சாந்தினி சரவெடி



தமிழ் பேசுகிற ஹீரோயினுக்கு இங்கு வாய்ப்பு கிடைக்காது!

கண்ணுக்கு லட்சணமான பொண்ணு... காந்தமா இழுக்கும் கண்ணு... இதுதான் சாந்தினி. ‘சித்து +2’, ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ படங்களில் நடித்தவர். ‘‘அடுத்து என்ன படம்?’’ என்று கேட்டபோதெல்லாம் இதழ் பிதுக்கி வருத்தம் காட்டி வந்தவரின் கைகளில் இப்போது வரிசையாக தெலுங்குப் பட வாய்ப்புகள்! ‘‘நிஜ புயல் மாதிரி இந்த அழகுப் புயலும் சென்னையில இருந்து ஆந்திராவுக்கு ட்ராக் மாறிடுச்சு போலிருக்கே...’’ என ஆர்வமாக சாந்தினியிடம் உரையாடினோம்...

‘‘ப்ச்... என்னங்க பண்றது? ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ படத்தில் என்னோட கேரக்டரை சுற்றித்தான் கதையே நகரும். அவ்வளவு முக்கியமான ரோல். விமர்சனரீதியா படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சும் எதிர்பார்த்தபடி ஓடல. தமிழில் எனக்கு வாய்ப்பு வராததற்கு வேற காரணம் தேவையா? தமிழ்ப் பொண்ணா வேற போயிட்டேன். நுனி நாக்கு ஆங்கிலம் பேசத் தெரிஞ்சாலும் எனக்கு தமிழ்ல பேசத்தான் பிடிக்கும். அப்புறம் எப்படி எனக்கு வாய்ப்புக் கிடைக்கும்? சரி, எல்லாம் சாய்பாபா விட்ட வழின்னு காத்திருந்தப்ப கிடைச்ச கற்கண்டு வாய்ப்புதான் ‘காளிச்சரண்’ தெலுங்கு படம்.
எண்பதுகளின் பின்னணியில் நடக்கிற கதை.

சைதன்யா கிருஷ்ணாதான் ஹீரோ. காலேஜ் படிக்கிற பிராமணப் பொண்ணு கேரக்டர்ல என்னோட நடிப்புக்கு எல்லா தரப்புல இருந்தும் நல்ல பாராட்டு! அந்தப் படம் ரிலீஸ் ஆன மறு வாரத்திலேயே ‘கிராக்’னு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதில் அல்ட்ரா மார்டன் பொண்ணாக நடிக்கிறேன். புது முகம் அனிருத் என்பவர் ஹீரோ. இது தவிர இன்னும் ரெண்டு தெலுங்கு படங்கள்லயும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கேன். ஹீரோ, இயக்குனர் யார்ன்னு அடுத்த மீட்டிங்ல சொல்றேன்.’’
‘‘இப்பவும் தமிழ்ப் பட வாய்ப்பு வரலையா?’’

‘‘தமிழ்ல மட்டுமில்ல, கன்னடப் படம் ஒன்றிலும் நடிக்க வாய்ப்பு வந்திருக்கு. ரெண்டுமே அருமையான கதை. ஆனா, அது பத்தின அறிவிப்பை பட நிறுவனமோ, சம்பந்தப்பட்ட இயக்குனரோ சொல்ற வரை நான் கொஞ்சம் அடக்கி வாசிக்க நினைக்கறேன். ஆனா ஒண்ணு... மத்த மொழிகள்ல நான் எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் தமிழ்ப் படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன். ‘மூன்றாம் பிறை’ ஸ்ரீதேவி, ‘மின்சாரக் கனவு’ கஜோல், ‘மொழி’ ஜோதிகா மாதிரி வாய்ப்பு வந்தா சம்பளம் பற்றி கவலைப்படாமல் நடிக்க ரெடி. நான் வணங்குற பாபா, கூடிய சீக்கிரம் அந்த மாதிரியான வாய்ப்பு க்குப் பாதை போட்டுக் கொடுப்பார்...’’

‘‘பாபா பக்தையா நீங்க?’’ ‘‘தீவிர பக்தை. எந்த நல்ல காரியமா இருந்தாலும் வியாழக்கிழமைதான் தொடங்குவேன். அதேபோல் எனக்கு எந்த நல்லது நடந்தாலும் அது வியாழக்கிழமையில்தான் நடக்குது. என்னோட தெலுங்கு பட கமிட்மென்ட்ஸ் வந்ததெல்லாம் வியாழக்கிழமையிலதான். நடிக்க வர்றதுக்கு முன்னாடி, ‘மிஸ் சென்னை பியூட்டிஃபுல் போட்டோஜெனிக்’ பட்டம் வென்றேன். த்ரிஷாவும் ‘மிஸ் சென்னை’ பட்டம் வாங்கினவங்கதான். த்ரிஷா படிச்ச ஸ்கூல், காலேஜ்ல தான் நானும் படிச்சேன்.

 சினிமாவிலும் அவர் மாதிரி புகழ் பெறணும்னு விரும்பறேன். இப்போ ரெண்டு பேரும் சேர்ந்து கனடாவுல நடக்கற ஃபேஷன் ஷோவில் கலந்துக்கப் போறோம். அதுவும் வியாழக்கிழமையாதான் அமைஞ்சிருக்கு!’’‘‘தெலுங்கில் கிளாமரை எதிர்பார்ப்பாங்களே?’’ ‘‘ஆமா. என் உடல் வாகுக்கு பொருத்தமா அமையிற கிளாமர் வேடங்களில் நடிக்க நான் ரெடிதான். என்னோட அகராதி யில் கிளாமர் என்பதற்கு அர்த்தம் அழகுதான். ரசிகர்களை முகம் சுளிக்க வைக்காத கிளாமர் கதாபாத்திரத்துக்கு என்னோட சிக்னல், க்ரீன்!’’

- அமலன்