கர்நாடக மாநிலத்தில் மடாதிபதியான இஸ்லாமியர்!



உள்ள லிங்காயத்து மடத்தில் ஓர் இஸ்லாமியரை மடாதிபதியாக நியமித்து ஆச்சரியம் கிளப்பியிருக்கிறார்கள். லிங்காயத்து என்ற மதப் பிரிவு இந்து மதத்திலிருந்த சாதி ஏற்றத்தாழ்வு, வேதம், பெண் இழிவுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்டது. இதைத் தோற்றுவித்தவர் கர்நாடகாவில் 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த பசவன்னா என நம்பப்படுகிறது. இஸ்லாமியர் நியமனம் லிங்காயத்து மதப்பிரிவை எம்மதமும் சம்மதம் எனும் அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியிருப்பதாக பலரும் நம்புகிறார்கள்.

ஆனால், ‘‘இந்தச் செயல் ஒரு கண்துடைப்பு...’’ என்கிறார் ஆய்வாளர் ராமானுஜம். அவர் சொல்லும் கருத்துக்கு முன் இந்த லிங்காயத்துக்

களுடன் ஒப்பிட்டுப் பேசும் இன்னொரு மதப் பிரிவான வீரசைவர்களைப் பற்றிப் பார்ப்போம்.வீரசைவம் வேதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. லிங்காயத்தை உருவாக்கிய பசவன்னருக்கு குருவாக இருந்தவர் ஒரு வீரசைவர் என்று வீரசைவர்கள் சொல்கிறார்கள்.
கன்னடத்தில் முதல் முறையாக உரைநடையை அறிமுகப்படுத்திய எழுத்தாளர்களை வசனக்காரர்கள் என்பார்கள். இவர்கள் பசவன்னா பற்றியும் லிங்காயத்து மதம் பற்றியும் எக்கச்சக்கமாக எழுதியுள்ளனர். ஆனால், சில மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சியில் அவை எல்லாம் அழிந்துவிட்டன.

காலப்போக்கில் வீரசைவம் பசவன்னரை வழிபடுவதும், லிங்காயத்துக்களும் தங்களை வீரசைவத்தினர் என்று கூறிக்கொள்ளும் போக்குகளும் ஊடாடியதால் இந்த இருபிரிவுகளுக்கும் இடையேயான ஒற்றுமைகள் அதிகமாகின.ஆனால், 2008ல் இந்த ஒற்றுமைக்கு உலை வைக்கும் நடவடிக்கைகள் எழுந்தன. அது தேர்தல் காலம். பாஜக வளர்ந்துவந்த காலம்.

தென்னகத்தில் அந்தக் கட்சியால் காலூன்ற முடியாது என்று நினைத்தபோது 2008ம் ஆண்டு கர்நாடகாவில் பாஜகவின் எடியூரப்பா முதல்வரானார். இது தென்னிந்தியாவைக் கொஞ்சம் அசைத்துதான் பார்த்தது. எடியூரப்பா லிங்காயத்துப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதுதான் இந்த ஆச்சரியத்துக்குக் காரணம்.

இந்து மதத்தை எதிர்த்துக் கிளம்பிய ஓர் அமைப்பு எப்படி ஓர் இந்துத்துவாவைத் தூக்கிப்பிடிக்கும் கட்சிக்கு வாக்களித்தது என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், அந்த தேர்தலில் இரண்டுக்கும் நேரடியாக முடிச்சுப்போட முடியவில்லை. 2018ம் ஆண்டு தேர்தல் அப்படியல்ல. அப்போது ஆட்சியில் இருந்தது சீதாராமையாவின் காங்கிரஸ் கட்சி. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் லிங்காயத்துக்களுக்கு இந்து மதத்திலிருந்து விடுதலை கொடுக்கும் படியும், அதற்கு சிறுபான்மை மதத்துக்கான அங்கீகாரம் கொடுக்கும்படியும் சீதாராமையா மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

எதிர்த்தரப்பில் போட்டியிட இருந்த எடியூரப்பாவோ ‘‘இந்தச் செயல் இந்துக்களைப் பிரிக்கும் செயல்...’’ என்று அதை எதிர்த்தார். ‘‘இந்து அல்ல...’’ எனச் சொல்லும் தன் சமூகத்தின் குரலை எடியூரப்பாவால் தாங்கிப் பிடிக்க முடியாததை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள் அரசியல் விமர்சகர்கள். மொத்தத்தில் இரு கட்சிகளுமே லிங்காயத்துக்களை வைத்து அந்த தேர்தலில் அரசியல் செய்ய முயற்சித்தன.

கர்நாடக மக்கள்தொகையில் லிங்காயத்துக்கள் சுமார் 17 சதவீதம் இருக்கலாம். 100 சட்டமன்றத் தொகுதிகளில் லிங்காயத்துப் பிரிவு செல்வாக்குடன் இருக்கிறது.இந்நிலையில் சீதாராமையாவின் கோரிக்கையைக் கிடப்பில் போட்டது மத்திய அரசு. அத்துடன் அதற்குக் காரணமாக லிங்காயத்துக்கள் அனுபவித்து வரும் பட்டியல் இனத்துக்கான இட ஒதுக்கீடு ரத்தாகலாம் என மிரட்டி தன் பங்குக்கு அரசியல் செய்தது.

கர்நாடகாவின் இந்த லிங்காயத்து அரசியலை வைத்து அண்மையில் ‘மாநில அரசியலும் தேசிய அரசியலும்’ என்று கட்டுரை எழுதிய ராஜன்குறை இந்த விஷயத்தைத் தெளிவு படுத்துகிறார்.‘‘பாஜக கட்டவிரும்பும் இந்து மதவாத அடையாளம், அது சார்ந்த தேசிய அடையாளம் இரண்டுமே மாநில வேர்களைக் கொண்டவை. உதாரணமாக கர்நாடகாவில் லிங்காயத்துக்கள் என்ற நிலவுடமை வகுப்பினரே பாஜகவின் ஆதரவுத் தளமாக உள்ளனர். ஆனால், லிங்காயத்துக்கள் இந்து மதமே கிடையாது என்று வாதிடும் அளவு அது தனித்துவமான அடையாளம் கொண்டது.

இதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுவேறு சமூக, சாதி பின்புலங்களும் அவர்களுடைய அரசியல் நலன்களும், அதிகாரப் போட்டிகளுமே அரசியலைத் தீர்மானிக்கின்றன. இத்தோடு இன்றைக்கான பொது அடையாளமாக மாநில அடையாளமும், மொழி அடையாளமும் விளங்குகிறது.

இந்தப் பொது அடையாளத்தை நீக்கி, சாதி, சமூக முரண்பாடுகளைக் கடந்து இந்து, முஸ்லீம் என்ற முரண்பாட்டை அரசியல் விசையாக பாஜக போன்ற இந்துத்துவா கட்சியால் ஒருபோதும் மாற்ற முடியாது...’’ என்று ராஜன் குறை முடிக்க, சமூக ஆய்வாளரான னிவாசன் ராமானுஜம் இதுதொடர்பாக மேலும் விளக்கினார்:

‘‘அன்றாடம் எப்படி வாழ்கிறோம் என்பதுதான் நம்மைத் தீர்மானிக்கிறது. அப்படிப் பார்த்தால் நாம் ஒவ்வொருவருமே நிச்சயமாக ஒரேமாதிரியான இந்துக்களாக வாழவில்லை என்பது புலனாகும். இந்தியாவில் மதங்களைவிட மார்க்கப் பிரிவுகள்தான் அதிகம்.

உதாரணமாக சிவ பக்தர்கள், வைணவ பக்தர்களுக்கிடையேயே பல்வேறுவிதமான வேறுபாடுகள் இருக்கும்போது மற்ற பிரிவுகளை என்ன சொல்வது? சைவ வேதாந்தம், நாராயணகுரு, வைகுண்டசாமி, சைதன்ய மதம், விவேகானந்தர், ஹரே ராம ஹரே கிருஷ்ணா, ஐயப்பன் சாமி, பங்காரு அடிகள்... இன்னும் கிராமங்களில் குலசாமிகள் என்று இந்தியாவில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் விதவிதமான மத மார்க்கங்கள்தான் உண்டு.

இவ்வளவு வேறுபாடுகள் இருக்க இவற்றை எல்லாம் இந்து மதமாக சொல்லமுடியுமா? உண்மையில் இந்த மார்க்கங்கள் எல்லாமும் ‘நாங்கள் இந்துக்கள் அல்ல’ என்று லிங்காயத்துக்கள் சொன்னமாதிரி சொன்னால் இந்தியாவில் என்ன நடக்கும்? ஆனால், இந்தியாவை ஒன்றுபடுத்த ஒரு விஷயம் உள்ளது. அதுதான் தீண்டாமை. இதனால்தான் காந்தி இந்த விஷயத்தை கையில் எடுத்தார்.

காந்தி தன்னை இந்து என்று சொன்னார். ஆனால், தீண்டாமையை எதிர்த்ததன் மூலம் அவர் தன்னை ஓர் இந்து ஆன்மீகவாதியாக பிரகடனம் செய்துகொண்டார். இதை பாஜக செய்யுமா? லிங்காயத்து, வீரசைவம் போன்ற மத மார்க்கங்களில் உள்ள தீண்டாமை போன்ற சமூக முரண்பாடுகளைக் களையாமல் அதை அரசியலுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்றுதான் பாஜக உட்பட இந்துத்துவா அரசியல் செய்யும் கட்சிகள் முயற்சிக்கின்றன.

உண்மையில் லிங்காயத்து போன்ற பிரிவுகள் சாதிக்கு எதிராகத் தோன்றினாலும் இன்றைய அளவில் கர்நாடகாவில் ஒரு மிக மோசமான தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் ஒரு மதப் பிரிவாகத்தான் அது மாறியிருக்கிறது. ஒரு மடத்தில் இஸ்லாமியரை நியமித்தது மாதிரி இனி முழு லிங்காயத்து மதத்துக்குமே ஓர் இஸ்லாமியரையோ அல்லது கிறிஸ்துவரையோ அவர்களால் நியமிக்க முடியாது. சில இடங்களில் பெருவாரியாக இருக்கும் மக்களைக் கவர்வதற்காக இஸ்லாமியர், தலித்துக்கள் என்று சில மடங்களுக்கு மட்டுமே அவர்களை நியமிக்க முடியும். காரணம், அந்த மார்க்கங்களில் இன்று பரவியிருக்கும் தீண்டாமை.

உண்மையில் இந்தியாவில் உள்ள பல மத மார்க்கங்கள், தீண்டாமை போன்ற சமூகத் தீங்குகளைக் களைவதற்காக ஏற்பட்ட மார்க்கங்கள். இவற்றை எல்லாம் மறுபடியும் தீண்டாமை எனும் சகதிக்குள் விழவைக்கும் முயற்சியையே பாஜக உள்ளிட்ட இந்துத்துவ சக்திகள் மேற்கொள்கின்றன.

ஆனால், ஒவ்வொரு மார்க்கத்துக்கும் இந்தியாவில் ஓர் அறம் இருக்கிறது. இந்த அறத்தை அரசியலுக்காக விட்டுக்கொடுக்க மார்க்கங்கள் முன்வராது என்றுதான் நினைக்கிறேன். அறம் விட்டுப்போனால் மார்க்கமே ஒழிந்துவிடும். இதுதான் பாஜக போன்ற இந்துத்துவா கட்சிகளுக்கு ஒரு பெரும் தடையாக இருக்கும்...’’ என்றார் ராமானுஜம்.

டி.ரஞ்சித்