Must Watch
விருபாக்ஷா
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளிய தெலுங்குப்படம், ‘விருபாக்ஷா’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது. ருத்ரவனம் எனும் கிராமத்தில் 1979ல் படத்தின் கதை ஆரம்பிக்கிறது. அங்கே உள்ள ஒரு வீட்டில் வசிக்கும் தம்பதியினர் மாந்திரீகத்தில் ஈடுபடுவதாக ஊர் மக்கள் சந்தேகப்படுகின்றனர்.
கிராமத்தில் உள்ள குழந்தைகளின் மரணத்துக்கு அந்த தம்பதியினர்தான் காரணம் என்று அவர்களைப் பிடித்து மரத்தில் கட்டி வைக்கின்றனர். அத்துடன் அவர்களது மகன் கண் முன்னாலேயே எரித்து விடுகின்றனர்.
அந்த மகன் அனாதையாகிறான். எரித்துக் கொல்லப்படும்போது அந்தப் பெண் இன்னும் 12 வருடங்களில் கிராமமே அழிந்துவிடும் என்று சாபமிடுகிறாள். 12 வருடங்கள் ஓடுகிறது. கிராமத்தில் கோயில் திருவிழா வருகிறது. மக்கள் எல்லோரும் கோயிலில் கூடியிருக்கும்போது கிராமத்துவாசி ஒருவர் வினோதமான முறையில் கோயிலுக்குள் சென்று மரணமடைகிறார்.
இந்த மரணம் பீதியைக் கிளப்ப, கிராமத்துக்கு லாக் டவுன் விடப்பட, படபடக்கிறது திரைக்கதை. வித்தியாசமான அனுபவத்தைத் தரும் சுவாரஸ்யமான படம் இது. ‘புஷ்பா’ படத்தின் இயக்குனர் சுகுமார்தான் இப்படத்துக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார். படத்தின் இயக்குநர், கார்த்திக் வர்மா தண்டு. நீல வெளிச்சம்
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான மலையாளப் படம், ‘நீல வெளிச்சம்’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது. ஒரு கிராமத்தில் பார்கவி நிலையம் என்ற பாழடைந்த வீடு இருக்கிறது.
பல வருடங்களாக அந்த வீட்டில் யாரும் குடியிருப்பதில்லை. இளம் எழுத்தாளர் ஒருவர் பார்கவி நிலையத்தில் தங்க வருகிறார். அந்த வீட்டுக்குள் நுழையும் அவரைச் சுற்றியிருக்கும் கிராமவாசிகள் ஒரு மாதிரியாக பார்க்கின்றனர். வீட்டைச் சுத்தம் செய்துவிட்டு அருகிலிருக்கும் ஹோட்டலில் சாப்பிடுகிறார். மதிய உணவை வீட்டுக்கு அனுப்பச் சொல்லி ஹோட்டல்காரரிடம் வேண்டுகிறார்.
எழுத்தாளர் பார்கவி நிலையத்தில் தங்கியிருக்கிறார் என்று அறிந்தவுடன் உணவை அனுப்ப முடியாது என்று மறுக்கிறார். அந்த ஊரில் இருக்கும் நண்பர்களைக் காணச் செல்கிறார். பார்கவி நிலையம் என்ற பெயரைக் கேட்டவுடன் நண்பர்கள் ஆடிப்போய்விடுகின்றனர்.
அப்படி என்ன பார்கவி நிலையத்தில் இருக்கிறது என்பதை அறிய படத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள்.
கேரளாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் பஷீர் எழுதிய கதையை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. எழுத்தாளராக அசத்தியிருக்கிறார் டோவினோ தாமஸ். படத்தின் இயக்குநர் ஆஷிக் அபு.
கட்டல்
‘நெட்பிளிக்ஸை’க் கலக்கிக் கொண்டிருக்கும் இந்திப் படம், ‘கட்டல்’. தமிழ் டப்பிங்கிலும் பார்க்கலாம். துடிப்பான சப் இன்ஸ்பெக்டர் மகிமா. சமீபத்தில்தான் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, காவல் துறைக்குப் பெரும் சவாலாக இருந்த ஒரு குற்றவாளியைப் பிடித்தாள். அவளுக்கு கான்ஸ்டபிள் மீது காதல். இந்நிலையில் ஒரு எம்எல்ஏ வீட்டில் இரண்டு பலாக்காய்கள் காணாமல் போகின்றன. அவை அரிய வகை பலாப்பழத்தைச் சேர்ந்தவை.
பழுப்பதற்காக மரத்திலேயே விட்டிருந்தார். அந்தப் பலாக்காயைப் பறித்து ஊறுகாய் போட்டு தனக்கு மேலே இருக்கும் அரசியல்வாதியை வசப்படுத்த நினைத்திருந்தார் அந்த எம்எல்ஏ. திருடுபோன பலாக்காய், பலாப்பழம் ஆவதற்குள் திருடனைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்த கேஸ் மகிமாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. பலாக்காய் திருடனைக் கண்டுபிடிப்பதிலேயே காவல்துறை மும்முரமாக இருக்கிறது.
இளம் பெண் காணாமல் போன வழக்கு உட்பட மற்ற வழக்குகள் எதுவும் பெரிதாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை. மகிமா எப்படி பலாக்காய் திருடனைக் கண்டுபிடிக்கிறாள் என்பதே மீதிக்கதை. சமகால அரசியல் சூழலைப் பகடி செய்கிறது இந்தப் படம். இதன் இயக்குநர் யஷோவர்தன் மிஸ்ரா.
தொகுப்பு: த.சக்திவேல்
|