சிறுகதை - பப்பண்ணன்
நடிகை அம்பிகாவிற்கு இருந்த மாதிரி ‘S’ இப்ப யாருக்கு இருக்கு? - என்ற கேள்வியை திடீரென பற்றவைத்தான் பப்பண்ணன். பெண்களின் வடிவத்தை வர்ணிக்கையில் வீணை என்றோ, மீனென்றோ அல்லது இடைமெலிந்த குடுவையென்றோ குறிப்பிடுவதுதானே வழக்கம்..? சம்பந்தமே இல்லாமல் பப்பண்ணன் S என்கிறானே? அதுவும் அம்பிகாவிற்கு இருப்பது மாதிரி ‘S’ யாருக்குமே இல்லையென்கிறானே?
 ஆர்வம் தொற்றிக்கொள்ள பேச்சைத் தொடர்ந்தேன். பப்பண்ணன் அப்படித்தான். பேச மாட்டான். பேச ஆரம்பித்தால் நிறுத்த மாட்டான். அதுவும் உற்சாக பானம் அருந்தி பேசத் தொடங்கினால், விடிய விடிய கேட்டுக் கொண்டிருக்கலாம். பத்மநாபபிள்ளை என்ற அவன் முழுப்பெயரை எந்த ரீதியில் சுருக்கினார்களோ தெரியவில்லை. எனக்கு நினைவு தெரிந்தது முதல் ஊராருக்கு அவன் பெயர் ‘பப்பு’தான். என் வயதொத்த பிள்ளைகளுக்கு பப்பண்ணன்.
பப்பண்ணன் என்ற பெயரைக் கேட்டதும் கருப்பு நிற ‘இடியாப்ப சுருள்’ போல் மளமளவென சுருண்டு அலைபாயும் அவன் தலைமுடிதான் நினைவுக்கு வரும். கூடவே போதையில் சிவந்த அவனுடைய காந்தக் கண்கள். குடித்துவிட்டுப் படுக்கிறானா அல்லது படுத்து எழுந்ததும் குடிக்கிறானா என்பதை எப்போதுமே அனுமானிக்க முடியாது. அனுதினமும் பெரும் போதையில் திளைப்பான். ஆனால், நிதானம் தவறாது பேசுவான். நடப்பான். சிரிப்பான். சட்டென்று பார்ப்பவர்களுக்கு அவன் குடித்திருக்கிறான் என்பதே தெரியாது.
‘‘அம்பிகாவிற்கு ‘எஸ்’ஸா? என்னன்னே புரியல...’’ என்றேன்.‘‘ரெம்ப யோசிக்காதல... அவ கண்ணுக்கு பக்கத்துல ரெண்டு பக்கமும், முடியை ‘S’ மாதிரி வளைச்சு விட்டுருப்பா... பார்த்திருக்கியா?’’ என்று லேசாக கண்ணடித்துச் சிரித்தான். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புதைந்து கிடக்கும் பெண் ரசனையை நினைத்து எனக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன். ‘‘எப்படி ரசிச்சிருக்க... அவ்வளவு புடிக்குமா என்ன?’’ ஆர்வத்துடனான என்னுடைய கேள்விக்கு அவனுடைய அக்மார்க் புளித்த புன்னகையை பதிலளித்தான் பப்பண்ணன்.
சினிமா நடிகைகள் மட்டுமல்ல, உலகத்தில், ஊருக்குள் என எந்தப் பெண்ணைப் பற்றி பேசினாலும் அவனுக்குள் ஒரு உற்சாகம் ததும்பி வரும். அதற்காக அவனை காமக்கொடூரன் என கற்பனை செய்ய வேண்டாம். இவன் வேற மாதிரி. நினைவு தெரிந்தது முதல் பெண் வாடையே அடிக்காத ஒருவன், இப்படி இருப்பதில் ஆச்சர்யமொன்றுமில்லை. இடையில் புகுந்த ஆன்மீகச் சிந்தனைகள் அவனை வேறு ரீதியில் சிந்திக்க வைத்தன. ஊர் முத்தாரம்மனின் தீவிர பக்தியால், பெண்கள் தெய்வம் என்பான். அழகு என்பான். கருணை என்பான். அன்பு என்பான். அவர்களே உலக இயக்கம் என்பான்.
சரி, யாரிந்த பப்பண்ணன் என்று கேள்வி கேட்டால் பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. வேண்டுமானால் நன்றாக வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தின் ‘கடைசி உறுப்பினர்’ என்று கூறிக் கொள்ளலாம். பப்பண்ணனின் அப்பா அம்மாவை நான் போட்டோவில் தான் பார்த்திருக்கிறேன். நல்ல வசதியான குடும்பம்தான். அப்பா வேலைவெட்டிக்கு போகாமல் சுகபோகத்தில் திளைத்தவராம், ஊதாரித்தனத்தால் காலவெள்ளத்தில் வளமெல்லாம் ஓடிக் கரைந்தது.
செக்களவு பொன் இருந்தாலும் செதுக்கி, செதுக்கி எத்தனை நாள் தின்ன முடியும். அறியாத வயதில் பெற்றோரை இழந்து அம்மாவழி ஆச்சி செண்பகத்தால் வளர்க்கப்பட்டவன் பப்பண்ணன். கொட்டாரம் போல ஒரே ஒரு வீடு மட்டும் மிச்சம். அன்றாட ஜீவிதம் ஆச்சி செண்பகம் நடத்தும் பப்படம் வியாபாரத்தில் அடங்கியிருந்தது. இளமையில் வறுமை, கூடான தனிமை அவனை பலவிதங்களில் வாட்டி வதைத்தது. பள்ளிப்படிப்பு ஏறவில்லை. பத்து வயசில் ‘பீடிக்குடிப்பு’, பதினான்கு வயதிற்குள் ‘வெள்ளமடி’ என வெகுவேகமாக கெட்டழிவதில் முன்னேறினான் பப்பண்ணன். அன்பு காட்ட அன்னையும், தட்டிக் கேட்க தந்தையும் இல்லாத குழந்தை வேறெப்படி வளரும்.
சுற்றத்தாரின் அரைகுறை அறிவுரையில் பதினெட்டு வயதில் ஊர் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோக்காரனாய் குடிபுகுந்தான். சுறுசுறுவென வேலையைக் கற்றுக் கொண்டான். இருந்தும் கடனுக்கு ஓடிய ஓட்டம், நண்பர்களுக்கு ஓடிய ஓட்டம், தெரிந்தவர்களுக்கு ஓடிய ஓட்டமென்று வேலை பல நேரங்களில் பல்லிளித்தே காட்டியது.
‘‘பப்பண்ணே... சில்லறை இல்லை... நாளைக்கு தரட்டா..?’’
‘‘என்ன பப்பா... இன்னா... இழுக்குற... நாரோயிலுக்கு எரநூறு ரூவாயா மக்கா? எம்பது தரட்டா..?’’‘‘அவன் நமக்கு மருமகன் முறையில்லா... அவன்ட போய் பைசாவா... நீட்டுகியோ?’’ ஆதரவற்ற அவனிடம் அன்பைக் காட்டி ஏமாற்றினார்கள் ஊர்க்காரர்கள். சொந்தபந்தமின்றி வளர்ந்ததாலோ, என்னவோ எல்லோரிடமும் இவனும் இஷ்டப்பட்டு ஏமாந்தான். இது தவிர முற்றிலுமாய் உறிஞ்சிக் குடிக்கும் ஒட்டுண்ணி நண்பர்கள் சிலரும் அவனோடு சேர்ந்துகொண்டார்கள்.
உழைத்த காசு, ஊரார்கள் பிரச்னை தீர்க்கவே போதுமானதாய் இருந்தது. இதற்கெல்லாம் மேலாய் வேளாவேளைக்கு உணவிட்டுக் கொண்டிருந்த செண்பகம் ஆச்சியும் இறைவனைத் தேடிச் சென்றுவிட, அவனைச் சுற்றிலும் குழப்பம். வாழ்வு முழுவதும் விரக்தி. வாழ்வின் மீதான துளி கரிசனம் கூட இல்லை.
கூட இருந்த நண்பர்கள் எல்லாம் குடும்ப வாழ்வுக்குள் நுழைய, கிணத்துக்குள் போட்ட அம்மிக்கல்லாய் தனிமையில் விழுந்தான் பப்பண்ணன். தன்னிலை மறக்க அளவான தொடர் போதை எந்நேரமும். ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டும் சாப்பாடு. ஊருக்கு ஒதுக்குப் புறமாய் இருந்த ஒற்றை அறையில் பிரம்மச்சர்ய தாமசம். ஆனால், எல்லோரிடமும் அதே அன்பு பரிமாற்றம். குசலம் விசாரிப்பு.‘‘பப்பண்ணா... தங்கம்லா’’ன்னு ஊர் முழுவதும் பேச்சிருந்தது. அவனை மாதிரி யாரும் இருக்க முடியாதென பெருமையும் இருந்தது. ஆனால், முன்னின்று அவனுக்கென ஒரு குடும்பம் அமைக்க உற்றவர்கள் யாருமில்லை. சிலபேர்கள் ஏற்றெடுத்த முயற்சியும், அவன் குடிப்பழக்கத்தால் அப்படியே நின்றது.
நானறிந்த வரை அவன் கண்ணுக்குள் போதை, சோகம், அழுகை என எதுவுமே தெரிவதில்லை. எதையுமே அவன் வெளியில் காட்டிக் கொள்வதில்லை. ஆனால், அவனை எப்போதும் சந்தோஷப்படுத்துவது அவன் திருமணம் பற்றிய பேச்சுக்களே.அரசமூடு, குளக்கரை, கோயில், பஸ் ஸ்டாண்ட், திருமணப்பந்தி தொடங்கி... சாவு வீட்டில் அவன் எதிர்கொள்ளும் ஒற்றைக்கேள்வி... ‘‘பப்பா... எப்படே உனக்கு கல்யாணம்?’’ என்பதுதான்.
‘‘பார்த்திட்டுதான் இருக்கேன்...’’ ‘‘வடக்க இருந்துதான் நமக்கு பொண்ணு கிடைக்குமாம்...’’ ‘‘பத்துக்கு ஆறு பொருத்தம் இருக்குல்லா...’’ ‘‘பணம் தேவையில்ல... நல்ல குணமானவளா கிடைச்சா போதும்...’’ ‘‘வர சித்திரையில முடிச்சிட வேண்டியதுதான்...’’ ‘‘வீரநல்லூர் ஜோசியர் சொல்லியாச்சுல்லா... இன்னும் ஒரு மூணுமாசம்தான் டைம்...’’ என பல ரீதியில் பதில் கூறுவான் பப்பண்ணன்.
ஆனால், கல்யாணம் மட்டும் நடந்தபாடில்லை. உடனிருந்த நண்பர்கள் எல்லோருக்கும் திருமணமானது. திருமணமான எந்த ஒரு நபரையும் சில வாரத்திற்கு எதிர்கொள்ள ரெம்பவே கூச்சப்பட்டான் பப்பண்ணன். சிலநேரங்களில் ஆளில்லாத அவன் வீட்டில் பேச்சுத் துணைக்கு நான் போய் இருப்பதுண்டு.
மெதுவாகக் குடித்துக் கொண்டே ரசனையுடன் அவன் பேசும்போது, இத்தனை விஷயங்களை இவன் எப்படி அறிந்தான் என்று நினைக்கத் தோன்றும். இவ்வளவு விசயமறிந்தவன் எப்படி ஊராரிடம் ஏமாறுகிறானென்றும் வியக்கத் தோன்றும். ‘‘உனக்குன்னு உள்ளவ இன்னும் பொறக்காமலா இருக்கப்போறா’’ன்னு சொல்லும்போது, ‘‘ஆமா... பார்த்தியா... எங்கிருக்காளோ’’வென வானம் நோக்கி வெட்குவான். முப்பத்தெட்டு வயதிலும் முதிர்கண்ணனாக இருந்து வெட்கப்படுவது கொடுமையிலும் கொடுமையாகத் தோன்றும். அவன் படும் அவஸ்தையைக்காணாது ஒருநாள் நேரடியாகவே கேட்டுவிட்டேன்.‘‘ஏன்ணே... இதுவரைக்கும் நீ எந்த பொம்பளை கூடையும் போனதில்ல?’’
வெட்கத்தில் முகம் சிவந்தான். நானோ வைத்த கண் வாங்காமல் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவனது பிரத்யேக புளித்த சிரிப்பை உதிர்த்தான். ‘‘யார்ட்டையாவது போயிருக்கியா? பொய் சொல்லாத...’’ என்று அன்பு மிரட்டல் விடுக்கையில் மெதுவாக ஆமாமென்பதுபோல் தலையசைத்தான்.‘‘சொல்லு... சொல்லு...’’ என்று விடாமல் கேட்டதால், அந்தக் கதையைக் கூறலானான்.
‘‘ஒருவாட்டி பழனிக்கு பக்கத்துல நம்ம தோஸ்த்துங்க கூட ‘அந்த இடத்துக்கு’ போனேன். அக்காளும், தங்கச்சியும்னு நினைக்கேன். ஒரே முகச்சாடை. ஒருத்தி, தோஸ்து கூட பக்கத்து ரூமுக்கு போக, இன்னொருத்தி என் கூட இருந்தா... சும்மா சொல்லக்கூடாது... கருப்பா இருந்தாலும் அம்புட்டு அழகு.
இந்த ‘பதிமூணாம் நம்பர் வீடு’ படத்துல ஒரு பொண்ணு பேயா நடிச்சிருக்குமே... அதேபோல கறுப்பழகு. முத தடவைனால நமக்கு உள்ளுக்குள்ள ஒரு பதட்டம் பார்த்துக்கோ. நான் கொஞ்சம் தயக்கத்தோட இருந்திட்டு இருந்தேன். கொஞ்ச நேரம் அப்படியே பார்த்திட்டு இருந்த புள்ள, என் கையைத் தூக்கி அவ இடுப்புல வச்சா... பொறவு முந்தானையை விலக்கிட்டு பட்டுன்னு கட்டிப் புடிச்சுட்டா...’’ கிளாஸை கையிலெடுத்து மதுவை ஒருமுறை உறிஞ்சிக்கொண்டான். பேச்சு சூடேற... அவன் முக பாவனைகளை லேசான சிரிப்போடு ரசித்துக்கொண்டிருந்தேன்.‘‘மொத தடவையா ஒரு பொம்பளையோட வாசம்... அந்த ஸ்பரிஸம்... எனக்கு ஜிவ்வு ஏற, நானும் அவளை இருக்கி கட்டிப் புடிச்சேன்... அப்பதான் கவனிச்சேன்... அவ உடம்பெல்லாம் பயங்கர சூடு... சூடுன்னா... சூடு.. அப்படியொரு சூடு. நான் பதறிட்டேன். அப்புறம் என்னால கூட முடியல... ரெம்ப வற்புறுத்தி கேட்டதுக்கப்புறம் லேசா காய்ச்சல்னு சொல்லுச்சு.
எனக்கு தாங்க முடியாம ஆசுபத்திரிக்கு கூட்டிட்டு போய் பார்த்தா... நூத்தி மூணு டிகிரி. முன்னூறு ரூபா பில்லு. கோபப்பட்டாலும், கூட வந்த தோஸ்து தான் குடுத்தாரு. வேற என்ன செய்ய முடியும்..?’’ பரிதாபமாக கண்விரித்துப் பேசினான் பப்பண்ணன். வெள்ளை மனதோடு அவன் பேசப் பேச பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது. ‘‘உன் காச்சலுக்கு அவ மேல பாயாம... அவளுக்கு காய்ச்சலுன்னு திரும்பி வந்திருக்க..?’’
‘‘நல்ல காய்ச்சல்ல்லா... அப்ப போய் செய்ய முடியுமா?’’ ‘‘சரி... அப்புறம்..?’’ ‘‘அப்புறமென்ன?’’ ‘‘ரெண்டு நாள் கழிச்சு போக வேண்டியதுதானே..?’’
‘‘நான் அன்னைக்கு அப்படி பண்ணுனதுலருந்து அந்த தோஸ்த் இந்த விசயத்துக்கு நம்மள சேக்கது கிடையாது...’’ மீண்டும் மதுவருந்தி சிரித்துக் கொண்டான். ‘‘சரி... வேற யார்ட்டையாவது போக வேண்டியது தானே..?’’ ‘‘யார்ட்ட போக...’’‘‘இங்க லெச்சுமி இருக்காள்ல... ஊரே அவள்ட்டதான் நீச்சல் பழகினது... நீனும் நீந்திர வேண்டியதுதாலா..?’’ பரிகசித்தேன். ‘‘நீ... சும்ம இருடே... என்னத்துக்கு என்னமாம் பேசிட்டு...’’ மீண்டும் குடித்து, சிறிதாக ஆசுவாசப்பட்டான். ‘‘யாண்ணே...’’
‘‘நீ சும்மா இரி மக்கா...’’ ‘‘ஓ ... அவளை உனக்கு புடிக்கலையோ?’’ ‘‘அவள புடிக்காதவன் இந்த ஏரியாவுல உண்டா மக்கா..?’’ ‘‘அப்புறம் உனக்கென்ன?’’
‘‘நமக்கு தோதுப்படாது... டே...’’ ‘‘அதான்... ஏன்னு கேக்குறேன்?’’ ‘‘முடியாதுன்னு சொல்றேன்லா...’’ ‘‘அவ உன்னை ஆட்டோக்கார அண்ணேன்னு கூப்பிடறதுனாலயா?’’ ‘‘ஊர்ல எல்லாரையும்தான் அவ ‘அண்ணன்’னு கூப்பிடுகா...’’ மீண்டும் ஒருமுறை குடித்துச் சிரித்தான். ‘‘அதான்... அப்ப உனக்கு என்ன வந்திச்சுன்னு கேக்கேன்..?’’
‘‘எனக்கு அவள ‘அப்படி’ பாக்க முடியல மக்கா...’’ ‘‘அவ ஊருக்கே மடியளக்குறா... உனக்கு மட்டும் என்னாச்சுன்னு கேக்கேன்..?’’ ‘‘நம்ம மனசுல தோணல...’’ ‘‘அதான்... ஏன்னு கேக்கேன்?’’
‘‘நீ... சும்மா விடு மக்கா...’’ ‘‘ஏன்... அவளுக்கும் ‘காய்ச்சல்’ இருந்துச்சா?’’ கிண்டல் தொனியில் கேள்வியை வீசினேன். ‘‘அதில்ல மக்கா... அவ மஞ்சள் பூசின முகத்தையும், பெரிய பொட்டையும், சிவப்பு சாரியையும் பாக்கிறப்ப, எனக்கென்னவோ நம்ம ‘முத்தாரம்மனை’ பாக்கிற மாதிரி இருக்கும்...’’ யோசிக்காமல் பதில் கூறினான்.அவன் பதிலால் அதிர்ந்து, வெகுவாக வாயடைத்து நின்றேன்.
‘‘ஏன்ணே... உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? எது கூட... எத...’’ அவன் அறியாமையை நினைத்து பேச்சை நிறுத்தினேன்.பெரும் மூச்சொன்றை நெஞ்சுக்குள் சொரிந்து, ‘‘நம்ம அறிவுல அப்படியே பதிஞ்சிட்டு மக்கா... என்ன செய்ய..?’’ என்று அவன் போதையில் சரிகையில், அருகிலிருந்த போர்வையைப் போர்த்தி விட்டு வீட்டுக்குக் கிளம்பினேன்.சில வருடங்களுக்கு ஒற்றை மனிதனாய்த் திரிந்து, ஒரு சுபயோக சுபநாளில் தன் வாழ்வை முடித்திருந்தான் பப்பண்ணன்.
ஆற்றாமையின் உச்சத்தோடு ஊரே கூடி அவனை வழியனுப்பி வைத்தது. பசியோ, மதுவோ, ஏக்கமோ, பாசமோ, எதுவோ ஒன்று அவன் உயிரைக் குடித்திருக்க வேண்டும். ஆனால், எனக்கு மட்டும் லெச்சுமியைக் காணும்போதெல்லாம் சம்பந்தமே இல்லாமல் கையெடுத்து வணங்கத் தோன்றியது.
- தெரிசை சிவா
|