தமிழின் முதல் சூப்பர்நேச்சுரல் படம் இதுதான்னு நினைக்கறேன்!
ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ படங்கள் சகஜம். நம்மூரில் அப்படியில்லை. ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வெளியாகவுள்ளது ஹிப்ஹாப் ஆதியின் ‘வீரன்’. இதன் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவண். ‘மரகத நாணயம்’ ஹிட் கொடுத்தவர். டிரைலர் வெளியான ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்திருக்கிறான் ‘வீரன்’. ரிலீஸ் பரபரப்புக்கு நடுவே நம்மிடம் பேசினார் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவண்.
இரண்டாவது படம் செய்வதற்கு ஏன் இவ்வளவு காலதாமதம்?
‘மரகத நாணயம்’ வெளியான கொஞ்ச நாளிலேயே இரண்டாவது படம் பண்ணுவதற்கு ரெடியாயிட்டேன். சில காரணங்களால் தாமதத்தை தவிர்க்க முடியல. இதற்கிடையே கோவிட் வந்ததால் மேலும் தாமதமானது. சத்யஜோதி பிலிம்ஸுக்கு ஒரு த்ரில்லர் கதையை சொல்லியிருந்தேன்.
அந்த சமயத்தில் ஆதி ப்ரோவுடன் டிராவல் பண்ணும் வாய்ப்பு கிடைச்சது. அப்போது அவர் ‘அன்பறிவு’ முடிச்சிருந்தார். தயாரிப்பாளர் அர்ஜுன் சார் ஆதியை வெச்சு போவோமானு ஆதியிடம் அனுப்பி வெச்சார். ஆதி ப்ரோவிடம் இந்த கதையை மியூசிக்காக சொல்லியிருந்தேன். கடைசியாக த்ரில்லர் கதைக்கு பதிலாக ‘வீரன்’ முடிவானது. ‘வீரன்’... தமிழில் வெளிவரும் முதல் சூப்பர் ஹீரோ கதை என்கிறார்களே?
எனக்கு சரியா தெரியல. தமிழில் சூப்பர்நேச்சுரல் பவர் உள்ள ஹீரோ கதை இதுவரை வந்ததில்லை என்றுதான் நினைக்கிறேன். ஹீரோ வெளிநாட்டிலிருந்து வருகிறார். அவருடைய கிராமம் கொஞ்சம் வித்தியாசமானது. சொல்றதை புரிஞ்சுக்காம எதையும் விளையாட்டா எடுத்துக்கொள்ளும் கிராமம்.‘முண்டாசுப்பட்டி’ கிராமம் மாதிரி வேற டைப்ல இருக்கிற கிராமம்னு சொல்லலாம். அந்த மாதிரி இருக்கிற கிராமத்துல சில பிரச்னைகள் வருகிறது. அதை ஹீரோ தன்னுடைய பவர் மூலம் எப்படி ஹேண்டில் பண்ணுகிறார் என்பதுதான் கதை.
போஸ்டர் டிசைன்ல ஹீரோ ஹிப்ஹாப் ஆதி முகத்துல மின்சாரம் பாயுதே?
படத்துல ஹிப்ஹாப் ஆதியோட கேரக்டர் பேர் குமரன். ஆரம்பத்துல ஆதியுடன் எப்படி வேலை செய்யப்போகிறோம் என்ற பயம் இருந்துச்சு. ஏனெனில், அவர் இரண்டு படங்களை இயக்கிய ஹீரோ. ஹீரோவை வெச்சு படம் பண்றதுக்கும் இயக்குநர் கம் ஹீரோவை வெச்சு படம் பண்றதுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது.
டைரக்டர் கம் ஹீரோ என்று வரும்போது அவர்களுக்கென்று சில தாட்ஸ் இருக்கும். ஆனா, ஆதி எந்த இடத்திலும் தன்னை இயக்குநரா வெளிப்படுத்தல.அதுமட்டுமல்ல, எங்க இரண்டு பேருக்குமிடையே மிகச் சரியான புரிதல் இருந்தது. நான் யோசிக்கிற விஷயத்தை அவரும் யோசிச்சிருப்பார். அவர் யோசிக்கிற விஷயத்தை நானும் யோசிச்சு இருப்பேன். ‘மரகத நாணயம்’ அவருக்கு பிடிச்ச படம்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பார். அந்தவகையில என்னுடைய காமெடி டேஸ்ட், திரைக்கதை அமைக்கும் விதம், கதைக்களம் எல்லாம் அவருக்கு பிடிக்கும் என்பதால் முழுமையா தன்னை ஒப்படைச்சுட்டார். எந்த இடத்திலும் அவரை ஹேண்டில் பண்ணுவது எனக்கு பிரச்னையா தெரியல.அதனால்தான் ஷெட்யூல்படி 57 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க முடிஞ்சது. இவ்வளவுக்கும் படத்துல சண்டைக்காட்சிகள், பாடல் என நிறைய போர்ஷன்கள் இருந்துச்சு. ஹீரோவுடைய ஒத்துழைப்பு இல்லைன்னா இவ்வளவு வேலைகளையும் சரியாக செய்திருக்க முடியாது.
குமரன் கேரக்டரை பொறுத்தவரை ஆதி ப்ரோவுக்கே கொஞ்சம் புதுசு. இந்த மாதிரி கேரக்டரை அவர் பண்ணியதில்லை. சண்டைக்காட்சிகள் பண்ணியிருந்தாலும் இதுல வர்ற மாதிரி பெரியளவில் சண்டை பண்ணியதில்லை. இதுல முழுமையான ஆக்ஷன் ஹீரோவா தன்னை வெளிப்படுத்தியிருப்பார்.டூப் இல்லாம பண்ணினாதான் சண்டைக் காட்சிகள் சிறப்பா வரும். அதை ஆர்வமா பண்ணினார். டிரைலர் பார்க்கும்போதே அது தெரிஞ்சிருக்கும். சண்டைக்காட்சிகள் நேர்த்தியாக வந்ததற்கு இன்னொரு காரணம் அதற்காக முறைப்படி அவர் பயிற்சி எடுத்துக்கிட்டதுதான்.
குதிரை ஓட்டுவது மாதிரியும் காட்சி இருக்கு. வெறுமனே குதிரை ஓட்டுவது மாதிரி இல்லாம, குதிரைக்கும் அவருக்குமான எனோஷனல் பாண்டிங் இருக்கணும். அதுக்காக தனியா கோயமுத்தூரில் உள்ள குதிரைப் பயிற்சி மையத்துல முறைப்படி பயிற்சி எடுத்துக்கொண்டார். இன்னும் படத்துல பல சுவாரஸ்யமான அம்சங்கள் நிறைய பண்ணியிருக்கிறார். ஆக்டிங்கைப் பொறுத்தவரை வழக்கமான துறு துறு எனர்ஜி இதுல இருக்காது. கதைக்கு என்ன தேவையோ அதுமாதிரிதான் லுக், ஆக்டிங் எல்லாமே இருக்கும்.
ஹீரோயின் தெரிஞ்ச முகம் மாதிரி தெரியலையே..?
ஹீரோயினுக்காக பல ஆப்ஷன் வெச்சிருந்தோம். கதையைப் பொறுத்தவரை ஹீரோயின் இமேஜ் இருக்கிறவங்க தேவைப்படல. பொள்ளாச்சி, திருப்பூர் மாதிரியான ஊரில் வசிக்கும் ஒரு பெண் மாதிரி இருந்தால் போதும் என்ற அடிப்படையில் ஹீரோயின் தேடினோம். ஹீரோயின் மாதிரியும் இல்லாம அந்நிய முகமாகவும் தெரிஞ்சுடக்கூடாது என்பது மாதிரியும் பல கண்டிஷனுடன் ஹீரோயினை அலசினோம். அதுல கிடைச்சவர்தான் ஆதிரா ராஜ். கேரக்டரை புரிஞ்சு யதார்த்தமா பண்ணினார்.
ஹீரோ ஃப்ரெண்ட் கேரக்டர்ல ‘நக்கலைட்ஸ்’ சசி வர்றார். வில்லனா விநய் வர்றார். அவருடைய தம்பியா ‘டெம்பிள் மங்கீஸ்’ பத்ரி வர்றார். அவர் நடிப்பு பேசப்படும்விதமா இருக்கும். அனுபவ நடிகர் நடிக்க வேண்டிய கேரக்டர் அது. ஏனெனில், நடிப்புக்கான ஸ்கோப் உள்ள பெரிய கதாபாத்திரம் அது. ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக ஆடிஷன் வெச்சோம்.
அதுல அவர்தான் சிறப்பா பண்ணினார்.விநய் சார் தம்பி என்பதால் அவருக்கு இணையா ஸ்கிரீன் ஸ்பேஸ் இருக்கும். படம் வெளியானதும் அவர் கேரக்டர் பேசப்படும். இவங்களோடு மதுரை மோகன் இருக்கிறார். ஏராளமான படங்களில் துணை வேடத்துல நடிச்சவர். அவரைச் சுற்றியும் எமோஷன் காட்சிகள் இருக்கும். அவரும் இந்தப் படத்துக்குப் பிறகு பேசப்படுவார். ‘மரகத நாணயம்’ படத்துல கதைக்கு தேவையில்லாத கேரக்டர் இருக்காது. அதுமாதிரி இதுல ஒவ்வொரு கதாபாத்திரத்திரத்துக்கும் முக்கியத்துவமும், முழுமையும் இருக்கும்.பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கே..?வழக்கமா பண்ற ஸ்டைலில் இருந்து விலகி பண்ணியிருந்தார் ஆதி. கதைக்கு கொங்கு மண்டலம் சார்ந்த இசை தேவைப்பட்டது. வீரன் என்பது நாட்டார் தெய்வம். அதையொட்டி இசையை நேட்டிவிட்டியுடன் எடுத்து வரணும்னு வேலை செய்தோம்.
தோள் வாத்தியக் கருவி இசையைப் பொறுத்தவரை சென்னைக்கும் கொங்கு மண்டலத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அதனால் அங்கிருக்கும் இசைக்குழுவை வரவழைச்சு ரிக்கார்டிங் பண்ணினோம். நாட்டுப்புறப் பாடலும் இருக்கு. சூப்பர் ஹீரோவுக்கான வெஸ்ட்ர்ன் மியூசிக்கும் இருக்கும்.பின்னணி இசையும் இன்டர்நேஷனலாகவும் இல்லாம சிம்பிளாகவும் இல்லாம நம்ம ரசனைக்கு ஏத்த மாதிரி இருக்கும். ஆதி பண்ணிய ஒர்க்ல இது சிறப்பா இருக்கும். இரண்டு வருஷமா டிராவல் பண்ணுவதாலும் கதை அங்குலம் அங்குலமா தெரியும் என்பதாலும் ரசிச்சு பண்ணியிருக்கிறார்.
ஒளிப்பதிவு தீபக் செய்துள்ளார். மலையாளத்துல சில படங்கள் பண்ணியவர். இந்தப் படத்தை திட்டமிட்டபடி முடிக்க அவரும் ஒரு காரணம். ஹீரோ, மற்ற ஆர்ட்டிஸ்ட்டுகள் எப்படி ஒத்துழைப்பு கொடுத்தார்களோ அதுமாதிரி டெக்னீஷியன்களும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். தீபக் ஸ்பீடா வேலை செய்வார். பாந்தம் ஷாட்ஸ் நிறைய இருக்கு. இரவுக் காட்சிகள் அதிகம் என்பதால் அதிக லைட் வெச்சு எடுத்தோம்.
ஸ்பீடாகவும் எடுக்கணும் குவாலிட்டியாகவும் எடுக்கணும் என்ற முனைப்புல இருந்ததால இரண்டையும் பேலன்ஸ் பண்ணி எடுத்தார்.
எடிட்டர் பிரசன்னாவுடன் இது எனக்கு இரண்டாவது படம். அவரும் ஆரம்பத்துல இருந்து டிராவல் பண்றதால எங்க கட்ஸ் தரணும்னு தெரிஞ்சு வெச்சுருந்தார்.
விஷுவல் கிராஃபிக்ஸ் பேசப்படுமளவுக்கு இருக்கும். அதை மோனிஷ் சிறப்பா செய்திருக்கார். மகேஷ் மேத்யூ சண்டை பண்ணியிருக்கிறார். சில்வா மாஸ்டர் அசிஸ்டெண்ட். சமீபத்துல வந்த ‘கஸ்டடி’க்கு இவர்தான் மாஸ்டர். யூனிக் ஸ்டைலில் அப்ரோச் பண்ணியிருக்கிறார்.
சத்யஜோதியில் படம் பண்ணுவதை எப்படி பார்க்கிறீர்கள்?
முன்னணி ஹீரோக்களை வைத்து படம் பண்ணி வரும் நிறுவனம். அவர்களுக்கு படம் பண்ணுவது ரொம்ப சந்தோஷமா இருக்கு. தயாரிப்பாளர் அர்ஜுன் சார் கமிட்மென்ட்டுக்காக இல்லாம நட்பு ரீதியாக பழகக் கூடியவர். படம் ஆரம்பிச்சதும் தியாகராஜன் சார் வாழ்த்து தெரிவிசார்.
மலையாளத்துல வெளியான ‘மின்னல் முரளி’யுடன் ‘வீரன்’ படத்தை இணைத்து பேச்சு அடி படுகிறதே..?
எந்தப் படத்தோட இன்ஸ்பிரேஷனும் இதுல இருக்காது. நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்துல ஒரு கோயிலுக்கு நிகழ்ந்த நிஜ சம்பவம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதையும் ஹீரோவுடைய கேரக்டரையும் கனெக்ட் பண்ணும்போது புது களம் கிடைச்சது. அதுதான் ‘வீரன்’.
எஸ்.ராஜா
|