விநாயகரை விதைக்கலாம்!
ஆம்... விநாயகர் சதுர்த்திக்காக வாங்கும் விநாயகரை இனி ஆறுகளிலோ அல்லது கடலிலோ கரைக்க வேண்டாம். மாறாக பூமியில் புதைக்கலாம். அவரும் செடியாக வளருவார்!
 ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா..? இந்த அதிசயத்தைத்தான் பெங்களூரைச் சேர்ந்த ‘தமாலா’ (Tamaala) என்னும் கிராமப்புற கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் அமைப்பு உருவாக்கி உள்ளது.சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ், கெமிக்கல் வண்ணங்கள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்துவிட்டு விநாயகரை விதைத்து வையுங்கள் (Plant Ganesha) என அறிவிக்கிறார்கள்! ‘‘‘தமாலா’னா ‘பசுமைமாறா மரம்’னு (evergreen tree) அர்த்தம். சமஸ்கிருதம், ஜப்பானீஸ், அராபிக்னு பல மொழிகள்ல இந்த தமாலா பயன்படுத்தப்படுது.
 எங்க நோக்கம் இந்திய கிராமப்புறக் கலைகளை நகரத்து மக்கள்கிட்ட கொண்டு சேர்க்கறதுதான். தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான்னு இந்தியா முழுக்க 115 கிராமக் கலைஞர்களுடைய படைப்புகள் எங்க ‘தமாலா’ல கிடைக்கும்...’’ என இன்ட்ரோ கொடுத்தபடி பேச ஆரம்பித்தார்கள் தமாலா இணை நிறுவனர்களான வினய் பிரசாந்த்தும் திருமதி சுவர்ணகாமாட்சியும்.
‘‘சுவர்ண காமாட்சி அடிப்படைல ஒரு ஓவியர். அவங்களுடைய ஐடியாதான் இந்த விதை விநாயகர். முதலும் முக்கியமானவருமா விநாயகரை வெச்சு அவரையே சூழலுக்கு எதிரா மாத்தி நீர்நிலைகளைக் கெடுக்கறது என்ன நியாயம்?
எந்த வண்ணம் பூசினாலும் சரி... எல்லாமே கெமிக்கல்தான். நீர்நிலைகளையும் அதுல இருக்கற உயிரினங்களையும் அழிக்கக் கூடியவைகள்தான். இதைத் தடுக்க எங்களால என்ன முடியும்கற சிந்தனைதான் இன்னைக்கு பிளான்ட் கணேஷாவா உருவாகியிருக்கார்!’’ என்ற வினய் பிரசாந்த், இப்போதைக்கு துளசி விதைகளை மட்டுமே தாங்கள் பயன்படுத்துவதாகக் குறிப்பிடுகிறார்.
‘‘ஏன்னா, துளசிச் செடிக்கு பெரிய பராமரிப்பு அவசியமில்ல. எந்த மண்ணுல தூக்கிப் போட்டாலும் சுலபமா வளரும். தவிர மருத்துவ குணமும் நிறைந்தது. நீர்நிலைகள்ல கரைச்சா கூட சுத்தி செடிகளா வளரும். கரைக்காம அப்படியே ஒரு தொட்டில விநாயகரை தண்ணீர் ஊத்தி களிமண்ணா மாத்தி வெச்சாலும் பத்து நாட்கள்ல விதைகள் முளைக்க ஆரம்பிச்சிடும்!’’ என்னும் வினய் இதற்காக குளம் மற்றும் ஆற்றுப் படுகைகளில் உள்ள களிமண்ணை மட்டுமே பயன்படுத்துவதாகச் சொல்கிறார்.
‘‘இந்தச் சிலைகளை எந்த அச்சுகளும் இல்லாம மண்பாண்டங்கள் செய்கிற பணியாளர்கள்கிட்ட கைகளால செய்து வாங்கறோம்...’’ பெருமையுடன் அறிவித்தபடி பேச ஆரம்பித்தார் சுவர்ணகாமாட்சி.‘‘கானக்புரா, ராம்நகர், மகதி, ஜிக்னா மற்றும் ஜக்கூர் கிராம மண்பாண்டங்கள் செய்கிற பணியாளர்கள் இதுல இருக்காங்க. ஆறு இன்ச் தொடங்கி அதிகபட்சமா 2 அடி வரை தயாரிக்கிறோம். ரூ.150ல துவங்கி ரூ.2000 வரை விற்கறோம். போன வருஷமே இதை ஆரம்பிச்சுட்டோம். அப்ப வெறும் 500 சிலைகள் மட்டுமே செய்தோம்.
இந்த வருஷம் ஆயிரமா அதிகரிச்சிருக்கோம். இந்த சிலைகளின் முக்கியத்துவம் தெரிஞ்சு வர்றவங்களுக்கு கொடுக்கறோம்...’’ என்ற சுவர்ணகாமாட்சியை தொடர்ந்தார் வினய்.‘‘என்ன வருத்தம்னா, 10 அடி... 20 அடி விநாயகர் வேணும்னு கேட்கறாங்க. அதாவது எந்த சிலை பெருசுனு போட்டி போடறாங்க. இதுக்காகவா நாம பண்டிகைகளைக் கொண்டாடறோம்?
சுத்தமான களிமண்ல சிலைகள் செய்யறதால குறிப்பிட்ட உயரத்துக்கு மேல செய்ய முடியாது. அப்படிச் செய்யணும்னா திரும்ப செயற்கையான பூச்சுகளைத்தான் பயன்படுத்தணும். அதனால, நாங்க குறிப்பிட்ட உயரத்துக்கு மேல விநாயகரை செய்யறதில்ல...’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் வினய்.
ஷாலினி நியூட்டன்
|