நிழல்களோடு பேசுவோம்



தேர்தல்கள்: ஒரு தேசிய கொண்டாட்டம் தேர்தல் திருவிழா என்கிற வார்த்தையை ஊடகங்களில் அடிக்கடி பார்க்க முடிகிறது. அது தேர்தல் கால உற்சாகங்களைக் குறிக்கும் ஒரு வார்த்தை என்றபோதும், ஒருவிதத்தில் அதுதான் தேர்தல் குறித்த ஒரு உண்மையான மனநிலையினை விளக்கும் வார்த்தை என்று நினைக்கிறேன்.

 திருவிழாக்கள் மனிதர்களை இனம் புரியாத ஒரு நம்பிக்கையால் பிணைக்கிறது. இனம் புரியாத ஆவேசம் அவர்களை செலுத்துகிறது. கடவுளை நம்புவதற்கும் கட்சிகளை நம்புவதற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.

தெருக்களில் தேர் வருவது போல பிரசார ஊர்திகள் வருகின்றன. தலைவர்களைக் காண மக்கள் ஒவ்வொரு இடத்திலும் முண்டியடித்து முன்னேறுகின்றனர். திருவிழாக்களில் ஆடுகள், கோழிகள் பலியிடப் படுவதுண்டு. தேர்தல்களில் சில சமயம் மனிதர்கள் பலியாவார்கள். திருவிழாக் காலங்களில் கிராமப் பொருளாதார நடவடிக்கைகள் சுறுசுறுப்படையும். தேர்தல்களுக்கும் இது பொருந்தும். திருவிழாக் காலங்களில் மக்களுடைய மனதில் வேடிக்கை பார்க்கும் உணர்வே பிரதானமாக மேலோங்கியிருக்கும். தேர்தல்களிலும் அப்படித்தான். திரு விழாக்களில் அன்னதானங்கள் நடக்கும்; தேர்தல்களிலும் அது உண்டு. நான் மிகைப்படுத்தவில்லை. இந்தியர்கள் பெருந்திரளாக பங்கேற்கும் எந்த ஒரு நிகழ்விலும் அவர்களது சமயம் சார்ந்த பண்பாட்டு நடவடிக்கைகளின் சாயல் விழாமல் இருந்ததில்லை.

ஒரு ஜனநாயகத்தின் மாண்பு களை அந்த சமூகத்தின் கல்வியறிவு மிக்க பிரிவினர்தான் முன்னெடுக்கிறார்கள் என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அது அப்படியில்லை. இந்த நாட்டில் படிப்பறிவற்ற ஏழை கிராமவாசிகள்தான் தங்கள் வாக்குகளை புனிதமானதாகக் கருதுகிறார்கள். அவர்கள் எல்லா சமூக அதிகாரமும் பறிக்கப்பட்டவர்கள். இந்தச் சமூகத்தின் எந்த நிகழ்விலும் குறுக்கிட முடியாதவர்கள். அரசியல் கட்சிகளால் தொடர்ந்து ஏமாற்றமடைந்தவர்கள். ஆனால் அவர்கள் வாக்குச்சீட்டின் மீதான நம்பிக்கையை இழப்பதில்லை.

காரணம், இந்த நாட்டின் அத்தனை அதிகாரம் மிக்க சக்திகளும் மனிதர்களும் அவர்களைப் பொருட்படுத்துகிற, அவர்களைத் தேடி வருகிற, அவர்களின் கருணைக்காகக் காத்திருக்கிற ஒரே ஒரு சந்தர்ப்பம் அது. எப்போதும் புறக்கணிப்பையும் அவமானத்தையும் இந்த அமைப்பிற்குள் சந்தித்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதனின் மனநிலையில் இந்த தீர்ப்பிடும் அதிகாரம் என்பது மிகவும் முக்கியமானது. அதை அவன் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டான். பல ஆண்டுகளுக்கு முன்பு என் கிராமத்தில் ஒரு பாட்டியின் ஓட்டை யாரோ போட்டு விட்டார்கள். ஏமாற்றத்துடன் திரும்பி வந்த பாட்டி, மன முடைந்து அழுது சாபம் விட்டதை கண்டு வியந்தேன்.

அவளிடமிருந்த ஒரே ஒரு அதிகாரமும் பறிக்கப்பட்டுவிட்டதைத்தான் அந்தக் கண்ணீர் உணர்த்தியது. நகர்ப்புற படித்த மனிதர்களில் கணிசமானோருக்கு தேர்தல்களில் எந்த அக்கறையும் இல்லை. ‘மாற்றம் என்பது தேர்தல்களால் நடைபெறுவதில்லை’ என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்தியாவின் பிரச்னைகள், ‘யார் அதிகாரத்தில் இருக்கிறார்கள்’ என்பதைத் தாண்டியது என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். யாருக்கோ ஆதரவாக அல்லது எதிராக வாக்களிக்க வரிசையில் போய் நிற்க அவர்களுக்கு விருப்பம் இருப்பதில்லை. மேலும் தங்கள் வாழ்க்கையின் பிரச்னைகளை இந்த நாட்டின் அரசியல் கட்சிகளால் தீர்க்க முடியாது என்று அவர்களுக்குத் தெரியும்.

படித்த மத்திய தர வர்க்கம், இந்த நாட்டின் அதிகார வர்க்கத்தோடு இணைந்திருக்கிறது. அரசியல் தலைமை மாற்றம், அதிகார வர்க்கத்தின் குணங்களை மாற்றுவதில்லை. ஆனால் கல்வி, உணவு, சாலைகள், போக்குவரத்து, தண்ணீர், இருப்பிடம் என அனைத்து தேவைகளுக்கும் அரசாங்கத்தின் கைகளை எதிர்பார்த்திருக்கும் ஒரு மனிதனுக்கு தனது ஆட்சியாளர்கள் பற்றிய முடிவுகள் தீவிரமாக இருக்கின்றன. பல சந்தர்ப்பங்களில் தாங்கள் கைவிடப்பட்ட தன் கோபத்தை வெளிப்படுத்தவே மக்கள் எதிர்வாக்குகளை அளிக்க முன் வருகிறார்கள். ஒரு நாளைக்கு 10 மணி நேர மின்வெட்டில் தனது அன்றாட வாழ்க்கை முற்றிலுமாக சீரழிந்து போன ஒரு மனிதனுக்கு செய்ய என்ன இருக்கிறது? ஒரு வாக்குச்சீட்டைப் பயன்படுத்தி தனது கோபத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்துவதைத் தவிர?

நான் சிறுவனாக இருந்தபோது கண்ட தேர்தல் காட்சிகளை நினைத்துக்கொள்கிறேன். வயதாக வயதாக எல்லாவற்றையும் நம் மனம் பால்யத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறது. வாழ்க்கையின் வினோதங்கள் எல்லாமே கடந்த காலத்தின் கனவுகளாக மட்டுமே எஞ்சுகின்றன. எனக்கு நினைவிருக்கும் முதல் தேர்தல், எமர்ஜென்சி முடிந்து இந்திரா காந்தி தோல்வியடைந்த தேர்தல். எப்போதும் பள்ளி ஆண்டு விடுமுறைக் காலங்களில்தான் தேர்தல்கள் வந்திருக்கின்றன.

குழந்தைகள் இந்தத் தேர்தல் திருவிழாவில் உற்சாகமாகப் பங்கெடுப்பார்கள். பத்துப் பனிரெண்டு சிறுவர்கள் ‘‘இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?’’ என கோஷம் போட்டபடி ஏதேனும் கட்சிக் கொடிகளை ஏந்திக் கொண்டு ஊர்வலம் வருவார்கள். கொஞ்சம் நேரத்தில் போட்டிக் கட்சியும் வரும். அந்தக் காலத்தில் உதயசூரியனும் இரட்டை இலையும் மட்டும்தான். அவ்வப்போது கைச் சின்னம் தலை காட்டும். சுயேச்சைகளின் சின்னங்களைப் பார்க்கப் பார்க்க எங்களுக்கு சிரிப்பாக வரும்.

 தி.மு.க. ஆதரவு சிறுவர்கள், ‘‘சூரியன் உலகத்துக்கே தெரியும்.. இலை தெரியுமா?’’ என்பார்கள். அ.தி.மு.க. ஆதரவு சிறுவர்கள், ‘‘சூரியன் கண்ணு எரியுது... இலைதான் குளுகுளுன்னு இருக்குது’’ என்பார்கள். எம்.ஜி.ஆர் வேஷம் போட்டு ஒரு ஆள் யானை மீது பிரசாரம் செய்துகொண்டு போனது இன்றும் நினைவில் இருக்கிறது. நான் எம்.ஜி.ஆரை நேரில் பார்த்ததே இல்லை என்பதால் நான் எம்.ஜி.ஆரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அந்த ஆள் நினைவுக்கு வருவார்.

இப்போது தேர்தல் பிரசாரம் என்பது 24 மணி நேர செய்திச் சேனல்களுக்கும் இணையத்திற்கும் வேகமாக மாறி வருகிறது. அப்போதெல்லாம் பொதுக் கூட்டங்கள்தான் ஒரே அரசியல் களம். பொதுக் கூட்டங்கள் பெரும் திருவிழா போல இருக்கும். வாக்கு எண்ணிக்கை இரண்டு மூன்று நாட்கள் நடக்கும், இரவு முழுக்க ஆல் இந்தியா ரேடியோவில் பழைய பாடல்களை போட்டபடி தேர்தல் முடிவுகளை அறிவித்துக் கொண்டிருப்பார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்த பிறகு வாக்கு எண்ணத் தொடங்கி எல்லா சுவாரசியங்களும் இரண்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்துவிடுகின்றன.

தீர்ப்புகள் மாற்றத்தைக் கொண்டு வருகிறதோ இல்லையோ, தீர்ப்பிடும் அதிகாரம் மக்களிடம் இருப்பதை நாம் பாதுகாப்பது மிகவும் முக்கியம். வளர்ச்சியின் பெயராலும் முன்னேற்றத்தின் பெயராலும் சர்வாதிகாரத்தை ஏற்கத் துணியும் மூடர்களும் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அவர்களுக்கு சர்வாதிகாரம் என்றால் என்னவென்று தெரியாது. அதன் ரத்த ருசியை அவர்கள் அறிந்ததில்லை. ஜனநாயகத்தின் நோய்மைகளோடு நம்மால் உயிரோடு இருக்க முடியும். அரசனின் மாளிகையை நோக்கி தெருவில் நின்று ஒரு கல்லை எடுத்து எறிய முடியும். ஒரு கெட்ட வார்த்தை பேச முடியும். சர்வாதிகாரத்தில் அதற்கெல்லாம் இடம் இருக்கிறதா?

‘குங்குமம்’ இதழில் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். எண்ணற்ற வாசகர்களோடு இடையறாமல் உரையாடக் கிடைத்த இந்தச் சந்தர்ப்பம் மறக்க முடியாதது. எழுவதற்கான இடமும் நிர்ப்பந்தமும்தான் எழுத்தின் பிரதான ஊற்றுக்கண். அந்த வகையில் இந்தப் பத்தி என் மனதின் ஆழமான நீரோட்டமாக இருந்திருக்கிறது. எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் என் நன்றி.

மனுஷ்ய புத்திரன் பதில்கள்

குஷ்வந்த் சிங்?
சத்தியநாராயணன், அயன்புரம்.
போலி ஒழுக்கவாத பண்பாட்டில் ஒரு கலகக்காரர்.
அரவிந்த் கெஜ்ரிவால் வரவர அரசியல் ஜோக்கராக மாறிவருகிறாரே...
- எம்.சம்பத்,
வேலாயுதம்பாளையம்.
அவர் ஜோக்கர் இல்லை. மற்றவர்களை ஜோக்கராக மாற்றுகிறவர். 
காங்கிரஸுக்கு இது சோதனைக்
காலமா?
- எஸ்.பி.பாபு, முள்ளிக்காடு.
இல்லை, தண்டனைக் காலம்.
காதல் என்பது ஒரு இனிய உணர்வுதானே. பிறகு ஏன் காதலர்கள் முகத்தில் ஒரு மிரட்சி தெரிகிறது?
- கி.ரவிக்குமார், நெய்வேலி.
முடியும். உங்களால் சரியாக பார்க்க முடிந்தால்.
மறைந்த தி.க.சி அவர்களைப் பற்றி..
- தீபா பிரபு, கல்லிடைக்குறிச்சி.
வாழ்நாளெல்லாம் பாராட்டும் குணம் இருந்ததாலேயே இவ்வளவு நீண்ட காலம் அவர் வாழ்ந்திருந்தார் என்று தோன்றுகிறது.

நெஞ்சில் நின்ற வரிகள்

ஒரு காதல் நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றையும் புத்தம் புதிதாக்கிவிடுகிறது. ஒவ்வொன்றையும் இந்த உலகத்தில் இப்போது  தான் தோன்றிய முதல் அதிசயம் போல தோன்றச் செய்கிறது. காற்றும் மழையும் இந்தப் பிரபஞ்சத்திற்குள் இப்போதுதான் நுழைந்திருக்கிறது என்று நம்ப வைக்கிறது. ‘மே மாதம்’ படத்தில் வைரமுத்து எழுதிய இந்தப் பாடல் இந்த அதிசய உலகின் தத்தளிப்பை மிக உயரத்திற்கு எடுத்துச் செல்கிறது.

என் மேல் விழுந்த
மழைத் துளியே
இத்தனை நாளாய்
எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய்
எங்கிருந்தாய்
இந்தப் பாடலில் வெகு அபூர்வமான படிமங்கள் வெகு இயல்பாகக் கரைந்து செல்கின்றன.

எழுதிச்செல்லும் இணையத்தின் கைகள்

ஊடகவியலாளர் ஆனந்த் செல்லையா சமூகப் பிரச்னைகளை கூர்மையாக முன்வைத்து வருபவர். முகநூலில் பல்வேறு மனச்சித்திரங்களை நுட்பமான மொழியில் பதிவு செய்து வருபவர்.
அவரது ஒரு பதிவிலிருந்து... நெடுஞ்சாலைகள் வழியே பகல் நேரத்தில் பயணம் மேற்கொள்ளும்போது மனம் மிகவும் வெறுமையாகிவிடுகிறது. இடிக்கப்பட்ட வீடுகள், தலையில் வெயிலை வாங்கிக்கொண்டுதான் டீ குடிக்க முடியும் என்கிற மாதிரியான டீக்கடைகள், பிளாஸ்டிக் பாட்டில்களைத் தோரணமாகக் கட்டித் தொங்கவிட்ட காயலான் கடைகள், பஞ்சர் கடைகள், கும்பகோணம் டிகிரி காபி என ஒரே மாதிரியான அறிவிப்புப்பலகை வைத்து பொய் சொல்கிற கடைகள்... எல்லா ஊர்களும் ஒரே மாதிரி தான் இருக்கின்றன.

ஒருகாலத்தில் பேருந்துகளில் செல்லும்போது ஒவ்வொரு ஊருக்குள்ளும் புகுந்து, அதனதன் அத்தனை அடையாளங்களையும் பார்த்துவிட்டுத்தான் போக முடியும். சந்தைகள், தியேட்டர்கள், சின்னச் சின்ன கடைகள், உள்ளாட்சி அலுவலகங்கள், சினிமா போஸ்டர்கள், அழகழகான வீடுகள், திண்ணைகள், கோயில்கள், தெப்பக்குளங்கள் என ஜன்னலோரப் பயணம் நம்மை ஈர்த்துக்கொண்டே இருக்கும். பைபாஸ்களின் ஆக்கிரமிப்பு இல்லாத காலகட்டம் அது. இப்போது பேருந்துப் பயணம் ரயில் பயணம் போல் ஆகிவிட்டது. எதை எடுத்தாலும் பத்து ரூபாய் போல எந்த ஊரும் ஒரே தோற்றம் காட்டி பயணத்தின் சுவாரஸ்யத்தைப் பறித்துவிடுகின்றன.

அலுவலக வேலையாக திருநெல்வேலி செல்லும்போது வழியில் உள்ள எனது ஊரான கயத்தாறுக்கு அண்மையில் சென்றேன். ஏறக்குறைய மூன்று வருடங்களுக்குப் பிறகு செல்கிறேன். பைபாஸ் போட்டு முடித்த பிறகு என் ஊருக்கு செல்வது இதுவே முதல் முறை. இரவு நேரம் என்பதால் சாலையில் ஆள் நடமாட்டமே இல்லை.

வழியில் உள்ள பாலத்தின் மேல் ஏறிச் செல்ல வேண்டுமா, பாலத்துக்குக் கீழே செல்ல வேண்டுமா என்று தெரியாமல் குழம்பினேன். கூட இருந்த நண்பர்கள் வித்தியாசமாகப் பார்த்தார்கள். நான் படித்த, வளர்ந்த ஊருக்குச் செல்ல வழி தெரியவில்லை என்பது காமெடியாகவும் இருந்தது. சங்கடமாகவும் இருந்தது.