கடைசி பக்கம்



குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் அவசரத்தில் இருந்தார் அந்த இளம்பெண். சூடான சாதத்தில் பருப்பும் நெய்யும் போட்டு நன்கு பிசைந்து எடுத்துக் கொண்டு குழந்தையை நெருங்கும்போது டெலிபோன் ஒலித்தது. ‘‘வணக்கம் மேடம்! நாங்க எக்ஸ் டிராவல் நிறுவனத்திலிருந்து பேசறோம். ஒரு சிம்பிளான கேள்வி கேட்போம். நீங்க சரியா பதில் சொன்னால், உங்க குடும்பத்துக்கு இரண்டு நாள் சிம்லாவுக்கு டூர் போயிட்டு வர டிக்கெட் பரிசா தருவோம்’’ என்று கொஞ்சும் குரலில் ஒரு பெண் பேசினார்.

இது விளம்பர யுக்தி என்பது தெரிந்தது. சரியாக பதில் சொன்னால், அவர்கள் நிறுவனம் பற்றி கால் மணி நேரம் பேசுவார்கள்; நேரில் வர அனுமதி கேட்பார்கள். எனக்கு ஆர்வமில்லை எனச் சொல்லி போனை வைத்து விடலாம் எனப் பார்த்தால், அந்தப் பெண் விடுவதாக இல்லை. சாதம் ஆறிவிட்டால் குழந்தை சாப்பிடாது.  ‘‘அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்ன கண்டுபிடித்தார்?’’ தெரியவில்லை எனச் சொன்னால் போன் வைக்கப்பட்டுவிடும் என நினைத்த அவர், ‘‘தெரியாது’’ என்றார்.

‘‘க்ளூ தர்றோம் மேடம்! உங்க வலது கையில என்ன வச்சிருக்கீங்களோ, அதுதான் பதில்!’’
‘‘சாப்பாட்டு கப் வச்சிருக்கேன். அதையா அவர் கண்டுபிடிச்சார்?’’
‘‘அப்போ இடது கையில்?’’
‘‘தண்ணீர் டம்ளர்...’’

‘‘போன் எப்படி பேசறீங்க?’’
‘‘ஸ்பீக்கர் ஆன் பண்ணி...’’
இவரிடம் பிசினஸ் தேறாது எனப் புரிந்ததும், ‘‘உங்களுக்கு அபார நகைச்சுவை உணர்வு இருக்கு’’ எனச் சொல்லி போனை வைத்தார் அந்த முனைப் பெண்.

நிதர்ஸனா