விருதுகள் பற்றி கவலைப்பட்டதில்லை!



சுமார் ஆயிரம் படங்களில் மலைக்க வைத்து... ஐந்தாயிரம் பாடல்களில் லயிக்க வைத்து... இப்போதும் இசைப் பிரியர்களின் இதயங்களில் சிம்மாசனமிட்டிருக்கிறார் இளையராஜா. ‘உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்கள்’ என்று சமீபத்தில் ஒரு அயல்நாட்டு இணையதளம் வெளியிட்ட டாப் 25 பட்டியலில் இசைஞானிக்கு 9வது இடம். இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரே நபர் நம் ராஜாதான்.

அதனையொட்டி அவரை நேரில் சந்தித்து கௌரவிக்க ஒரு காலை வேளையில் பத்திரிகையாளர்கள் பிரசாத் ஒலிப்பதிவு கூடத்தில் மலர்க்கொத்தோடு ஒன்று கூடினர்.
‘‘வழக்கமாக பத்திரிகையாளர்களைத்தான் நாங்கள் சந்திப்போம். இப்போது பத்திரிகையாளர்களே என்னை சந்திக்க வந்திருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம்!’’ என்று வெள்ளைப் புன்னகை வீசியவரிடம், ‘‘இந்த அங்கீகாரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.

தத்துவம் ஓடிப் பிடித்து விளையாடிய அவர் பேச்சிலிருந்து... ‘‘உலகின் பெரிய விருதாக நீங்கள் எதைக் கருதினாலும் அது எனக்கு உயர்ந்ததே இல்லை. விருதுகள் ஒரு கிரியேட்டருக்கு உற்சாகமோ அங்கீகாரமோ கொடுத்து விடுவதில்லை. இசை அதையெல்லாம் கடந்தது. இசையில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக்கொள்கிறேனே தவிர, விருதுகள் - பாராட்டுக்கள் பற்றிக் கவலைப்பட்டது இல்லை. நான் செய்யும் வேலையில் எனக்கு குறைகள் தெரியாததால், என்னுடைய வேலையின் எதிரொலி பற்றி நான் நினைப்பதில்லை. 

எட்ட முடியாத உயரத்தில் நான் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், உயரம் என்பது எனக்கு ஒரு பொருட்டே அல்ல. என் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு போவதாகவே எண்ணுகிறேனே தவிர, இதை சாதனையாகவோ இத்தனையாவது இடத்தில் இருக்கிறோம் என்றோ நினைப்பதில்லை. அதை நினைத்துக்கொண்டே இருந்தால் தலைதான் பெரிதாகும்.

என்னைத் தேடி வருகிறீர்கள் என்றால் என்னுடைய சுத்தம், இசையினுடைய சுத்தம்... அதுதான் என் மீது உங்களுக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி உங்களைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. யாரோ ஒருவன் என்னை சிறந்த இசையமைப்பாளராகத் தேர்வு செய்தான் என்பதற்காக இங்கு நீங்கள் வரவில்லை. இதற்குப் பின்னால் அன்பும் ஈடுபாடும் இருக்கிறது. அதற்கு என்ன விலை கொடுக்க முடியும்? இல்லை, விலைதான் இருக்கிறதா?

சினிமாவில் நான் சாதித்துவிட்டதாகவும் கருதவில்லை. என்னை யாரும் வேலை வாங்கவும் முடியாது. அப்படி வாங்கிவிட்டதாக நினைத்தால், அது அவரவருக்கு அன்றைக்குக் கிடைத்த சாப்பாடு... அவ்வளவுதான். ஒவ்வொரு வருக்கும் அந்தந்த வேளையில் கிடைப்பதுதான் கிடைக்கும். சிலருக்கு இட்லி, சிலருக்கு பொங்கல், சிலருக்கு பழைய சோறு கிடைக்கலாம். அது பாக்கியமா அல்லது பாவமா என்று தெரியாது. ஆனால், கிடைப்பதுதான் கிடைக்கும்.

என்னிடம் வாங்கியதை வைத்துக் கொண்டு, ‘இளையராஜாவிடம் இதுதான் இருக்கிறது’ என்று யாரும் சொல்ல முடியாது.  இந்தத் தலைமுறையினரும் என் இசையை ரசிக்கிறார்கள். நான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன். சின்ன வயதில் சென்னைக்கு வரும்போது எனக்குள் என்ன ஃபயர் இருந்ததோ அந்த ஃபயர் இப்போதும் அப்படியே இருக்கிறது.’’

- அமலன்