நடிகை என்றால் எப்படி வேண்டுமானாலும் பேசலாமா?
விசாகா சிங் விஸ்வரூபம்!
கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ ஹீரோயின் என்ற அளவில் நமக்கு இந்தப் பெண்ணைத் தெரியும். விசாகா சிங். நடிகைதான். மும்பை மாடல்தான். ஆனால், ‘ஐ லவ் டமில்’ எனப் பேசும் ஆளில்லை. சமீபத்தில் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆபாச கமென்ட் போட்ட ஒருவனுக்கு விசாகா கொடுத்த பதிலடி இந்தியாவையே பேச வைத்திருக்கிறது. இந்தப் பிரச்னை பற்றி பிளாக் ஒன்றில் அவர் எழுதியிருக்கும் விரிவான கடிதம், பரபரப்பின் உச்சம் தொட்டிருக்கிறது. அது இங்கே தமிழில்...முன்கதை...
 ‘எவருமே யாரோ ஒருவருக்கு அன்னியர்தான்’ (Everybody is somebody’s foreigner) எனும் ஒரு டி-ஷர்ட் வாக்கியத்தில் வந்தது பிரச்னை. இந்த வாசகம் கொண்ட டி-ஷர்ட் அணிந்து ஒரு போட்டோவை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார் விசாகா. நடிகைகள் டி-ஷர்ட் அணிவது சாதாரணம். அதிலிருக்கும் கவர்ச்சி கவிச்சி எல்லாம் மரத்துப் போய், ‘‘என்ன பிராண்ட் டி-ஷர்ட்டுப்பா அது?’’
என விசாரிக்கும் பக்குவத்துக்கு இந்தத் தலைமுறை வந்தாச்சு. ஆனால், இதில் சேர்த்தியில்லாத ஒரு ஆள், விசாகாவின் மார்பகங்களை வர்ணித்து வக்கிரமான கமென்ட் போட்டிருக்கிறார். யார் என அறிய அவரது புரொபைல் பிக்சரைப் பார்த்தால் ஒரு குட்டிப் பெண்ணின் படம்! இதைப் பார்த்து கடுப்பாகி, விசாகா கொடுத்த பதில் கமென்ட் இதுதான்.
‘‘மிஸ்டர். XXXXX, தைரியம் இருந்தால் உங்கள் சொந்த புகைப்படத்தோடு, அடையாளங்களோடு வந்து கமென்ட் போடுங்கள். அடுத்து என் மார்புகள்... உங்கள் பொது அறிவுக்காக சொல்கிறேன். எல்லா பெண்களுக்கும், உங்கள் தாய், சகோதரி, மனைவி, பாட்டி, மகள், தோழிகள் எல்லோருக்கும் மார்பகங்கள் உண்டு. அவர்களிடம் சொல்வீர்களா இதை? தைரியம் இருந்தால் இதை என் முகத்துக்கு நேரே வந்து சொல்லுங்கள்!’’
இந்த பதில் இணையத்தில் பெரிய சர்ச்சையாகிவிட்டது. வயசுப் பெண்கள் அத்தனை பேரும் விசாகாவுக்கு ‘வாவ்’ சொன்னாலும், ஆண்கள் தரப்பு கழுவி ஊற்றியது. தன் மீதான அந்த எதிர்ப்புகள் அனைத்தையும் பதிவு செய்து, அதற்கான பதிலையும் சோஷியல் மீடியாக்களில் பெண்களுக்கான பாதுகாப்பையும் தில்லாகப் பேசுகிறது விசாகாவின் இந்தக் கடிதம்.கடிதம்...
‘‘இந்தக் குறிப்பிட்ட ஆள், ரொம்ப காலமாகவே என் இன்பாக்ஸில் தகாத கமென்ட்டுகளை இட்டு வந்திருக்கிறார். அவரை ப்ளாக் செய்தாலும் வேறொரு பொய்யான முகநூல் கணக்கு தொடங்கி மீண்டும் வருவார். கடைசியாக அவர் பொதுவெளியில் என்னுடைய பதிவு ஒன்றுக்கு மோசமாக கமென்ட் செய்திருந்தார். அவரின் புரொபைல் பிக்சராக ஒரு பெண் குழந்தையின் படத்தைப் பார்த்ததும்தான் என் கோபம் பொங்கிப் பெருகியது. அப்போதும் நான் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, நாகரிகமான முறையில் அவருக்கு பதிலுரைதான் இட்டேன்.
எல்லா முனைகளில் இருந்தும் என்னை நோக்கி கத்திகள் வீசப்பட அதுவே காரணமாகிவிட்டது.ஒரு பெண்ணாக பாலியல் சீண்டல் எனக்குப் புதிதல்ல. நடிகையாகும் முன், சல்வார் அணிந்து கல்லூரி சென்ற காலத்திலேயே நான் ஈவ் டீஸிங்குகளையும் வக்கிரப் பார்வைகளையும் எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால், இணைய வழி வக்கிரம் எனக்குப் புதிது. நான்கு நாட்களில் முகநூலில் நான் ஒரு டிரெண்டிங் விவாதமாகிவிட்டேன்.
உலகம் முழுவதும் எனது பதிவு பகிரப்பட்டது. ஆளாளுக்கு என்னைத் திட்டித் தீர்த்தார்கள். ‘பெண்ணியவாதி’ என்ற முத்திரை குத்தி என்னைக் குறி வைத்துத் தாக்கினார்கள். (feminist என்பது அவ்வளவு மோசமான கெட்ட வார்த்தையா என்ன?) நானொரு ‘ஆண் வெறுப்பாளர்’ என்றும், ‘மலிவான விளம்பரம் தேடும் நடிகை’ என்றும் சாடப்பட்டேன்.
‘அவள் உடை அணிவது அப்படி!’ என்றார்கள் சிலர். ‘இதே வார்த்தையை ஒரு படத் தயாரிப்பாளரோ, இயக்குனரோ சொல்லியிருந்தால் இதே மாதிரி கோபப்பட்டிருப்பாயா?’ எனக் கேட்டார்கள் சிலர். என்னை ஒரு அயிட்டம் கேர்ள், டான்ஸர் எனச் சொல்லி, என் ஆணவத்தை அடக்கப்போவதாகவும் சிலர் மிரட்டியிருந்தார்கள்.
என்னை எதிர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பிரச்னைக்குரிய அந்த கமென்ட்டைக் கூட படிக்கவில்லை. அந்த மனிதனின் குடும்பப் பெண்களை நான் அவமானப்படுத்திவிட்டதாய் கோபப்படுகிறார்கள். (பொய்ப் புகைப்படம், பொய்யான அடையாளங்களையே வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு மர்ம மனிதனுக்கு இந்த அவமானம் பொருந்துமா என்ன?)ஒருவன் என்னை பாலியல் துன்புறுத்தல் செய்தான். நான் அவனுக்கு பதில் சொன்னேன். அவ்வளவுதான்! ரொம்பவும் எளிதான இந்தச் சம்பவம், பூதாகாரமாய் ஆக்கப்பட்டுவிட்டது. இங்கேதான் துவங்குகிறது உண்மையான பாலியல் துன்புறுத்தல்!
நான் ஆண் வெறுப்பாளர் அல்ல. ஆணோ, பெண்ணோ... தகாதவற்றை நான் யாரிடமிருந்தும் ஏற்பதில்லை. நான் வளர்க்கப்பட்டது அப்படி. விளம்பரம்..? அது எனக்குத் தேவையில்லை. நடித்த சில படங்களால் என்ன வெளிச்சம் கிடைத்ததோ அது போதும்! நடிப்பு எனக்குப் பிடிக்கும். ஆனால், அதுவே என் பிரதான வருமானம் அல்ல. என் உடைகளை வைத்தும், நான் ஒரு நடிகை என்பதாலும், என்னிடம் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என நினைத்தால், அது நினைப்பவரின் மன அழுக்கைத்தான் காட்டுகிறது!
நான் அயிட்டம் கேர்ள் அல்ல... டான்ஸரும் அல்ல... ஆனால், அதெல்லாம் கீழ்த்தரமான வேலைகளா என்ன? அவர்களும் உழைத்துச் சம்பாதிக்கும் தொழிலாளிகளே. நீங்கள் செலுத்தும் சாதாரண வருமான வரிகளை விட அதிகமாக, 14% வரி கட்டுகிறவர்கள் அவர்கள்! பலரும் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றவே டான்ஸர் ஆகிறார்கள். கண்ணியமாக உழைக்கிறார்கள்.
என்ன சொன்னாலும் இதை வம்புக்காரர்கள் விடமாட்டார்கள். காரணம், ஆன்லைனில் எதையும் சொல்லிவிட்டு அவர்கள் இலகுவாக தப்பித்துக்கொள்ளலாம். அது உண்மைதான். ட்விட்டரிலோ ஃபேஸ்புக்கிலோ ஒருவர் பற்றி நாம் புகார் கொடுத்தால் என்னாகும்? அவர்களின் கணக்குகள் முடக்கப்படும். பிறகு? அடுத்த நாளே அவர்கள் வேறொரு கணக்கைத் தொடங்கி மீண்டும் வருவார்கள்.
இன்னும் சற்றுக் கடுமையான சைபர் சட்டங்கள் நமக்குத் தேவை. அதோடு, வருங்காலத் தலைமுறைக்கு ‘சமூக வலைத்தள நாகரிகங்கள்’ சிலவற்றை இப்போதே நாம் சொல்லிக்கொடுக்க வேண்டும். நாளையேனும் சமூக வலைத்தளங்கள் ஆரோக்கியமாய் இயங்க இது அவசியம். நிஜ வாழ்க்கையில் ஒருவரின் முகத்துக்கு நேராகப் பேசத் தயங்கும் பல விஷயங்களை இணையத்தில் சர்வசாதாரணமாக உதிர்த்துவிட்டுப் போகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும்.
இதற்கு முன்பு இதே மாதிரியான ஒரு கமென்ட்டுக்கு நான் லைக் போட்டிருப்பதாக சில ஆதாரங்கள் நெட்டில் உலவுகின்றன. ஒரு இளைஞர் அதை எல்லாம் நேரடியாக என் தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி விளக்கம் கேட்டார். அது நானில்லை என்பதையும் இப்படி உருவாக்கப்படும் போட்டோக்கள் ஏன் நம்பகமில்லாதவை என்பதையும், அவருக்கு எடுத்துச் சொன்னேன்.
அவர் என் தரப்பை சில இடங்களில் புரிந்துகொண்டார். சில விஷயங்களில் நான் எதிர்த்தவற்றை அவரும் எதிர்த்தார். மிக கௌரவமாக நடந்த உரையாடல் அது. இம்மாதிரி தவறுகளை / குறைகளை நாகரிகமாகச் சுட்டிக் காட்டுவதும் ஓர் ஆரோக்கிய சமூகத்துக்குத் தேவை. அதையும் நான் உணர்ந்திருக்கிறேன்.
அனைத்தையும் திரும்பிப் பார்க்கும்போது, நடந்திருக்கும் இந்தச் சம்பவம் அனைவருக்குமே ஒருவித ஊக்கத்தைக் கொடுத்திருக்கும் எனத் தெரிகிறது. அந்த ஊக்கம் பெண்களுக்கானது மட்டுமல்ல என்பது மிக நல்ல விஷயம்!’
‘இதே வார்த்தையை ஒரு படத் தயாரிப்பாளரோ, இயக்குனரோ சொல்லியிருந்தால் இதே மாதிரி கோபப்பட்டிருப்பாயா?’
தொகுப்பு : நவநீதன்
|