சாயி



ஷீரடி பாபாவின் புனித சரிதம்

நான் எங்கும் இருக்கிறேன். நீரிலும், நிலத்திலும், காய்ந்துபோன கொம்பிலும், மனிதர்களிடையேயும், வனத்திலும், இந்த தேசத்திலும், வெளிதேசங்களிலும், எங்கும் இருக்கிறேன். நான் எந்த தேசத்தின் எல்லைகளுக்கும் உட்பட்டவன் அல்லன்.

- பாபா மொழி

‘‘உன்னைப் போன்ற கருமிக்கு எப்படி பிரம்மம் தெரியும்?’’ என பாபா சொன்னதைக் கேட்டு, சிகட்ராவ் வெறுப்படைந்தான். இருந்தாலும் விடாப்பிடியாக, ‘‘பாபா, நீங்கள் சொல்வது போல, நான் அப்படியொன்றும் கருமியல்ல!’’ என்றான்.பாபா சிரித்தவாறே கூறினார்... ‘‘அடேய், நான் ஐந்து ரூபாயைப் பலரிடம் கேட்டேன். பார்த்துக் கொண்டுதானே இருந்தாய்? உன் பையில், எனக்குத் தேவையானதைவிட அதிகப் பணம் இருக்கும்போது, அதிலிருந்து ஐந்து ரூபாய் கொடுக்க மனமில்லை. இதில் வேறு நீ லோபி இல்லையென்கிறாய்! பையிலிருந்து எடு பார்க்கலாம், சுருட்டி வைத்திருக்கும் பணத்தை...’’

அவன் எடுத்தான். 250 ரூபாய் இருந்தது. பாபா, சரியாகச் சொன்னதைக் கேட்டு ஆச்சரியம்அடைந்தான். ‘பாபா எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி’ என்றெண்ணி, அவர் காலில் விழுந்தான்.
‘‘எழுந்திரு. நீ சும்மா பிரம்மம் என்னும் வலையில் சுற்றிச் சுற்றி வராதே! ஒன்று மாத்திரம் நினைவில் வை. கருமித்தனத்தை ஒழிக்காவிட்டால் எப்படி கடவுள் பார்வை கிட்டும்? மக்கள், செல்வம், மனைவி, இன்பம், பொருள் சம்பாதிக்கும் ஆசை...

இவை அனைத்தையும் ஒழிக்கவில்லையென்றால், ஒருவன் எப்படி கடவுளை அறிய முடியும்? பொருளாசை என்பது மிகவும் துன்பத்தைக் கொடுக்கக் கூடியது. தாகம் கொண்டவன் தண்ணீருக்காக எப்படி அலைவானோ, அப்படிப்பட்ட துன்பத்தைத் தரக்கூடியது பேராசை. இந்தத் துன்ப வலையில், கர்வம், பொறாமை என்பவை நிறைந்திருக்கும். பேராசைக்குப் பெரிதும் எதிரியானவர் கடவுள். அதனால் மனம் ஒருநிலைப்படுதல் என்பது முடியாது.

ஒரு நிலைப்பாடு இல்லையென்றால் முக்தி இல்லை. மனதில் பேராசை குடிகொண்டுவிட்டால், கடவுளை அடைய வேண்டும் என்கிற எல்லா வழிமுறைகளும் மண்ணாகிவிடுகின்றன. கவனத்தில் வை. முடிந்ததைப் பேச வேண்டும். ஜீரணமாவதைச் சாப்பிட வேண்டும். என்னிடத்தில் எல்லையற்ற கொடுக்கும் சக்தி இருக்கிறது. ஆனால், உனக்கு வாங்கிக்கொள்ளும் சக்தி வேண்டும். கடவுளை அறிவதற்குப் பெரிய பெரிய சாதனைகளைப் படைக்க ஆவல் கொள்ள வேண்டும்.’’

சிகட்ராவின் மனக்கண்கள் திறந்தன. மற்றவர்களும் இந்த உபதேசத்தினால் மனநிறைவு பெற்றார்கள். ‘‘பாபா எல்லா மதங்களையும் சமமாக நினைப்பவர்’’ என்று மகல்சாபதி சொன்னார். அங்கு நாநா சாகேப் சந்தோர்கரும் தாபோல்கரும் இருந்தார்கள். அவர்களுடைய வாதம் ஆரம்பமாயிற்று.

தாபோல்கர் சொன்னார்... ‘‘உண்மையாகச் சொன்னீர்கள். பாபாவினால் இந்து - முஸ்லிம்களிடையே எவ்வளவு ஆழமான நட்பு ஏற்பட்டிருக்கிறது. மசூதியை அவர் துவாரகமாயியாக மாற்றினார். மேலும், அங்கு துனியை ஏற்றினார். இது இரு மதங்களின் சங்கமமாகும்.’’‘‘ஆமாம். இது மாத்திரமல்ல. கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், சைவர்கள் போன்ற வெவ்வேறு மதத்தினர்கள், வெவ்வேறு மொழி பேசுபவர்கள், மாறுபட்ட பழக்க வழக்கங்களையுடையவர்கள் அவரிடம் வருகிறார்கள். அவர்கள் எல்லோர் மீதும் பாபாவின் அருள் இருக்கிறது’’ என்று நாநாசாகேப் தன்னுடைய எண்ணத்தைச் சொன்னார்.

‘‘பாபா இந்துவா அல்லது முஸ்லிமா என்பது யாருக்கும் தெரியவில்லை. அவருடைய பழக்கங்கள் எல்லாம் இரண்டு மதத்திற்கும் ஏற்றதாக இருக்கிறது. இந்துக்களின் பண்டிகையான ராமநவமியன்று, சபை மண்டபத்தில் தொட்டில் கட்டி பஜனை, கீர்த்தனை, கதா காலட்சேபங்கள் செய்விக்கிறார். அன்று இரவே முஸ்லிம்களின் சந்தனக்கூடு ஊர்வலமும் செய்விக்கிறார். கோகுலாஷ்டமியன்று உறியடி போன்ற கிருஷ்ணனின் விளையாட்டை செய்விக்கிறார்.

ஈத் அன்று முஸ்லிம்களும் நமாஸ் செய்வதற்கு உற்சாகப்படுத்துகிறார். இப்படிப்பட்ட திருவிழாச் சமயங்களில் குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளுக்கும் ஏற்பாடு செய்கிறார். மல்லர்களுக்குப் பரிசும் கொடுக்கிறார்’’ என்று தாபோல்கர் கூறினார்.

‘‘பாபா என்றால் மிகவும் ஆச்சரியப்படத்தக்க மகானாக இருக்கிறார். கடவுளாகவும் காணப்படுகிறார். அவருடைய லீலைகள் எல்லாம் விவரிக்க முடியாதவையாக இருக்கின்றன. மேலும் இந்த மனிதரின் பெருமை அளவிட முடியாதது. யாருக்குத் தன் உடலைப் பற்றிய கவலையும் மோகமும் இல்லையோ அவனுக்கு எல்லாம் ஒரே மாதிரிதான். பாபா, ஒருபொழுதும் மனிதர்கள், பிராணிகள், பட்சிகள் இடையே வேற்றுமை காண்பித்தது இல்லை. பக்கீர்களுடன் சாப்பிடும்பொழுது அசைவ உணவையும் சாதுக்களுடன் சாப்பிடும்பொழுது சைவ உணவையும் சாப்பிடுவார். எல்லா தளைகளையும் தாண்டி வெற்றி கண்டவர் பாபா’’ என்று மகல்சாபதி சொன்னார்.

இப்படிப்பட்ட அழகான சர்ச்சை நடந்து கொண்டிருக்கும்போதே, மாதவராவ் தேஷ்பாண்டே என்னும் ஷாமா அங்கு வந்தான். ‘‘என்ன சர்ச்சை?’’ என்று வினவினான். ‘‘பாபாவைப் பற்றித்தான். அவருடைய எல்லா மதங்களின் ஒற்றுமை பற்றிய சர்ச்சைதான் நடந்துகொண்டிருக்கிறது. இப்பொழுது அவரின் அறிவுத்திறன் பற்றிப் பேசலாம்’’ என்று நாநா சொன்னார்.
‘‘பாபா என்றால் புரிந்துகொள்ள முடியாதவர். அவரை முழுவதும் தெரிந்துகொள்வது என்பது மிகவும் கடினம்’’ என்று ஷாமா சொன்னான்.

‘‘ஆனால், தாபோல்கர், நீங் கள் முதன்முதலில் ஷீரடிக்கு வந்தபோது உங்களை பாபா, ஹேமாட பந்த் என்று சொன்னாரே, அது எப்படி?’’ என்று ஷாமா கேட்டார்.
‘‘அன்றையதினம் பாளாசாகேப் பாட்யாவுடன் ஒரு பெரிய விவாதம் நடந்துகொண்டிருந்தது. கடவுள் பெரியவரா, செய்கை பெரியதா என்ற விவாதம் ஆரம்பித்தது. இதில் கீதையில் சொன்னபடி, தனக்குத்தானே உயர்த்திக் கொள்ளுதல் என்கிற விஷயத்தைப் பற்றி சர்ச்சை நடந்தது.

அப்படியிருக்க, குருவின் அவசியம் என்ன? என்று நான் சொன்னேன். பிறகு நாங்கள் மசூதிக்குச் சென்றபொழுது, ‘என்ன சர்ச்சை நடந்தது, ஹேமாட பந்த் என்ன சொன்னான்?’ என்று பாபா கேட்டார். ஹேமாட பந்த் என்னும் மகா வித்துவான் இருந்தார். அவர் எல்லாக் கலைகளையும் வேதங்களையும் அறிந்தவராகவும், சர்ச்சை புரிவதில் வல்லவராகவும் இருந்தார். அவரைப் போல, காரணமில்லாமல், நானும் விவாதங்கள் செய்து வந்தேன். என்னுடைய கர்வத்தை ஒழிப்பதற்காக, பாபா என்னை ஹேமாட பந்த் என்று அழைத்திருக்கலாம்’ என்று தாபோல்கர் கூறினார்.
திடீரென்று ஷாமா கேட்டான்... ‘‘தாபோல்கர், ஹேமாட பந்த் என்பவர் எழுத்தாளராக இருந்தார். நீங்கள் பாபாவைப்பற்றி எழுதணும் என்று சொல்லியிருந்தீர்கள். பாபாவின் விருப்பமும் அதுவே. நீங்கள் எப்பொழுது எழுத ஆரம்பிக்கப் போகிறீர்கள்?’’

‘‘பாபா உத்தரவு கொடுத்த பிறகு...’’
‘‘மாதவராவ், நீங்கள்தான் எனக்காக பாபாவிடம் கொக்கி போட வேண்டும்’’ என்று தாபோல்கர் சொன்னார்.
எல்லோரும் மகிழ்ச்சியுடன் மசூதிக்கு வந்தார்கள். பாபா அனைவருக்கும் தரிசனம் கொடுத்துக்கொண்டிருந்தார்.
‘‘வாருங்கள் குழுவினரே! ஹேமாட பந்த் என்ன சொல்கிறார்?’’ - சிரித்துக் கொண்டே பாபா விசாரித்தார்.

‘‘பாபா தாபோல்கர் உங்களுடைய சரித்திரத்தை எழுத வேண்டும் என்று விரும்புகிறார்’’ என்று மாதவராவ் சொன்னார்.
பாபா சிரித்தார். ‘‘என்னைப் பற்றி என்ன சரித்திரம் எழுதப்போகிறான் இந்த ஹேமாட பந்த்? ஷாமா, நான் ஒரு ஏழை பக்கீர். பைத்தியக்காரன். மனதுக்கு வந்தபடி பேசுகிறேன். கிழிசல்களை அணிகிறேன்.’’

‘‘ஆனால் இந்த உலகத்தையே விழுங்கியவர் நீங்கள்’’ என்று சொல்லி, ஷாமா பெரிதாகச் சிரித்தான். ‘‘பாபா, என் மனதில் ஆசையை உண்டாக்கியவரும் நீங்கள்தான். இப்பொழுது அனுமதி கொடுத்து எழுதச் செய்பவரும் நீங்கள்தான்’’ என்று அண்ணாசாகேப் கையைக் கூப்பிக்கொண்டு சொன்னான். ‘‘சரித்திரத்தை எழுதுவதற்கு நான் முழு அனுமதி கொடுக்கிறேன். நீங்கள் உங்கள் வேலையை ஆரம்பியுங்கள். மன உறுதியை விடாதீர்கள். என் வார்த்தை மீது நம்பிக்கை வையுங்கள். என்னுடைய லீலைகளைப் பற்றிய இந்த சரித்திரத்தை யார் படிக்கிறார்களோ, கேட்கிறார்களோ, அவர்களுடைய பாவங்கள் எல்லாம் கழியும். குடும்பக் கவலைகள் குழப்பங்கள் தீரும்’’ என்று பாபா கூறினார்.

எல்லோரும் உன்னிப்பாகக் கேட்டார்கள். ‘‘என்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் சேகரித்து சரித்திரமாக எழுதி முறைப்படி அதைப் பதிவு செய். என் கதையை நானே சொல்லி எழுதிக்கொள்கிறேன். நீ இதற்கு ஒரு கருவியாகத்தான் இருக்கிறாய் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள். ‘நான்தான் எழுதுகிறேன்’ என்று கர்வப்படாதே. உன்னுடைய எல்லா அகங்காரத்தையும் என் காலடியில் அர்ப்பணம் செய். நான் உனக்கு முழுமையாக உதவி செய்கிறேன். நான் எப்பொழுதும் உன் கூடவே இருக்கிறேன் என்கிற நம்பிக்கை வை.’’ பாபா மகிழ்ச்சி பொங்கப் பேசினார். அவருடைய முகத்தில் ஒளி பரவியிருந்தது. வார்த்தைகளில் உத்வேகம் இருந்தது. கேட்டவர்களும் உணர்ச்சி வசப்பட்டார்கள்.

‘‘எவன் ஒருவன் என்னுடைய பெயரை பக்தியுடன் துதிக்கிறானோ, அவனுடைய ஆசைகளை நிறைவேற்றுவேன். அவனுக்கு முன்னால், பின்னால் இருந்துகொண்டு உதவுவேன். பக்தர்கள் மட்டுமல்லாமல் வேறு யார் என்னைத் துதித்தாலும், அவர்களுக்கும் நான் அருள் புரிவேன். யார் என்னை நிரந்தரமாக சரணடைகிறானோ அவனுக்கு நான் கடைசிவரை உறுதுணையாக இருந்து காப்பேன். இது என்னுடைய சத்தியமான வார்த்தையாகும். சாயி சாயி என்று சொல்லுங்கள். துன்பத்திலிருந்து விடுதலை பெறுங்கள்’’ என்று பாபா சொன்னார்.
பாபா தன் இரு கைகளையும் அண்ணாசாகேப் தாபோல்கரின் தலையில் வைத்து, ஆசீர்வதித்தார்.

தாபோல்கரின் ஆற்றலுக்கு வெற்றி கிடைத்தது. மேலும், ‘சாயி சத் சரித்திரம்’ என்னும் நூலின் கரு அவர் மனதில் உதித்தது!
காசிராமின் வீட்டிற்கு பாபாவே வந்தார். காரணம், அவன் படுத்த படுக்கையாக இருந்தான். பாபாவைக் கண்டதும் எழுந்து உட்கார்ந்தான். ‘‘காசி, என்னப்பா ஆச்சு?’’ என்று பாபா கேட்டவாறே அவனை ஆதரவாக அணைத்துக்கொண்டார். இருவரின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தோடியது.

‘‘பாபா, நீங்கள் எதற்காக வந்தீர்கள்? நானே அங்கு வந்திருப்பேனே... நீங்கள் உத்தரவு கொடுத்திருந்தால்...’’
‘‘அப்படியல்ல. நீ எனக்கு மிகவும் விருப்பமானவன். இந்த பக்கீர் எந்தவித பற்றும் இல்லாதவனாக வாழ ஆசை. ஆனால் உன்னைப் போன்ற கடவுளுக்குப் பிரியமான, நல்ல மனிதர்கள் என்னிடம் வரும்போது, நான் நடுநிலை வகித்து பேசாமல் இருக்க முடிவதில்லை. எனக்கு ஓடோடி வரணும் என்றுதான் இருக்கிறது’’ - பாபா கண்ணீரைத் துடைத்துக்கொண்டே சொன்னார்.
‘‘பாபா, நான் பிழைப்பேனா?’’

பாபா முகத்தைத் திருப்பிக்கொண்டார். மறுபடி கண்ணீர் கன்னத்தை நனைத்தது. ‘‘காஷ்யா, என் அன்பிற்குரிய சகோதரா, எதிர்காலம் அறிந்தவன் நான். ஆனால், சில கேள்விகளுக்கான பதில் தெரிந்திருந்தும், அதைச் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேனப்பா...’’ ‘‘புரிந்துகொண்டேன். எனக்கு எந்த விதமான மனக்குறையும் இல்லை. என்னுடைய கவலையெல்லாம் என் இரண்டு பெண் குழந்தைகளைப் பற்றித்தான்! அவர்கள் என்னையே நம்பியிருக்கிறார்கள். அவர்களுடைய எதிர்காலம் என்னவாகும்?’’

‘‘நீ துணிவுள்ளவன் காஷ்யா...’’ ‘‘பாபா’’ காசிராமின் மனைவி தன் இரு பெண்களுடன் அவர் எதிரில் வந்து நின்றாள். மூவரும் மிகுந்த சோகத்தில் இருந்தார்கள்.
‘‘சொல் மகளே...’’மூவரும் பாபாவின் காலில் விழுந்து அழுதார்கள். ‘‘பாபா, நீங்கள் கண்கண்ட தெய்வம். பல பேரை மரண வாசலிலிருந்து இழுத்து வந்து காப்பாற்றியிருக்கிறீர்கள்...’’ அவள் அழுதுகொண்டே நிறுத்தி நிறுத்திப் பேசினாள். அவளுடைய ஒவ்வொரு சொல்லும், பாபாவின் மனதில் ஈட்டியாகக் குத்தின.

‘‘கமலீ...’’ அவள் மேலே பேசுவதைத் தடுக்கும் விதமாக, காசிராம் சொன்னான்.
அவள் கணவனைப் பார்த்தாள். ‘‘நீ பேசம்மா...’’ என்றார் பாபா. ‘‘வேண்டாம்...’’ காசிராம் கத்தினான்.
‘‘கமலா, பாபாவை தர்மசங்கடத்தில் மாட்டிவிடாதே. இன்றுவரை என்னை உயிருடன் வாழ வைத்தது அவர்தான். இல்லாவிட்டால், கொள்ளைக்காரர்கள் தாக்கியபோதே என் வாழ்வு முடிந்திருக்கும். ரொம்பவும் வாழ்ந்துவிட்டேன். போதும்... பாபாவிற்கு எல்லாம் தெரியும்... அவருக்கு நாம் ஒன்றும் சொல்லத் தேவையில்லை. எனக்கு இவர்களைப் பற்றித்தான் கவலை...’’
‘‘காசி, நீ கவலைப்படாதே. நான் இருக்கிறேன். உன்னுடைய குழந்தைகள் என் குழந்தைகள் போல.’’

‘‘பாபா... என்னுடைய குங்குமம்... என்னுடைய தாலி பாக்கியத்தைக் காப்பாற்றுங்கள்...’’ என்று கத்தினாள் கமலா. காசிராம், பாபாவின் கண்களை ஒருமுறை தீர்க்கமாகப் பார்த்தான். பிறகு... கண்ணை மூடிவிட்டான். அவனுடைய முகத்தில் இறைவனைக் கண்ட மனத்திருப்தி தெரிந்தது!

கமலாவும், அவள் பெண்களும் ‘ஓ‘வென்று அலறினார்கள். பாபா மூவரையும் அணைத்துக் கொண்டு, சிறு குழந்தை போல தேம்பித் தேம்பி அழுதார்.
வெளியிலிருந்த ஷாமா, தாத்யா, மகல்சாபதி போன்றவர்கள் இக்காட்சியைக் கண்டு மலைத்து நின்றார்கள். யோகிகளின் ராஜாவே, ஒரு பக்தனுக்காக விசும்பி விசும்பி அழுதுகொண்டிருந்தார். அவருடைய புலம்பல் இதயத்தை உலுக்குவதாக இருந்தது.

(தொடரும்...)

என்னிடத்தில்
எல்லையற்ற
கொடுக்கும் சக்தி
இருக்கிறது. ஆனால், உனக்கு வாங்கிக்கொள்ளும் சக்தி வேண்டும்.

என்னுடைய லீலைகளைப் பற்றிய இந்த சரித்திரத்தை யார் படிக்கிறார்களோ, கேட்கிறார்களோ, அவர்களுடைய பாவங்கள் எல்லாம் கழியும். குடும்பக் கவலைகள் குழப்பங்கள் தீரும்!

வினோத் கெய்க்வாட்
தமிழில்: பி.ஆர்.ராஜாராம்