சென்னையில் பறக்கும் தட்டு!



சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் ஒரு கூட்டம் நடந்தது. இதில், யுஎஃப்ஓ எனப்படும் அடையாளம் காணப்படமுடியாத பறக்கும் பொருள்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அமெரிக்க விமானப்படடையின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி டேவிட் க்ருஷ், முன்னாள் கடற்படைத் தளபதி டேவிட் ஃப்ரேவர், முன்னாள் கடற்படை விமானி ரியான் கிரேவ்ஸ் ஆகிய மூன்று பேரும் இயற்பியல் விதிகளை மீறும் பொருட்களுடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி சாட்சியம் அளித்தனர்.
இதனால், இப்போது உலகம் முழுவதும் யுஎஃப்ஓ, ஏலியன்கள் பற்றிய செய்திகள் ஒளிவேகத்தில் பறந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்காவில் இந்தக் கூட்டம் நடந்த அதேநாளில், சென்னையில் யுஎஃப்ஓ எனப்படும் பறக்கும் தட்டுகளை முட்டுக்காடு பகுதியில் பார்த்திருக்கிறார் காவல்துறை உயர்பயிற்சியகத்தின் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற டிஜிபி பிரதீப் வி பிலிப். ஏதோ ஒரு பொருள் வானில் அதிக ஒளியுடன் பறப்பதைக் கண்டு உடனடியாக தன் செல்போனில் புகைப்படம் எடுத்துப் பார்க்க, அது யுஎஃப்ஓ எனக் கண்டறிந்திருக்கிறார் பிரதீப் வி பிலிப்.

‘‘எப்பவுமே நான் வானத்தைப் பார்த்திட்டே இருப்பேன். அதுல எனக்கு ஓர் ஆர்வம். வழக்கமாக நானும் என் மனைவியும் முட்டுக்காடு கடற்கரைக்குப் போவோம். அப்ப வானத்தைப் பார்த்திட்டு இருந்தப்ப வடக்குப் பக்கமாக தூரத்துல பளீர்னு ஒரு ஒளி வெள்ளைக் கலர்ல ஹை ஓல்டேஜ்ல தெரிஞ்சது. சரி ஒரு போட்டோ எடுப்போம்னு எடுத்துப் பார்த்தேன். ஆனா, அதுல தெளிவாகத் தெரியல. வெறும் ஊதா வானமாக இருந்தது.

பிறகு, ஜூம் பண்ணி பார்த்தப்ப நான்கு யுஎஃப்ஓ தெரிஞ்சது. அதாவது அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்கள். முதல்ல ட்ரோனாக இருக்கும்னு பார்த்தால் அது ட்ரோன் மாதிரி இல்ல. ட்ரோன் அவ்வளவு உயரம் போகாது. விமானமும் இல்ல. அதனால்தான் அது மர்மமான யுஎஃப்ஓனு சந்தேகம் வந்தது. கூகுள்ல தேடினப்ப சபீர் உசேன் என்பவர் இதைப் பற்றி ஆய்வு பண்ணிட்டு இருக்கார்னு கண்டுபிடிச்சேன். இவர் இந்தியன் சொசைட்டி ஃபார் யுஎஃப்ஓ ஸ்டடீஸ்னு ஒரு அமைப்பை சென்னையில் உருவாக்கி யுஎஃப்ஓ பற்றி ஆய்வு பண்ணிட்டு வர்றார்.

ஒரு நண்பர் மூலம் அவரைத் தொடர்பு கொண்டேன். அவரிடம் நான் எடுத்த புகைப்படத்தைக் காட்டினதும் நிச்சயம் இது யுஎஃப்ஓதான்னு சொன்னார். உலகில் இவ்வளவு தெளிவாக, அதுவும் நான்கு யுஎஃப்ஓ பறப்பதை யாரும் படம் பிடிக்கலனும் தெரிவிச்சார். இந்தியாவுல 400 பேர் வரை இந்தமாதிரி யுஎஃப்ஓ பார்த்திருக்காங்க. குறிப்பாக, ஹை சயின்டி ஃபிக் ரிசர்ச் பகுதிகள்னு சொல்லப்படுகிற இடங்கள்லதான் நிறைய பார்த்திருக்காங்க...’’ என்ற பிரதீப் வி பிலிப், நிதானமாகத் தொடர்ந்தார்.

‘‘இதுகுறித்து சபீர் உசேன், அவங்க மனிதரைவிட ஆயிரம் மடங்கு அட்வான்ஸாக இருப்பதாகவும், அவர்களிடம் ஹை ஸ்பீடு மூவ்மென்ட், சைலன்ட் மூவ்மென்ட் எல்லாம் இருக்கும்னும், அதனால திடீர்னு வருவாங்க, திடீர்னு போவாங்கனும் சொன்னார். அவங்க எனர்ஜி வித்தியாசமாக இருக்கு என்பதை என்னாலும் அன்று உணரமுடிஞ்சது. ஏன்னா, அவங்க லைட்டைக் கூட நம்மால் படம் பிடிக்க முடியல. அந்தளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருந்தது.  

இதை நான் ஒரு சந்தேகத்துலதான் ஆரம்பிச்சேன். பிறகு போலீஸ் முறையில் நிறைய கேள்வி கேட்டு பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். இதுபற்றி நிறைய படிக்கவும் செய்தேன்.
நான் பார்த்த அதேநேரத்துல, அமெரிக்க சபையிலும் பொது விசாரணை நடந்தது. அதனால, நம்ம அரசும் ஒரு குழு அமைச்சு இது சம்பந்தமாக ஆய்வு பண்ணணும். எப்படி வருது, எங்கிருந்து வருது, இதனால நமக்கு என்ன பிரயோசனம் இருக்குனு எல்லாம் பார்க்கணும்...’’ என்கிறார் முன்னாள் டிஜிபியான பிரதீப் வி பிலிப்.  

இதுகுறித்து அறிவியல் எழுத்தாளரும், ‘விஞ்ஞான் பிரச்சார்’ நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேசினோம். ‘‘எங்கள மாதிரியான விஞ்ஞானிகளுக்கு இதுல சில கேள்விகள்  இருக்கு. உதாரணத்துக்கு பக்கத்துல இருக்கிற விண்மீன் குடும்பமான ஆல்ஃபா சென்டாரி நட்சத்திரத்தை எடுத்துப்போம். அதைச் சுற்றி ஏதோ ஒரு கோள் இருக்கு. அந்தக் கோள்ல இந்த மாதிரி பறக்கும்தட்டு வைத்திருக்கிற உயிரினம் இருக்குனு வச்சிப்போம். அந்த உயிரினம் ஒளியின் வேகத்தில் புறப்பட்டு வந்தால்கூட பூமிக்கு வர ஆறு ஆண்டுகள் ஆகும்.

ஆனா, ஒளியின் வேகத்தில் புறப்பட்டு வரமுடியாது. உலகில் இப்ப நாம் தயாரித்து வச்சிருக்கிற அதிவேக ராக்கெட்ல உட்கார்ந்து வந்தால்கூட பூமிக்கு வர 7 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். சரி, அவங்க வளர்ச்சியான தொழில்நுட்பம் வச்சிருக்கிறாங்கனே எடுத்துக் கொண்டாலும் குறைந்தபட்சம் 20 முதல் 50 ஆண்டுகள் வரை ஆகும். இப்படி 50 ஆண்டுகள் செலவழிச்சு பூமிக்கு வர்றவங்க ஒரு நிமிடம் விண்ணில் பறந்திட்டுப் போயிடுவாங்களா என்பதுதான் முக்கியமான கேள்வி.

இந்த பிரபஞ்சத்துல உயிரினமே இருக்காதுனோ அதுக்கு அட்வான்ஸ் தொழில்நுட்பம் இருக்கமுடியாதுனோ நான் சொல்ல வரல. இப்படியொரு தொழில்நுட்பத்துடன் வர்றவங்க நிச்சயம் சில மாதங்களோ, சில ஆண்டுகளோ தங்கியிருந்து ஆராய்ச்சி பண்ணிட்டுதான் போவாங்களே ஒழிய சீக்கிரமாக போகமாட்டாங்கனு சொல்றேன். பூமிக்கு அருகில் வந்துட்டு தரை கூட தொடாமல் ஓடிப்போயிடமாட்டாங்க. அதுமாதிரி போறதும் கஷ்டம். ஒரு விண்கலம் பூமியில் இறங்குதுனா, காற்றில் இறங்கும்போது அதுக்கு ஒரு இயக்கவியல் இருக்கு. அந்த இயக்கவியல்படி கீழே வரை வந்திட்டு திரும்பவும் மேல போறது எளிதானதல்ல. அதனால, அப்படியெல்லாம் செய்யமாட்டாங்க.  

பொதுவாக, ஒரு விண்கலம் டிராவல் பண்ணும்போது அதன் வேகத்தை குறைத்து ஒரு கோளை உள்ளே கொண்டு வர பெருமளவு ஆற்றலை செலவழிக்கணும். அதாவது, தரையிறங்க எரி
பொருள் நிறைய செலவழிக்கணும். அதனால, நிறைய எரிபொருள் செலவழிச்சு வந்தால் இப்படி கீழிறங்காமல் 5 செகண்ட், பத்து செகண்ட்ல மறையமாட்டாங்கனு சொல்றேன்...’’ என்கிறவரிடம் இப்படி வானில் தெரியும் அடையாளம் காணப்படாத பொருள்கள் என்னவாக இருக்கும்? என்றோம்.  

‘‘இப்ப ராக்கெட் விடுறாங்க இல்லையா... அதன் கடைசிப் பகுதிகள்,  அதாவது செயற்கைக்கோளை விண்ணில் அனுப்பிய பிறகு மிச்சம் உள்ள எரிபொருள் வெளியேறும். அது பார்ப்பதற்கு இந்தமாதிரி ஒரு தோற்றத்தைக் கொடுக்கும். ஆனாலும், பல இடங்கள்ல யுஎஃப்ஓவை பார்த்ததாகச் சொல்றாங்க. அதனால, யுஎஃப்ஓ என்கிற இந்த அடையாளம் காணமுடியாத பொருள்கள் என்ன என்பதை உறுதிபட சொல்ல ஆராய்ச்சிகள் தேவைதான்...’’ என்கிறார் முதன்மை விஞ்ஞானியான த.வி. வெங்கடேஸ்வரன்.  

பேராச்சி கண்ணன்