40 விருதுகள்...300 பாடல்கள்...உலக அமைதிக்கான இசைத் தூதர்!சென்னை பெண்ணின் சக்சஸ் பயணம்

மூன்று வயதில் இசை கற்று, 27 வயதிற்குள் 40 விருதுகளுக்கும், 300க்கும் அதிகமான பாடல்களுக்கும் சொந்தக்காரராக ஜொலிக்கிறார் எஸ்.ஜே.ஜனனி.
கடலூரில் பிறந்து இசையின் மீதிருந்த தீராத காதலால், கர்னாடிக், வெஸ்டர்ன் கிளாசிகல், ஹிந்துஸ்தானி, கீபோர்ட், ஹார்மோனியம் என்று இசையில் ‘ஏ டு இசட்’ முறையாகப் பயின்று, பாடகர், இசையமைப்பாளர், இசை இயக்குனர், பாடலாசிரியர் என்று பல திறமைகளுடன் பன்முகத்தன்மை கொண்ட இசைக் கலைஞராக இப்போது பிஎச்.டியும் செய்துவருகிறார்.

அவர் வீடே விருதுகளாலும், இசைக் கருவிகளாலும் நிறைந்திருக்கிறது. ஒரு குட்டி ஸ்டுடியோவை தன் படுக்கையறையிலேயே அமைத்திருக்கும் ஜனனி, வெளியில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நேரம் தவிர மீதி முழு நேரமும் தன் அறையில் ஏதாவது இசையமைத்தபடியே இருப்பாராம்.

ஜனனியை இசைக்கு அறிமுகம் செய்து வைத்தது, அவரது மாமா சங்கர் கணேஷ்தான். ஏழு வயதிலேயே கச்சேரி செய்த ஜனனிக்கு இன்று வரை அவர்தான் மானேஜர், மென்டர் எல்லாம்.இசை லெஜண்ட் பாலமுரளி கிருஷ்ணாவிடம் மாணவியாகி அவருடன் பல மேடைகள் ஏறி கச்சேரிகளும், இசை நிகழ்ச்சிகளும் நடத்தியிருக்கிறார்.

23 வயதில் தமிழ் சினிமாவில் இசை அமைக்க வாய்ப்பு கிடைத்த போது, அவரது குரு பாலமுரளி கிருஷ்ணா, ‘உனக்கு நான் பாடுறேன்...’ என்று தாமாக முன் வந்து ஜனனி இசையமைத்த பாடலுக்கு பாடியுள்ளார்!அவரும் ஜனனியும் சேர்ந்து பாடிய ‘பூவே பேசும் பூவே...’ என்ற பாடல், படத்தின் ஹைலைட்டாக அமைந்திருந்தது.

தமிழ் சினிமாவில் பெண் இசையமைப்பாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த பட்டியலில் இப்போது ஜனனியும் சேர்ந்திருக்கிறார். ‘பிரபா’ என்ற அப்படத்திற்காக ஜனனி இசையமைக்க சம்மதித்த போது படத்தின் தயாரிப்பாளர் ஒரே வாரத்தில் ஐந்து பாடல்களையும் கேட்க, அது எப்படி முடியும் என்று முதலில் தயங்கிய ஜனனி, பின் அதையே சவாலாக ஏற்று ஒரே வாரத்தில் படத்தின் மொத்த பாடல்களையும் இசை
யமைத்துத் தந்துள்ளார்.

அவர் இசையில் பிரபலங்கள் ஹரிஹரன், ஸ்வேதா மோகன், விஜய் பிரகாஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.படத்தில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒரு பெண்ணின் பிரச்னையை ஹீரோதான் போராடித் தீர்க்கவேண்டும் என்றில்லாமல், அவளே தனக்கான பிரச்னையைத் தீர்க்க போராடுவதுதான் கதை. இப்படி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படத்தில், பெண் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருப்பது மகிழ்ச்சியளித்திருப்பதாகக் கூறும் ஜனனி, தன் இசை மூலம் அன்பையும் அமைதியையும் பறைசாற்ற விரும்புவதாகக் கூறுகிறார்.  

அப்படி ஒரு முயற்சிதான், அவரை உலகறியச்செய்திருக்கிறது!ஆம். 2018ல் அவர் இசையமைத்துப் பாடிய ‘புதிய உலகம் மலரட்டுமே...’ என்ற ஆல்பம், மக்களுக்கு எழுச்சியளிக்கக் கூடியதாக, அன்பையும் அமைதியையும் வலியுறுத்தியதால், உலக அமைதிக்கான இசை விருதை வென்றது.
விருதுடன், உலக அமைதிக்கான இசைத் தூதராகவும் ஜனனி அறிவிக்கப்பட்டார்.

இந்த வரிசையில், ‘டைட்டானிக்’, ‘அவதார்’, ‘தி ெடர்மினேட்டர்’ போன்ற படங்களை உருவாக்கிய பிரம்மாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமேரான் முதல் பல கிராமி விருதுகள் வென்ற பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர். இப்படி பல ஸ்டார்களுக்கு மத்தியில் நம்ம சென்னை பொண்ணு ஜனனியும் ஒரு அங்கமாக இருப்பது நம் அனைவருக்கும் பெருமையே.

ஒன்பது வயதில் நாத ஒலி என்ற இசை ஆல்பத்தை முதல் முறையாக வெளியிட்டு இப்போது 18 வருடங்களில் ஐம்பதிற்கும் அதிகமான இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார். அன்னையர் தினத்திற்காக ஐந்து மொழிகளில் பாடியுள்ளார். வைரமுத்துவின் வரிகளிலும், எஸ்.பி.பியுடனும் மேலும் பல இசை மேதைகளுடனும் பாடியிருக்கும் ஜனனி, ஒவ்வொருவரிடமும் ஏதோவொரு இசை நுணுக்கத்தைக் கற்றுள்ளதாகச் சொல்கிறார்.

2001ல் தேசிய விருது, 2002ல் அப்துல் கலாம் கையால் கலை இளமணி விருது, 2018ல் கலைமாமணி விருது  என்றும், வீடியோ மியூசிக், ஜிங்கிள், இந்தியன் பாப், சினிமா பாடல்கள், கச்சேரிகள் என்று எப்போதும் தன்னை ஆக்டிவாகவும் பரபரப்பாகவும் வைத்திருக்கிறார். அடுத்து புதிதாக ‘த்ரீ டாட்ஸ்’  என்ற பெயரில், தன் மாமாவுடன் இணைந்து ஒரு ஸ்டுடியோவும் ஆரம்பிக்கவிருக்கிறார் ஜனனி!                 

ஸ்வேதா கண்ணன்

ஆ.வின்சென்ட் பால்