கனிந்த மானுடன்



தமிழ் இலக்கிய ஆளுமைகளில் மறைந்த தி.க.சியை சேர்ப்பதில் எந்தவித தயக்கமும் இல்லை. அவரின் வழிகாட்டலில் இலக்கிய வீதிகளில் நடை போட்டவர்கள் அநேகம். ‘உன் விரலை யாரும் பிடிச்சிக்க வேண்டியதில்ல. நீயா நடக்கலாம்’ என நிறைய எழுத்தாளர்களுக்கு தைரியம் கொடுத்திருக்கிறார். அவரிடம் ஆழமாகப் பழகிய கவிஞர் விக்ரமாதித்தனின் சொற்சித்திரம் இதோ...

‘‘எழுபதாம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் தேதிதான், ‘எஸ்தர்’ தொகுப்பை கொண்டு வந்த நண்பர் சுப்பு அரங்கநாதனும், நானும் முதன் முதலில் வாசகர்களாக கல்யாணியை (வண்ணதாசன்) பார்க்கப் போயிருந்தோம். மாடியறையில் அவருடன் பேசிக் கொண்டிருக்கையில், எதிரே உள்ள கண்ணாடி பீரோவில் நிறைய புத்தகங்கள். ‘இதெல்லாம் யாரோடது?’ என வியப்போடு கேட்டோம். ‘அப்பாவோடது’ என்றார் கல்யாணி. ‘அப்பா என்ன செய்றாங்க?’ என்றதற்கு, ‘சோவியத் லேண்டில் வேலை பார்க்கறாங்க’ என்று வந்த பதில் மிகவும் ஆச்சரியம் அளித்தது.

அதே வருஷத்தில் வேலை தேடி நான் சென்னைக்கு வந்தபோதுதான் முதன்முதலாக தி.க.சியை சந்தித்தேன். தி.க.சியை சந்திக்கிற காலகட்டத்தில் அவர்கள் மொழிபெயர்த்த ரஷ்ய நாவலான ‘போர் வீரன் காதலி’யையோ பிற கட்டுரைகளையோ படித்தறியவில்லை. ‘தாமரை’ இலக்கிய பத்திரிகையின் பொறுப்பு அவர்கள்தான் என்பதும் தெரியாது. கல்யாணியின் அப்பா என்பது மட்டுமே தெரியும். உற்சாகமாய் வரவேற்றுப் பேசிய தி.க.சி, ஒரு நாள் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். மூத்த மகன் கணபதியின் வீட்டில் தங்கியிருந்தார்கள்.

சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் மாலையில் 3.30 மணி வாக்கில் ‘சோவியத் நாடு’ அலுவலகம் போய் விடுவேன். நான்கு மணிக்கு வேலை நேரம் முடிந்து விடும். தி.க.சி ஒருநாள் ‘தீபம்’ அலுவலகம் சென்று நா.பாவை பார்த்து பேசிக்கொண்டு இருப்பார்கள். இன்னொரு நாள் ‘கலைஞன்’ மாசிலாமணியை போய்ப் பார்ப்பார்கள். இன்னொரு சமயம் அசோகமித்திரன் வீட்டுக்குப் போவார்கள், பிறிதொரு வேளையில் ‘ஜனசக்தி’ அலுவலகம், ஆ.பழனியப்பன் அறை, மக்கள் எழுத்தாளர் சங்கக் கூட்டம், இலக்கியச் சிந்தனை கூட்டம், பெரிய மகள் வீடு, இது போல..! ஏழு, எட்டு மணி வாக்கில் வீடு திரும்புவார்கள். கூடவே, என்னையும் கூட்டிக்கொண்டு செல்வார்கள்.

‘தாமரை’ நூறு இதழ்கள் தி.க.சியின் ஆக்கத்தில்தான் வந்தன. அவருடைய ஆகப் பெரிய கொடையும் சாதனையும் இதுதான். கந்தர்வன், பூமணி, பிரபஞ்சன், பா.செயப்பிரகாசம், மு.சுயம்பு லிங்கம், கோ.ராஜாராம் முதலானோரின் முதல் சிறுகதையை ‘மலரும் அரும்பு’ என்று வெளியிட்டார்கள். ‘வானம்பாடி’களின் கதைகள், இலங்கை எழுத்தாளர்களின் சிறுகதைகள் மற்றும் விமர்சனக் கட்டுரைகள் எல்லாமும் சேர்த்து, ‘தாமரை’ உண்மையான இலக்கிய இதழாக விளங்கியது அந்தக் காலகட்டத்தில்தான்.

கணபதி சார் ஆதம்பாக்கத்தில் வீடு கட்டி குடி போனதும், அங்கே வராண்டாவை ஒட்டிய ஓர் அறை தி.க.சிக்கு. காலை எட்டு மணிக்கு அலுவலகம். பரங்கி மலை ரயில் நிலையத்திற்கு நடந்து வந்து, மின் வண்டி பிடித்து, மாம்பலத்தில் இறங்கி 12ம் எண் பேருந்தில் ஏறி வந்து போக வேண்டும். மழைக் காலத்தில் ரொம்பக் கஷ்டம். இவற்றையெல்லாம் பொருட்படுத்தியதில்லை தி.க.சி.
ஓய்வு பெற்ற பிறகுதான் திருநெல்வேலிக்கு வந்தார். நான் டவுனுக்குப் போகும்போது அவரைப் பார்த்து வருவேன். போன வருஷம்தான் ஒருநாள் கனிவாக அறிவுறுத்தினார், ‘குடிச்சிங்கன்னா ராத்திரியில ஒரு ஓரமா வந்து படுத்துங்க. ரோட்டில் விழுந்து கிடந்தா, வண்டி அடிச்சிட்டு போயிடும்யா!’

ஒரு தடவை போயிருந்தபோது தி.க.சியின் கடைக்குட்டி மகன் நெல்லையப்பன் போபாலிலிருந்து வந்திருந்தான். ‘மாமா, இடையிடையே வந்து பார்த்துங்க’ என்று அவன் சொன்னது தெய்வ வாக்கு போல பட்டது. அப்படியே செய்து கொண்டிருந்தேன். கடந்த மாத கடைசியில் ஒரு நாள் சென்றிருந்தேன்.

‘அந்த சட்டைப் பையில் 50 ரூபாய் எடுத்துக்க’ என்றார்கள். பத்து பன்னிரண்டு நாட்களாக உடம்பு சரியில்லை என்பதை குழந்தைபோல தெரிவித்தார்கள். மூன்று மாதத்திற்கு முன்பு இரவு கழிவறைக்கு செல்கையில் விழுந்ததை சொல்லும்போதும் குழந்தைதான். ‘வயதாகுதுல்ல..’ என்றுதான் சொல்லத் தோன்றியது. நிறை வாழ்வுதான். இந்தக் காலத்தில் பாயில் படுக்காமல், நோயில் விழாமல் மரணம் அடைவதும் பாக்கியம்தான். தி.க.சி பாக்கியவான். கனிந்த பழம் உதிர்ந்துவிட்டது!’’