அலினா ஷாஜி...மாமா குட்டி... இவானா!



பாலாவின் பட்டறையில் ‘நாச்சியார்’ வழியாகப் பட்டை தீட்டப்பட்டவர் இவானா. ‘லவ்டுடே’ வெற்றியால் இவருக்கு தெலுங்கிலும் டிமாண்ட் அதிகம். தோனி தயாரிப்பில் வெளிவந்த ‘எல்.ஜி.எம்’ படத்துக்கு பரவலான விமர்சனங்கள் வந்த நிலையில் இவானாவிடம் பேசினோம்.

‘எல்.ஜி.எம்’அனுபவம் சொல்லுங்களேன்?

தனிப்பட்ட விதத்திலும் சரி, சினிமா கேரியரிலும் சரி ‘எல்ஜிஎம்’ அனுபவம் எனக்கொரு மைல் கல் என்று சொல்லலாம். நதியா, ஹரீஷ் கல்யாண், யோகிபாபு என அனுபவ நடிகர்களுடன் நடிச்சது நல்ல அனுபவம்.‘லவ்டுடே’ படத்தில் எனக்கும் யோகி பாபு சாருக்கும் காம்பினேஷன் சீன் இல்லை. அந்த குறை இதுல தீர்ந்துடுச்சு. நதியா மேடத்துடன் நடிச்சது கனவு பலித்ததுன்னு சொல்லலாம். அவருடன் எல்லோரும் நடிக்க ஆசைப்படுவார்கள். வளரும் நடிகையான நான் அவரிடமிருந்து கத்துக்கவேண்டிய விஷயங்கள் நிறைய இருந்துச்சு.

ஹரீஷ் கல்யாண் கூல் பெர்சன். அவருடன் வேலை செய்யும்போது கம்போர்ட் இருந்துச்சு. ஒட்டு மொத்தமாக சக நடிகர்களுடன் சேர்ந்து நடிச்சதுல பாசிடிவ் வைப் கிடைச்சது.
கேப்டன் தோனி சார் எப்படி கூலா இருப்பாரோ அப்படிதான் எங்கள் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி கூல் பெர்சன். பாண்டிச்சேரி, கேரளா, கூர்க் என பல இடங்களில் எடுத்த படம் என்பதால் டிராவல் அனுபவமும் நல்லா இருந்துச்சு.

நதியா கொடுத்த டிப்ஸ் என்ன?

நதியா மேடத்திடம் இண்டர்வியூ பண்ணும்போது ‘இவானாவிடம் நீங்கள் கவனிச்ச விஷயம் எது’ என்று கேட்டபோது, ‘சீக்கிரமாக ரியாக்ட் பண்ணுவாங்
க’னு சொல்லியிருந்தாங்க. எனக்கே தெரியாத  விஷயம் அது. படத்துல புலியுடன் நடிக்கிற மாதிரி ஒரு சீன். புலி இல்லாமலேயே புலி இருக்கிற மாதிரி நடிக்கணும். அந்த சீனை சீக்கிரமாக பண்ணியதாக சொன்னார். டைரக்டர் சொல்லும் கமென்ட்டை கேட்டு இல்லாத விஷயத்தை இருக்கிற மாதிரி காட்டி நடிக்க வேண்டிய அந்த காட்சிக்கு நதியா மேடம் நிறைய டிப்ஸ் கொடுத்தார்.

படம் பார்த்துட்டு என்ன சொன்னார் தோனி?

ஆடியோ லாஞ்ச் சமயத்துலதான் தோனி சாரை மீட் பண்ணினேன். ‘படம் நல்லா இருந்துச்சு’னு சொன்னார். ‘நாம் பண்ணும் விஷயம் முதலில் நமக்கு பிடிச்சிருக்கணும். அப்படி இருந்தால்தான் பெஸ்ட் அவுட்புட் தரமுடியும். அப்படி எல்லோரும் கேரக்டரை ரசிச்சு பண்ணியிருக்கீங்க’னு சொன்னார்.

‘கள்வன்’ எந்த நிலையில் உள்ளது?

‘கள்வன்’ படத்தில ஜி.வி.பிரகாஷ் ஹீரோ. வில்லேஜ் படம். டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. ‘காம்ப்ளக்ஸ்’ வித்தியாசமான படம். வெங்கடேஷ் ஹீரோ. தெலுங்கில் ‘செல்ஃபிஷ்’. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரித்துள்ளார்.சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் சார்ட்டட் அக்கவுண்டன்ட் ஆகியிருப்பேன்னு சொல்லியிருந்தீங்க... அந்தளவுக்கு நீங்க கணக்குல புலியா?

நான் எம்.காம்.முடித்துள்ளேன். யுனிவர்சிட்டி லெவலில் முதல் மாணவி. கணக்கு என்பது வழக்கமான கூட்டல், கழித்தல் மட்டுமே. பெரிய பெரிய விதிகள் அக்கவுண்ட்ஸ்ல வராது. மற்றபடி, கால்குலேட்டர் இல்லாமலேயே கணக்கு பண்ற அளவுக்கு நான் கணக்குல புலி கிடையாது.

அலினா ஷாஜி - இவானா இருவரிடமும் இருக்கும் ஒற்றுமை - வேற்றுமை என்ன?

இரண்டுமே நான்தான்! வெளியே இருந்து பார்க்கிறவர்களுக்கு வேற்றுமை தெரியலாம். நான் அப்படியேதான் இருக்கிறேன். ஜிம், டயட்,  இதெல்லாம் பண்ணணும்னு எனக்கும் ஆசையா இருக்கு. ஆனா, எதையும் நான் மாற்றிக்கொள்ளவில்லை. அம்மா சமையல் பிடிக்கும். அதை படப்பிடிப்பு சமயத்துல மிஸ் பண்றேன்.

ஒரு நடிகை பிஸியாக இருக்கும்போது எந்நேரமும் இயங்கிக் கொண்டே இருக்கணும். அதையெல்லாம் பண்றது அலினா ஷாஜிதான். எனக்குள் பெரிய வேற்றுமை வந்த மாதிரி தெரியல. என்னுடைய லைஃப் கொஞ்சம் பிஸியா மாறியிருக்குனு வேணும்னா சொல்லலாம். மற்றபடி பேர் மாற்றத்துல எந்த வேற்றுமையும் வரல.

நடிகையான பிறகு மாற்றிக்கொண்ட குணம் எதாவது உண்டா?

பி.காம் பண்ணும்போதுதான் ‘கள்வன்’ பண்ணினேன். அந்த சமயத்துல படிப்புலதான் என்னுடைய கவனம் இருந்துச்சு. இப்போது ‘லவ்டுடே’, ‘எல்.ஜி.எம்’ வந்திருக்கு.
நடிகையாக ரெஸ்பான்ஸிபிளாக இருக்கணும்னு மைண்ட் செட்டாகியிருக்கு. ஏனெனில், நான் பண்ணும் விஷயத்தை நிறையப் பேர் பார்க்கிறார்கள். அதை சமூகக் கண்ணோட்டத்தோடும், ஆடியன்ஸுக்கு பிடிச்ச மாதிரியும் பண்ணணும் என்ற ரெஸ்பான்ஸ் வந்துள்ளது.

வில்லி வாய்ப்பு வந்தால் பண்ணுவீர்களா?

சாக்‌ஷி தோனி மேடம், ‘வில்லியா வந்தால் பண்ணுங்க’ என்றார். அதற்கு அவர் சொன்ன காரணம், ‘நீங்க முறைக்கும்போது உங்க கண்ல வில்லத்தனம் தெரியுது. அதனால நெகடிவ் ரோல் வந்தால் தாராளமா பண்ணுங்க’னு சொன்னார். ஒருவேளை அப்படி வாய்ந்தால் வில்லி ரோலில் நடிப்பதைப் பற்றி யோசிப்பேன்.

உங்களுக்குள் இருக்கும் நடிப்பாற்றல் இதுவரை எந்தளவுக்கு வெளிவந்துள்ளது?

என்னால் எப்படியெல்லாம் நடிக்க முடியும் என்று என்னிடம் இருக்கும் திறமையைக் கண்டுபிடிச்சதே பாலா சார். ‘நாச்சியார்’ பண்ணும்போது என்னால் எந்தளவுக்கு நடிக்கமுடியுமோ அந்த அளவுக்குதான் என்னுடைய நிலை இருந்துச்சு. அப்போது சினிமாவைப் பற்றி எதுவுமே தெரியாது. பாலா சார்தான் எனக்குள் இருக்கும் திறமைகளை கணிச்சு அதுல டெவலப்மென்ட் கொண்டு வந்தார்.

இன்னொரு விஷயமாக நான் சொல்வது, ஒரு இயக்குநரால்தான் நடிகர்களிடம் இருக்கும் முழுத் திறமையையும் கண்டுபிடிக்க முடியும் என்பதை முழுமையாக நம்புகிறேன். ‘லவ்டுடே’ படத்தில் அழுவது, முறைப்பது என பல எமோஷ்னல், மாடுலேஷன் காட்சிகள் இருக்கும். அதைக் கண்டுபிடிச்சது பிரதீப். உதாரணத்துக்கு அழுகைக் காட்சி என்றால் ஒரு ஆர்ட்டிஸ்ட்டால் அழுகையை வெளிப்படுத்த முடியும். ஆனால், எந்தெந்த மாடுலேஷனில் அழ வேண்டும் என்பதை டைரக்டரால்தான் சொல்லிக்கொடுக்க முடியும்.  

‘லவ்டுடே’ படத்துக்குப்பிறகு என்ன மாதிரியான ரியாக்‌ஷன் ரசிகர்களிடமிருந்து வந்தது? குறிப்பாக ஆண் ரசிகர்களிடமிருந்து?

எங்கே போனாலும் ‘மாமா குட்டி’னு கூப்பிடுறாங்க. அது நடிகையாக பெரிய சந்தோஷம் கொடுத்துள்ளது. நம்முடைய கேரக்டரை மனசுல வெச்சு கேரக்டர் நேம், டயலாக்கை எல்லாம் சொல்லி ரசிகர்கள் அழைப்பது சந்தோஷமாக உள்ளது.

எந்த விஷயத்துல ‘எனக்கு... எனக்கு...’ என்று சொந்தம் கொண்டாடுவீர்கள்?

எங்கிட்ட ஃப்ரெண்ட்ஸ், ஃபன், ஃபேமி லி னு சாய்ஸ் கொடுத்துட்டு இதுல ஒண்ணு செலக்ட் பண்ணுங்கனு சொன்னீங்கன்னா என்னுடைய சாய்ஸ் ஃபேமிலியாக இருக்கும். ஐ லவ் மை ஃபேமிலி.

எஸ்.ராஜா