நான்... விஸ்வநாதன் ஆனந்த்



‘‘ஆறு வயதிலேயே எனக்கும் செஸ் விளையாட்டுக்குமான பந்தம் ஆரம்பமானது. அதற்கு முழு முதற்காரணம் என் அம்மா. மற்ற விளையாட்டுகள் உடல் சம்பந்தப்பட்டவை. செஸ், மூளை சம்பந்தப்பட்ட விளையாட்டு. அதில் நான் கிராண்ட் மாஸ்டர் என்பதில் எப்போதும் ஒரு பெருமை உண்டு. கர்வம் என்று கூட சொல்லிக்கொள்ளலாம். இது வித்யா கர்வம்.

11 டிசம்பர் 1969 அன்று மயிலாடுதுறையில் பிறந்தேன். அப்பா கிருஷ்ணமூர்த்தி விஸ்வநாதன். பெற்றோர் எனக்கு வைத்த பெயர் ஆனந்த் விஸ்வநாதன். இதையே விஸ்வநாதன் ஆனந்த் என மாற்றிக்கொண்டேன். அம்மா சுசிலா இல்லத்தரசி. உண்மையில் அரசிதான். அம்மாவுடன்தான் அதிக நேரங்கள் செலவழித்திருக்கிறேன். அதிலும் எந்நேரமும் செஸ் விளையாட்டுதான். அவர்தான் என் முதல் டீச்சர்.

எனக்கு ஒரு சகோதரி. ஒரு சகோதார். நான் கடைக்குட்டி. அண்ணா சிவகுமார், கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனத்தில் மானேஜராக இருக்கிறார். அக்கா அனுராதா அமெரிக்காவில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். படிப்புதான் எங்களுக்கு முதல் சொத்து.
அப்பா தெற்கு ரயில்வேயில் மானேஜர். பீகார், ஜபல்பூரில் அவர் பணிபுரிந்த காலத்தில் இரு வருடங்கள் குடும்பத்துடன் அங்கு இருந்தோம். அப்பா அப்போது பிலிப்பைன்ஸ் தேசிய ரயில்வேயில் ஆலோசகராக இருந்தார். அந்த வேளையில்தான் நான் மணிலாவில் செஸ் விளையாட்டை நுணுக்கமாகக் கற்றுக் கொண்டேன். பிறகு மீண்டும் சென்னைக்கு இடமாற்றம். எழும்பூர் டான் பாஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தேன்.

பள்ளி நாட்களில் எங்கெல்லாம் செஸ் விளையாட்டுகள் நடைபெற்றதோ அங்கெல்லாம்... அந்தப் போட்டிகளில் எல்லாம் கலந்து கொண்டேன். மாவட்ட அளவு, மாநில அளவுகளை எல்லாம் கடந்து 1983ம் ஆண்டு எனது 14வது வயதில் தேசிய துணை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றேன். 9/9 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றேன்.

அடுத்து 1984ல் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி கோயம்புத்தூரில் நடந்தது. அதிலும் வெற்றி. அந்த வெற்றிதான் என்னை உலக கிராண்ட் மாஸ்டர் போட்டிக்கான தகுதியையும் பெற்றுத் தந்தது. முழு மூச்சாக கிராண்ட் மாஸ்டர் போட்டிக்கு தயாரானேன்.  

26வது ஒலிம்பியாட் போட்டி, தெசலோனிகியில் நடந்தது. மொத்தம் 11 போட்டிகள். அதில் 7½ புள்ளிகள் வாங்கினேன். IM (International Master) அதாவது சர்வதேச மாஸ்டராக இரண்டாவது இடம் கிடைத்தது. தொடர்ந்து ஹாங்காங்கில் நடந்த சர்வதேச மாஸ்டர் போட்டியில் முதலிடம். 16 வயதில் தேசிய அளவில் சாம்பியன்.

1987ம் ஆண்டு உலக ஜூனியர் செஸ் போட்டியில் கலந்துகொண்டு உலக ஜூனியர் செஸ் சாம்பியன் பட்டத்தைப் பெற்ற முதல் இந்தியனாக இருந்தேன். அடுத்துதான் கோயம்புத்தூரில் சக்தி நிதி சர்வதேச செஸ் போட்டியில் கலந்துகொண்டு முதல் இந்திய கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றேன். இதைத் தொடர்ந்து 18 வயதில் எனக்கு இந்திய அரசாங்கம் பத்ம விருது கொடுத்து கௌரவப்படுத்தினார்கள்.

1993ம் வருடம் எனக்கு சோதனையான காலகட்டம். உலக செஸ் சாம்பியன்ஷிப் காலிறுதி வரை முன்னிலையிலேயே இருந்தேன். ஆனால், ரஷ்ய நாட்டு செஸ் வீரர் கார்போவிடம் எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்தேன்.1994 - 95. இரண்டு வருடங்கள்நானும் அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் கோட்டா காம்ஸ்கியும் மாறி மாறி சுழற்சி முறையிலே வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்தோம். போட்டி எங்கள் இருவருக்குமான ஒன்றாக மாறியது. 1996 FIDE உலக சாம்பியன்ஷிப் போட்டி காலிறுதியில் கோட்டா காம்ஸ்கியிடம் தோற்றேன். ஆனால், இறுதியில் எனக்கே வெற்றி கிடைத்தது.

1996ம் ஆண்டு எனக்கு திருமணமானது. மனைவி பெயர் அருணா. வீட்டில் பார்த்து முடித்து வைத்த திருமணம். அப்போது அவர்கள் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தார்கள். செஸ் பத்தி அவர்களுக்கு பெரியதாக எதுவும் தெரியாது.அருணா என்றில்லை... அக்காலத்தில் இந்தியாவில் பலருக்கு செஸ் விளையாட்டு குறித்து தெரியாமலேயே இருந்தது. அப்பாவும் அம்மாவும் என்னையும் என் விளையாட்டையும் முழுமையாகப் புரிந்துகொண்டு ஆதரவு கொடுத்தார்கள்.

அன்று தடகளப் போட்டிகள், கிரிக்கெட் மாதிரி ஒரு சில விளையாட்டுகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை கிடைக்கும்; அரசு பதவிகளும் தேடி வரும். இதன் காரணமாகவே பல பெற்றோர் இது மாதிரியான விளையாட்டுகளில் மட்டுமே தங்கள் பிள்ளைகளின் கவனத்தை செலுத்துவார்கள்.

நான் செய்த புண்ணியம், என் பெற்றோருக்கு இதுபோன்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எனவே அவர்கள் என் மீது எதையும் திணிக்காமல் என் போக்கில் செஸ் விளையாட அனுமதித்தார்கள். அதுபோலவே நான் படித்த பள்ளி, கல்லூரிகளிலும் என்னை ஊக்கப்படுத்தினார்கள். செஸ் விளையாட்டுக்காகவும் போட்டியில் பங்கேற்கவும் அதிகம் விடுமுறை எடுப்பேன். ஒருபோதும் என் ஆசிரியர்களும் தலைமையாசிரியர்களும் என்னை ‘ஏன் இப்படி செய்கிறாய்’ என்று கேட்டதில்லை. தங்கள் பள்ளி மாணவன் தொடர்ச்சியாக சாதிப்பதை எண்ணி பெருமைப்பட்டார்கள்.

எழும்பூர் டான் போஸ்கோ பள்ளியில் படித்த பிறகு லயோலா கல்லூரியில் பி.காம் சேர்ந்தேன். இதன்பிறகு செஸ்தான் என் வாழ்க்கை என்று முடிவு செய்து அப்படித்தான் இப்போது வரை வாழ்ந்து வருகிறேன்.செஸ் தவிர எனக்குப் பிடித்தது புத்தகங்கள் படிப்பது. பிறகு நேரம் காலம் பார்க்காமல் நீச்சல் அடிப்பேன். நீச்சல் பயிற்சி என் உடலை மட்டுமல்ல, மூளையையும் சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

இன்னொரு விஷயம்... பலரும் அறியாதது. எனக்கு ஜோதிடத்தில் நாட்டம் உண்டு. ஓரளவு நன்றாக ஜோதிடம் பார்ப்பேன்! அது சார்ந்த நூல்களை தேடித் தேடிப் படிக்கிறேன். ஜோதிடத்துக்கும் கணிதத்துக்கும் இருக்கும் தொடர்பு என்னை வியக்க வைக்கிறது. கணிதத்துக்கும் செஸ் விளையாட்டுக்கும் இருக்கும் தொடர்பு மலைக்க வைக்கிறது. ஆனால், ஒருபோதும் கமர்ஷியல் எண்ணத்தில் ஜோதிடத்தை அணுகுவதில்லை.

அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இருக்கவும் வாழவும் விரும்புகிறேன். அதனாலேயே அரசு வேலை, பதவிகளை எல்லாம் முடிந்த வரை தவிர்த்து விடுகிறேன். இதன் காரணமாகவே உலக செஸ் கிராண்ட் மாஸ்டர்ஸ் பலருக்கும் என் மேல் அதீத அன்பு. இப்போதும் விளையாட்டு சார்ந்து என்னுடன் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தேவையான உதவிகளை நாங்கள் பரஸ்பரம் செய்து கொள்கிறோம்.

எந்த விளையாட்டு வீரருக்கும் கிடைக்காத பெருமை எனக்குக் கிடைத்திருக்கிறது. ஆம். 2010ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்திருந்தார். அப்போது இரவு விருந்துக்கு அன்றைய நம் பிரதமர் மன்மோகன் சிங் அழைத்திருந்தார். உண்மையிலேயே எனக்குக் கிடைத்த கௌரவமாக இதை எண்ணுகிறேன்.

இதே காலத்தில் விளையாட்டிலும் பல சாதனைகளை அடுத்தடுத்து நிகழ்த்தினேன். 2000, 2007, 2008ம் வருடங்களில் தொடர்ந்து உலக சாம்பியன்ஷிப் வென்றேன்.2010ம் ஆண்டு போட்டி பல்கேரியா நாட்டிலுள்ள சோபியாவில் நடந்தது. அந்த நேரம் நான் பிராங்ஃபர்ட்டில் இருந்து சோபியா செல்ல வேண்டும். எரிமலை வெடிப்பு புகை மண்டலம் காரணமாக எல்லா விமானங்களும் ரத்தாகின.

பல்கேரியா போட்டி அமைப்பாளர்களிடம் போட்டியை தள்ளி வைக்க முடியுமா என்று கேட்டேன். மறுத்துவிட்டார்கள். அடித்துப்பிடித்து சாலை வழியாகவே பயணித்து சோபியா சென்றேன். அந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 6½ - 5½ என்கிற புள்ளிகள் விகிதத்தில் அவர்கள் நாட்டு போட்டியாளரான வெசலின் டோபலோவையே தோற்கடித்தேன். அடுத்தடுத்து நிறைய உலக சாம்பியன்ஷிப் போட்டிகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை.

1994ல் இருந்து இப்போது வரை உலக தரப்பட்டியலில் முன்னணியில் இருக்கும் மூவரில் ஒருவராக இருக்கிறேன். ‘மெட்ராஸ் புலி’ என்று கூட என்னை அழைக்கிறார்கள். பீடே தரப்பட்டியலில் 2800 புள்ளிகள் பெற்ற ஐந்து நபர்களில் நானும் ஒருவன். அன்று இந்தியாவில் நான் ஒருவன்தான் கிராண்ட் மாஸ்டர். முதல் இந்தியன் என்றும் சொல்லலாம்.

இன்று நம் நாட்டில் 60க்கும் மேலான கிராண்ட் மாஸ்டர்ஸ் வந்துவிட்டார்கள். உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் இதற்கு பிள்ளையார் சுழி போட்டவனாக இருக்கிறேன் என்பதில் பெருமைதான்.

நம் நாட்டிலுள்ள அனைத்து கிராண்ட் மாஸ்டர்ஸுடனும் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. என்னிடம் தயங்காமல் ஆலோசனைகள் கேட்கிறார்கள். சிலருக்கு நேரடியாக சொல்லிக் கொடுக்கவும் செய்கிறேன். இன்று பெரும்பாலான பள்ளிகளில் செஸ் விளையாட்டு இருக்கிறது. ஆன்லைன் கோர்ஸஸும் நடத்தப்படுகின்றன.

என் மகன், அகிலுக்கு வயது ஒன்பது. அவர் செஸ் தவிர தடகளம், டான்ஸ், ஜிம்னாஸ்டிக் என பல துறைகளில் முத்திரை பதித்து வருகிறார். அகில் மீது எதையும் நானும் என் மனைவி அருணாவும் திணிக்கவில்லை. அவர் என்ன ஆக விரும்புகிறாரோ அப்படி வர நாங்கள் உறுதுணையாக இருப்போம்!

ஷாலினி நியூட்டன்

ஆ.வின்சென்ட் பால்