ரஜினி போட்டுத் தாக்கும் கோச்சடையான் கேம்ஸ்‘கோச்சடையான் எப்ப ரிலீஸ்?’ என்று கேட்டுக்கொண்டிருந்த விடலைப் பையன்கள் எல்லாம் இப்போது, ‘கோச்சடையான் சூப்பர்ல?’ என்று விமர்சனம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அடடா, நெட்ல வந்துடுச்சோனு பதற்றப்படாதீங்க...
நெட்டில் வந்தது உண்மைதான். ஆனால் படமல்ல... கோச்சடையான் ஆண்ட்ராய்டு கேம்ஸ்! ‘கோச்சடையான்’ படத்தை தயாரிக்கும் நிறுவனங்களே உருவாக்கி உலவ விட்டிருக்கும் இரு பெரும் 3டி கேம்கள் இவை. இரண்டுமே முழுக்க முழுக்க இலவசம்! போதாதா? இந்தியா முழுவதும் இளைஞர்களிடையே இப்போது இதுதான் பற்றி எறிகிறது. ‘ரஜினி என்ற அட்ராக்ஷனை எல்லாம் தாண்டி, மொபைல் கேம் உலகில் இந்தியாவின் முக்கியமான தயாரிப்புங்க இது’ என வட இந்திய விமர்சகர்களே மனம் திறந்து பாராட்டுகிறார்கள். அப்படி என்ன இருக்கிறது இவற்றில்? ஒரு பார்வை பார்க்கலாமே!
கோச்சடையான் - Kingdom Run ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கும் சைட் ஸ்க்ராலர் வகை விளையாட்டு இது. சமீபத்தில் செம பாப்புலர் ஆன டெம்பிள் ரன், இந்த வகையறாதான். டெம்பிள் ரன்னுக்கே எக்கச்சக்க டூப்ளிகேட்டுகள் உலவும்போது கோச்சடையான் என்ன வித்தியாசம் காட்டப் போகிறார்? காட்டியிருக்கிறார். தனது கோட்டையை முற்றுகை இட வரும் எதிரிகளைப் பந்தாடிக் கொண்டே கோச்சடையான் முன்னேறுவது தான் இந்த கேமின் முன்னுரை.
எதிரிகளை மாய்க்க கோச்சடையான் கையில் வில் உண்டு. வாள், கோடரி என ஆயுதங்களை மாற்றிக் கொள்ளவும் ஆப்ஷன் உண்டு. கூடவே, பாதைகளில் இருக்கும் பாதாளங்களில் இருந்தும், எதிரிகள் வைத்த பொறிகளில் இருந்தும் தப்பித்து ஓட வேண்டும். இதற்காக எம்பிக் குதிப்பது, படுத்தபடி ஊர்வது, பல்டி அடிப்பது என கோச்சடையானிடம் நிறைய திறமைகள் உள்ளன. எந்த நேரத்தில் எந்தத் திறனை பயன்படுத்த வேண்டும் எனத் தேர்ந்தெடுத்து நாம்தான் கோச்சடையானை இயங்க வைக்க வேண்டும்.
பொதுவாக கேம்களில் இரண்டு லைஃப் என்று கேள்விப்பட்டிருப்போம். இதில் முதல் கோச்சடையான் குழிக்குள் விழுந்துவிட்டால், அவர் உயிர் பிரிந்து ஜோதி வடிவில் இரண்டாவது கோச்சடை யானிடம் போய் சேருவது புதுசு. ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் 1 லட்சம் பேர் வரை பதிவிறக்கம் செய்திருக்கும் இந்த கேமில், தத்ரூபமான கிராஃபிக்ஸ் அசத்தல். எனவேதான், மார்க்கெட்டில் இதன் மார்க் 5க்கு 4.4!
கோச்சடையான் - Reign of Arrows இது ஒரு அற்புதமான ஷூட்டிங் கேம். துப்பாக்கிக்கு பதில் வில் - அம்பு மூலம் எதிரிகளைத் தாக்குவது வித்தியாசம் ப்ளஸ் சுவாரஸ்யம். அதுவும் நிஜமான போர்க்களம் போலவே மறைவுகளில் பதுங்கி பதுங்கி, எதிரிகளைக் குறி வைத்து வீழ்த்தி முன்னேறும் இந்த கேம், முன்னதை விடவும் சூப்பர் ஹிட். இதில் கோச்சடையானின் அம்புகளுக்கு சூப்பர் பவர் உண்டு.
அம்பு மழை பொழிவிப்பது, ஒரே அம்பு இரண்டு மூன்றாகப் பிரிவது, வெடிகுண்டு போல அம்பு விழுந்த இடத்தில் வெடிப்பது என தேவையான பவரை தேவையான இடத்தில் உபயோகிக்கலாம். எதிரிகளால் தாக்கப்பட்ட காயங்கள் மறைய மருந்து குடுவைகளும் இருப்பது இதன் சிறப்பம்சம். ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் இந்த கேமுக்கு மார்க் 4.1தான் என்றாலும் 5 லட்சம் பேர் பயன்படுத்துகிறார்கள் என்பதே பெரிய பென்ச் மார்க்!
விளையாடும் போது இடை யிடையே விளம்பரங்கள் வருவதுதான் கொஞ்சம் இம்சை. மற்றபடி இந்திய சினிமா வரலாற்றிலேயே, ஒரு படம் வெளிவருவதற்கு முன்பு அதற்கான கேம்கள் ரிலீஸாவதும், அவை இமாலய வெற்றி அடைவதும் இதுதான் முதல் முறை என்கிறார்கள். ‘இந்தியர்களால் இப்படியெல்லாம் கூட கேம்களை உருவாக்க முடியுமா?’ என ஒரு பேச்சை ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் ஏற்படுத்தியிருக்கிறார் நம் ‘கோச்சடையான்’.
‘‘படம் பார்க்கும்போது கூட நாம ஆடியன்ஸாதான் சார் இருப்போம். ஆனா, இந்த கேம் விளையாடும்போது நாமே கோச்சடையானா மாறிடுறோம்’’ என கேம் விளையாடியபடியே நிமிராமல் பேசுகிறார்கள் நம் இளைஞர்கள். இந்தக் கால இளைஞர்களுக்கு எது வேண்டும் என்று தெரிந்து முதலில் இறங்கி வருவதும் சூப்பர் ஸ்டாராகத்தான் இருக்கிறார்.
- நவநீதன்