ஜெயிலர் மகன்



‘‘ரஜினி சார் கூட நடிச்சதில் என்னை விடவும், என் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரை விடவும், அதிக சந்தோஷம் எங்க அப்பாவுக்குதான்...’’
ஊரே ‘ஜெயிலர்’ திருவிழாவில் இருக்க ‘அந்த ஜெயிலருக்கே நான் மகன்’ என்னும் உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் டபுள் ட்ரிபிள் குஷியில் இருக்கிறார் வசந்த் ரவி.

உங்க பார்வையில் ‘ஜெயிலர்’ எப்படி வந்திருக்கு?

மிகப்பெரிய சர்ப்ரைஸ் படமா இருக்கும். ரொம்ப நல்லா வந்திருக்கு. ஃபேன்ஸ் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து பார்க்கற மாதிரி நிறையவே ரஜினியிசத்தை இந்தப் படத்தில் பார்க்கலாம்.

பொதுவாகவே வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்பவர் நீங்கள்...

இந்த படத்தில் என்ன வித்யாசம்?

இதை ஒரு பெரிய வாய்ப்பா நான் பார்க்கிறேன். ரஜினி சார் படம்... இதைத் தாண்டி வேறு என்ன எதிர்பார்க்கணும். அதிலும் அவர் கூட வேலை செய்யும் பொழுது நிறைய விஷயங்கள் கத்துக்கலாமேனு தோணுச்சு. அவர் ஏன் சூப்பர் ஸ்டார் என்கிறது கண்கூடாகவே தெரிஞ்சது.  

ஷாட் முடிஞ்ச பிறகு கூட கேரவனில் போய் உட்காருவதோ ஓய்வெடுப்பதோ கிடையாது. அவருடைய போர்ஷன் முடிஞ்சாலும் கூட அங்கேயே உட்கார்ந்து நடக்கும் அத்தனை விஷயங்களையும் கூர்ந்து கவனிப்பார். எவ்வளவு பெரிய மனிதர்... ஆனா, அவர் அந்த ஸ்டார்டம் எதையுமே காட்டிக்க மாட்டார்.

‘ஜெயில’ரின் மகன்... எப்படி நடந்தது இந்த சம்பவம்?

ஒரு பர்சனல் வேலை நிமித்தமா பிரபல ஹோட்டலுக்கு போக வேண்டிய வேலை இருந்தது. அதே நேரம் நெல்சன் சாருடைய ‘ஜெயிலர்’ பட டிஸ்கஷன் அங்க நடந்துகிட்டு இருந்துச்சு. கரெக்டா நானும் லிஃப்ட்டில் இருந்து இறங்க எனக்கு நேர் எதிரே நெல்சன் சார்... சந்திப்பு நடந்துச்சு. ஒரு துறையைச் சேர்ந்த கலைஞர்கள் அப்படிங்கிற மரியாதை நிமித்தமா ரெண்டு பேரும் ‘ஹாய்’ சொல்லிக்கிட்டோம். அந்தச் சந்திப்பு ஒரு ஃபார்மலா ‘ஹாய்...’, ‘பை...’ என முடிஞ்சிடுச்சு.

எங்க அப்பாவும் ரஜினி சாரும் நண்பர்கள். ‘ரஜினி சார் படத்தை நெல்சன் சார் செய்யறாருன்னா கேட்டுப் பாரேன்’னு அப்பா என்கிட்ட சொன்னார். ‘நான் வேணும்னா ரஜினி சார் கிட்ட பேசவா’னு கேட்டார். பொதுவா எனக்கு யாராவது ரெகமெண்ட் செய்து வாய்ப்பு பெறுவதில் விருப்பம் கிடையாது. ‘நானாகப் போய் நிச்சயம் வாய்ப்பு கேட்க மாட்டேன்... நீங்களும் அப்படித்தானேப்பா, பிறகு நான் மட்டும் எப்படி... நிச்சயமாக கேட்க மாட்டேன்’னு சொன்னேன்.

அந்த மொமெண்ட் முடிஞ்சு அடுத்தடுத்த பட வேலைன்னு பிஸி ஆகிட்டோம். சரியா ஒரு மாதம் கழிச்சு நெல்சன் சார் ஆபீசிலிருந்து போன் வந்தது. ‘கதையில வர்ற இந்த கேரக்டருக்கு ஏற்கனவே ஹீரோவா நடிச்சுக்கிட்டு இருக்கற ஒருத்தர்தான் செய்யணும்... ஒரு மெயின் லீட் கேரக்டர். நீங்க செய்யறீங்களா’னு நெல்சன் சார் கேட்டார். ‘சாருக்கு ஓகேவா? ரஜினி சார்கிட்ட பேசிட்டீங்களா’னு நான் நெல்சன் சார்கிட்ட கேட்டேன். ‘உங்க கிட்ட பேசுறதுக்கு முன்னாடி சார்கிட்டதான் பேசிகிட்டு இருந்தேன் அவருக்கு டபுள் ஓகே’னு சொன்னார்.
 
இயக்குநர் நெல்சன் பற்றி சொல்லுங்க..?

அவருக்கு இந்தக் காட்சியில என்ன வேணும்... எப்படி வேணும்... என்கிறதுல தெளிவு இருக்கு. ஒரு கமர்சியல் படத்தை ரியலிஸ்டிக் மூவியாகவும் எடுக்கலாம் என்கிறது நெல்சன் சார் கிட்ட கத்துக்க முடிஞ்சது. அவர் செட்டில் டென்ஷன் ஆகி நான் பார்த்ததே கிடையாது. எதையுமே ரொம்ப கூலா, ஜாலியா சொல்லிட்டு போயிடுவார். அவரைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப சீரியசான ஒரு விஷயத்தையும் கூட கொஞ்சமா காமெடி மிக்ஸ் பண்ணி சொன்னாதான் ஆடியன்ஸ் திரும்பத் திரும்ப தியேட்டருக்கு வருவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கு.

ரஜினி சார் என்ன சொன்னார்... ‘ஜெயிலரு’டன் முதல் சந்திப்பு பற்றி சொல்லுங்க?

நிறைய பேசினோம். ஆனால், எனக்கு எல்லாமே பிளாங்க்கா இருக்கு. அவர் பேசும்பொழுது நாம நம்மள மறந்துடுவோம். முதல் தடவை பார்க்கும் பொழுது சும்மா பார்க்கக் கூடாது என்கிறதுக்காக ஒரு பூங்கொத்து கொண்டு போயிருந்தேன். ‘ரொம்ப நன்றி சார், உங்க கூட நடிக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு, சந்தோஷமா இருக்கு’னு சார்கிட்ட சொன்னேன்.
ஆனா, அடுத்து அவர் சொன்ன வார்த்தைகள்தான் ஆச்சர்யம்... ‘உங்கள மாதிரி ஒரு நடிகர் கூட நடிக்கிறதுக்கு எனக்கு பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கு. இந்தக் கேரக்டர் நீங்க செய்யலாமானு கேட்டாங்க... ஓகே சொல்லிட்டேன்...’னு சொன்னார்.

எவ்வளவு பெரிய நடிகர்... இப்படி சொல்லணும்னு அவசியமே இல்லை. ஆனா, சார் சொன்னார். என்னுடைய ‘தரமணி’ துவங்கி ஒவ்வொரு படமும் பார்த்திருக்கார். நிறைய பேசினார். நான் நிறைய கத்துக்கிட்டேன்.

உங்க அப்பா என்ன சொன்னார்?

நான் சினிமாவில் நடிக்கிறதே எங்க அப்பாவுக்கு பிடிக்கலை... குடும்பத்துக்கு ஒரு பிசினஸ் இருக்கு... அதை விட்டுட்டு திடீர்னு ஏன் சினிமா அப்படினு அப்பாவுக்கு ரொம்ப வருத்தம்.
ஆனா, என்னுடைய ‘தரமணி’, ‘ராக்கி’ படங்கள் எல்லாம் பார்த்த பிறகு அப்பாவுக்கு சந்தோஷமும், நம்பிக்கையும் வந்திடுச்சு. அப்பாவும், ரஜினி சாரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். அதனால் தன்னுடைய மகன் இந்தப் படத்தில் இருந்தால் நல்லா இருக்கும்னு அப்பா நினைச்சிருக்கார். எந்த சிபாரிசும் இல்லாம அந்த வாய்ப்பு எனக்கு வந்து ரஜினி சாருடன் நான் நடிக்கறதைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டார். என்னைவிட, எங்கள் குடும்பத்தில் இருக்கிற மத்தவங்களை விட எங்க அப்பா டபுள் ஹேப்பி.

உங்களின் அடுத்தடுத்த படங்கள்..?

தொடர்ந்து ரொம்ப கடினமான கேரக்டராக நடிச்சிட்டே இருக்கறேன். அடுத்து வரப்போகிற ‘வெப்பன்’ படமும் கூட ஆக்‌ஷன் கிரே ஷேட்தான். இந்த பிம்பத்தை மாத்தணும்னு ஒரு ரொமான்டிக் காமெடி படம் நடிக்க இருக்கேன். ‘கண்ட நாள் முதல்’, ‘கண்ணாமூச்சி ஏனடா’ படங்கள் இயக்கின வி.பிரியா இந்தப் படத்தை இயக்கப் போறாங்க.

ஷாலினி நியூட்டன்