பாஜகவில் ஒரு பொருளாதார நிபுணர் கூட இல்லை... மோடிக்கு எதுவுமே தெரியாது...



சொல்கிறார் மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமனின் கணவர்

கடந்த 13ம் தேதி அறிவிக்கப்பட்ட கர்நாடகா தேர்தல் தோல்வியைவிட அடுத்தநாள் அதே கர்நாடகா பெங்களூரில் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்று பாரதிய ஜனதா கட்சியை ரொம்பவே அப்செட்டாக்கியது. இந்தப் புத்தகத்தை எழுதியவர் ஒரு எதிர்க்கட்சிக்காரர் என்றால் பாஜகவும் மக்களும் அதை துடைத்துவிட்டுப் போயிருக்கலாம்.
ஆனால், எழுதியிருப்பது இன்றைய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் என்பதுதான் ஹைலைட். புத்தகத்தை வெளியிட பல பதிப்பகங்கள் பின்வாங்கினாலும் இந்தப் புத்தகம் இந்தத் தருணத்தில் வருவது மிகத் தேவை என்பதால் மிக தைரியமாக பதிப்பித்திருக்கிறது ‘ஸ்பீக்கிங் டைகர்’ எனும் பதிப்பகம்.

புத்தகத்தை எழுதிய பரகலா பிரபாகர் (Parakala Prabhakar) ஆந்திராக்காரர். பிராமணர். எம்.ஏ மற்றும் எம்.ஃபில் படிப்புகளை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முடித்தவர். டாக்டர் படிப்பை பிரபல லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் முடித்தவர். பொருளாதாரம் மற்றும் அரசியல் நிபுணத்துவமுடைய பிரபாகர் 2000களில் பாஜகவில் இணைந்தபோது அவருக்கு ஆந்திர மாநிலத்துக்கான செய்தித் தொடர்பாளர் எனும் பதவி கிடைத்தது.

ஆனால், 2008இல் ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ‘பிரஜா ராஜ்யம்’ கட்சியை ஆரம்பித்து ஆந்திர அரசியலில் சிறு சலனத்தை ஏற்படுத்தியபோது பாஜகவில் இருந்து விலகி சிரஞ்சீவியுடன் இணைந்துகொண்டார் பிரபாகர். சந்திரபாபு நாயுடு 2014இல் சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்தபோது தெலுங்கு தேசம் கட்சி பிரபாகரை வளைத்துப்போட்டது. சந்திரபாபு ஆட்சியில் தகவல் தொடர்பு ஆலோசகராக கோலோச்சினார் பிரபாகர்.

இதற்கிடையில் 1986லேயே நிர்மலா சீதாராமனைத் திருமணம் செய்துகொண்டார் பிரபாகர் என்பது முக்கியமானது. தனது கருத்துகளை பல பத்திரிகைகளில் தொடர்ந்து பிரபாகர் எழுதி வருகிறார். அவற்றில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகள்தான் ‘கோணல் மரத்தில் கட்டப்பட்ட புதிய இந்தியா’ (The Crooked Timber of New India) எனும் தலைப்பில் புத்தகமாகியிருக்கிறது.

புத்தக வெளியீட்டை ஒட்டி பிரபல ‘வயர்’ (thewire.in) எனும் வலைத்தள யூடியூபுக்கு பிரபாகர்பேட்டி கொடுத்தார். நேர்காணல் செய்தவர் பிரபல பத்திரிகையாளரான கரன் தாப்பர்.

பாஜகவின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் இப்பேட்டியின் சாராம்சம் இதுதான்: ‘ஒன்றைத் தவிர மற்ற விஷயங்களில் மோடி ஞான சூனியம். பொருளாதாரம் மட்டுமல்ல... இன்னும் பல விஷயங்களில் திறனற்றவராகவே இருக்கிறார். அவருக்கு இருக்கும் ஒரே திறமை இந்துத்துவா கொள்கைகளை மிகத் திறமையாகப் பரப்புவதுதான்.

நம்மில் பலரது அடி மனத்தில் இருக்கும் இருண்ட பக்கங்களைத் தூண்டிவிட்டு அதன் வழியாக மதவாத, சாதிய வெறுப்புகளை வாக்குகளாக அறுவடை செய்வது மட்டுமே அவரது ஒரே திறமை...’ என்று காட்டமாக பேட்டியளித்த பிரபாகர், மோடி திறமையற்றவர் என்பதற்கான சில புள்ளிவிவரங்களையும் அந்தப் பேட்டியில் குறிப்பிடுகிறார்.‘டிமானிடைசேஷன் (பணமதிப்பீடு இழப்பு) என்பது கறுப்புப் பணத்தை ஒழிக்கும் என்று மோடி செயல்படுத்தினார். கறுப்புப் பணம் நோட்டாக இருக்காது என்று ஒரு சாதாரண பொருளாதார மாணவனுக்கே தெரியும் நிலையில் இதுபோன்ற ஐடியாக்களை யார் அவருக்குக் கொடுத்தது... எப்படி அவர் அதை நம்பினார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

மோடி அரசு வளர்ச்சி வளர்ச்சி என்று கூப்பாடு போடுகிறது. ஆனால், இன்று விலைவாசி உயர்வால் பணவீக்கத்தின் அளவு சுமார் 6லிருந்து 7 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. வேலையில்லாதோர் சதவீதம் 7. அதிலும் இளைஞர்களின் வேலையிழப்பு சுமார் 18 சதவீதம். அண்மையில் ஆக்ஸ்ஃபாம் (Oxfam) எனும் பிரபல உலகளாவிய தனியார் நிறுவனம் இந்தியாவுக்கான ஒரு பொருளாதார அறிக்கையை தாக்கல் செய்தது.

அதில் இந்தியாவின் சமத்துவமின்மை அதிகரித்தபடியே இருக்கிறது... அதாவது சில பேரின் சொத்து குவிவது அதிகரித்துக்கொண்டும், பெரும்பான்மையானவர்கள் அனுபவிக்கும் சிறிய அளவிலான சொத்துக்கள் குறைந்து கொண்டே வருவதாகவும் சுட்டிக்காட்டுகிறது.

அதாவது இந்த அறிக்கை மூலம் இந்தியாவில் பணக்காரன் மேலும் பணக்காரனாவதும் ஏழை மேலும் பரம ஏழையாக மாறுவதும் நிகழ்ந்திருக்கிறது...’ என்று சொல்லும் பிரபாகர், பாஜகவின் தொடர்ச்சியான முகங்களையும் தோலுரித்துக் காட்டுகிறார்.‘இந்தியாவில் மதவாதத்துக்கான எல்லா காரணங்களும் இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின்போது இருந்தது. அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்கும் பிணங்கள் குவிந்தபோது அந்த மதவாதத்துக்கு எல்லா அடித்தளமும் இருந்தது.

ஆனாலும் இந்தியாவில் மதவாதம் தலைதூக்கவில்லை. காரணம். மகாத்மா காந்தி - நேரு போன்ற மகத்தான் தலைவர்கள் அந்த நேரத்தில் இருந்தது. மோடி கூட 2014இல் முதல் முறை பிரதமராக போட்டியிட்டபோது இந்துக்களும் முஸ்லிம்களுமாக இணைந்து வறுமை, ஊழல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளைக் களையவேண்டும் என்றுதான் வாக்கு கேட்டார்.

முதல் தேர்தலில் பொருளாதார வளர்ச்சியையே குறியாகக் கொண்டது பாஜக. ஆனால், பொருளாதாரத் துறைகளில் பெரிய சரிவு ஏற்பட்டபோது அதை மறைக்க இந்துத்துவா கொள்கையைத் தீவிரமாகப் பிரசாரம் செய்யத் தொடங்கினார். நம் ஒவ்வொருவருக்குள்ளும் சாதி, மத, பாலின வெறுப்புகள் ஒளிந்திருக்கின்றன. இந்தக் குறைகளைத் தூண்டி, வெறுப்பை
விசிறிவிட்டு அதை வாக்குகளாக அறுவடை செய்யத் தொடங்கினார். இதன் வழியாகத்தான் பொருளாதார வீழ்ச்சிகள் மறைக்கப்பட்டன.

ஆரம்பத்தில் வாஜ்பாய் காலத்தில் சில மாநில கட்சிகளும் பாஜகவுடன் இணைந்திருந்ததால் அக்கட்சியின் இந்துத்துவா அஜெண்டாவைப் புரிந்து கொள்ளமுடியாமல் போய்விட்டது. இது இன்றைக்கும்கூட எதிர்க்கட்சிகளின் தோல்வியாக இருக்கிறது...’ என்று சொல்லும் பிரபாகர், மோடியின் அரசியல் குறித்தும் இந்தப் பேட்டியில் வரலாற்று ரீதியாக விவரித்திருக்கிறார்.

‘ஆரம்பக் காலங்களில் பாஜக பல முறை தடைசெய்யப்பட்டிருக்கிறது. அதிலிருந்து மீள பல பிரயத்தனங்களை பாஜக செய்தது. உதாரணமாக, மதச்சார்பின்மை குறித்து ஆரம்பத்தில் பாஜகவும் பேசியது. தாங்கள்தான் உண்மையான மதச்சார்பின்மைவாதிகள்... காங்கிரஸ் ஒரு போலி மதச்சார்பின்மைவாதக் கட்சி... என்றுதான் பேசி வந்தது.

அதேபோல ஆரம்பத்தில் காந்திய சோஷலிசம்தான் தங்கள் பொருளாதாரக் கொள்கை என்று கூட சொன்னது. 1990களில் காங்கிரசின் பிரதமர் மன்மோகன்சிங் பொருளாதார தாராளவாதத்தை கொண்டுவந்தபோது அதை கடுமையாக எதிர்த்து பாஜக சுதேசியம் பேசியது. அப்படிப்பட்ட கட்சி, மத்தியில் ஆட்சியில் அமர்ந்ததும் என்ன செய்தது..? உள்ளூர் முதலாளிகளை ஊக்குவித்து அவர்கள் சொத்து குவிக்கத்தான் மோடியின் பொருளாதாரக் கொள்கைகள் பயன்பட்டன...’ என்று சொல்லும் பிரபாகர், பாஜகவின் எதிர்காலம் குறித்தும் இதில் பேசியிருக்கிறார்.

‘நமது பொருளாதாரம் கோவிட்டுக்கு முன்பே சரிய ஆரம்பித்து விட்டது. கோவிட் காலத்தில் மேலும் சரிந்தது. ஆனால், இன்று ஏற்படும் ஒரு சிறிய முன்னேற்றத்தை பூதாகரமாக ஊதி நாடு வளர்ச்சியில் செல்வதாகச் சொல்கிறது. உண்மையில் கோவிட்டுக்கு முந்தைய வளர்ச்சியைக்கூட இன்றைய வளர்ச்சி தொட்டுவிடவில்லை.

பொருளாதாரக் குறியீடுகள் அதைத்தான் உணர்த்துகிறது.உண்மையைச் சொல்வதென்றால் அன்று முதல் இன்று வரை பாஜகவில் ஒரு பெரிய பொருளாதார மேதைகூட இல்லை. மேதையை விடுங்கள்.

பொருளாதார சிந்தனைகூட அவர்களில் ஒருவரிடமும் இல்லை...’ என்று சொல்லும் பிரபாகரிடம் பேட்டி கண்ட கரன் தாப்பர் ஒரு கேள்வியைக் கேட்டார். அதாவது அருண் ஜெட்லி, பிறகு நிர்மலா சீதாராமன் போன்றவர்கள்கூட பொருளாதார நிபுணர்கள் இல்லையா...

இதற்கு பிரபாகர் சொன்ன பதில்... ‘நான் தனிமனிதர்களை இதற்காக விமர்சிக்கத் தயாரில்லை. மொத்த மோடி ராஜ்யமே அப்படித்தான் இருக்கிறது...’ என்று சொல்லும் பிரபாகர், 2024ல் மோடி ஆட்சிக்கு வந்தால் அதுதான் இந்தியா எனும் பாரம்பரியமான கருத்துக்கு பெரிய பேரழிவாக இருக்கும் என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

டி.ரஞ்சித்