இது முழு ஆக்‌ஷன் படம்!



‘‘இது ஒரு ட்ராவல் படம். யதார்த்தமோ, லாஜிக்கோ எந்த இடத்திலும் மீறாத படமா இருக்கும். தொழில்நுட்ப நேர்த்தியிலும் மிஞ்சி நிற்கணும் என்பதே என் ஆசை. ரஜினிகாந்த் 90களில் வந்த படங்களில் ‘தூள் டக்கர் மா’னு சொல்லுவார். இந்தப் படத்திற்கு ‘டக்கர்’ என்ற வார்த்தை நல்ல பொருத்தமான டைட்டிலா அமைஞ்சது.

அகராதியில் எடுத்துப் பார்த்தால் டக்கர்னா ‘மோதல்’னு அர்த்தம் சொல்லுது. யெஸ். அதுவும் சரிதான். இதில் சித்தார்த் முழு ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார். இப்படி ஆவேசமா அவர் ஆக்‌ஷன் செய்து நீங்கள் பார்த்திருக்க முடியாது...’’ இன்னும் ‘டக்கர்’ பற்றிப் பேசத் தயாராகிறார் இயக்குநர் கார்த்திக் ஜி.கிருஷ். ‘கப்பல்’ படத்தில் ‘அட’ போட வைத்தவர். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் சீடர்.

சித்தார்த் உள்ளே வந்ததெப்படி?
ஒரு நல்ல திடகாத்திரமான கேரக்டர். அவருக்கு தலைமைப் பண்பும், துணிச்சலும், உடனே முடிவெடுத்து வழிநடத்துற திறனும் இருக்கணும். ஸ்கிரிப்ட் முடிச்சதும் சரி, முன்னாடியும் சரி மனதிற்குள் இருந்தது சித்தார்த்தான். அவரை லவ்வர் பாய்னு சொல்வாங்க. அதை படிப்படியாக குறைச்சு, இதில் அந்த இமேஜை அநாயாசமாக உடைச்சு எறிஞ்சிருக்கார். இது நிச்சயமா புது சித்தார்த். ‘இதில் இருக்கிற கம்பீரம், ஆக்‌ஷன், நடை, உடை, பாவனை எல்லாமே எனக்கே புதுசா இருக்கு’னு சித்தார்த்தே சொன்னதுதான் அழகு.

குறிப்பா ரசிகை களையும் இன்னும் அவருக்குக் கொண்டு வந்து சேர்க்கும். எங்க டைரக்டர் அவரை அறிமுகப்படுத்தி வைச்சார். அதுக்கு முன்னாடி உதவி இயக்குநராகவும் இருந்து சினிமா அறிந்தவர். இது கமர்ஷியல் படம்தான். இந்த டைப்பில் ஒரு கமர்ஷியல் படம் உங்களுக்கு புதுசு. ஈகோ பிடிச்ச ஹீரோ, கூடவே ஈகோ பிடிச்ச ஹீரோயின். இவங்க ஒரு பாய்ண்ட்ல சந்திக்கிறாங்க.

ஹீரோவுக்கு பணக்காரன் ஆகணும் என்பது மட்டுமே ஆசை. ஹீரோயினுக்கு பணம் என்றாலே வெறுப்பு. இவர்களின் காதலும் மோதலும் படத்துல இருக்கு. இவங்ககிட்ட காதல் தோன்றுகிற விதமும் நல்லா வந்திருக்கு. பெரிய சேஸிங் சீன் ஒண்ணை படம் பிடிச்சிருக்கோம். சிட்டிக்கு உள்ளே இப்படியொரு சேஸிங்கை நீங்க பார்த்திருக்க முடியாது. சித்தார்த் அருமையா செய்து கொடுத்தார். அசௌகரியத்தைப் பொருட்படுத்தாமல் மெனக்கெட்டு பண்ணினார். சொன்ன டயத்திற்கு வந்து நிற்பார். தொழில்முறை நடிகர். எனக்கு திருப்தி வருவது எத்தனையாவது டேக்கா இருந்தாலும் மலர்ச்சியோடு நிற்பார்.

கேரக்டரின் தேவையை, நியாயத்தைப் புரிஞ்சுக்கிட்டு ஸ்பாட்டுக்கு வருவதுதான் ஒரு நல்ல நடிகருக்கு அழகு. அது சித்தார்த்திடம் ஏராளமா இருக்கு.
திவ்யன்ஷா அருமையா இருக்காங்க...அருமையா இருந்தால்தானே நல்லாயிருக்கும்! உங்க கண்ணு பட்டால்தானே எங்களுக்கு நல்லது! அவங்க தோற்றம், அழகு, கவர்ச்சி இதையெல்லாம் தள்ளி வைங்க. இதில் அவங்களோட துறுதுறு நடிப்பு, நிச்சயம் தனிப்பட்டவிதமா இருக்கும். ஸ்கிரிப்ட்டில் இறங்கி உள்ளே போயிட எப்பவும் ரெடியா இருப்பாங்க.

திவ்யன்ஷா, முதலில் ‘மஜிலி’னு ஒரு தெலுங்குப் படத்தில் பிரபலம் அடைஞ்சாங்க. அவங்களை அப்படியே இந்தப் பக்கம் அழைச்சிட்டு வந்திட்டோம்.
யோகிபாபு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஆர்ஜே விக்னேஷ்காந்த் ஒரு நல்ல ரோலில் வர்றார். முனீஸ்காந்த் இப்பவெல்லாம் குணச்சித்திரத்தில் ஒரு அருமையான இடத்திற்கு வந்து நிற்கிறார். அவர் ஒரு ரிடையர் ரெளடியா வர்றார். காமெடி, ஆக்‌ஷன், லவ்னு படம் கலந்துகட்டி நிக்கும். ட்ராவல் மூவிக்கான ஒரு ஓட்டமும் நடையுமான அம்சமும் இருக்கு.

பாடல்கள் நல்லா வந்திருக்கு…
நிவாஸ் கே.பிரசன்னா ஆறு பாடல்கள் செய்திருக்கார். படத்திற்கான இடைவேளை மாதிரி அமைஞ்சிடாமல் அருமையா வந்திருக்கு. கௌதம்மேனன், சிம்பு, ஆண்ட்ரியானு எல்லோரும் பாடி ஒருவிதமான கலவையா பாடல்கள் வந்திருக்கு. சித்தார்த்தின் புது அவதாரத்திற்குக் கவனப்படுகிற மாதிரியும் பாடல்கள் இருக்கு.

கேமராமேன் வாஞ்சிநாதன், மிக இளைஞன். இப்ப அதிகம் விரும்பப்படுகிற ஒளிப்பதிவாளராக வந்திட்டு இருக்கார். அவர்தான் இந்தப் படத்தை அடுத்த கட்டத்திற்கு அழைச்சிட்டுப் போயிருக்கார். நான் இப்ப வரைக்கும் பேசிட்டு இருக்கிறதெல்லாம் அவர் முடித்துக் கொடுத்த காட்சிகளின் அடிப்
படையில்தான். பாடல்களில் நிவாஸ் கே.பிரசன்னாவின் முயற்சிகளும் அதேமாதிரிதான். முன்பு போல மியூசிக் கேட்கிறவர்கள் சாதுவாக இல்லை. ஏதாவது இசை புதுசாகக் கிளம்பி வரணும்.

ரசிகர்களே அத்தனையும் தெரிஞ்ச புத்திசாலிகளாக இருக்கிற சீசன் இது. அவங்களுக்கு புதுசு புதுசா எதாவது வேணும். அது பிரசன்னாவிடம் இருக்கு.
படம் தொடங்கிய உடனே என் குருநாதர் ஷங்கர் சார்கிட்டே தெரிவிச்சேன். வாழ்த்து சொன்னார். புது வருஷத்திற்குக்கூட ‘டக்கரான நியூ இயர் அமையட்டும்’னு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்!

 நா.கதிர்வேலன்