சிறுகதை - அன்பென்பது...
‘‘அக்கா... நம்ம வீட்ல நடக்கறதெல்லாம் தெரியுமா..?!’’ என்றான் தம்பி.அந்தக் குரலைக் கேட்கையில் ஒரு நிமிடம் பாவமாக இருந்தது.அரசனிலிருந்து ஆண்டி வரை, ராமனிலிருந்து ராவணன் வரை இதை அனுபவிக்காத ஆண்கள் மிகக் குறைவாகத்தான் இருப்பார்கள்; இல்லையென்றால் இருக்கவே மாட்டார்கள்.
கருத்து வேறுபாடு அல்லது அதன் மறுபெயரான மாமியார் - மருமகள் சண்டையின்போது யார் பக்கம் பேசுவது என்பதுதான் அது.அதென்னவோ என் அம்மா மங்களமும், தம்பி மனைவி சுதாவும் ‘‘யார் நல்லவர்கள்..?’’ என்று ஒரு உலகளாவிய போட்டி வைத்தால் யாருக்கு முதல் பரிசு தருவது என்று நடுவர்களே திணறுமளவிற்கு நல்லவர்கள். ஆனால், அவர்கள் ஒருவருக்குள் ஒருவர் எப்போதும் ஒத்துப் போவதில்லை. மாமியார் மெச்சிய மருமகளோ, மருமகள் மெச்சிய மாமியாரோ இதுவரை பிறக்கவில்லை போலும்.
இத்தனைக்கும் தம்பிக்கு திருமணமான புதிதில், நான் மகளா... இல்லை சுதா மகளா... என்று சந்தேகமே வந்துவிடும் அளவிற்கு ‘‘சுதாம்மா... இங்க வாடா...’’ என்று அம்மா குழைவதும், ‘‘என்ன அத்தே...’’ என்று கூப்பிட்டால், ‘‘எனக்கு நீ வேற... உங்க அண்ணி வேற இல்ல... அம்மான்னே கூப்பிடு...’’ என்று கொஞ்சுவதுமாக எல்லாமே பிறர் கண் படும் போலதான் நடந்து கொண்டிருந்தது.
பிறர் கண்தான் பட்டு விட்டதோ..? அல்லது விதியின் ஊழிக்கண்தான் பட்டதோ..?! ஒரு வருடத்தில் தம்பியின் பிஸினஸ் படுத்துவிட, வீடு, வாசல் எல்லாம் வங்கிக்குள் சென்று படுத்து விட்டது. அப்பாவின் பென்ஷன் கை கொடுத்தாலும், கடனில் மூச்சுத் திணற வேறு வழியில்லாமல் அயலகத்திற்கு வேலைக்குச் செல்ல வேண்டியதாகி விட்டது.
கொஞ்சம் கொஞ்சமாக , ‘‘டா...’’ என்ற விழிப்பு குதிரையேற, ‘‘அம்மா...’’ என்ற அழைப்பு கழுதையேறி விட்டது. தம்பி இல்லாதது பிரச்னையா..? இல்லை பணத்தேவை பிரச்னையாகி விட்டதா... என்று தெரியாத புரியாத நிலையில் நித்தம் எதோ சச்சரவு... தர்க்கம்.‘‘உங்க அம்மா பண்றது நியாயங்களா..?’’ என்று சுதாவும், ‘‘இப்படியேதான் என்னப் போட்டு வதைக்கிறா...’’ என்று அம்மாவும், அலைபேசி வழியாக என்னிடம் அளந்து கொண்டேதான் இருப்பார்கள்.
யார் பக்கம் பேசுவது... எப்படி ஆறுதல் சொல்வது... என்று மண்டையைப் பிய்த்துக் கொள்ளாத குறையாகத்தான் இருக்கும். எப்படிப் பேசினாலும் ‘‘உங்களுக்கு அவங்கதான் உசத்தி...’’ என்று சுதாவும், ‘‘உனக்கு உன் தம்பி பொண்டாட்டிதான் பெரிசு. என்ன இருந்தாலும் நாள பின்ன சீர் கொண்டு வரப் போறவ அவதானே...’’ என்று அம்மாவும் சொல்வதால் நான் ‘‘ம்...’’ என்ற வார்த்தையைத் தவிர வேறு வார்த்தைகளைச் சொல்வதில்லை. கேட்பதோடு சரி. இதே வேலையைத்தான் என் அப்பாவும் செய்து கொண்டிருந்தார்.
அவளைப் பற்றிச் சொல்வதற்கு அம்மாவிற்கு சமையலில் ஆரம்பித்து அலங்காரம் வரை பத்துக் குறைகள் இருந்ததென்றால், அம்மாவைப் பற்றிச் சொல்வதற்கு இருபது குறைகள் இருந்தன அவளிடம். ‘நிறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா...’ என்று ஆளாளுக்குத் தனித்தனியே பாடாத குறைதான்.எனக்கே இப்படி என்றால் தம்பிக்கு எப்படி இருக்கும். வேலையைப் பார்ப்பதா... அல்லது இவர்கள் பிரச்னையைத் தீர்ப்பதா..?
‘‘டேய்... நல்லதோ கெட்டதோ சுதாவ உங்கூடக் கூட்டிட்டுப் போயிரு. இப்படியே போனா அவங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ நம்ம மூணு பேருக்கும் பிடிச்சிரும் பைத்தியம்...’’ என்றேன்.
‘‘நா என்னக்கா பண்ணுவேன்... குடும்பம்னு வந்துட்டா டபுள் மடங்காக செலவாகும். ஊருக்கு அனுப்பற பணம் பாதிதான் அனுப்ப முடியும்...’’‘‘எப்படியோ சமாளிக்கலாம் தம்பி. ஆனா, வேற எதாச்சும் விபரீதமா ஆயிருச்சுன்னா கஷ்டம். எதோ பணம் இல்லாட்டியும் பேராவது இருக்குது. அதுவும் கெட்டுப் போச்சுன்னா... யோசன பண்ணு...’’ என்றேன்.
அன்று தம்பியிடம் சொன்னதை அம்மாவிடம் சொன்ன போது, ‘‘ஆமா... இங்க குப்ப கொட்டியாச்சு இனி வெளிநாட்டுல கொட்டலேன்னுதான் கெடக்குதாக்கும்...’’ என்றாள். ‘‘அம்மா... அவ அவங்கூடப் போயிட்டா நீயாவது நிம்மதியாயிருப்ப இல்ல...’’ என்றேன்.‘‘இப்ப நா நிம்மதியாயில்லேன்னு யார்கிட்ட அழுதனாக்கும்..?’’ என்ற அம்மாவிடம் ‘‘அது சரிதாம்மா...’’ என்றேன் பெருமூச்சுடன்.எப்படியோ நான் சொன்னதோ, பிரச்னையின் தீவிரம் புரிந்ததோ, இல்லை கடவுளுக்கே இவர்கள் சண்டை அலுப்பாக இருந்ததோ, தம்பிக்கு வேறு வேலை கிடைத்து சம்பளமும் உயரவே சுதாவைக் கூட்டிக்கொண்டு போவதாக முடிவாகியது.
பாஸ்போர்ட் வாங்கியாகி விட்டது. விசா கிடைத்தால் டிக்கெட் புக் பண்ணி விட வேண்டியதுதான். அங்கே போவதற்கு தேவையான பாத்திரங்கள், பொருட்கள் என்று எல்லாம் கொண்டு போக அனுமதிக்கக் கூடிய அளவிற்கு மூட்டை கட்டியாகி விட்டது.என்னதான் வாய்ச்சண்டை மனச்சண்டை போட்டாலும், மருமகள் போகும்போது கொண்டு போக மிளகாய்ப் பொடியிலிருந்து எல்லாவகைப் பொடி, தொக்கு என்று பார்த்துப் பார்த்து செய்த அம்மாவை மெச்சாமல் இருக்க முடியவில்லை. தனக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு எல்லாம் செய்யும் மாமியார் என்பதாலோ இல்லை ஊருக்குப் போகிறோம் என்பதாலோ சுதா அம்மாவுடன் இணைந்து கொண்டாள்.
டிக்கெட்டும் போட்டாகி விட்டது. அப்போதுதான் அது நடந்தது.ஒருநாள் விடியற்காலை அப்பாவிடமிருந்து அலைபேசியில் அழைப்பு. ‘‘உங்கம்மா காலைல வாசத் தெளிக்க வந்து கீழே வுழுந்து கையை உடச்சிகிட்டா... நீ உடனே பொறப்பட்டு வா. ஆபரேஷன் செய்யணும்ங்கறாங்க...’’வயதான காலத்தில் கையை உடைத்துக்கொண்ட அம்மாவைப் பார்த்துப் பரிதாபப்படுவதா இல்லை இவ்வளவு நாள் கழித்து எல்லாம் கூடி வந்த போது போக முடியாத சுதாவின் நேரத்தைப் பார்த்து விசாரப்படுவதா..?
ஆனால், என்ன காரணமோ, இயல்பான மனிதாபிமானமோ, அம்மாவை அருமையாகப் பார்த்துப் பணிவிடை செய்த சுதாவை ‘‘நல்லாயிரு...’’ என்று வாழ்த்தாமல் இருக்க முடியாது யாராலும்.
மீண்டும் மேய்ச்சலுக்குப் போயிருந்த ‘‘டா...’’வும் ‘‘அம்மா...’’ என்ற அழைப்பும் திரும்பி வீட்டுக்கே வந்து விட்டன.
விடுமுறை கிடைக்காமல் தம்பி, அம்மா விழுந்து மூன்று மாதங்கள் கை ஓரளவு சரியாகும்போதுதான் வந்தான். ‘‘அம்மா ரெடியாயிட்டா. எதாச்சும் ஆளப் போட்டு சமையலையும் மத்த வேலைகளையும் பார்த்துக்கறோம். நீ அவளக் கூட்டிட்டுப் போ...’’ என்ற அப்பா அம்மாவிடம், ‘‘இத்தன நாளு இருந்துட்டா. இந்த ஒரு மாசம் இருக்கறதுல என்ன வந்துரப் போகுது... நானே வந்து கூட்டிட்டுப் போறேன்...’’ என்றபடி கிளம்பி விட்டான். எப்பவும் மனுசங்க கணக்குக்கும் காலத்தோட கணக்குக்குந்தான் ஒத்தே வராதே. அடுத்த மாதம் சுதா குளிக்காமல் நாள் தள்ளிப் போய்விட, சந்தோஷப்படுவதா சங்கடப்படுவதா என்று தெரியாவிட்டாலும் வீட்டின் புதுவரவு எல்லோருக்கும் சந்தோஷம்தான் கொடுத்தது.ஆனால், மறுபடியும் பிரச்னைகள் தலை தூக்க ஆரம்பித்தன. மசக்கையா..? வயிற்றுக்குள் வளரும் செக்யூரிட்டியா..? எது சொன்னாலும் ஒவ்வாத தன்மை வந்து விட்டது சுதாவிடம்.
மறுபடியும் என் அலைபேசி அலைய ஆரம்பித்தது.எப்படியோ அதுவோ... இதுவோ... ஆண்டவனோ... தலைச்சன் நாளில் ‘கொழுக் மொழுக்’கென்று பையன் பிறந்தான். தாய் வீட்டில் மூன்று மாதம் இருந்து விட்டு வந்தாலும்... ஊஹூம்... ஒரு துளி கூட மாற்றம் இல்லாமல் குட்டிப்பையனைக் குளிப்பாட்டுவதிலிருந்து உணவு கொடுத்துத் தூங்க வைக்கும் வரை அதை விட அதிகப்படியாக தர்க்கங்கள் நடக்க ஆரம்பித்தன.
மூன்றாவது தடவையாக மீண்டும் புறப்பட நாள் பார்க்கப்பட்டது. ஒரு மூன்று மாதத்திற்கு சுதாவின் அம்மா கூடச் செல்வதாக முடிவானது. தம்பி வரமுடியாத நிலையில் இவர்கள் மூவரும் செல்வதாக ஏற்பாடு. இந்தத் தடவை நல்லபடியாக சுதா கிளம்பி விட்டால் பிள்ளையாருக்கு பதினொரு தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டேன்.
மீண்டும் வேண்டிய பொருள்களைக் கட்டும் பணி தொடங்கியது. இப்போது கூடுதலாக குட்டித் தம்பிக்கு வேண்டியதும்.‘‘உந் தம்பி பொண்டாட்டி சந்தோஷத்துல துள்ளிக் குதிக்கிறா...’’ சொன்ன அம்மாவிடம், ‘‘எப்படியோ நல்லபடியா இந்தத் தரமாவது போய்ட்டானா சரி...’’ என்றேன். சுதா போவதை விட பேரனைப் பிரிவது அதிக வேதனையைக் கொடுத்தது அம்மா அப்பாவுக்கு. போகும் நாள் நெருங்க நெருங்க புலம்பலும் அதிகமாகவே ஆனது. ‘‘நாமதான் கெடந்து பொலம்பறோம். அவளுக்கு சந்தோஷத்துல ஒரு சுத்து சதையே வந்துரும் போல இருக்கு...’’ என்றாள் அம்மா.அதிகாலை நாலு ஐம்பது விமானத்திற்கு இரண்டு மணிக்கே கிளம்பினோம். எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு கிளம்பிய சுதாவின் கண்களில் ஒருதுளி கண்ணீர் இல்லை. முகம் சந்தோஷத்தையும், வருத்தம் மாதிரி தெரியாத இனம் புரியாத உணர்வையுமே பிரபலித்துக் கொண்டிருந்தது.
அந்நேரத்திற்கு அந்த ஒரு விமானம்தான் புறப்படுவதால் அதிகக் கூட்டம் இல்லாமல் எங்களையும் சேர்த்து இருபது பேருடன் விமானநிலையம் வெறிச்சிட்டது.‘‘போய் சூதானமா இருந்துக்கோ... அங்க சீதோஷணம் எப்படி இருக்குமோ பாத்து பதமா தம்பியப் பாத்துக்கோ. ஓட்டுக்கா பேசாம இருந்துராத.
வீடியோகால்ல பேசுங்க...’’அம்மா நொடிக்கொருதரம் சொன்னதற்கு தலையை ஆட்டிக்கொண்டே இருந்தாள் சுதா. குட்டித் தம்பியை அவள் அம்மா கையில் கொடுத்து விட்டு உள்ளே போகக் கிளம்பினார்கள்.‘‘எதாவது கண்டுக்கறாளா பாரு...’’ என்றாள் என்னிடம் ரகசியமாக அம்மா. டிக்கெட்டை வைத்துக் கொண்டு செல்லும் வழியில் நின்றுகொண்டே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்துகொண்டிருந்த சுதா, திடீரென திரும்பி ஓடி வந்தாள்.‘‘அவ எதுக்கு இப்படி ஓடியாறா...’ என்று குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தோம்.வந்தவள் நேராக என் அம்மாவைக் கட்டிக்கொண்டு ஓவென்று கதற ஆரம்பித்தாள்.
‘‘எதுக்குடா... இப்படி அழுகிற... என்ன நாலு மணிநேரத்துல வந்து நிக்கற ஊருக்குத்தான போற... அழுகாத சந்தோஷமாப் போய்ட்டு வா...’’ என்று தன் கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே தேற்றிக் கொண்டிருந்தாள்.அழுது கொண்டே ‘‘அண்ணி பாத்துக்கங்க...’’ என்று என்னிடமும் திரும்பி விம்மினாள்.விம்மியவளையும், அவள் முதுகைத் தடவித் தேற்றிக் கொண்டிருந்த அம்மாவையும் ஆச்சரியமாக மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.சிறிது நேரத்தில் இருவரையும் பார்க்க முடியாமல் கண்களை மறைத்தொரு படலம். அது என் கண்ணில் வழிந்த நீர்தான்.
- விஜி முருகநாதன்
|