தல! sixers story - 32



தி ஒன் அண்ட் ஒன்லி தல!

உலகக் கோப்பையைக் கையில் ஏந்தும் தருணம்தான் ஒரு கிரிக்கெட் வீரனின் உச்சபட்ச உயரம்.ஒரு கேப்டனாக கபில்தேவுக்குப் பிறகு அக்கோப்பையை ஏந்தும் வாய்ப்பு தோனிக்கு மட்டுமே கிடைத்தது.இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மீண்டும் சாம்பியன்.நாடெங்கும் விழாக்கோலம்.
அணிவீரர்கள் பார்ட்டியில் ஜமாய்த்துக் கொண்டிருந்தபோது, தோனி மட்டும் தனிமையில் சிந்தனைக்கு உள்ளானார்.அப்போது ஒருவர் யதேச்சையாக தோனியைக் கேட்டார்.

“உங்கள் கனவு இந்தக் கோப்பைதானே?”
இல்லையென்று தலையாட்டி மறுத்தார் தோனி.“உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், உலகக் கோப்பையை வெல்வோம் என்கிற நம்பிக்கையே எனக்கு இல்லை. போட்டி தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
‘என் கிரிக்கெட் வாழ்வின் ஒரே குறை, உலகக் கோப்பையை கையில் ஏந்தாததுதான்’ என்று விரக்தியோடு சொன்னார்.இந்திய கிரிக்கெட் உலகின் கடவுளான சச்சினுடைய அந்த மனக்குறை, அணியில் இருந்த வீரர்களை வேதனைப்படுத்தியது.

என்ன செய்தாவது இந்தக் குறையை நிவர்த்தி செய்தே ஆகவேண்டும் என்று சபதமிட்டோம். அந்த சபதத்தில் வென்றதுதான் உலகக் கோப்பையைவிட எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயம்...” என்றார்.தோனி சொன்னது உண்மைதான்.கோப்பையை வென்றபோது, கோப்பையை கையில் ஏந்துவதைவிட சச்சினை தங்கள் தோள் மீது சுமந்து ஸ்டேடியத்தைச் சுற்றிவரத்தான் இந்திய வீரர்கள் ஆர்வம் காட்டினார்கள்.தங்கள் கூட்டு வெற்றியை சச்சின் என்கிற மகா கிரிக்கெட் வீரனுக்கே சமர்ப்பித்தார்கள்.இது தோனியின் தலைமையில்தான் நடக்க வேண்டும் என்று விதித்திருக்கிறது.

தோனியைப் பொறுத்தவரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில்தான் அவரது பாச்சா செல்லுபடி ஆனது என்று இன்றும் விமர்சகர்கள் சிலர் குற்றம் சாட்டுவதுண்டு.இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் நெம்பர் ஒன் அந்தஸ்தை தோனி, கேப்டனாக இருந்தபோதுதான் எட்டியது என்பதை அவர்கள் வசதியாக மறந்துவிடுவார்கள்.கடுமையான உடல் உழைப்பைக் கோரும் விக்கெட் கீப்பிங் வேலை, கிரிக்கெட்டை மதமாகக் கருதும் நாட்டில் அணியின் தொடர்வெற்றிகளுக்கான யுக்திகளை திட்டமிட்டுக் கொண்டே இருக்க வேண்டிய சிந்தனைரீதியிலான மனப்பக்குவம், இந்திய பேட்டிங் வரிசையின் மிடில் ஆர்டர் தூணாக  சிக்கலான தருணங்களில் அணியை மீட்கும் மீட்பராக  மேட்ச் ஃபினிஷர் ரோல் என்று அவரது கிரிக்கெட் வாழ்வின் பெரும் பகுதியை கிரிக்கெட்டே ஆக்கிரமித்துக் கொண்டது.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அவரளவுக்கு வெற்றிகரமான கேப்டன்களை விரல்விட்டே எண்ணிவிடலாம்.கேப்டனாக விடுங்கள்.ஒரு பேட்ஸ்மேனாக எடுத்துக் கொண்டாலும் கூட இந்திய கிரிக்கெட்டின் டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியலில் நீண்ட காலத்துக்கு தோனியின் பெயரை தவிர்க்கவே முடியாது.இவை எல்லாவற்றையும் விட தோனி என்றாலே இன்னும் நூறாண்டுகள் கழித்தும் நினைவு கொள்ளத்தக்க அவரது பங்களிப்பு ‘ஹெலிகாப்டர் ஷாட்’.துல்லியமாக வீசப்படும் யார்க்கரை சிக்ஸருக்கு தூக்கியடிக்க முடியுமென்று தோனிக்கு முன்பாக எந்தவொரு பேட்ஸ்மேனும் கனவில் கூட கருதியதில்லை.

சச்சின் டெண்டுல்கர், விராத் கோஹ்லி போன்றவர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.
தோனியோ மிடில் ஆர்டர் மற்றும் வால் வரிசையில் சாதித்தவர் என்பதே அவரது தனித்துவம்.விக்கெட் கீப்பராக அவருடன் ஒப்பிடக்
கூடிய வேறொரு இந்திய வீரர் கிட்டத்தட்ட இல்லவே இல்லை எனலாம். மோங்கியா, கிரண் மொரே போன்றவர்கள் அவருக்கு வெகுதூரத்தில் இருக்கிறார்கள்.இந்திய அணிக்கு தோனி அளித்த உழைப்புக்கு இணையாக வெகு சில வீரர்களே உழைத்திருக்கிறார்கள்.

ஒரு விக்கெட் கீப்பர்-ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோராயமாக 540 முறையும், ஓர் ஒருநாள் போட்டியில் 300 முறையும், ஒரு டி20 போட்டியில் 120 முறையும் தன் உடலை வளைத்துக் குனிந்து வீசப்படும் ஒவ்வொரு பந்தையும் கவனிக்க வேண்டும்.சர்வதேச அளவில் தோனி 90 டெஸ்ட் போட்டிகள், 350 ஒருநாள் போட்டிகள், 98 டி20 போட்டிகள் விளையாடி இருக்கிறார்.

ஒரு கால்குலேட்டர் இருந்தால் இந்திய அணிக்காக தோராயமாக எத்தனை முறை தன் முதுகெலும்பை தோனி வளைத்திருப்பார் என்று கணக்குப் போட்டுப் பாருங்கள். உள்ளூர்ப் போட்டிகளெல்லாம் கணக்கெடுத்தால் தலையே சுத்தும்.விக்கெட் கீப்பிங்கில் மட்டுமே ‘எந்திரன்’ ரோபோ கணக்காக தோனி, ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார். ஹெலிகாப்டர் ஷாட்டுகள் நமக்குக் கூடுதல் போனஸ்தான்.

இந்தியா மாதிரி கிரிக்கெட் வெறி இரத்தத்தில் ஊறிய ஒரு நாட்டில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக, சிக்கலான நேரங்களில் காக்கும் ரட்சகனாக, உலக சாம்பியன் வீரனாக நீண்டகால சேவை புரிய முடிவது என்பது தரக்கூடிய மனரீதியான அழுத்தங்களை கற்பனையில் கூட நாம் வரையறுக்க முடியாது.அப்படியிருக்க உலகக் கிரிக்கெட் வரலாற்றில், தோனியைப் போன்ற கன்சிஸ்டென்ட் ப்ளேயர் என்று வேறொருவரை விரல் சுட்டி நம்மால் அடையாளப்படுத்தவே முடியாது என்பதுதான் தோனியின் சாதனை.

எவ்வளவு பெரிய ஜாம்பவான் பவுலராக இருந்தாலும் தோனி களத்தில் இருந்த காலம் வரை அவருக்கு ஒவ்வொரு பந்து வீசும்போதும் அச்சப்பட்டார்கள் என்பது உண்மை.எனவேதான் -ஓய்வு பெற்ற பிறகும் கூட உலகக் கிரிக்கெட் கவுன்சில் கற்பனையில் வரையறுக்கும் உலகக் கனவு கிரிக்கெட் அணியில் தோனியின் பெயர் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

(அடித்து ஆடுவோம்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்