நம்பிக்கையான காத்திருப்பு!



காணாமல் போன மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம் கடலில் விழுந்து நொறுங்கிவிட்டது என கடைசி கடைசியாக மலேஷியப் பிரதமர் கவலையாக அறிவித்து விட்டார். ஆனாலும், இன்னமும் அதுகுறித்த மர்மம் முழுமையாகத் தெளிவாகவில்லை. வேடிக்கை பார்க்கும் மனிதர்களுக்கு, ‘அந்த விமானம் என்ன ஆகியிருக்கும்?’ என்பது ஒரு பரபரப்பான புதிர். ஆனால், அதில் பயணம் செய்த 239 பேரின் உறவினர்களுக்கு?

ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். பலர் அழுகிறார்கள்; கோபத்தைக் கொட்டுகிறார்கள். நிலைகொள்ளாமல் என்னென்னவோ செய்கிறார்கள். ‘என்ன ஆனதோ’ என்ற பரிதவிப்பிற்கும், ‘எங்கோ ஓரிடத்தில் உயிரோடுதான் இருப்பார்கள்’ என்ற நம்பிக்கைக்கும் பெரிய போராட்டமே நடக்கிறது. அந்த விமானத்தில் பயணித்த சென்னைவாசியான சந்திரிகா சர்மாவின் கணவர் நரேந்திரன் எழுதிய நெகிழ்ச்சியான பதிவின் சில பகுதிகள் இங்கே...

‘‘இன்னமும் காத்திருக்கிறேன். கிளம்பிப் போனதுபோலவே திடீரென சந்திரிகா வந்துவிடுவாள் என இன்னமும் காத்திருக்கிறேன். கண்ணுக்குத் தெரியாத தூதரக முயற்சிகள், புலனாய்வுத்துறை விசாரணைகள், வல்லமைமிக்க ராணுவத்தின் தேடல் என எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்து நிச்சயம் அவர்களை மீட்கும் என மனம் ஆறுதலடைகிறது. அப்படித்தானே நினைக்க வேண்டும்!
இந்தத் துயரத்தில் நேரடியாகத் தொடர்பில்லாதவர்கள், இதை ‘ஒரு தீய சக்தியின் திட்டமிட்ட சதி’ என நினைத்து வியக்கலாம்; இதற்காக அந்த சக்திகள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளையும் முயற்சிகளையும் பாராட்டலாம். ஆனால் ஒரு உண்மை புரிகிறது. மனிதர்களாகிய நாம் சிறிதளவே உலகைப் புரிந்து வைத்திருக்கிறோம்; இப்படிப்பட்ட சம்பவங்களின்போது இயலாமையின் அடிமைகள் ஆகிறோம்.

நாங்கள் தனி மனிதர்கள். எங்களால் என்ன செய்ய முடியும், அமைதியாகக் காத்திருப்பதைத் தவிர! எந்தத் தகவலும் தெரியாமல் எதற்கு அங்கு ஓடுவது என உறவுகளோடும் நண்பர்களோடும் வீட்டிலேயே நாட்களைக் கழிக்கிறோம். ஒவ்வொரு நாளும் நரகமாக நகர்கிறது. புதிது புதிதாக வரும் தகவல்கள் எங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. மேலும் மேலும் அதைப் பற்றி எழும் கேள்விகள், எங்களை நிலைகொள்ளாமல் தவிக்க வைத்து விடுகின்றன.

விமானத்தைத் தேடுவது பற்றி அதிகாரிகள் நடத்தும் பிரஸ் மீட்கள், வெளியிடும் செய்திகள் எல்லாமே எந்த முழுமையான தகவலையும் தரவில்லை. எங்கள் கேள்விகளுக்கு அவர்கள் தரும் தகவல்கள் எதுவுமே பதிலாக இல்லை. இந்த நரகம் ஏதோ ஒருவிதத்தில் முடிவுக்கு வந்தால் பரவாயில்லை என சில நேரம் தோன்றுகிறது. அசைக்க முடியாத ஆதாரங்களைக் காட்டி, ‘விமானத்துக்கு இதுதான் நடந்தது. அதில் பயணித்தவர்கள் நிலை இப்போது இதுதான்’ என தெளிவாகச் சொல்லி விட்டால் பரவாயில்லையோ என யோசிக்கிறேன். எங்கள் சந்திரிகாவை திரும்பவும் எங்கள் வீட்டுக்கு வரச் செய்யும் செய்திதான் எனது உடனடித் தேவை. நாங்கள் அடுத்த நாளிலிருந்து இயல்பாக வாழ ஆரம்பிக்க வேண்டாமா?

எங்கள் மகள் மேக்னாதான் பாவம். ‘அம்மாவுக்கு என்ன ஆனதோ’ என்ற தவிப்போடு நாட்களை நகர்த்தும் அவள், எப்படி கல்லூரிக்குத் திரும்பிப் போவாள். அவளால் எப்படிப் படிக்க முடியும்? எங்கள் எல்லோரையும் விட்டுவிட்டு அவள் டெல்லியில் எப்படி இந்த வேதனையைத் தாங்கிக் கொண்டு இருப்பாள்? சந்திரிகாவின் அம்மா நம்பிக்கையாக இருக்கிறார்; என் அம்மாவுக்கும் அதே நம்பிக்கை இருக்கிறது. ஆனால் எனக்கு அதிசய ங்களில் நம்பிக்கை இல்லை.

அறிவின் பார்வையைப் புறக்கணித்துவிட்டு, நம்ப முடியாத ஒன்று நடந்துவிடும் என நினைப்பது அபத்தமானது. சந்திரிகா உறுதியானவள்; எதையும் தைரியமாக எதிர்கொள்பவள்; எத்தனையோ பேருக்கு, எவ்வளவோ நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறாள்; நல்லதையே நினைக்கும் ஆத்மா அவள். இதற்கெல்லாம் பிரதிபலன் இல்லாமலா போய்விடும்! வலிகள், வேதனைகள், துயரங்கள், தவிப்புகள் எல்லாவற்றையும் தாண்டி எங்களை இந்த ஒரு விஷயம்தான் நம்பிக்கையோடு காத்திருக்க வைத்திருக்கிறது!’’

 அகஸ்டஸ்