தொல்(லைக்) காப்பியம்ஹிட் படம் செய்வது எப்படி - விளக்குகிறார் இயக்குநர் இட்லி

தேவையான பொருட்கள்:

80களில் வெளிவந்த திரைப்படங்கள் - 2

90களில் வெளிவந்த திரைப்படங்கள் - 4

சமீபத்திய ஹிட் காட்சிகள் - 12

மாஸ் டயலாக் - 7

மோட்டிவேஷன் டயலாக் - 2

தமிழில் இல்லாத தமிழ் வார்த்தை - 1

பில்டப் பாடல் - 1

சாவுற காட்சிகள் - 2

செண்டிமெண்ட் காட்சிகள் - 2

சண்டைக் காட்சிகள் - 4

லோக்கல் பாடல் காட்சிகள் - 2

ஃபாரீன் பாடல்

காட்சிகள் - 2

உருட்டுக்கட்டைகள் & துப்பாக்கிகள் - 1000

டாட்டா சுமோக்கள் - 300

அருவாள்கள் &  நாட்டு வெடி குண்டுகள்- 500

அடியாட்கள் - தேவையான அளவு

முதலில் புரடியூசர் வாங்கித் தந்த புது பாத்திரத்தை அடுப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். 80களில் வெளிவந்த நல்ல படங்கள் இரண்டை எடுத்து, சுத்தமாக கழுவி, ஒரு படத்தின் முதல் பாதியையும் இன்னொரு படத்தின் இரண்டாம் பாதியையும் பிய்த்து பாத்திரத்தில் போட வேண்டும்.
அடுத்து 90களில் வெளிவந்த நல்ல படங்கள் நாலில் இருந்து, அவைகளின் திரைக்கதையை உருவி அலசிக் கொள்ள வேண்டும்.

பிறகு தனியாக எடுத்து வைத்திருக்கும் லேட்டஸ்ட் ஹிட் காட்சிகளை எடுத்து சிறிது சிறிதாக வெட்டி, அலசி வைத்த திரைக்கதைகளோடு சேர்த்து அதே பாத்திரத்தில் சின்ன வெங்காயம், கருவேப்பிலை போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும். தேவையே இல்லாவிட்டாலும் பில்டப் பாடல் ஒன்றை முதலில் கலந்துகொள்ள வேண்டும். நாம் எடுக்கிற காட்சிகளைப் பார்ப்பவர்களை சாவடிப்பது போல் இருந்தாலும், இண்டர்வெலுக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடியும், க்ளைமேக்ஸுக்கு பத்து நிமிஷம் முன்னாடியும் 2 பேரை போட்டுத் தள்ளுற சீனை சேர்த்துவிட வேண்டும்.

திரைக்கதை கொதிக்கும் போது, லோக்கல் பாடல் காட்சி களையும் ஃபாரீன் பாடல் காட்சி களையும் போட்டு படம் பார்க்கிறவனை தம்மடிக்க வெளியே அனுப்புவது நல்லது. ‘வயசுல எட்டு மாசம்னு சொன்னா தப்பில்லேம்மா... ஆனா, உன் வயித்துல எட்டு மாசம்னு சொன்னா தப்பில்லையாம்மா’ போன்ற செண்டிமெண்ட் காட்சிகளை ஆங்காங்கு தேவையான அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வேறொரு பாத்திரத்தில் உருட்டுக்கட்டைகள், டாட்டா சுமோக்கள், துப்பாக்கிகள், அருவாள்கள் போட்டுக் கலந்த, முரட்டு சண்டைக்காட்சிகள் நான்கை எடுத்து முக்கால் மணி நேரத்துக்கு ஒன்றாக பெரிய பாத்திரத்தில் இறக்கிவிட வேண்டும். மூணு மணி நேரம் ஓடும் படம் என்பதால், முப்பது நிமிடங்களுக்கு ஒரு முறை, ‘தெப்பக்குளத்துல நிக்கிற கப்பலுக்கு நங்கூரம் எதுக்கு? அட கட்டி முடிச்ச கட்டடத்துக்கு சவுக்கு சாரம் எதுக்கு?’ போன்ற மாஸ் டயலாக்குகளை தூவி விடுவது நல்லது.

வெந்த வாசம் வரும்போது க்ளைமேக்ஸ் கனம் கூட, ‘வெட்டி வச்ச கரும்ப மீண்டும் நட்டு வைக்க முடியும். ஆனா, புட்டு தின்ன போண்டாவை திரும்ப ஒட்ட வைக்கவா முடியும்’ ரேஞ்சில் மோட்டிவேஷன் வசனங்களை மேலே தூவ வேண்டும்.  கடைசியில் தமிழில் இல்லாத தமிழ் வார்த்தையை எடுத்து டைட்டிலாய் வைத்து பரிமாறினால் சூப்பர் ஹிட் படம் ரெடி!

ஆண்ட்டி - இந்தியனும் இன்ஸ்டண்ட் தேசபக்தியும்!

இன்ஸ்டண்ட் புளி சாதம், இன்ஸ்டண்ட் தயிர் சாதம், இன்ஸ்டண்ட் ஊத்தாப்பம், இன்ஸ்டண்ட் இடியாப்பம்ன்னு சாப்பாட்டுல மட்டும் இன்ஸ்டண்ட் இருந்த இந்தியாவுல இப்ப இன்ஸ்டண்ட் தேசபக்தின்னு புதுசா ஒரு கூப்பாடு முளைச்சிருக்கு. சப்பாத்தியை தின்கிற மாமன் நார்த் இந்தியன், சாம்பாரை தின்கிற மச்சான் சவுத் இந்தியன்னு பேசி சிரிச்சுக்கிட்டு புரிஞ்சுக்கிடந்த தேசத்துல, புதுசா ஆண்ட்டி - இந்தியன்னு பிரிவினை சிரிஞ்சு வச்சு பிரிச்சுவிடும் ஊசி போடுற க்ரூப் பொறந்திருக்கு.

நாட்டை மாத்துறேன்னு சொல்லிட்டு ஒண்ணு புழங்குற நோட்டை மாத்துற... இல்ல போடுற ஓட்டை மாத்துறன்னு கிண்டல் செஞ்சா நாம ஆண்ட்டி - இந்தியன். கடவுளே பிள்ளைக்கறி கேட்ட கதையெல்லாம் இருக்கு. ஆனா, நமக்கு பிடிச்ச கறிய சாப்பிட்டா உடனே நாம ஆண்ட்டி - இந்தியன்.
தியேட்டர்ல தேசிய கீதம் போட்டுதான் தேசபக்திய வளர்க்கணுமான்னு கேட்டா நாம ஆண்ட்டி - இந்தியன்.

சரிப்பா, தப்பில்லாம தேசிய கீதம் பாடிக் காமின்னு சொன்னாலும் நாம ஆண்ட்டி - இந்தியன். ஒரு மதத்தை அழித்து இன்னொரு மதம் வளர்க்க ரதம் ஏறி வரியேன்னு கேட்டா நாம ஆண்ட்டி - இந்தியன். பொருளாதார மந்த நிலைன்னு எங்க வாழ்வாதாரமே நொந்த நிலைல இருக்குன்னு புலம்புனாக்கூட நாம ஆண்ட்டி - இந்தியன். கொல்லைக்கு போலாம்னு கிளம்புனாக்கூட, எல்லையில் ராணுவ வீரர்கள்ன்னு பின்னாலையே வர்றீங்க. பொண்டாட்டிகூட புடவை பார்டர பத்தி பேசிக்கிட்டு இருக்கிறப்ப, பாகிஸ்தான் பார்டரை தூக்கிட்டு வரீங்க. அளவு சாப்பாடு பத்தாதுன்னு அன்லிமிடெட் சாப்பாட்டுக்கு டோக்கன் வாங்கினாலும், அதை அளவா சாப்பிட்டாத்தான் உடம்புக்கு நல்லது.

மூணு மீட்டர் துணி வாங்கிட்டோம்னு சட்டைக்கு முன்னூறு பாக்கெட்டாடா வைக்க முடியும்?!
அஞ்சு ரூபாய்க்கு காய் வித்தாலும், அம்பது ரூபாய்க்கு பாய் வித்தாலும் தன்மானத்தோட வாழணும்னு நினைக்கிற மக்கள்ட்ட போய் ஐயாயிரம் கிடைக்கும் நாய் விற்க வரியான்னு கூப்பிடுற மாதிரியானதுதான், தேசபக்தி சொல்லித்தரேன் வான்னு மூச்சு விடுற நேரத்துல மூக்குக்குள்ள ஊதுவத்தி நீட்டுறதும்.

தேசத்துக்கு செயற்கைக்கோள் செய்யறவங்கள்ல பாதிக்கு மேல நம்ம மக்கள்தான். இதுல நம்ம தேசபக்தி எவ்வளவுன்னு நம்மகிட்டையே அளவுகோல் வைக்கிறாங்க. புள்ளைங்க தூங்கறப்ப, அவங்க முகத்துல நம்ம மீசையை வச்சு கூசுனா, புள்ளைங்களுக்கு சிரிப்பு வரும், அதுவே பொண்டாட்டி தூங்கறப்ப கூசுனா, தூக்கம் கெட்ட கோவத்துல செருப்புதான் வரும்.

அதுபோலத்தான், குஜராத் பூகம்பம் முதல் கார்கில் போர் வரைக்கும் தெரியாத உறவுக்கும் தேடி உதவுற மக்கள்கிட்ட வந்து தேசபக்தி க்ளாஸ் எடுக்கிறப்ப கடுப்புதான் வரும். சிவபெருமானுக்கு மூணு கண்ணு. ஆனா, இன்னைக்கு செல்போனுக்கே நாலு கண்ணு. கேமரா அதிகமா இருக்கேன்னு சிவனை விட்டுட்டு செல்போனை கும்பிட முடியுமா? இல்லை, கஷ்டத்தை போக்கிடும்னு மொபைலைத்தான் நம்ப முடியுமா?

யாரை ரோட்டுல வச்சு பேசணும்... யாரை வீட்டுல வச்சு பேசணும்னு மக்களுக்கு தெரியும். திடீர் தேசபக்தியாளர்கள் காக்கி டவுசர் தைக்க அளவு கொடுக்கிறதுக்கு முன்னாலேயே, காவி வேட்டி கட்டி அதுக்கு காம்பினேஷனா கருப்பு சட்டை போட்டவங்க நாமன்னு சொல்லித் தெரியணும்ன்னு இல்ல!யூனிஃபார்ம் சொல்லும் கதைகள்!

உடைகளில் பேருடை சீருடை. யூனிஃபார்மை உடையாய் போடுபவர்களாலும், உடையை யூனிஃபார்மாய் போடுபவர்களாலும் நிரம்பி இருக்கிறது உலகம்.  ஒவ்வொரு யூனிஃபார்மும் கேட்க விரும்பும் காதுகளுக்காக தினமும் ஒரு டஜன் கதைகளை சுமந்து செல்கின்றது.

காவல்துறையினரின் காக்கிச்சட்டைகள் அடிவயிற்றில் பயம் என்னும் பந்தை உருட்டிச் செல்லும். ஈட்டியின் கூர்மை போல இஸ்திரி செய்யப்பட்ட அரசியல்வாதிகளின் வெள்ளைச் சட்டைகள் அவர்களின் செல்வாக்கின் செழுமை சொல்லும். வக்கீல்களின் கருப்பு - வெள்ளை
நினைவுபடுத்துவதெல்லாம் தர்மமும் சூதும் ஒட்டிப் பிறந்த ரெட்டைக் குழந்தைகள் என்பதை.

நம்மிடம் இருந்து அரசியல்வாதிகளைக் காப்பதாக எண்ணி, உண்மையில் அரசியல்வாதிகளிடம் இருந்து நம்மைக் காக்கும் பூனைப்படைகளின் கருப்பு கற்றுத்தருவது ரகசியம் காப்பதின் அவசியத்தை. வில்லெடுத்து போருக்குச் சென்ற காலம் முதல் மில்லுக்கு வேலைக்குச் செல்லும் இந்தக் காலம் வரை சீருடை என்பது ஒற்றுமையின் அடையாளம்.

ஆஸ்பத்திரி முழுக்க வெண்புறாக்களாய் நடக்கும் நர்ஸுகள், பள்ளிக்கூடம் முழுக்க ஒரே கலர் சேலைகளில் பட்டாம்பூச்சியாய் பறக்கும் டீச்சர்கள், மண்ணில் சிதைந்து கிடந்தாலும் பனியில் புதைந்து கிடந்தாலும் தேசத்தைக் காத்திடும் ராணுவ வீரர்களின் யூனிஃபார்மை விட வேறெந்த சீருடைக்கு இந்த தேசத்தில் மரியாதை அதிகம்?  

வங்கி வாசல் செக்யூரிட்டியின் இள நீல யூனிஃபார்ம், கேஸ் சிலிண்டர் சுமப்பவரின் அடர் நீல யூனிஃபார்ம், உயிர் காப்பது தான் ஒரே குறிக்கோள் என்பதால் டாக்டர்களுக்கும் பல டிரைவர்களுக்கும் வெள்ளை நிற யூனிஃபார்ம், சந்நி யாசிகளின் காவி, கன்யாஸ்திரிகளின் சாம்பல், ஹோட்டல் பேரர்களின் சிமிண்ட், கூர்க்காவின் பழுத்த காக்கி மற்றும் போஸ்ட்மேனின் வெளுத்த காக்கி, நடமாடும் விளம்பரப் பலகையாய் களமாடும் விளையாட்டு வீரர்களின் வண்ணமிகு யூனிஃபார்ம் என யூனிஃபார்ம்களில்தான் எத்தனை வகைகள்?

இப்படி எத்தனையோ இருந்தாலும் அத்தனையிலும் அழகு எது என்றால் அது பள்ளிக்கூட சிறார்களின் ஸ்கூல் யூனிஃபார்ம்தான். விலையில்லா ஒரு பரிசை உள்ளே வைத்து கலர் பேப்பரால் சுற்றியது போன்ற மாயத்தோற்றம் தரும் மந்திரப் புன்னகை அது!   

தோட்டா ஜெகன்