நம்மால் முடியும்-கல்விதான் எங்களுக்கு கால்கள்!
அஜித் சார் டயலாக் நினைவுல இருக்கா..? ‘என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன்- ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா...’ இந்த டயலாக் அப்படியே எனக்குப் பொருந்தும்...’’முகமெல்லாம் புன்னகைக்கிறார் ராகவி. இந்தச் சிரிப்புதான் இவரது அடையாளம். நண்பர்கள் படைசூழ, மாற்றுத் திறனாளிகளை வெளிக் கொண்டுவர பல்வேறு விஷயங்களை முன்னெடுக்கும் ராகவி சங்கர், ஒரு வீல்சேர் யூசர்.
 அறை முழுதும் விருதுகள் நிறைந்திருக்க, சென்னை கேளம்பாக்கத்தில் ‘ஹெட்வே பவுண்டேஷன்’ என்கிற தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார். வீல்சேரில் சுழன்றபடியே மாற்றுத்திறனாளிகள் பலரையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கான வாய்ப்புகளை பல்வேறு வழிகளில் உருவாக்கிக் கொடுக்கிறார்.
 ‘‘‘ஹெட்வே’ என்றால் வளர்ச்சி... முன்னேற்றம். எல்லா மாற்றுத் திறனாளிகளின் பிரச்னைகளையும் என்னால் மாற்ற முடியாது. ஆனா, அவர்களை அவர்கள் காலில் நிற்க வைக்க என்னாலான முயற்சிகளை மேற்கொள்ள முடியும்!அதுக்கான முன்னெடுப்பே ‘ஹெட்வே பவுண்டேஷன்’. மாற்றுத் திறனாளிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு.
 அதை அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் எனத் தெரியாது. ஆனா, தடைகளைத் தாண்டி வெளியில் வரவும், அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வரவும், வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க சுற்றியிருப்பவர்கள் எந்த அளவுக்கு திறந்த மனத்துடன் துணை நிற்கிறார்கள் என்பதையும் சேர்த்துதான் இந்த ஹெட்வே பவுண்டேஷன்...’’ புன்னகைக்கும் ராகவி, பிறந்தது, வளர்ந்தது எல்லாம் கேளம்பாக்கத்தில்தான்.
‘‘அம்மா விஜயலட்சுமிக்கும் அப்பா கிருபா சங்கருக்கும் நான் ஒரே பெண். மூன்று மாதக் குழந்தையா இருக்கிறப்ப போலியோவால பாதிக்கப்பட்டேன். என் அம்மா தனியார் பள்ளில இந்தி டீச்சர். அவர் பணியாற்றிய பள்ளிலயே நானும் படிச்சேன். அதிகாலைல வீட்டு வேலைகளை முடிச்சு என்னையும் என் காலிபரையும் (caliper) சேர்ந்தே சுமந்து அரசு பேருந்துல ஏறி இறங்கி மெனக்கெட்டு பிசியோதெரபி மையத்துக்கு கூட்டிட்டுப் போவாங்க. அங்க எனக்கான பயிற்சிகள் முடிஞ்சதும் திரும்பவும் ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போவாங்க. இப்படித்தான் என் வாழ்க்கை போச்சு.
‘படிப்பு இல்லைனா வாழ்க்கை இல்லை’னு அப்பாவும் அம்மாவும் எனக்கு புரிய வைச்சாங்க. சில வகுப்புகள்ல டபுள் ப்ரமோஷன் வாங்கினேன். தாத்தா, பாட்டில ஆரம்பிச்சு எல்லாருமே என்னை ஊக்குவிச்சாங்க. 10வது, ப்ளஸ் 2 படிக்கிறப்ப என் கால்ல ஆபரேஷன் நடந்தது. அந்த நிலைலயும் படிச்சு 80% வாங்கினேன்...’’ என்ற ராகவியை பொறியியல் படிக்க வைக்க அவர் அம்மா விரும்பியிருக்கிறார்.
‘‘2001ல கேளம்பாக்கம் சென்னையின் ஒதுக்குப்புறமான பகுதி. குடைக்குள்ள இருக்கிற மாதிரி அம்மா நிழல்ல பாதுகாப்பா அதுவரை வாழ்ந்துட்டேன். இந்த சூழல்ல கவுன்சிலிங் வழியா தொலைவில் இருக்கும் கல்லூரில இடம் கிடைச்சா நானா சமாளிப்பது கடினம்.
அதனால வீட்டுக்குப் பக்கத்துல இருக்கும் காலேஜ்ல சேர முயற்சி செஞ்சோம். என் தோற்றத்தைப் பார்த்த நிர்வாகம் யோசிக்காம நிராகரிச்சுட்டாங்க. அந்த வலி இப்பவும் எனக்குள்ள இருக்கு.அப்புறம் அண்ணா பல்கலைக்கழகம் வழியே வீட்டுக்குப் பக்கத்துல இருந்த கல்லூரில பொறியியல் படிக்கத் தொடங்கினேன்...’’ என்ற ராகவி, தன் வாழ்வில் நண்பர்களுக்கு பெரிய ரோல் இருக்கிறது என்கிறார்.
‘‘போக்குவரத்து பிரச்னை உட்பட எல்லா நேரங்கள்லயும் ஃப்ரெண்ட்ஸ்தான் எனக்கு கால்களா இருந்தாங்க; இருக்காங்க! கல்லூரி நிர்வாகம், ஆசிரியர், பேராசிரியர்கள்னு எல்லாருமே உதவினாங்க.இயல்பாகவே எனக்கு நிர்வாகத் திறன் உண்டு. மென்பொருள் துறைல பணி செய்ய விருப்பமில்லை. எம்பிஏ படிக்க முடிவு செஞ்சு இந்துஸ்தான் கல்லூரில சேர்ந்து அவுட்ஸ்டாண்டிங் மாணவியா வெளில வந்தேன்.
மாற்றுத்திறனாளிகளுக்கு படிப்பும் வேலையும் ரொம்ப முக்கியம். அதனால கல்லூரிக் காலத்துலயே என் கரியர் எச்ஆர் துறைதான்னு முடிவு செய்துட்டேன். நண்பர்கள் வழியாகவும் ஆன்லைன் மூலமாகவும் தேடினதுல டைடல் பார்க்குல இருந்த ஒரு ஐடி கம்பெனியின் எச்ஆர் பிரிவுல வாய்ப்பு கிடைச்சது...’’ என்ற ராகவி, அங்கு தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
‘‘வேலை எனக்கு எத்தனை முக்கியமோ அதே அளவு நிறுவனத்துக்கு நானும் முக்கியம்னு புரிஞ்சுது. புதுசா வேலைக்கு சேர்றவங்களுக்கு வேலைக்கான பயிற்சியை வழங்க ஆர்வம் காட்டினேன். இதுகூடவே தில்லி பல்கலைக்கழகத்துல அஞ்சல்வழியே ‘டிரெய்னிங் அண்ட் மேனேஜ்மென்ட்’ல டிப்ளமோ முடிச்சேன்...’’ பெருமையுடன் சொல்லும் ராகவி, பள்ளியில் இருந்து தன்னுடன் படித்த நண்பர் செந்தில் குமாரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ‘‘எங்க மகிழ்ச்சிக்கு அடையாளமா நான் தாய்மை அடைந்தேன். வொர்க் ஃபிரம் ஹோம் முறைல வீட்ல இருந்துகிட்டே வேலை செஞ்சேன். அடுத்தடுத்து சாய் வேத்ஸ்வரூப், சாய் சரண்னு இரு குழந்தைங்க. அதனால வேலையை விடவேண்டிய சூழல்.
எந்தெந்த நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு எடுக்கறாங்கனு தெரிஞ்சுக்கற ஆர்வம் எப்பவும் எனக்கு உண்டு. அதனால இதுலயே பிஎச்.டி. பண்ணினேன். இதுதான் ‘ஹெட்வே பவுண்டேஷ’னுக்கான தொடக்கப் புள்ளி. 2016ல இதை ஆரம்பிச்சோம். எச்.ஆர் ஆக பணிபுரிஞ்ச அனுபவம் கை கொடுக்க மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த ஆரம்பிச்சோம்.பணி வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களையும் அழைத்து வரணும். தேவையான திறன் கொண்ட பணியாளர்களையும் நிறுவனத்திற்கு மேட்ச் செய்து கொடுக்கணும்.
முதல்முறை நடத்தின முகாம் வழியா 848 மாற்றுத் திறனாளிகள் பணி வாய்ப்பு பெற்றாங்க. எனக்குள்ள நம்பிக்கை அதிகரிச்சது. நிறைய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித்தர முடியும்னு நம்பினேன். கைல மொபைல் போன்... ஒரு லேப்டாப் இருந்தா போதும்... நிறைய வேலைகளை என்னால செய்ய முடியும்!
விளையாட்டு, இசை, ஆடல், பாடல், ஓவியம், கலை, ஃபேஷன் ஷோ... இப்படி மாற்றுத் திறனாளிகளுக்குள் மறைந்திருக்கிற திறமைகளை வெளிப்படுத்தத் தொடங்கினேன். எங்கள் ஆற்றலையும், திறமைகளையும் பார்த்த திரைப்பட நடிகர் கிட்டி, ‘உங்க முன்னாடி நானெல்லாம் ஒண்ணுமே இல்லை’னு சொல்லி எங்க அமைப்போட பிராண்ட் அம்பாசிடரா மாறினார். கமல், எங்க அமைப்பின் நிகழ்ச்சிகள்ல தொடர்ந்து கலந்துக்கறார்...’’ என்ற ராகவி, மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பில் மட்டுமல்ல, அவர்களுக்கான விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்தி வருகிறார்.
‘‘பல்வேறு துறைல இருக்கறவங்க, ஸ்போர்ட்ஸ் பர்சனாலிட்டிங்க, தொழில் முனைவோர்... இப்படி பல்துறை சார்ந்த 12 மாற்றுத்திறனாளிகளை அடையாளப்படுத்தி ஆண்டுதோறும் ‘ஐ’ ம் வாரியர்’ என்ற தலைப்புல காலண்டரை வெளியிடறோம். எல்லோர் வாழ்க்கைலயும் போராட்டங்கள் உண்டு. அளவுகோல்கள் வேணும்னா மாறுபடலாம். படிக்கணும், வேலைக்குப் போகணும், வீடு வாங்கணும், கார் வாங்கணும், கல்யாணம் பண்ணணும், பிறகு குழந்தை.... அப்புறம் குழந்தைங்க படிப்பு, பெரிய கார், பெரிய வீடு... இப்படி எல்லாரும் ஓடிட்டே இருக்கோம்.
இதுல மாற்றுத்திறனாளிகளின் பிரச்னை யாருக்கும் தெரியறதில்ல. அதை எங்களால புரிய வைக்கவும் முடியாது. எங்க வாழ்க்கையில் தடைகளைக் கடப்பதும், வெளியில் வருவதுமே பெரிய போராட்டம்தான்.ஆனா, பிரச்னைகளைப் பார்த்தா வாய்ப்புகள் கண்களுக்குத் தெரியாது!
வீல்சேர் கிடைக்கும்வரை நான் அவ்வளவு கஷ்டப்பட்டேன். வீல் சேர் இருந்தாலும் பொது இடங்களுக்கோ முக்கிய நிகழ்ச்சிகளுக்கோ போகணும்னா அங்க படிக்கட்டு இருக்குமானுதான் முதல்ல யோசிப்பேன்.
அடுத்தவர்களைச் சார்ந்தே வாழ்வது வேதனையானது. நானே என் வேலைகளைச் செய்யணும்... அது முடியுமா? இந்தக் கேள்விதான் முதல்ல இருந்து எனக்குள்ள இருக்கு. நாம் வாழும் வீடும், நாடும் எங்களுக்கு ஏற்றதா இல்ல. படிகளற்ற சரிவுப்பாதைல (ramp) சாதாரணமானவர்களால கடக்க முடியும். படிகள் இருந்தா எங்க நிலை? ஏன் இந்த சின்ன விஷயத்தைக்கூட யாரும் யோசிக்கறதில்ல?
காற்று வாங்கவும், கடலை ரசிக்கவும், பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும் எங்களுக்கும் ஆசை உண்டு!’’ அழுத்தம்திருத்தமாக சொல்கிறார் ராகவி.
மகேஸ்வரி
ஆ.வின்சென்ட் பால்
|