செப்பு மொழி ஐந்துடையாள்!
கீர்த்தி ஷெட்டி... கன்னத்தில் குழி விழ சிரிக்கும் அழகி! அவருடைய எளிமை, ஒரு தோழியிடம் பேசுவதுபோன்ற சுதந்திரத்தைக் கொடுக்கும். பிறந்தது மும்பை என்றாலும் வளர்ந்தது தென்னிந்தியா என்பதால் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட ஐந்து மொழிகளில் சரளமாகப் பேசுகிறார்.
தெலுங்கில் இவருடைய அறிமுகப் படமான ‘உப்பண்ணா’ பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்பதால் அங்கு கீர்த்தியின் புகழ் அதிகம். லிங்குசாமியின் ‘வாரியர்’ படத்தின் மூலம் ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இப்போது வெங்கட்பிரபுவின் ‘கஸ்டடி’ மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். எந்தவொரு கேள்விக்கும் உடனடியாக பதிலளிக்கிறார். மீண்டும் தமிழில்... எப்படி இருந்தது ‘கஸ்டடி’ அனுபவம்?
‘கஸ்டடி’ வாய்ப்பு என்னிடம் வந்தபோது இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் என்ன காரணத்துக்காக என்னை செலக்ட் பண்ணினீர்கள் என்று கேட்டேன். ஏனெனில், சமீபத்தில்தான் நாக சைதன்யாவுடன் நடிச்ச ஒரு படம் வெளியானது. மீண்டும் ஏன் அதே காம்பினேஷன் என்ற கேள்வியுடன் சந்திப்பு நடந்துச்சு.சினிமாவில் அவ்வளவு சீக்கிரத்தில் ரிப்பீட் பண்ணமாட்டார்கள். ‘கஸ்டடி’யை நான் செலக்ட் பண்ண காரணம் எனக்கான முக்கியத்துவம் இருந்துச்சு. வழக்கமா ஆக்ஷன் படத்தில் ஹீரோயினுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகத்தான் இருக்கும். ஆனா, ‘கஸ்டடி’ படத்தில் ஆரம்பக் காட்சி முதல் க்ளைமாக்ஸ் காட்சி வரை முக்கியத்துவம் இருந்ததை படம் பார்க்கும்போது தெரிந்திருக்கும்.
வெங்கட் பிரபு சார் கதை சொல்லும்போது ரொம்ப கூலா சொன்னார். ஆனா, எனக்கு ஸ்டோரி லைன் கேட்டதும் ஆர்வத்தை தூண்டுச்சு. வெங்கட்பிரபு சார் படங்கள் எனக்கு பிடிக்கும். அவருடைய படங்களிலிருந்து இந்தப் படம் வித்தியாசமா இருந்துச்சு. செட்ல சார் எப்போதும் கூலா இருப்பார். ஆர்ட்டிஸ்ட்டுகளை என்கரேஜ் பண்ணுவதில் அவருக்கு நிகர் அவர்தான்.
என்ன சொல்கிறார் நாக சைதன்யா?
நாக சைதன்யாவுடன் நான் நடிச்ச இரண்டாவது படம் இது. அவர் என்னுடைய கோ-ஆர்ட்டிஸ்ட் மட்டுமல்ல. பெஸ்ட் ஃப்ரெண்ட். பழகுவதற்கு இனிமையானவர். அவர் முகத்துல எப்பவும் புன்னகையைப் பார்க்கலாம். அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும்.அவருடன் வேலை செய்தது அருமையான அனுபவம். அவருக்கும் எனக்குமான புரிதல் சரியா இருந்ததால் கேரக்டரை எவ்வளவு இம்ப்ரூவ் பண்ணி நடிக்க முடியுமோ அப்படி நடிச்சோம். ஒரு வகையில அவர் என்னுடைய இன்ஸ்பிரேஷன்னு சொல்லலாம்.
நாக சைதன்யாவின் இன்னொரு குணம் அவருக்கு கோபமே வராது. அவருடன் நடிச்ச முதல் படத்திலேயே ஆர்வத்தை தூண்டுபவரா இருந்தார். சினிமாவுக்கு வரும்போது மென்மையா இருக்கக் கூடாது, கொஞ்சம் கடினமா மூஞ்சியை வெச்சுக்கணும்னு சிலர் சொன்னாங்க. அவர் அப்படி அல்ல. மென்மையானவர். துளியும் கோபம் வராது. அது எனக்கு இன்ஸ்பிரேஷனா இருந்துச்சு. பாலா இயக்கத்தில் நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு?
தமிழில் நான் கமிட்டான நேரடி படம் ‘வணங்கான்’. பாலா சாருடன் வேலை செய்தது என்னுடைய சினிமா கரியரில் சிறந்த அனுபவம்னு சொல்லுவேன். சூர்யா சாருடனும் அத்தகைய அனுபவம் இருந்துச்சு. அனுபவம் வாய்ந்தவர்களுடன் வேலை செய்யும்போது என்னைப் போன்ற வளர்ந்து வரும் ஆர்ட்டிஸ்ட்டுகள் நிறைய கற்றுக்கொள்ளலாம். இருபது நாட்கள் வேலை செய்திருப்பேன். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் திருப்திகரமா இருந்துச்சு. பாலா சார் ஒரு ஷாட்டை அவ்வளவு சீக்கிரத்தில் ஓகே பண்ணமாட்டார்னு எல்லாருக்கும் தெரியும். அந்தளவுக்கு நேர்த்தியாக காட்சிகளை எடுக்கக் கூடியவர்.
படைப்பு ரீதியாக எழுந்த சில முரண்களால் அந்தப் படம் டிராப்பாகிவிட்டது. மீண்டும் பாலா சார் அந்தப் படத்தை சில மாற்றங்களுடன் எடுப்பதாகச் சொல்லி கால்ஷீட் கேட்டார்கள். மிகப் பெரிய சோகம் என்னவென்றால் மீண்டும் பாலா சாருடன் சேர்ந்து வேலை செய்ய முடியாதளவுக்கு என்னுடைய கால்ஷீட் ஒத்துப்போகவில்லை. தமிழில் வாய்ப்புகள் வருகிறதா?
ரொம்ப ஆர்வமா இருக்கிறேன். எனக்கு தமிழ் பேசத் தெரியும். தமிழ் மட்டுமல்ல, எல்லா மொழி படங்களிலும் நடிக்க ஆர்வமா இருக்கிறேன். இயக்குநர்கள் கதை சொல்லும்போதே அது என்னுடைய மனதைத் தொட்டால் அந்தப் படத்தை மொழியைக் காரணம் காட்டி நடிக்காமல் இருக்கமாட்டேன்.
விஷ் லிஸ்ட்டில் இருக்கும் நடிகர்கள் யார்?
எல்லா நடிகர்களுடனும் நடிக்க ஆர்வமா இருக்கிறேன். அப்போதுதான் பரந்த அனுபவம் கிடைக்கும்.
போட்டியை எப்படி பார்க்கிறீர்கள்?
யாரையும் எனக்கு போட்டியாக பார்க்கமாட்டேன். எல்லாருக்கும் இங்கு ஸ்பேஸ் இருக்கிறது.
நடிக்க விரும்பும் ரோல்?
பன்முக நடிகையாக என்னை வெளிப்படுத்த விரும்புகிறேன். எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எவ்வளவு வித்தியாசப்படுத்தி காண்பிக்க முடியுமோ அப்படிதான் படங்களை தேர்வு செய்கிறேன். ரசிகர்கள் என்னுடைய கேரக்டரை திரையில் பார்க்கும்போது நான் கேரக்டருக்கு நியாயம் செய்திருப்பதாக உணர்வதோடு, நான் படங்களை சரியாக தேர்வு செய்கிறேன் என்ற எண்ணம் வரவேண்டும். சமீபத்தில் சில கதைகள் எனக்கு பிடித்திருந்தாலும் அது என் வயதுக்கு மீறிய வேடங்களாக இருந்ததால் தவிர்த்துவிட்டேன்.
கனவு வேடம் எதாவது இருக்கிறதா?
எனக்கு தேர்வு செய்யும் வாய்ப்பு இருந்தால் வாள் ஏந்திய வீர மங்கையாக நடிப்பேன்.
தெலுங்கில் ஹிட்டான ‘உப்பண்ணா’ மாதிரி அழுத்தமான வேடங்கள் தொடர்ந்து உங்களைத் தேடி வருகிறதா?
ஒரு நடிகையாக எல்லா வகை வேடங்களிலும் நடிக்கவேண்டும். என்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தும் அதே வேளையில் ஒரு நடிகையாக ஆடியன்ஸ் ரசனைக்கு ஏற்ற மாதிரியும் நடிக்கணும்.
‘உப்பண்ணா’ மூலம் கிடைத்த நற்பெயரை பேலன்ஸ் பண்ற மாதிரிதான் படங்களை தேர்வு செய்கிறேன். சமீபத்தில் வந்த படங்களும் சரி, வரவிருக்கும் படங்களும் சரி எல்லாமே சிறந்த கமர்ஷியல் படங்கள்.
கேரக்டருக்காக ஹோம் ஒர்க் செய்யும் பழக்கம் உண்டா?
கதை கேட்டு முடித்தபிறகு, என்னுடைய கேரக்டரில் இருக்கும் அடையாளங்களை நோட்ஸ் எடுப்பேன். அதில் எதாவது குழப்பம் இருந்தால் இயக்குநரிடம் விவாதிப்பேன். எனக்கு முழு திருப்தி கிடைத்தபிறகே படப்பிடிப்புக்கு கிளம்புகிறேன். அதில் சில சமயம் தவறு நடக்கலாம். அதை படிப்பினையாக எடுத்துக்கொள்கிறேன்.
உங்கள் சினிமா பயணம் இந்தியில்தான் ஆரம்பமானது. மீண்டும் பாலிவுட்டுக்கு யு-டர்ன் அடிக்கும் எண்ணம் இருக்கிறதா?
சில பாலிவுட் வாய்ப்புகள் வந்தது. ஆனால், இப்போது நடித்து வரும் படங்களில் முழு திருப்தி அடைகிறேன். தென்னிந்திய சினிமாவில் என்மீது அபரிமிதமான அன்பு காட்டுகிறார்கள். அந்த வகையில் என்னுடைய கவனம் தென்னிந்தியப் படங்களில்தான் இருக்கும்.
எதிர்கால லட்சியம்?
தொண்டு நிறுவனம் ஆரம்பித்து மக்கள் சேவை செய்ய வேண்டும். என் வாழ்நாளில் என்றாவது ஒரு நாள் சேவை நிறுவனம் ஆரம்பிப்பேன்.
உங்கள் ரோல்மாடல் யார்?
எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து என்னுடைய அம்மாதான் என்னுடைய மிகப் பெரிய ரோல் மாடல். அவர் எனக்கு அம்மா மட்டுமல்ல, சிறந்த தோழி. கடின உழைப்பாளி. இன்று நான் உங்கள் முன் ஒரு பிரபலமாக நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் அம்மா.
சின்ன வயதிலேயே நடிக்க வந்துட்டீங்க. படிப்பு அவ்வளவுதானா?
அது எப்படி படிப்பை விட்டு விட முடியும்..? இப்போது சைக்காலஜி படிக்கிறேன். சைக்காலஜி என்று சொல்லும்போது அடுத்தவங்க மனசுல இருக்கிறத கண்டுபிடிக்க என்று நெனைக்க வேண்டாம். அது படிப்பு மூலம் கிடைக்காது. நான் ஏன் படிக்கிறேன் என்றால், ஒரு கதை சொல்லும்போது அந்த கதாபாத்திரமாக எப்படி மாற முடியும், எப்படி கேரக்டரை டெவலப் செய்யலாம் என்பதற்காகத்தான் படிக்கிறேன்.
எஸ்.ராஜா
|