ஜெயிலர் பேரன்!



விஷால் மிஸ்ரா குரலில் ‘ஜெயிலர்’ படத்தின் நான்காவது பாடலாக ‘ரத்தமாறே... ரத்தமாறே...’ ஜூக் பாக்ஸில் வெளியானது. பாடலில் ரஜினி மழையில் குடை பிடிக்க... ரெயின்கோட்டில் முகம் புதைத்து, குனிந்த தலையுடன், லன்ச் பாக்ஸோடு, சூப்பர் ஸ்டாரின் வலது கரம் பிடித்து நிற்பது... அட, யூடியூபர் சுட்டிப் பையன் ரித்விக்கேதான்! 
கொரோனா பரவலில் குட்டீஸ்கள் வீட்டுக்குள் முடங்கிய நேரம் பார்த்து, “ரமேஷ் அங்க நிலைமை எப்படி இருக்கு?” என்று டாக்-பேக்கை ஒரு விரலில் அழுத்தி, ஊடகவியலாளர்களை ரித்து கலாய்த்த வீடியோ வைரலாக... அதில் பெண் கேரக்டரில் கலக்கியதும் ரித்துதான் எனப் புரியவே பலருக்கும் வெகுநேரம் எடுத்தது. அந்த அளவுக்கு பக்காவாக நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருந்தார் ரித்விக்.

நயன்தாராவின் பாதங்கள் மீது கால் வைத்து ‘O2’ படத்தில் மகனாக நடைபோட்டவர், அடுத்த படத்தில் நடிகர் கார்த்தியோடு கைகோர்த்தார். தனது மூன்றாவது படத்திலேயே சூப்பர் ஸ்டாரின் கரம் பற்றியிருக்கிறார். எப்படி நடந்தது இந்த மேஜிக்?

‘‘நடிகராகணும்னுதான் கனவு கண்டேன். எனது கனவை என் மகன் நிறைவேற்றுகிறான்...’’ பூரிக்கிறார் ரித்விக்கின் அப்பா ஜோதிராஜ். ‘‘எல்லோரையும் மாதிரி நானும் சாதாரணமாகத்தான் ‘ரித்து ராக்ஸ்’ யூடியூப் சேனலை ஆரம்பிச்சேன். 

அது சூப்பர் ஸ்டாரோடு நடிக்கும் அளவுக்கு ரித்துவைக் கொண்டு வந்து நிறுத்தும்னு கொஞ்சமும் எதிர்பார்க்கலை. ஏற்கனவே நெல்சன் சார் ரித்துவோட யூடியூப் வீடியோக்களைப் பார்த்திருக்கிறார். அதில் ஆட்டோ டிரைவர் கெட்டப்பில் ரித்து செய்த அட்ராசிட்டிஸ் நல்லாவே ரீச்சாகி வியூஸ்களை அள்ளியிருந்தது. அந்த வீடியோவை நெல்சன் சாரும் பார்க்க, ரித்துவின் நடிப்பு அவருக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு.

அவரோட கோ டைரக்டர் என்னை அழைத்து ‘உங்களை நெல்சன் சார் மீட் பண்ண விரும்புறார்’னு சொன்னாங்க. அவரைச் சந்திக்க சென்னை வந்தபோது, நானும் என் மனைவியும் நெல்சன் சாரின் அறைக்கு வெளியில்தான் இருந்தோம். 

ரித்து மட்டுமே அவரை சந்திச்சான்.இருவரும் என்ன பேசுனாங்கனு எங்களுக்கு தெரியாது. ஆடிஷன் எடுக்காமலே நெல்சன் சார் ஓகே சொல்லிட்டார். அதுவும் சூப்பர் ஸ்டாரோடு ரித்விக் நடிக்கும் வாய்ப்பை நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கலை. மகிழ்ச்சியில் திக்குமுக்காடிட்டோம்.

ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி ரித்விக்கை வைத்து போட்டோ ஷூட் ஒன்று நடந்தது. அப்ப நெல்சன் சார் ‘ரித்து சூப்பரா ஆக்ட் பண்றான். அவனோட யூடியூப் வீடியோ எல்லாம் பார்த்திருக்கேன். நீங்கதான அவனை இயக்குறீங்க. நல்லா பண்றீங்க’னு சொன்னார். ஒரு பெரிய இயக்குநர் அப்படி சொன்னது அவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்தது.

ரித்துவின் கேரக்டர் என்னனு படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க. ரஜினி சார், நெல்சன் சார் இயக்கம், சன் பிக்சர்ஸ் பேனர்... இதுபோதும். ரஜினி சாருக்கு பேரனா ரித்து நடிச்சிருக்கான். இதை மட்டும்தான் இப்ப சொல்ல முடியும். சென்னைல 20 நாள் ஷூட்டிங் போச்சு. யார் யார் காம்பினேஷன்ல நடிச்சான்னு எங்களுக்கே தெரியாது. 

அசிஸ்டண்ட் டைரக்டர்ஸ்தான் ரித்துவை கூட்டிட்டுப் போவாங்க.  ஷூட்டிங் முடிச்சு வீட்டுக்கு வந்தாலும் படம் பத்தி ரித்து பேச மாட்டான்! ரிலீஸுக்குப் பிறகுதான் அவன்கிட்ட ஷூட் அனுபவம் கேட்கணும்!’’ புன்னகைக்கிறார் ஜோதிராஜ்.

மகேஸ்வரி நாகராஜன்