கசியும் அந்தரங்க வீடியோக்களும் நிகழும் தற்கொலைகளும்!
கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்தக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவர் - மாணவி இருவர் காதலித்து வந்துள்ளனர். இருவரும் கல்லூரி வளாகத்திலேயே நெருக்கமாகவும் இருப்பதைப் பலரும் கவனித்துள்ளனர்.  இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருவரும் கல்லூரியின் மொட்டை மாடிக்குச் சென்று அங்கு யாருக்கும் தெரியாமல் நெருக்கமாக இருந்துள்ளனர். இவர்கள் நெருக்கமாக இருப்பதை அருகில் உள்ள கட்டடத்தில் இருப்பவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.  இது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து கல்லூரியில் உள்ள பிற மாணவ மாணவிகளும் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர். இதனால் அந்த வீடியோவில் உள்ள மாணவனும் மாணவியும் மனமுடைந்து போயுள்ளனர்.இந்நிலையில் அவமானம் தாங்காமல் அந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அறிந்த மாணவனும் தற்கொலை செய்துள்ளார். இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியானதால்தான் இவர்கள் தற்கொலை செய்துகொண்டனர் என்பதை அறிந்த இரு குடும்பத்தினரும் இப்போது போலீசில் புகார் அளித்துள்ளனர்.
 வழக்குப்பதிவு செய்த போலீசார், வீடியோ எடுத்தது யார், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது யார்... என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி நாட்களில் காதல் வருவதும், காதலிப்பதும் இயல்புதான். ஆனால், கவனமாக இருப்பது அதைவிட முக்கியமான ஒன்று. கல்லூரி காவலாளர்கள் முதல், பேராசிரியர்கள், பிரின்சிபல் எல்லாம் என்ன செய்கிறார்கள் என்னும் கேள்வி பெற்றோர்களிடம் வலுத்து வர; எதிர்த் தரப்பில், பெற்றோர்கள் முதலில் என்ன செய்கிறீர்கள், ஒரு மகன் / மகளையே உங்களால் பார்த்துக்கொள்ள முடியவில்லை, எப்படி கல்லூரி மீது பழி போட முடியும் என்பதாக வாக்குவாதங்கள் நடந்தேறியுள்ளன.

இதேபோல் இன்னொரு சம்பவம்... கர்நாடகா உடுப்பியில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூவர் உடன் படிக்கும் தோழியை குளிக்கும் போது வீடியோ எடுத்த விவகாரத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் மூன்று பெண்களும் இஸ்லாமியர்கள் என்பதாலேயே பிரச்னை திசைமாறி வேறு ஓர் அதிர்வலைகளை கர்நாடக மாநிலத்தில் உருவாக்கியிருக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) இந்தியாவில் விபத்து இறப்புகள் மற்றும் தற்கொலைகள் (ADSI) அறிக்கையின்படி, இந்தியாவில் 2021ம் ஆண்டில் 13,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் - அதாவது ஒவ்வொரு நாளும் 35க்கும் அதிகமானோர் என்ற விகிதத்தில் - இறந்துள்ளனர். இது 2020ல் 12,526 இறப்புகளில் இருந்து 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது. 10,732 தற்கொலைகளில் 864 பேர் ‘தேர்வில் தோல்வி’ காரணமாக தற்கொலை புரிந்துள்ளனர்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, 2020ல் 11,396 குழந்தைகள் மற்றும் மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். 2019ல் 9,613ல் இருந்து 18% உயர்ந்து, 2018ல் 9,413ல் இருந்து 21% உயர்ந்துள்ளது. இதற்கு காதல் தோல்வி, குடும்பப் பிரச்னை, மன அழுத்தம் எனக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இதில் இப்போது புதிய பூதமாக இணைந்திருக்கிறது டிஜிட்டல் உலகம்.
நெருக்கமான வீடியோ ஒரு பக்கம் எனில், இன்னொரு புறம் தினம் தினம் எங்கேயோ ஒரு ட்ரையல் ரூமிலோ, ஹோட்டல் அறையிலோ அல்லது குளியலறையிலோ வைக்கப் படும் கேமராக்களும்கூட பல இளைஞர்களை, குறிப்பாக இளம் பெண்களை அழித்துக் கொண்டிருக்கிறது.
ஒருவேளை இப்படிப்பட்ட வீடியோக்கள் வெளியானால் இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும், பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும், இந்த வீடியோக்களை அழிக்க வசதிகள் உள்ளனவா, அதற்கான முறைகள் என்ன... என விபரமாகச் சொல்கிறார்கள் நிபுணர்கள்.
எஸ்.பி. லாவண்யா (DCP - துணை காவல் ஆணையர், சேலம்)
தமிழகத்தைப் பொறுத்தவரை எல்லா நகரங்களிலும் சைபர் கிரைம்களுக்கென தனி துறையும், அதற்கான நவீன தொழில்நுட்ப வசதிகளும் ஏராளமாகவே உள்ளன. நேரில் வருவதற்கு தயங்கினால் https://cybercrime.gov.in/ என்ற தளத்தில் உங்கள் புகார் என்ன என்பது குறித்து, அதற்கான லிங்க் சகிதமாக கொடுத்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சமூக வலைத்தளம் முதல், ஏதேனும் அயல்நாட்டு ஆபாச இணையதளத்தில் பதிவிடப்பட்ட அந்தரங்க வீடியோக்கள் வரை என இன்று எதையும் மிக விரைவில் நீக்கிவிடலாம். வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு ஒருவர் பகிரப்படும் வீடியோக்களைக் கட்டுப்படுத்துவது மட்டுமே இன்னும் நமக்கு சாத்தியமில்லாத நிலையில் இருக்கு. ஆனால், எந்த வீடியோவாக இருப்பினும் ஏதோ ஒரு இணையத்தில் அல்லது சமூக வலைத்தளத்திலிருந்துதான் பெரும்பாலும் டவுன்லோடு செய்யப்பட்டு பகிரப்படும்.
எனில் ஆரம்பநிலையிலேயே வீடியோக்களை நீக்கிவிடும் பட்சத்தில் வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களுக்கு செல்வதைத் தடுக்கலாம். முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட தளங்களில் அதிகபட்சம் 48 மணிநேரங்களுக்குள் எந்தத் தவறான வீடியோவாக இருப்பினும் நீக்கலாம். முதலில் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து தங்களின் வீடியோ இருக்கும் தளத்தில் லிங்க் கொடுத்துப் புகார் கொடுத்தாலே போதுமானது, உங்கள் முகம், அடையாளங்கள் கூட வெளியே வராமல் ரகசியமாகவே உங்களுக்கு உதவுவார்கள்.
எந்த மால்கள், கடைகள், ஹோட்டல் அறைகள் என எங்கு சென்றாலும் உங்கள் மூளையும், கண்களும் முதலில் தேடுவது ஏதேனும் வித்யாசமான ஸ்டிக்கர்கள், பொம்மைகள், கதவு தாழ்வாரங்கள், டிவி உள்ளிட்டவைகள் என அனைத்தையும் ஒருமுறை கண்காணியுங்கள். இதில்தான் கேமராக்கள் இருக்கக் கூடும்.
எஸ். வந்தனா (மருத்துவ உளவியலாளர்)
உடல் ரீதியான விஷயங்களில் இங்கே நிறைய இனப் பாகுபாடுகள் இருக்கின்றன. ஆண் என்றால் ஒரு முறையிலும் பெண் என்றால் ஒரு பாணியிலும் அவர்களின் உடல்கள் குறித்த சிந்தனையும் கருத்துக்களும் உள்ளன. பெண் என்றால் தன் உடல் மீது அதீத அக்கறையும், பாதுகாப்பும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும்; ஆண் என்றால் அப்படியான எந்த கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையும்தான் இங்கு நிலவி வருகிறது.
சமீபத்திய இந்த கர்நாடக பிரச்சனையும் அதைத்தான் காட்டுகிறது. ஏனெனில் முதலில் தற்கொலை செய்துகொண்டது அந்தப் பெண், பின்னர்தான் அந்த ஆண்.இங்கே தற்கொலையே தவறு என்கையில் ஆண் என்ன பெண் என்ன... இருவருக்குமே உடல் என்பது பாதுகாக்க வேண்டிய ஒன்றுதான். இருவருக்குமே உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்படும் நேரத்தில்தான் நிச்சயம் மன அழுத்தம் உண்டாகும்.
என்ன... ஆணை விட பெண்ணுக்கு அதிக அளவில் உண்டாகும். முதலில் பயம் வேண்டாம். பொதுவாக இப்படியான வீடியோக்களில், குறிப்பாக நாம் ஆடை மாற்றும் வேளையில் எடுக்கப்படும் ட்ரையல் ரூம், ஹோட்டல் ரூம் வீடியோக்கள், குளியலறை வீடியோக்கள் என இவைகளைக் கண்டு மனமுடைந்து, குற்ற உணர்ச்சிக்குச் செல்லவேண்டிய தேவை இல்லை. கொடூர மனநிலை கொண்டவர்கள் எடுத்த வீடியோவிற்கு அவன்தானே வெட்கப்பட வேண்டும்..? ஒருவேளை மிரட்டல் வந்தாலோ அல்லது உங்களின் வீடியோக்களை ஏதேனும் வழியில் காண நேர்ந்தாலோ நம்பிக்கையான, உங்களை விட வயதில் பெரியவர்களிடம் முதலில் நடந்த சம்பவங்களைத் தெரியப்படுத்தி உதவி கேளுங்கள், அமர்ந்து பேசுங்கள்.
தற்கொலை கோழைத்தனம் கிடையாது; அது ஆதரவற்ற நிலை. உதவ யாருமில்லை என்னும் நிலைதான் தற்கொலைகளில் முடிகின்றன. ஒரு பத்து நிமிட ஆறுதல் பேச்சு போதும்... ஓர் உயிரைக் காப்பாற்ற. ‘நான் இருக்கேன்...’ என்ற சொல் கிடைக்காமல்தான் பல தற்கொலைகள் நிகழ்கின்றன. பெற்றோர்களை விடவும் பெரிய ஆதரவு வேறு யார் இருக்கிறார்கள்..? அவர்களிடம் பேசுங்கள். முதலில் அவர்களும் பயப்படத்தான் செய்வார்கள். ஏன் ஆத்திரமும், கோபமும் கூட உண்டாகும். ஆனால், எப்படியேனும் என் மகனை/ளை நான் பாதுகாப்பேன் என நிச்சயம் உடன் நிற்பார்கள். பின்னர் புகார் அளிக்க எத்தனையோ வழிகள் உள்ளன.
பெற்றோரும் சில விஷயங்களைப் புரிந்து கொள்ளவேண்டும். குழந்தைகளிடம் எவ்வித மாறுதல் தென்பட்டாலும் அழைத்துப் பேச முயற்சி செய்யுங்கள். ‘எதுவானாலும் என்னிடம் சொல், நாங்கள் இருக்கிறோம்’ என்னும் வார்த்தைகள்தான் அவர்களுக்கு சிறந்த மருந்து. முடிவாகச் சொல்கிறார்கள் எனில் எவ்வித செயல்பாடுகளையும், உணர்வுகளையும் நாம் வெளிப்படுத்தாமல், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என முழுமையாகக் கேட்பதே முதல் தீர்வு. உங்களுக்குக் கோபமே வந்தாலும், அவர்கள் மேல் தவறே இருப்பினும் அதை வெளிக்காட்டாமல் தொடர்ந்து அவர்களின் பயத்தை சரிசெய்ய முற்பட வேண்டும்.
சுற்றத்தார், நண்பர்கள், உறவினர்கள் என யாரையும் தேவையில்லாமல் இதில் தலையிட விடாமல், உங்களை மட்டுமே நம்பி சொன்ன குழந்தைக்கு ஆதரவாக நீங்கள் மட்டும் செயல்படுவதே இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் சிறந்த தீர்வாக அமையும். ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் பெற்றோர்கள்தான் முதல் மனநல மருத்துவர். சிறுவயதிலேயே மொபைல், கணினி பயன்பாட்டை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
யாரிடம் பேசுகிறார்கள், யார் நண்பர்கள் என கண்காணிப்பிலேயே இருப்பது நல்லது. அடுத்து வரும் தலைமுறை நம்மைக் காட்டிலும் வேகமாக சிந்திக்க, செயல்படத் தெரிந்தவர்கள். எல்லாமே அவர்கள் கற்றுக்கொள்ள ஏதுவான சூழல்கள் உள்ளன. அதற்கு ஏற்ப நம்மை நாமும் அவர்கள் வேகத்தில் இணைத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.
ஷாலினி நியூட்டன்
|