு நான் எந்த முயற்சியும் செய்வதில்லை. விஜிக்குப் பதிலாக பார்த்திபன் வசனம் எழுதுகிறார். இவரும் நம்பிக்கை தருகிற இளைஞர்தான்!’’
‘‘உங்களின் ‘கௌரவம்’ பெரிய வெற்றி பெறவில்லையே..?’’

‘‘அதிலும் என் வழக்கமான மெல்லிய நகைச்சுவையை எதிர்பார்த்தார்கள். சாதிய பிரச்னைகளை எடுத்துக்கொள்வதற்கு நான் போதிய கவனம் செலுத்தவில்லையே என நினைத்தேன். எனக்கே ‘கௌரவம்’ தோல்வி ஒரு பாடமாகத்தான் இருந்தது. எல்லோருக்கும் என்ன வருகிறதோ அதைச் செய்வது போதுமானது.

கையைச் சுட்டுக்கொண்டேன்!’’‘‘உங்களின் படங்களில் பாடல்கள் எப்போதும் முக்கியத்துவம் பெறும்...’’‘‘இதில் ஸ்டீவ் என்பவரை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறேன். கௌதம் மேனன் மூலமாக பழக்கமானவர். எனக்கு சமீபத்தில் மிகவும் நம்பிக்கை ஏற்படுத்தியவராகத் தெரிந்தார்.’’‘‘சரி, தீவிர சினிமா பிரியராக உங்களின் கவனத்திற்குள்ளான சமீபத்திய இயக்குநர்கள் யார்?’’

‘‘கார்த்திக் சுப்புராஜ் பிரமாதமான இயக்குநர். அவர் படங்கள் வேறுபட்டு இருக்கிறது. ஜெயித்தும் காட்டுகிறார். வெளிவராத பக்கங்களை வெளியே எடுத்துக்காட்டுகிறார். நம்பகமான இயக்குநராக இன்னும் வெளிப்படுவார் என நம்புகிறேன். அதே மாதிரி நலன் குமாரசாமி. அவரையும் மிகவும் மதிக்கிறேன். ‘காக்கா முட்டை’ தந்த மணிகண்டன் தற்சமயம் மிக நம்பிக்கையான வரவு.

வெகு சுலபமாக குழந்தைகளின் உலகத்தைப் படைக்க முன்வந்தார். வயது வந்தோர்க்கான சினிமாவையே சிறுவர்களும் பார்க்க நேர்கிறபோது, அவர்களின் உலகை வெளியே தெரியப்படுத்துவது முக்கியமானது. நம்மைக் குற்ற உணர்வில் கொண்டு போய் விடுகிறார்கள் அந்த சிறுவர்கள். நமக்கு நம்மை கவனித்துக்கொள்ளவே நேரம் சரியாக இருக்கிறது என்பதை அந்தச் சிறுவர்கள் சொல்லாமல் சொல்லி விடுகிறார்கள். சதா  வெறும் பாதம் தரையில் பட நடந்துகொண்டே இருந்த அந்த சிறுவர்களை எனக்குப் பிடிக்கிறது!’’

- நா.கதிர்வேலன்