என்ன சிவகார்த்தி, அழகாயிட்டே போறீங்க?’’ என்றால் நெஞ்சில் கை வைத்துச் சிரிக்கிறார்... குட்டிக் கண்களில் புன்னகை பூசுகிறார்.உயரப் படிந்து வாரிய தலை, க்யூட் ஒல்லி முகத்தில் அடர்த்தி குறைந்த ஸ்லிம் மீசை என செம ஃப்ரெஷ்ஷாக ‘மான் கராத்தே’ சிவகார்த்திகேயன். ‘மங்கள்யான்’ மாதிரி வகைதொகை இல்லாமல் மேலே ஏறிக்கொண்டேயிருக்கிறார். முன்னணி ஹீரோக்களுக்கு கூட சிவகார்த்தி இப்போது ‘கிலி’ தரும் கில்லி. பெரியவர்களிலிருந்து குழந்தைகள் வரை மேனரிசத்தால் அள்ளுகிறது சிவகார்த்தியின் ஆளுமை!
‘‘பெரும்தொகையில் வியாபாரமாகியிருக்கு ‘மான் கராத்தே’. எப்படியிருக்கு ஃபீலிங்?’’‘‘உண்மையில் பயமாயிருக்கு. இந்த இடத்தைக் கொடுத்ததற்கு என்னோட நெஞ்சார்ந்த நன்றிகள். ரொம்ப யதார்த்தமாக, ‘கருவிலே திருவுடையான்’னு சொல்லுவாங்களே, அப்படி எதுவும் இல்லாமல் வந்தவன்தான். எனக்குக் கொடுத்திருக்கிற இடம் பெரிசு. ஒவ்வொரு படமும் செய்யும்போது நடிப்பில் அடுத்த கட்டத்திற்குப் போகணும்னு நினைப்பேன். அப்படி நான் திட்டமிடும்போது என்னுடைய வியாபாரமும் பெருகுவதற்கு காரணம் தமிழ் மக்கள்தான்.
நிச்சயம் அடுத்தடுத்த படங்களில் என்னை கொஞ்சம் மெருகேற்றியே வந்திருக்கிறேன். வேற யாரும் சொல்றதுக்கு முன்னாடி, நானே என் குறைகளை சரி பண்ணிக்கிறேன். விமர்சனங்களை வரவேற்கிறேன். ஒரு ஸ்டெப் கூட போடத் தெரியலைன்னு சொன்னவங்க, அடுத்தடுத்த படத்தில் ‘வித்தியாசம் தெரியுது’ன்னு சொன்னாங்க. அவங்களுக்கு இன்னும் ‘மான் கராத்தே’யில் ஸ்பெஷல் ஸ்டெப்ஸ் ஆடியிருக்கேன். எல்லாத்தையுமே இதில் பார்த்துப் பார்த்து செய்திருக்கோம். டான்ஸ், பாட்டு, காதல், காமெடி, அதிரடின்னு படம் பறக்கும். சில சமயம் சில விஷயங்கள் நாம் ஆசைப்பட்ட மாதிரியே ‘பளிச்’னு வந்து நிக்கும்ல, அப்படியொரு படம் ‘மான் கராத்தே’. மக்கள் ரிசல்ட்டுக்குக் காத்திருக்கோம்!’’
‘‘இந்தத் தடவை ஹன்சிகாவோட ட்ரிப் எப்படி?’’ ‘‘ண்ணா, ஷூட்டிங்கில் எப்படி இருந்ததுன்னு கேள்வியை திருத்திக் கேளுங்கண்ணா. அருமையான பொண்ணு, அவங்க தான் யாழினி. நான் பீட்டர். அவங்க நிஜமாகவே சீனியர் ஆர்ட்டிஸ்ட். சொல்லப் போனா எல்லா ஹீரோயின்களை விடவும் சீனியர் ஆர்ட்டிஸ்ட். ஏன்னா, ஆறு வயசிலிருந்தே நடிச்சுக்கிட்டு இருக்காங்க. யம்மா... நான் விளையாட்டாவே நினைக்கலை. எங்க ஜோடி ரொம்பவே நல்லாயிருக்கு. இரண்டு பேரும் சளைக்காம நடிச்சிருக்கோம்.
முதலில் நினைக்க முடியாத, ஏத்துக்கவே முடியாத விஷயம் நடந்தால் எப்படி யிருக்கும்? விதியை மதியால் வெல்ல முடியுமான்னு பழைய ஒரு ‘பன்ச்’சை மாத்தப் பார்த்திருக்கோம். எங்க கூட்டணிக்கு ஆரம்பத்தில் சில தயக்கங்கள் இருந்தது. அப்புறம், சினிமாவில் இதுவரைக்கும் என் லிஸ்ட்ல புது அட்ராக்ஷன் இந்த ஹன்சிகா தான். அதுக்காக தயவு பண்ணி ‘சிவகார்த்திகேயனோட புது அட்ராக்ஷன் ஹன்சிகா’ன்னு தலைப்பு போட்றாதீங்க. அப்புறம் வீட்டுப் பக்கம் போறதே கஷ்டமாயிடும்!’’
‘‘உங்களுக்குன்னா உங்க நண்பர் அனிருத் பின்னி எடுக்கிறாரே...’’ ‘‘நாங்கதான் ஜாலி, கேலி கூட்டாச்சே! தனுஷ் சார், நான், அனிருத் சேர்ந்திட்டால் அவ்வளவுதான். மூணு பேரும் ஒருத்தருக்கொருத்தர் வாரிக்கிறதில் போட்டி போடுவோம். யாரு அதிக அளவில் வாரிக்கிறது என்பதில்தான் சுவாரஸ்யம் எகிறும். அப்படிப்பட்ட நம்ம தோஸ்த் நமக்குன்னா நல்லாத்தானே போடுவார். குத்து, கெத்து, மெலடின்னு தெளிவா போட்டுத் தாக்குவதில் அனிருத் கில்லாடி. வாழ்க்கையை நல்லா ரசிப்பார். அதனால் பாடலும் சந்தோஷமாத் தருவார்.’’
‘‘உங்க நண்பர் அனிருத் எக்கச்சக்க ‘போஸ்’ கொடுத்து பொறாமைப்பட வைக்கிறாரே...’’
‘‘இருக்கட்டும் சார்... சின்னப் பையன். வாழ்க்கையை அனுபவிச்சுட்டுப் போகட்டுமே! நமக்குத்தான் ஆயிரத்தெட்டு கண்டிஷன்... தொட்டா தப்பு, பார்த்தா பதறுறாங்க. லவ் சீனில் எந்த அளவு சரியா காதலை, இறுக்கத்தை நெருக்கத்தை காட்டலாம்னு இன்னும் எனக்கு தயக்கங்கள் இருக்கே. ‘என்னங்க, இப்படி ஒதுக்கிப் போறீங்க’ன்னு நீங்களே கேக்கறீங்க. சரி நெருங்கலாம்னு முடிவெடுத்தா, ‘என்ன இது?’ன்னு வீட்டுல அனல் பறக்குது. இதில் சில பாடல்கள் இருக்கு. அதில் கொடுத்திருக்கிற ஜாலி மூவ்மென்ட்ல எனக்கு டப்பா டான்ஸாடப் போது பாருங்க. அனிருத் ஜாலி ஆளுங்க, ஆனா, நேரத்திற்கு பாட்டு போட்டு கொடுத்துடறார். டைமிங்கில் ஒரு குறையும் சொல்ல முடியாதே!’’‘‘உங்க குரு தனுஷ்ஷை மிஞ்சிடுறீங்க போலிருக்கே...’’
‘‘ஆக, நேரடியாக விஷயத்திற்கு வர்றீங்க போல. எந்தப் பெரிய அடையாளமும் இல்லாம, அறிமுகமாகி இருந்தவனுக்கு அவர் கொடுத்தது பெரிய மைலேஜ். அந்த ஒரு விஷயத்துக்கு மட்டுமே அவர் மேல காலாகாலத்திற்கு நன்றியா இருக்கணும். நான் நல்ல நிலைமைக்கு வரணும்னு நான் நினைக்கிறதுக்கு முன்னாடியே அவர் நினைச்சார். நிச்சயம் என்னோட எல்லா வளர்ச்சியும் அவருக்குத்தான் சமர்ப்பணம். சும்மா இல்லை, மனசோட ஆழத்திலிருந்து சொல்ற வார்த்தைகள். யாரும் எதுவும் சொல்ல வேண்டாம்... இது அவருக்கே தெரியும்!’’
‘‘உங்க ஜோடிகள்ல உங்க மனைவிக்கு யாரைப் பிடிக்கும்?’’
‘‘என்னது..? ஜோடிகள்ல யாரைப் பிடிக்குமா? நான் ஜோடியே இல்லாம நடிச்சா ரொம்பப் பிடிக்கும். பொண்ணுங்க கிட்ட இருந்து அரை மைல் தூரம் விலகியிருந்தா பிடிக்கும். புதுசாப் பிறந்த என் குட்டி செல்லத்துக்கு பேர் வைக்கும்போது கூட யாரையும் ஞாபகப்படுத்திடக் கூடாதுன்னு பயந்துட்டேன். என் மனைவி ஆர்த்திகிட்ட இருந்து ‘ஆ’, அம்மா ராஜிகிட்டே இருந்து ‘ரா’, அப்பா தாஸ் கிட்டே இருந்து ‘த’ன்னு எடுத்து ஆராதனானு வச்சேன். கடைசியா இருக்குற ‘னா’தான் நான். அவ்வளவு பயம்!’’‘‘உங்களை ரஜினியோட ஒப்பிட்டுப் பேச ஆரம்பிச்சிருக்காங்க...’’
‘‘என்னோட பெரிய பயம் அதுதாங்க. அவர் இருக்கிற சினிமாவில் நானும் ஒரு புள்ளி மாதிரி இருக்கேன். அதுவே என்னோட பெருமிதமான அடை யாளம். தமிழ் சினிமாவுக்கு மட்டுமில்லை, இந்திய சினிமாவின் அங்கமா இருக்கிற அவருக்கு இணையாக என்னை வச்சிப் பேசுறது... நிச்சயம் எனக்கு நல்லது செய்யிறதுக்காக இல்ல. என்னை மாதிரியானவங்க அவரின் நிழலில் இருக்கத்தான் விரும்புவோம்!’’
-நா.கதிர்வேலன்