ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு காட்டையே இந்த விவசாயி உருவாக்கி இருக்கிறார்!
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள டண்டா கிராமத்துக்கு சென்றால் ஆச்சர்யத்தில் வாயைப் பிளப்பீர்கள்.
 காரணம், 50 ஆயிரம் மரங்களைக் கொண்ட பசுமையான காடுகள்.தீவிர பருவநிலை மாற்றங்களுடன் மிகவும் குறைந்த அளவில் மழை பொழியும் பாலைவனப் பிரதேசமான இந்த கிராமம் இப்படி பசுமையாக மாறியதற்குக் காரணம் 69 வயது இளைஞர்!அவர் பெயர், சுந்தரம் வர்மா. ஒரு மரத்துக்கு ஒரு லிட்டர் தண்ணீரை மட்டுமே ஊற்றி இந்தக் காட்டை உருவாக்கி இருக்கிறார் என்பதுதான் ஹைலைட்!
 1971ம் ஆண்டு அறிவியலில் பட்டம் பெற்ற சுந்தரம் வர்மா, சிறுவயது முதலே படிப்புக்கு இணையாக விவசாயத்துக்கும் முக்கியத்துவம் அளித்து வந்துள்ளார். அறிவியலில் இருந்த ஆர்வத்தால், விவசாயத்திலும் பல புதிய முயற்சிகளையும், அணுகுமுறைகளையும் கையாண்டு தன் கிராமத்தில் பிரபலமடைந்துள்ளார்.
‘‘1978ல மரங்களை வளர்க்க அரசு ஊக்குவிச்சது. இதனைத் தொடர்ந்து என் விவசாய நிலத்துல மரங்களை விதைச்சேன். அதுல 70% கன்றுகள் மரங்களா வளர்ந்தன. அடுத்து 1980ல, நீர்ப்பாசனம் செய்யாத இடங்கள்ல பருவமழை ஆரம்பிக்கறதுக்கு சில நாட்களுக்கு முன்னாடி மரங்களை நட்டு அதுக்கு போதுமான அளவு தண்ணீரைத் தினமும் கொடுத்து மரங்களை வளர்த்தேன்.
ஆனா, அந்த ஆண்டு இறுதில பயிரிட்ட மரக்கன்றுகள்ல 85% அழிஞ்சுடுச்சு...’’ என்று சொல்லும் சுந்தரம் வர்மா, 1982ல் மீண்டும் மரங்களை நட்டிருக்கிறார்.‘‘இந்த முறை என் வீட்டுக்குப் பக்கத்துல விவசாய நிலத்தை ஒட்டி, மரக்கன்றுகளை நட்டேன். மரக்கன்றுகளை நட்டப்ப ஊத்தின தண்ணீரோடு அதை மறந்துட்டு பயிரிட நிலத்தை சமன் செய்யற வேலைல இறங்கிட்டேன்...’’ என்ற சுந்தரம் வர்மாவுக்கு அதிசயம் காத்திருந்தது. ‘‘கண்டிப்பா மரக்கன்றுகள் எல்லாம் அழிஞ்சிருக்கும்னுதான் நினைச்சேன்.
ஆனா, ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாம செடிகள் எல்லாம் தழைச்சு வளர்ந்திருந்தது! இது எப்படி சாத்தியமாச்சு..? இந்தக் கேள்வி மண்டையைக் குடைஞ்சுது. பதிலுக்காக இரண்டு மாசங்கள் நிலத்துலயே இருந்து ஆராய்ச்சி செஞ்சேன். அப்பதான், பயிரிட நிலத்தை சமன் செய்ய முற்படறோம் இல்லையா..? இதனால மண்ணின் ஈரப்பதம் நிலத்துலயே பாதுகாக்கப்பட்டு ஆவியாக மாறுவதை தடுத்திருக்குனு புரிஞ்சுது. இதனால நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டு வறண்ட பூமிலயும் தானாகவே மரங்களுக்கு தண்ணீர் கிடைக்குதுனு உணர்ந்தேன்.
தொடர்ந்து 7 - 8 வருட ஆராய்ச்சில ஊட்டி, கொடைக்கானல் மாதிரியான மலைப்பகுதிகள்ல வளரும் யூகலிப்டஸ் மரங்களைக் கூட வறண்ட நிலங்கள்ல ஒரு லிட்டர் தண்ணீர்ல விளையச்செய்ய முடியும்னு நிரூபிச்சேன்...’’ என மகிழ்ச்சியுடன் சொல்லும் சுந்தரம் வர்மா, தனது ஆராய்ச்சியை மேலும் மேம்படுத்திக்கொள்ள, Dry Agro Forestry (வறண்ட நிலத்தில் வேளாண் வனவியல்) என்ற படிப்பை படித்து அதில் பயிற்சியும் பெற்றிருக்கிறார்! இன்று தனது விவசாய நிலத்தில் வேப்பமரம் மற்றும் மாதுளை, மிளகாய், கொத்தமல்லி, நெல்லிக்காய் என அனைத்து வகையானசெடிகளையும் வளர்க்கிறார்.
இப்படி பல்வேறு காலகட்டங்களில் சுந்தரம் வர்மா நட்ட மரங்கள், இன்று 50 ஆயிரமாக பெருகி இருக்கிறது! இந்த முறையில் வளரும் செடிகள், முதல் இரண்டு வாரங்களைக் கடந்துவிட்டால் 100% மரமாக வளர்ந்து விடுமாம்.அதேநேரம் இந்த ஒரு லிட்டர் தண்ணீரில் விளைச்சல் செய்யும் முறை, மரங்கள் வளர்க்கச் சிறந்ததாக இருந்தாலும், விவசாயம் செய்ய உகந்ததாக இல்லை என்று கூறும் சுந்தரம் வர்மா, தொடர்ந்து குறைந்த அளவு தண்ணீரில் விவசாயம் செய்யும் முறைகள் பற்றி ஆராய்ச்சிகள் செய்து வருகிறார். சுந்தரத்தின் இந்த முயற்சி பல தேசிய விருதுகளையும், சர்வ தேச விருதுகளையும் இவருக்கு தேடித் தந்திருக்கிறது.
ஒரு லிட்டர் தண்ணீரில் மரம் வளர்ப்பது எப்படி?
*பருவ மழை ஆரம்பிக்கும் முன் விளை நிலத்தை சமன் செய்து, மழைநீர் வெளியேறாமல் தடுக்க வேண்டும். *முதல் மழை பெய்த 5 - 6 நாட்களுக்குப் பிறகு களைகளை அகற்றி, ஒன்றிலிருந்து இரண்டடி ஆழத்தில் உழுது, மழைநீர் மேலே வராமல், நிலத்தில் தங்கும்படி செய்யவேண்டும். மலைகளில் அல்லது சரிவுகளில் உழ முடியாதபோது, 60 - 90 செ.மீ ஆழம் வரை, மண்வெட்டி மூலம் மண்ணைத் தோண்டவும். *மறுபடியும், கடைசி பருவ மழைக்கு பத்து நாட்களுக்கு முன் ஆழமாக உழவேண்டும். இதன்மூலம், தண்ணீர் நிலத்தடியிலேயே தங்கியிருக்கும். *இரண்டாவது முறையாக உழுத சில நாட்களுக்குப் பின் நிலத்தின் நடுவில், ஓர் அடி ஆழத்தில், 5 - 6 அங்குல அகலத்தில் குழிகளைத் தோண்டவேண்டும். *தோண்டிய குழியில் மரக்கன்றுகளை நட்டு, அதன் வேர்கள் நிலப்பரப்பிலிருந்து குறைந்தது 20 செ.மீ அடியில் இருக்கும்படி உறுதிசெய்ய வேண்டும். *அடுத்து உடனடியாக ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி செடிகளை வளர்க்க வேண்டும். இதற்கடுத்து, உரிய நேரத்தில் களையெடுத்தல் தவிர வேறு எதுவும் செய்யத் தேவையில்லை. மரங்கள் தானாக வளரும்.
ஸ்வேதா கண்ணன்
|