கண் சொட்டு மருந்தாலும் ஒவ்வாமை ஏற்படும்!



உலகில் முதல் முறையாக சென்னையில் இது கண்டறியப்பட்டுள்ளது...

பொதுவாக பென்சிலின், சல்ஃபா உள்ளிட்ட ஆன்டிபயாடிக் மருந்துகளால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுவதை பார்த்திருப்போம்.  ஆனால், கண் சொட்டு மருந்தினால் ஒவ்வாமை ஏற்பட்டு ஸ்டீவன் - ஜான்சன் சிண்ட்ரோம் என்கிற ஓர் அரிய வகை நோயை ஏற்படுத்தியிருப்பது முதல்முதலாக சென்னையில் கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் ஒரு சிறுமியிடம் இந்த ஒவ்வாமை நோய் வந்திருப்பது உலகில் இதுவே முதல்முறை.

இதனைக் கண்டறிந்து குணப்படுத்தியிருக்கிறார் மயிலாப்பூரைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் சுரேஷ்குமார். இந்நோய் பற்றியும், விழிப்புணர்வு குறித்தும் அவர் நம்மிடம் விரிவாகப் பேசினார்.  ‘‘ஒரு 14 வயசு சிறுமிக்கு கண் சொட்டு மருந்தை போட்டிருக்காங்க. கண்ணுல தொற்றுனு கண் மருத்துவரிடம் போய் முறையாக பரிசோதிச்சுதான் அந்தக் கண் சொட்டு மருந்தை எடுத்திருக்காங்க. இந்தக் கண் சொட்டு மருந்தினை போட்டுக்கிட்ட யாருக்கும் இதுவரை எந்தத் தொந்தரவும் வந்ததில்ல.

ஆனா, இந்தச் சிறுமிக்குத்தான் மூன்றாவது நாள்ல உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு புண்ணாகியிருக்கு. அதனால, உடனடியாக என்னிடம் அழைச்சிட்டு வந்தாங்க. அவங்களுக்குக் கண் சொட்டு மருந்தால்தான் பிரச்னைனு தெரியாது. அந்தச் சிறுமிக்கு இதுவரை எந்த மருந்தும் அலர்ஜி ஆனதில்லை. உணவு அலர்ஜியும் சின்ன வயசுல இருந்து இருந்ததில்ல. அதனால, முதல்ல இந்த உதட்டு புண்ணுக்கு வேறெதாவது காரணம் இருக்குமானு பார்த்தேன். அதற்காக டெஸ்ட் எடுத்தோம். ஏதாவது கிருமிகளால் வந்திருக்கானு பரிசோதனை செய்தோம்.ரத்தப் பரிசோதனை எடுத்திட்டு சாயங்காலம் வரும்போது அந்தச் சிறுமியால் வாயைத் திறக்கக்கூட முடியல. அந்தளவுக்கு அலர்ஜி கூடியிருந்தது.

பொதுவாக தொற்று இருந்தால் காய்ச்சல் வரும். ஆனா, அந்தச் சிறுமிக்குக் காய்ச்சலும் இருக்கல. பிறகு எப்ஸ்டீன் பார் வைரஸ், மைக்கோபிளாஸ்மா இன்ஃபெக்‌ஷன், கோவிட் வைரஸ்னு எல்லா பரிசோதனைகளும் செய்தோம். எல்லாமே நெகட்டிவ்தான். பிறகு, பாக்டீரியா தொற்று இருக்குமானு பார்க்க கல்ச்சர்னு ஒரு பரிசோதனை இருக்கு. அதையும் டெஸ்ட் பண்ணினதுல நெகட்டிவ்னு வந்தது. ரத்த வெள்ளை அணுக்களும் நார்மலாக இருந்தது. இப்படி வெள்ளை அணுக்கள் நார்மலாக இருந்தால் தொற்று எதுவும் இல்லனு அர்த்தம். அப்ப அந்தச் சிறுமிக்குத் தொற்றுகளால் எதுவும் இல்லனு உறுதிப்படுத்தினோம்.

வழக்கமாக மரபணு காரணமாக வருதானு பார்க்க ஹெச்.எல்.ஏ.னு ஒரு சோதனை இருக்கு. அதையும்கூட பார்த்தோம். அதிலும் நெகட்டிவ்னே வந்தது. அப்பதான் இது வித்தியாசமான கேஸ்னு புரிஞ்சது. அப்புறமே கண் சொட்டு மருந்தின் விளைவால்தான் இந்நோய்னு முடிவு பண்ணினோம். உடனே, சொட்டு மருந்தை நிறுத்தச் சொல்லிட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்த்து ட்ரீட்மென்ட் செய்தோம்.ஏன்னா, சிறுமியால் வாயைத் திறக்க முடியல. இதை அப்படியே விட்டால் உடல் முழுவதும் பரவலாம். இந்த நோயின் பெயர் ஸ்டீவன் - ஜான்சன் சிண்ட்ரோம்னு சொல்வாங்க. இது ரொம்ப அரிதான, அதேநேரம் சீரியஸான அலர்ஜி நோய்.

அப்படியே விட்டால் அடுத்ததாக கண், தோல்னு பரவ ஆரம்பிச்சிடும். அதனால, 14 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தாங்க. ரெண்டு வார சிகிச்சைக்குப் பிறகு முழுவதும் குணமானாங்க. தழும்புகள்கூட இல்லாமல் ஆறிடுச்சு. இதன்பிறகு, இந்த நோய் பற்றி மருத்துவப் புத்தகங்கள், ஆய்வுகள்ல தேடினேன். அப்பதான் இதேமாதிரி கண் சொட்டு மருந்து ஒவ்வாமையால் 18 வயசுக்கு மேல் உள்ள பெரியவங்களுக்கு வந்திருக்குனு தெரிஞ்சது. அதுவும் வெளிநாடுகள்லதான் வந்திருக்கு. ஆனா, 18 வயசுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு உலகில் இதுதான் முதல்முறை. இந்தியாவுக்கும் இது புது நோய்.

ஐரோப்பியன் அசோசியேஷன் ஆஃப் அலர்ஜி அண்ட் கிளினிக்கல் இம்யூனாலஜி (EAACI)னு ஒரு மருத்துவ கூட்டமைப்பு இருக்கு. இதை ‘இயாக்கி’னு சொல்வாங்க. இந்தக் கூட்டமைப்பு அலர்ஜி நோய்கள், நோய் எதிர்ப்பு சம்பந்தமாக ஐரோப்பாவுல மாநாடு நடத்துவாங்க. இந்தமுறை ஜெர்மனியில் நடந்தது. நான் இந்த நோய் பற்றி புதிய கேஸ் கண்டறிந்திருக்கோம்னு சொன்னதும், எனக்கு கலந்துக்கவும் பேசவும் அழைப்பு விடுத்தாங்க.

இதுல இங்கிலாந்து, ஆஸ்திரேலியானு உலக நாடுகள்ல இருந்து பல மருத்துவர்கள் கலந்துப்பாங்க. தவிர, மருத்துவப் புத்தகங்கள் எழுதுகிற மருத்துவர்களும் வருவாங்க. அவங்க எல்லோரும் என்னுடைய இந்த புதிய நோய் கண்டறிந்ததைப் பார்த்திட்டு ரொம்ப ஆச்சரியப்பட்டாங்க. இதுமாதிரி கேஸ் பார்த்ததில்லனு சொன்னாங்க...’’ என்றவர், நிதானமாகத் தொடர்ந்தார்.
‘‘இந்தக் கேஸ் நமக்கெல்லாம் ஒரு விழிப்புணர்வுதான். இந்த மருந்துல இதுமாதிரியும் வரலாம்னு இப்ப தெரிஞ்சிருக்கு. இதுல கண் மருத்துவர் மீதோ, நோயாளியின் மீதோ, மருந்து நிறுவனத்தின் மீதோ எந்தக் குறையும் கிடையாது. அவர் சரியான மருந்தினைத்தான் தந்திருக்கார். இவங்களும் சரியாகத்தான் எடுத்திருக்காங்க.

ஆனா, ஒவ்வாமையால் இந்நோய் வந்திருக்கு. இதிலிருந்து மூன்று விஷயங்கள் முக்கியமானதாகப் பார்க்கிறேன். முதல்ல மக்கள் கண் சிவப்பாக இருக்குனு மருந்துக் கடைகள்ல சொட்டு மருந்து வாங்கிப் பயன்படுத்தக்கூடாது. ஏன்னா, பலரும் கண் சிவப்பாக இருந்தால் தொற்றுனு நினைக்கிறாங்க. அப்படியில்ல. அது அலர்ஜியாலும் சிவந்திருக்கலாம். அல்லது கண் அழுத்தம் காரணமாகவோ, கண்கள்ல தூசி விழுந்ததாேலா சிவந்திருக்கலாம். அல்லது சளி, தும்மல், இருமல் பிரச்னையாலும் சிலருக்கு கண் சிவப்பாகலாம்.

அதனால, எதுக்காகனு தெரியாமல் பார்மஸியில் பிரச்னையைச் சொல்லி சொட்டு மருந்து வாங்கக்கூடாது. முறையாகப் பார்த்து மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துக்கே இவ்வளவு பிரச்னை இருக்கும்போது, இவங்க இஷ்டத்துக்கு மருந்து வாங்கினால் அது பிரச்னையை அதிகரிக்கவே செய்யும். இரண்டாவது, இப்போது கண் சொட்டு மருந்தின் டிராப்பர்ல இருந்து வெளிவரும் மருந்தின் அளவு 25 மைக்ரோ லிட்டராக இருக்குது. ஆனா, கண்ணின் கொள்ளளவுனு பார்த்தால் 10 மைக்ரோ லிட்டர்தான்.

அதனால, பத்து மைக்ரோ லிட்டர்தான் போகும். மீதி 15 மைக்ரோ லிட்டர் மருந்து வெளியே வந்திடும். இது எங்கே போகும்னா, கண்ணுக்கும் மூக்கிற்கும் ஒரு தொடர்பு இருக்கு. அதன்பெயர் nasolacrimal ductனு பெயர். இதுவழியாகப் போய் ரத்தக்குழாய் மூலம் நேரடியாக ரத்தத்தில் கலந்திடும். வழக்கமாக நாம் சாப்பிடும் மருந்துகள் எல்லாம் வயிற்றுக்குள் கலந்து, பிறகு கல்லீரலுக்குச் சென்று வளர்சிதை மாற்றமாகிய பிறகே மற்ற பகுதிகளுக்குப் போகும். ஆனா, இங்க கல்லீரலுக்குப் போகாமல் நேரடியாகவே ரத்தத்திற்குள் வர்றதால பக்கவிளைவுகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

அதனால, மருந்து தயாரிக்கிற நிறுவனங்கள் இனிமேல் டிராப்பர் அளவை மாற்றணும். அதேபோல குழந்தைங்க கண்ணுக்கும், பெரியவங்க கண்ணுக்கும் வித்தியாசம் இருக்கு.
ஆனா, குழந்தைங்களுக்கென தனியாக சொட்டு மருந்து கிடையாது. பெரியவங்களுக்குப் போடுகிற அதே சொட்டு மருந்தைத்தான் குழந்தைகளுக்கும் போடுறோம். அதனால, குழந்தைகள் கண் தீர்வுக்குனு தனியாக உருவாக்க வேண்டியிருக்கு.

மூன்றாவது, கண்ணுல இருந்து மூக்கிற்குப் போகாமல் தடுக்க கண்ணும் மூக்கும் இணையும் இடத்தில் உள்ளே இருக்கும் punctum என்பதை அழுத்திக்கணும். அல்லது சொட்டு மருந்து போட்டதும் கண்களை 2 நிமிடம் மூடிக்கிடணும். அப்பதான் மூக்கிற்குள் சொட்டு மருந்து போகாது. இதை யாரும் சொல்றது கிடையாது. இந்த விழிப்புணர்வு முக்கியமானது. இதைப் பண்றதால இந்தமாதிரி கண் சொட்டு மருந்து ஒவ்வாமையைத் தடுக்கலாம்.

அப்புறம், கண்கள்ல நல்ல பாக்டீரியாக்கள் இருக்குது. இது என்னைக்கும் கண்களுக்கு நல்லதே செய்யும். ஆனா, நாம் மருந்துக்கடைகள்ல அநாவசியமாக ஆன்டிபயாடிக் சொட்டு மருந்தினை வாங்கிப் பயன்படுத்தும்போது இந்த நல்ல பாக்டீரியாக்களே அப்நார்மலாகி அலர்ஜியை ஏற்படுத்தும். அதனால, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் கண் சொட்டு மருந்தினைப் பயன்
படுத்தக்கூடாது...’’ என வலியுறுத்துகிறார் டாக்டர் சுரேஷ்குமார்.

பேராச்சி கண்ணன்