உக்ரைன் போரில் மூன்று இந்தியர்கள்!
சுமார் ஐநூறு நாட்களைக் கடந்து பதற்றத்துடன் நீடித்து வருகிறது உக்ரைன் - ரஷ்யா போர். இதில், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர, லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகப் புலம் பெயர்ந்துள்ளனர். இதற்கிடையே கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை ரத்து செய்து தொடர்ந்து தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது ரஷ்யா. இதுஒருபுறம் இருக்க, மறுபுறம் இந்தப் போரில் ரஷ்யாவுக்கு எதிராக மூன்று இந்தியர்கள் ஈடுபட்டு வருவது இப்போது தெரியவந்துள்ளது.
 சமீபத்தில் இந்தியாவிலிருந்து வெளியாகும், ‘த வீக்’ ஆங்கிலப் பத்திரிகையின் துணை புகைப்பட ஆசிரியர் பானு பிரகாஷ் சந்திரா உக்ரைனுக்கு நேரடியாகச் சென்று போர்க் களநிலவரங்கள் பற்றியும், அதில் ஈடுபட்டு வரும் மூன்று இந்தியர்களில் இரண்டு பேர்களைச் சந்தித்துப் பேசியதையும், போர் தடங்களைப் புகைப்படங்கள் எடுத்தும் திரும்பியிருக்கிறார்.
 இந்த இரண்டு இந்தியர்களையும் அவர் டான்பாஸ் மாகாணத்தில் உள்ள கோஸ்ட்யாண்டினிவ்கா என்ற இடத்தில் சந்தித்துள்ளார். இருவருமே படிப்பிற்காக உக்ரைன் வந்தவர்கள். இவர்களில் ஒருவர் ஆன்ட்ரி. மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். 12 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் வந்தவர் அந்த நாட்டை தனது நிரந்தர வசிப்பிடமாக மாற்றிக் கொண்டவர்.
இப்போது ஓராண்டுக்கும் மேலாக உக்ரைனின் பிராந்தியப் பாதுகாப்புப் படையின் வெளிநாட்டு ராணுவப் பிரிவில் பணியாற்றி வருகிறார். போருக்கு முன்பு தனது தாடி கருப்பாக இருந்ததாகவும், இப்போது கிரே கலருக்கு மாறிவிட்டதாகவும் சொல்லும் ஆன்ட்ரி முகத்தை மறைத்தபடியே பேசுகிறார்.
‘‘உங்கள் வீட்டை யாராவது தாக்கினால் நீங்கள் சும்மா உட்கார்வீர்களா அல்லது சண்டையிடுவீர்களா?’’ எனக் கோபமாகக் கேள்வி எழுப்பும் ஆன்ட்ரி, ‘‘ரஷ்யர்கள் மக்களைக் கொல்கிறார்கள். அவர்கள் ராணுவ வீரர்கள் இல்லாத பகுதிகளையும் தாக்குகிறார்கள். கணவனின் முன்னாலே மனைவியை ரஷ்ய வீரர்கள் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்கள் மனிதர்கள் அல்ல. மிருகங்களை விட மோசமானவர்கள். அவர்கள் நேருக்கு நேராக வந்து சண்டையிட்டால் நிச்சயம் தோற்றுவிடுவார்கள்’’ என ஆக்ரோஷமாகச் சொல்கிறார்.
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண்ணை மணந்திருக்கும் ஆன்ட்ரிக்கு குழந்தைகளும் உள்ளனர். ஆன்ட்ரிக்கு நம் தென்னிந்திய உணவான இட்லியும் தோசையும் ரொம்பப் பிடிக்குமாம். அதை மிஸ் பண்ணுவதாகச் சொல்கிறார். இதுதவிர, தென்னிந்திய படங்கள் மீது அலாதி ப்ரியம் வைத்துள்ளார். ‘கேஜிஎப்’ பார்ட் 1, 2 பார்த்ததாகச் சொல்பவர், தான், ஜூனியர் என்டிஆரின் ரசிகன் எனப் புன்னகைக்கிறார்.
இந்தப் போரில் ஈடுபடும் இன்னொரு இந்தியரின் பெயர் நவீன். அரியானாவைச் சேர்ந்த இவர், அங்குள்ள கார்கிவ் ஏவியேஷன் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர். முதலில் உக்ரைனின் பாதுகாப்புப் படையில் இருந்தவர், இந்த ஆண்டு ஜனவரி மாதம் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். நவீனுக்கு, ஆன்ட்ரி அளவுக்கு சினிமாவில் ஆர்வம் இல்லை. ஆனால், கிரிக்கெட்டில் அதுவும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகுந்த ஆர்வம் உள்ளதாகக் குறிப்பிடுகிறார். இந்த யுத்தம் முடியும்வரை தொடர்ந்து போரிடுவோம் என உறுதிபட சொல்கின்றனர் இருவரும்.
பி.கே
|