சாபக்கேடு to வெற்றிக்கோடு!
சர்வதேச பேட்மின்டன் போட்டிகளில் பூசர்லா வேங்கட சிந்து - அதாங்க நம்ம பி.வி.சிந்து - விளையாடப் போகிறார் என்றாலே, ‘ஃபைனல் வரை வருவாங்க… அப்புறம் வழக்கம்போல வெள்ளிதான் கிடைக்கும்...’ என்ற பேச்சு விரக்தியின் வெளிப்பாடாகத் தொடங்கி சமூக வலைத்தளங்களில் கிண்டல் கேலி மீம்ஸ்களாகவும், விளையாட்டு நிபுணர்களின் கடும் விமர்சனங்களாகவுமே மாறிப்போனது.
 சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில், ஆகஸ்ட் 19ம் தேதி உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கியபோதும், சிந்துவின் இந்த ‘ஃபைனல் சாபக்கேடு’ பற்றிய பேச்சே வைரலானது. ஒலிம்பிக்சில் வெள்ளி, உலக பேட்மின்டன் போட்டியில் ஏற்கனவே 2 வெண்கலம், 2 வெள்ளி வென்றிருந்தாலும், தங்கப் பதக்கத்தை முத்தமிட முடியாததால் இந்த ஏளனப் பேச்சுகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
சாய்னா உட்பட இந்தியாவின் பதக்க நம்பிக்கைகள் ஒவ்வொன்றாக தகர்ந்து கொண்டே இருக்க, சிந்து ஒவ்வொரு சுற்றாக முன்னேறி கால் இறுதி, அரை இறுதியில் வென்று இறுதிப் போட்டியில் அடி வைத்தபோது… ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு இருந்தாலும், எதிர்த்து விளையாடப் போவது ஜப்பானின் நஸோமி ஓகுஹரா என்பதால் இம்முறையும் வெள்ளிதான் என்று ரசிகர்கள் முடிவே செய்துவிட்டார்கள்.
‘தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலக சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடப் போகிறார். இந்தியாவுக்காக குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்திருக்கிறார்’ என்பதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. ‘சாபக்கேடு’ தொடர்ந்தால் கொத்திக் குதற ஒரு கழுகுக் கூட்டமே காத்துக் கொண்டிருந்தது.
2017 ஃபைனலில் ஓகுஹராவிடமும், 2018 ஃபைனலில் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினிடமும் (ஸ்பெயின்) மண்ணைக் கவ்வியிருந்த சிந்து எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. தனக்கே உரிய மன உறுதியுடன் இறுதிப் போட்டியை எதிர்கொண்டார். ஒவ்வொரு ஸ்மேஷும் இடியென இறங்கியது. அவரிடமிருந்து இப்படி ஓர் அதிரடி ஆட்டத்தை சற்றும் எதிர்பார்க்காத ஓகுஹரா நிலைகுலைந்து நின்றார்.
முதல் செட்டை சிந்து 21 - 7 என கைப்பற்றினாலும், ரசிகர்களின் அவநம்பிக்கை அப்படியேதான் இருந்தது. ஆனால், வேகத்தை கொஞ்சமும் குறைக்காத சிந்து 21 - 7, 21 - 7 என்ற நேர் செட்களில் ஓகுஹராவை வீழ்த்தி உலக சாம்பியனான அந்தத் தருணம், இந்திய பேட்மின்டன் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டது. இது வெறும் வார்த்தை அல்ல… சத்தியம்! களத்தில் அப்படியே மல்லாக்க வீழ்ந்து ஆர்ப்பரித்த சிந்துவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
சாபக்கேடு விமர்சனமெல்லாம் தகர்ந்து சுக்குநூறாகத் தெறிக்க, தங்கப் பதக்கத்தை முத்தமிட்டு சாதித்தார் சிந்து.உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை அவரது கிரீடத்தில் வைரக் கல்லாக ஜொலிக்கிறது. உலகப் போட்டியில் இது அவரது 5வது பதக்கம். இந்த வகையில் சீனாவின் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் ஸாங் நிங்கின் சாதனையையும் சமன் செய்திருக்கிறார். ஸாங் நிங்கும் ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் வென்றிருப்பது அபூர்வமான ஒற்றுமை.
‘இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும்…’ என ‘விவேகம்’ படத்தில் அஜித்தின் அனல் பறக்கும் பஞ்ச் டயலாக்கை நினைவுபடுத்துகிறது சிந்துவின் இந்த அசாத்தியமான சாதனை. மூன்றாம் முறை அதிர்ஷ்டம் என்பார்கள்… அது இந்த வெற்றிக்குப் பொருந்தாது! ஆம்… ஒவ்வொரு புள்ளியும் அவரது கடுமையான பயிற்சிக்கும், விடாமுயற்சிக்கும், களத்தில் சிந்திய வியர்வைக்கும் சொந்தம். இதில் அதிர்ஷ்டம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி கொச்சைப்படுத்துவது படுகொலைக்குச் சமம்.
அரசியல், விளையாட்டு, சினிமா… என்று பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் சிந்து. தாயகம் திரும்பியதும் தில்லி, இந்திராகாந்தி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தவர், ‘அனைவருக்கும், குறிப்பாக என் மீது நம்பிக்கை வைத்த ரசிகர்களுக்கு நன்றி. அவர்களின் ஆதரவும் வாழ்த்துமே இந்த வெற்றிக்குக் காரணம்.
நீண்ட காத்திருப்புக்குப் பின்னரே இது கிடைத்திருக்கிறது. இரண்டு முறை வாய்ப்பைத் தவறவிட்டாலும், இறுதியில் சாதித்துவிட்டேன். இன்னும் கடினமாக உழைத்து மேலும் பல பதக்கங்களை வெல்ல முயற்சிப்பேன். மகத்தான தருணம் இது. ஒரு இந்தியனாக மிகவும் பெருமைப்படுகிறேன்...’ என்றார் மகிழ்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிய.கமான் சிந்து… 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் காத்திருக்கிறது உங்களுக்காக!
ஷங்கர் பார்த்தசாரதி
|