யூடியூபர் இயக்குநராக அறிமுகமாகும் படம்!எக்காலத்திலும் ஓயாத ஒரு பிரச்னை... அது ஒரே பகுதியில் இருக்கும் இரண்டு, மூன்று பள்ளிகளுடைய பசங்க சண்டைதான். எதிர்காலத்திலே நடக்கப்போகிற சாதி-மத சண்டை, அரசியல் சண்டை... சமூகவலைத்தள சண்டை... இப்படி அத்தனை சண்டைகளுக்கும் இதுதான் ஆரம்பப் புள்ளி...’’ வழக்கம் போலவே தனது தெள்ளத் தெளிவான வார்த்தைகளில்
பேசத் தொடங்கினார் ராஜ்மோகன் ஆறுமுகம். ஆர்.ஜே, வி.ஜே, பேச்சாளர், யூடியூபர், சமூக ஆர்வலர் என பல முகங்களுக்கு இடையே இப்போது ‘பாபா பிளாக் ஷீப்’ படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகவிருக்கிறார்.

எங்கே ஆரம்பித்தது இந்த இயக்குநர் ஆர்வம்?

நமக்கு ஆரம்பக் கனவு இதுதான். அதை நோக்கிய பயணத்திலே ஆர்.ஜே, வி.ஜே, யூடியூப்னு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கிட்டே வந்தேன். ஆனால், என்னுடைய பேச்சு, யூடியூப் கான்செப்ட் மாதிரி அறிவுரையாகவோ, இல்ல பிரச்சார சாயலிலோ இந்தப் படம் இருக்காது.

‘பாபா பிளாக் ஷீப்’?

எனக்கு ‘பிளாக் ஷீப்’ ரொம்ப நெருக்கமான பெயர். அங்கேதான் என்னுடைய பயணமும் ஆரம்பிச்சது. ஆங்கிலத்திலே வருகிற குழந்தைகளுக்கான ரைம்ஸ் இது. அடிப்படையிலேயே இந்த ரைம்ஸும் அரசியல் கலந்தது தான். அந்தக் காலத்திலேயே ‘பாபா பிளாக் ஷீப் ஹேவ் யூ எனி வூல்? யெஸ் சார், யெஸ் சார்...’ அப்படின்னு சொன்ன பாடல்.
இந்தப் படமும் இப்போதைய சூழலுக்கு ஏத்த மாதிரி நிறைய சம்பவங்களின் கலவையான படமாக இருக்கும். படம் முழுக்க ஒரு கருப்பு ஆட்டினை தேடிக்கிட்டு இருப்பாங்க. அதனாலேயும் இந்தப் பெயர் பொருத்தமா இருந்துச்சு.

கதைக்களம் என்ன?

‘பன்னீர் புஷ்பங்கள்’ படம் தொடங்கி ‘பசங்க 2’, ஏன்... இந்த சீரியல், சீரீஸ் வரையிலும் கூட இந்த ஸ்கூல் சார்ந்த கதைகள் வந்திடுச்சு. இதனை ‘கமிங் ஆஃப் ஏஜ்’ படமாக்கல் என சொல்வோம்.
அந்த மாதிரியான பள்ளிப் பருவ கதைதான். ரெண்டு பள்ளிகள்... அவர்களுக்கு இடையிலே நடக்கும் சண்டை... இதனூடே நடக்கும் பயணம்தான் கதைக்களம்.
பொதுவாகவே இந்த 2கே குழந்தைகள் முந்தைய தலைமுறையைக் காட்டிலும் ஏதோ ஒரு வகையிலே பிரிந்தே நிற்கறாங்க. பப்ஜிக்கு சண்டை, விஜய் - அஜித்துக்கான சண்டை... இப்படி ஏதோ காரணத்துக்காக சண்டை போட்டுக்கொண்டே இருக்காங்க.

ஏன்... எதனால் இந்த பிரிவு... ஏன் எப்போதுமே ஒரு கொதிநிலை அவர்களிடம் இருக்கு... இப்படி எல்லாவற்றையுமே கேள்விகளாகவும் சம்பவங்களாகவும் இந்தப் படத்திலே பார்க்கலாம்.
கோபத்தை பக்குவமாக வெளிப்படுத்துகிற மனிதர்கள் மிகக் குறைவு. அப்படி அரிதான மனிதர்களில் நீங்களும் ஒருவர்... இந்தப் படம் எப்படி?

இதுவும் என்னுடைய இன்னொரு கோபம்தான். ஆனால், பிரசாரமாகவோ அல்லது அறிவுரையாகவோ இருக்காது. நிறைய பள்ளிக் குழந்தைகள் சார்ந்த காமெடி, சுவாரஸ்யங்கள், கலர்ஃபுல் விஷயங்களை படத்திலே பார்க்கலாம்.

அபிராமி, அம்மு அபிராமி... உடன் உங்க கேங் இருக்கிறார்கள் போலயே..?

‘விருமாண்டி’ அபிராமி மேடமுக்கு ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்ததொரு கேரக்டர். அவங்க வருகிற காட்சி நிச்சயம் கண்கலங்கச் செய்யும். அம்மு அபிராமி, சுப்பு பஞ்சு, மதுரை முத்து, ஓ.ஏ.கே.சுந்தர், வினோதினி வைத்தியநாதன், கே.பி.ஒய். பழனி, போஸ் வெங்கட், சுரேஷ் சக்கரவர்த்தி... இவர்கள் எல்லாம் ஆசிரியர்களாக வராங்க.

குறிப்பாக மதுரை முத்து, சுப்பு பஞ்சு... இவர்கள் எல்லாம் கதையிலே சீரியஸ் காட்சிகளுக்கு மட்டுமில்லாம , காமெடிக்கும் பயன்பட்டிருப்பாங்க. இவர்கள் தவிர எங்களுடைய டீம் விஜே விக்னேஷ், அயாஸ், நரேந்திர பிரசாத், ராம் நிஷாந்த், அதிர்ச்சி அருண், சேட்டை ஷெரிஃப், குட்டி வினோ, ஹர்ஷத், விவேக்... இப்படி பெரிய பட்டாளமே இருக்காங்க.

படத்துக்கு சினிமாட்டோகிராபர் சுதர்சன் ஸ்ரீனிவாசன். ‘துணிவு’ பட எடிட்டர் விஜய் வேலுக்குட்டிதான் இந்தப் படத்துக்கும் எடிட்டர். பப்ளிசிட்டி டிசைனர் கோபி பிரசன்னா. மியூசிக் சந்தோஷ் தயாநிதி. படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிச்சிருக்கார்.

‘பாபா பிளாக் ஷீப்’ ஆடியன்ஸுக்கு என்ன கொடுக்கும்?

என்னுடைய சின்னவயது நாட்களில் நான் பழைய பல்லாவரம், அதாவது ஜமீன் பல்லாவரம்னு சொல்வாங்கல்ல... அங்கேதான் இருந்தேன். அங்கே இருக்கும்போதே எங்க ஸ்கூலுக்கும் அருகே இருந்த ஸ்கூல்களுக்கும் கூட ஆகாது.

எதாவது சண்டை, பிரச்னை இருந்துக்கிட்டே இருக்கும். இந்த ரெண்டு ஸ்கூல்களுக்கான சண்டைகள் இன்னைக்கு இன்னும் அதிகரிச்சிருக்கு. தவிர சண்டைகள் விதவிதமா இருக்கும். ஏன் இவ்வளவு பிரிவினை, ஏன் இந்தக்கால குழந்தைகள் கிட்டே இத்தனை அசால்ட், எதிலேயும் ஒரு பிடித்தம் இல்லாத மனநிலை... இந்தக் கேள்விகளின் மூலமாக உருவானதுதான் இந்த ‘பாபா பிளாக் ஷீப்’.

ரொம்ப முக்கியம்... நம்மைக் காட்டிலும் மாணவர்கள் அறிவாளியாகஇருக்கும் பட்சத்தில் அவர்களை எப்படிக் கையாள்வது என்பது உட்பட நிறைய விஷயங்கள் இருக்கும். நிச்சயம் கருத்து சொல்லி கலங்கடிக்காது, கலர்ஃபுல்லா இக்கால ஸ்கூல் வாழ்வியலைக் கொடுக்க முயற்சி செய்திருக்கோம். ஆடியன்ஸுக்கு நல்ல குடும்பப் படமாகவும், நல்ல பொழுதுபோக்குத் திரைப்படமாகவும் இருக்கும்.

ஷாலினி நியூட்டன்