Must Watch



பரேஷன்

ஒரு தெலுங்குப் படத்துக்குரிய மசாலாக்கள் எதுவுமில்லாமல் வெளிவந்திருக்கும் படம், ‘பரேஷன்’. ‘சோனி லிவ்’வில் காணக்கிடைக்கிறது. ஆர்ஜிவி, ஐசக், பாஷா, சத்தி ஆகிய நால்வரும் நெருங்கிய நண்பர்கள். சரியாக படிக்காமல், நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிக்கொண்டிருப்பதால் ஐசக்கிற்கு வீட்டில் எந்த மரியாதையும் இல்லை. அவனுக்கு நண்பர்கள் என்றால் உயிர்.

ஒரு நாள் ஐசக்கின் தந்தை அவனிடம் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து ஒருவரிடம் ஒப்படைக்கச் சொல்கிறார். அதே நாளில் நண்பன் ஒருவன் போலீஸில் மாட்டிக்கொள்கிறான். நண்பனை வெளியே கொண்டு வருவதற்காக அப்பா கொடுத்த பணத்தைக் கடனாகக் கொடுக்கிறான் ஐசக். நாட்கள் செல்கிறது. ஐசக்கின் பணம் திரும்பி வரவில்லை. அத்துடன் அவனது காதலி மூலம் இன்னொரு பிரச்னை ஐசக்கிற்கு ஏற்படுகிறது. அதுவும் பணம் தேவைப்படும் பிரச்னை. இவற்றை ஐசக் எப்படி சமாளிக்கிறான் என்பதே மீதிக்கதை.

எளிமையான கதையை வைத்துக்கொண்டு சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் ஒரு படத்தைக் கொடுத்திருக்கின்றனர். பெரும்பாலும் புதுமுகங்களாக இருந்தாலும், கதாபாத்திரங்களுக்குச் சரியாகப் பொருந்திப் போகின்றனர். படத்தின் இயக்குநர் ரூபக் ரொனால்ட்சன்.

தாரம் தீர்த்த கூடாரம்

‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப் படம், ‘தாரம் தீர்த்த கூடாரம்’. ஒரு விடுதியில் தங்கி உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறான் சஞ்சய். அவ்வப்போது ஏற்படும் மனப்பிரச்னையால் அவதிப்படுகிறான். வெளிநாடு செல்லும் திட்டம் வேறு அவனுக்கு இருக்கிறது. ஒரு வகையில் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறான் சஞ்சய்.

இன்னொரு பக்கம் அதே விடுதியில் தன் ஐந்து வயது தங்கையுடன் தங்கியிருக்கிறாள் இளம் பெண் இதயா. வாடகை கொடுக்க முடியாமல் விடுதியைவிட்டு வெளியேற்றப்படுகிறாள். கடன்காரர்கள் வேறு அவளைத் துரத்திக்கொண்டே இருக்கின்றனர்.தங்க இடம் இல்லாமல் தங்கையுடன் அலைந்து திரியும் இதயாவுக்கு உதவுகிறான் சஞ்சய். ஆம்; தான், தங்கியிருக்கும் அறையிலே ரகசியமாக இதயாவையும், அவளது தங்கையையும் தங்க வைக்கிறான் சஞ்சய்.

இதயா மீது சஞ்சய்க்கு காதல் மலர, அவனது வெளி நாட்டுப் பயணத்திட்டம் என்னவாகிறது என்பதே கிளைமேக்ஸ். தங்க இடம் இல்லாமல், வீடில்லாமல் வாழ்க்கையை நகர்த்துபவர்களின் வலியை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்தப் படம். இதன் இயக்குநர் கோகுல் ராமகிருஷ்ணன்.

 கிங்டம் 2: ஃபார் அண்ட் அவே

கடந்த சில வருடங்களில் வெளியான ஜப்பானிய படங்களில் அதிக வசூலைக் குவித்த படம், ‘கிங்டம் 2: ஃபார் அண்ட் அவே’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல்
பார்க்கலாம். போரினால் அனாதையாக்கப்பட்ட சிறுவன், சின். இப்போது வளர்ந்து இளைஞனாகிவிட்டான். வாள் வீச்சில் அவனை வீழ்த்த யாரும் இல்லை. ஆனால், போரில் பங்கேற்ற எந்த அனுபவமும் அவனுக்கு இல்லை.

கின் சாம்ராஜ்யத்தின் போர்ப்படைத் தளபதியாக வேண்டும் என்பது அவனது கனவு. இந்நிலையில் வெய் சாம்ராஜ்யத்தின் படை, கின் மீது படையெடுக்கிறது. இப்போரில் கின் சார்பாக பங்கேற்கிறான் சின். போர் அனுபவமே இல்லாத சின் எப்படி தன் திறமையைக் காட்டி போர்த்தளபதியாக விஸ்வரூபம் எடுக்கிறான் என்பதே ஆக்‌ஷன் திரைக்கதை.
வாள் சண்டைகள், போர்க் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

குறிப்பாக கியோகி என்ற பெண் சொந்தக் காரணங்களுக்காக கின் படையில் இணைந்து போரில் பங்கேற்பாள். அவளது வாள்வீச்சு அதகளப்படுத்துகிறது. படத்தின் பெரும்பாலான பகுதிகளை போர்க் காட்சிகளே ஆக்கிரமித்திருப்பதால், ஆக்‌ஷன் பிரியர்களுக்கு செம விருந்து படைத்திருக்கிறது இந்தப் படம். இதன் இயக்குநர் சின்சுகே சாடோ.  

ஹேப்பினெஸ் ஃபார் பிகினர்ஸ்

‘நெட்பிளிக்ஸின்’ டாப் டிரெண்டிங் பட்டியலில் இருக்கும் ஆங்கிலப்படம், ‘ஹேப்பினெஸ் ஃபார் பிகினர்ஸ்’. தமிழ் டப்பிங்கிலும் பார்க்க கிடைக்கிறது. சமீபத்தில் விவாகரத்தானவள் ஹெலன். தனிமையின் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக மலையேற்றத்துக்கு அழைத்துச் செல்லும் ‘பிகினர்ஸ்’ எனும் கோர்ஸில் சேர்கிறாள்.

உலகின் மிக நீண்ட மலைப் பயணத்துக்கு வழிகாட்டி, ஆட்களைத் தயார் செய்யும் கோர்ஸ் இது. அதாவது சுமார் 3,500 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலைப்பயணம். முன் பின் எந்த மலையேற்றத்திலும் பங்கு பெறாதவள் ஹெலன். இந்த மலையேற்றப் பயிற்சி வகுப்பில் ஆறு, ஏழு பேர் கலந்து கொள்கின்றனர். அதில் ஒருவன் ஜேக். ஹெலனின் தம்பி டங்கனின் நெருங்கிய நண்பன்தான் ஜேக்.

ஹெலனுக்கு டங்கனையும், ஜேக்கையும் பிடிக்காது. மட்டுமல்ல, எப்போதுமே டங்கனிடம் மோசமாக நடந்துகொள்வாள். இயற்கையுடன் இணைந்த மலைப்பயணம் ஹெலனுக்கு எதைக் கற்றுக்கொடுக்கிறது என்பதே திரைக்கதை. மிக நீண்ட மலைப்பயணம் செய்ததைப் போன்ற ஓர் அனுபவத்தைத் தருகிறது இந்தப் படம். இதன் இயக்குநர் விக்கி வெயிட்.  

தொகுப்பு: த.சக்திவேல்