நோட்டாவுக்கு காங்கிரஸ் சின்னமா?



தேர்தலில் வாக்குப் பதிவுசெய்வதைப் போலவே, வாக்காளனின் எதிர்ப்புஉணர்வையும் பதிவு செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போது ஓரடி முன் நகர்ந்திருக்கிறது. நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் வரிசையில், ‘இவர்களில் யாருமில்லை’ என்று பொருள்படும் ‘நோட்டா’ (None of the Above) பட்டனும் இணைக்கப்பட உள்ளது.

போட்டியிடும் எந்த வேட்பாளரையும் பிடிக்காத பட்சத்தில், அதைப் பதிவு செய்வதற்கான நடைமுறைகள் இதுவரை சிக்கலாக இருந்தன. படிவம் நிரப்பிக் கொடுக்க வேண்டும். சமயங்களில் இந்த விஷயம் தேர்தல் அலுவலர்களுக்கே சரியாகத் தெரிவதில்லை. உந்துனர் அறக்கட்டளையின் தலைமையிலான ‘நல்லாட்சிக்கான குடிமக்கள் கூட்டமைப்பு’ தொடர்ந்த வழக்கில், ‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ என்று பதிவு செய்யும் ஏற்பாட்டை வாக்குப்பதிவு எந்திரத்திலேயே உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பானது.

அண்மையில் நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நோட்டா பயன்பாட்டுக்கு வந்தது (ஏற்காடு இடைத்தேர்தலிலும் பயன்படுத்தப்பட்டது). வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இது முழுமையான பயன்பாட்டுக்கு வருகிறது.  சுமார் 4 கோடி புதிய இளம் வாக்காளர்கள் வாக்கு ஆயுதத்தோடு களத்துக்கு வரும் இந்த தேர்தலில், ‘நோட்டா’ பெரும் விளைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த சூழலில் பிற வேட்பாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போல ‘நோட்டா’வுக்கும் தனியொரு சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கட்டைவிரலை கீழ்நோக்கிக் காட்டும் (ஊத்திக்கிச்சு) சின்னத்தைப் பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
தனியொரு சின்னம் ஒதுக்கினால், நோட்டா பத்தோடு பதினொன்றாகி விடாதா?, யாரோ ஒரு வேட்பாளரின் சின்னம் இது என்று வாக்காளர்கள் ஒதுக்கிவிட மாட்டார்களா?
இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்ற வழக்கறிஞர் சத்தியசந்திரனிடம் கேட்டோம்.

‘‘67 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் ‘நோட்டா’ நல்லதொரு திருப்பம். மக்களின் உணர்வுகளை சட்டபூர்வமாக வெளிக்காட்டும் இந்த வாய்ப்பை மழுங்கடிப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன. அதை முறியடிக்க நிச்சயமாக ஒரு சின்னம் தேவை. வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒவ்வொரு பட்டனுக்கும் எதிரில் வரிசையாக கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்களின் சின்னங்களை போட்டு விட்டு அனைத்துக்கும் கீழே ழிளிஜிகி என்று போடுவார்கள். அல்லது தமிழில் ‘மேற்கண்ட யாரும் இல்லை’ என்று அச்சிடுவார்கள். வயதானவர்களும், படிக்காதவர்களும், இதைப் புரிந்து கொள்ளவே முடியாது. ஓரளவு படித்தவர்கள் கூட ‘இந்த மெஷினை தயாரித்த கம்பெனி பெயர் போலிருக்கு’ என்று கருதி அதைக் கடந்து சென்றுவிடுவார்கள். எதற்காக நோட்டா கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடும்.

நோட்டாவை எளிய மக்களிடம் கொண்டு செல்லவும், அவர்களுக்குப் புரியவைக்கவும் கட்டாயம் ஒரு சின்னம் வேண்டும். அரசியல் கட்சிகள், ‘இந்தச் சின்னத்தில் வாக்களியுங்கள்’ என்று கேட்பதைப் போல சமூக அமைப்புகளும், தேர்தல் கமிஷனும் ஒரு சின்னத்தைச் சுட்டிக் காட்டி நோட்டாவைப் பற்றி பிரசாரம் செய்ய முடியும். வார்த்தைகளை விட சின்னங்களே மக்கள் மனதில் தங்கும். அதனால்தான் நோட்டாவுக்கு சின்னம் வேண்டும் என்று வழக்குத் தொடுத்தேன். தேர்தல் ஆணையமும் அதைப் பரிசீலிப்பதாக கூறியுள்ளது...’’ என்கிறார் சத்தியசந்திரன்.

ஒரே பெயரில் வேட்பாளர்களை நிறுத்தி வாக்காளர்களைக் குழப்புவதும், ஒன்று போலவே இருக்கும் சின்னங்களைப் பெற்று (முரசு- கூடை) ஓட்டுக்களைச் சிதறடிப்பதும் நம் தேர்தல்கள யுக்திகள். நோட்டாவுக்கு சின்னம் ஒதுக்கினால், அதன் சின்னத்தைப் போலவே வேறு சின்னங்களைப் பெற்று நோட்டாவை மழுங்கடித்து விடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள் சில சமூக ஆர்வலர்கள்.  ஆனால் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ, ‘‘நோட்டாவுக்கு தனிச்சின்னம் ஒதுக்கினால்தான் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்’’ என்கிறார்.

 ‘‘இன்று சின்னங்களின் பெயரைச் சொன்னால் அரசியல் கட்சிகளின் பெயரைக் குழந்தைகள் கூட சொல்லி விடுகின்றன. காரணம், வார்த்தைகளை விட காட்சிகள் மனதில் பதியக் கூடியவை. நோட்டா இப்போதுதான் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு நோட்டா பற்றித் தெரியவில்லை. மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. 

பிரசாரம் செய்யவும், மக்கள் மனதில் தங்கும்படி செய்யவும் நோட்டாவுக்கு தனிச்சின்னம் தேவை. ஆனால் அந்த சின்னம் கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் சின்னங்களோடு தொடர்பற்றதாக இருக்க வேண்டும். கட்டைவிரலை கீழ்நோக்கிக் காட்டுவது போன்ற சின்னம் நிச்சயம் நோட்டாவுக்குப் பொருந்தாது. ‘கை’, காங்கிரஸ் கட்சியின் சின்னம். கை என்றாலே மக்களுக்கு அந்தக் கட்சிதான் ஞாபகத்துக்கு வரும்.

‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்ய ஏற்பாடு தேவை’ என்று கோரி 2001ல் உந்துனர் அறக்கட்டளை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டபோதே, ‘அதற்கு துடைப்பத்தை சின்னமாக அறிவிக்க வேண்டும்’ என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோம். இன்று துடைப்பமும் ஒரு அரசியல் கட்சியின் சின்னமாகி விட்டது. செருப்பைக் கூட ஆந்திராவில் ஒரு அரசியல் கட்சி சின்னமாகக் கோரியிருக்கிறது.

இவற்றில் எதனோடும் தொடர்பில்லாத எளிமையான, மக்கள் மனதில் தங்கக்கூடிய ஒரு சின்னத்தை தேர்தல் கமிஷன் அறிவிக்க வேண்டும். எந்த சின்னத்தை அறிவிக்கலாம் என்று மக்களிடம் இருந்தே கூட தேர்தல் கமிஷன் கருத்துக் கேட்கலாம். ஒரு பரிசுப் போட்டியாகக் கூட இதை அறிவிக்கலாம். அதன்மூலம் நோட்டாவையும் மக்களிடம் பிரபலப்படுத்தவும் முடியும்’’ என்று யோசனை சொல்கிறார் சிவ.இளங்கோ.

-வெ.நீலகண்டன்