எழுச்சியுறும் மாணவர் போராட்டங்கள் மாறுமா அரசியல் களம்?



மாணவர் போராட்டங்கள் தமிழக வரலாற்றோடு நெருக்கமான தொடர்புடையவை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஊக்கமுடன் கலந்துகொண்ட கல்லூரி மாணவர்கள் பலர் பின்னாட்களில் அரசியல் தலைவர்களானது வரலாறு. திராவிட இயக்கம் என்ற மாபெரும் இயக்கமே மாணவர்கள், இளைஞர்கள் எழுச்சியின் விளைவால் உருவான ஒன்று.

இவ்வளவு ஏன்? இந்தியத் துணைக் கண்டத்தின் அரசியல் விடுதலையைச் சாத்தியமாக்கியதும் இந்த இளையோர் எழுச்சிதான் என்பதை வரலாறு அறிந்தோர் ஒப்புக்கொள்வர். இப்படியான பின்புலத்தில் வைத்து நோக்கும்போது இன்றைய தினம் நாடு முழுதும் உருவாகிவரும் மாணவர் எழுச்சி முக்கியமானதாகிறது.2020 ஜனவரி 5 அன்று, முகமூடி அணிந்த குண்டர் கும்பல் ஒன்று, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக(ஜேஎன்யு)த்தின் வளாகத்திற்குள் ஓர் அமைதிப் பேரணி நடத்திக் கொண்டிருந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் கொடூரமான முறையில் தாக்கியது.

இந்தத் தாக்குதல் மூலமாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நேரடியாகவே காயங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதோடு, அவர்களிடையே என்றென்றும் அச்ச உணர்வையும் உருவாக்க வேண்டும் என்பதும் குண்டர் கும்பலின் வெளிப்படையான நோக்கமாக இருந்தது.

ஜேஎன்யு-விலிருந்து ஊடகங்களில் காட்டப்பட்ட சித்திரங்கள் அனைத்தும் பயங்கரமாக இருந்தன. புத்தகங்கள் நிரம்பி வழிந்த பழைய மர அலமாரிகளுடனும், மிகச்சிறிய அளவிலான ஹீட்டர் - ஸ்டவ் போன்ற அடிப்படைத் தேவைகள் இருந்த அலமாரி மற்றும் மிதிபட்ட மெத்தைகள் மற்றும் போர்வைகள் தரைகளில் சிதறிக்கிடக்கும் நிலையில் இருந்த சூறையாடப்பட்ட அறைகளைக் காட்டின.

ஊடகங்களில் வெளியாகியுள்ள அறிக்கைகளிலிருந்து, கதவுகளில் அண்ணல் அம்பேத்கர் படங்கள் இருந்த அறைகள் அல்லது அந்த அறையிலிருந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூக அடையாளத்துடன் இருந்தவர்கள் என்று கண்டறிந்து, அதை தேர்வு செய்து தாக்கியிருக்கின்றனர் என்பதையும் அவை சுட்டிக்காட்டுகின்றன.

ஜேஎன்யு என்பது வெறுமனே ‘பயிற்சி அளிப்பதற்கும்’ மேலாக, மாணவர்களைக் ‘கற்பிப்பதிலும்’ நம்பிக்கை கொண்ட ஒரு பல்கலைக்கழகமாகும். இங்கே பயிலும் மாணவர்களில் பலர், நாட்டின் வெகுதூரங்களிலிருந்தும், அடித்தட்டு நிலையில் வாழும் சமூகப் பின்னணியிலிருந்தும் வந்தவர்கள்.

தவிர ஜேஎன்யு மாணவர்கள், அறிவை விருத்தி செய்திடவும், விழுமியங்களைப் பாதுகாத்திடவும் பல்வேறுவிதமான சொற்பொழிவுகள் மற்றும் நடைமுறைகளில் திறந்த மனதுடன் பங்கேற்கும் பாரம்பர்யத்தைப் பெற்றவர்கள்.  

இப்படியான சூழலில்தான் இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.இந்தத் தாக்குதல்களுக்கு எல்லாம் எதிராக ஜேஎன்யு மாணவர்கள் எழுச்சியுடன் தொடர்ந்து போராடி வருகிறார்கள். மாணவர்களின் இந்தப் போராட்டங்களை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் அரசுகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.

மறுபுறம் என்ஆர்சி சட்டத்துக்கு எதிராக தில்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நிகழ்த்திய போராட்டமும் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. அதிலும் தன் சக மாணவன் தாக்கப்படும்போது அவரைக் காப்பாற்றும் மாணவிகள் மூவர், காவல்துறையை வீரத்துடன் எதிர்த்து நிற்கும் புகைப்படம், சர்வதேச அளவில் புகழ்பெற்றது.

இந்த மாணவர் எழுச்சியைத் தொடர்ந்துதான் என்ஆர்சி சட்டத்துக்கு எதிரான போராட்டம் எல்லோராலும் கவனிக்கத் தக்கதாக மாறியது. இதனைத் தொடர்ந்து இந்த சட்டம் அமலாகாது என்று பிரதமர் மோடி ஒரு பக்கம் சொல்ல... மறுபுறம் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த சட்டம் நிச்சயம் அமலாக்கப்படும் என்று சூளுரைத்தார்.

இப்படி, ஆளும் தரப்பின் அதிகார மையங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் அளவுக்கு இந்த மாணவர் போராட்டங்கள் இருந்தன; இருக்கின்றன.தில்லி பல்கலைக்கழகங்களில் ஆளும் தரப்பு காட்டிய கடுமைக்கு பதிலடியாகவே தில்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

மாணவர் எழுச்சி என்பது ஆட்சியதிகாரத்தையே மாற்றக்கூடிய மாபெரும் சக்தி என்பது இந்தத் தேர்தலிலும் நிரூபணமாகியுள்ளது.தமிழகத்தைப் பொறுத்தவரை ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் ஒருங்கிணைந்ததுதான் கடைசி மிகப் பெரிய எழுச்சி எனலாம். ஆனால், அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அப்போதைய ஆளும் தரப்பு அந்த எழுச்சிக்கு ஆதரவும் அளித்ததால் அந்த மாபெரும் இளையோர் எழுச்சி அணைத்துக் கொல்லும் ராஜதந்திரத்தில் பலியானது.

இன்று தமிழகத்தைப் பொறுத்தவரை மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் இப்போது ஆட்சியில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் மீது நல்ல எண்ணம் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பிற இணைய வெளிகளிலும் பதிவாகும் மீம்ஸ், மற்றும் விமர்சனங்களைப் பார்த்தாலே இதைப் புரிந்துகொள்ளலாம்.

ஆளும் கட்சிகளால் நியமிக்கப்பட்டிருக்கும் தொழில்முறை நிறுவனங்கள் இந்த இணையவெளிகளில் தம் ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி விளம்பரம் செய்தாலும், ஆளுங்கட்சி தரப்பினர் தம் கட்சிக்காக விவாதித்துக் கொண்டிருந்தாலும், எந்தக் கட்சியையும் சாராத மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளை கிண்டலாகவும் சீரியஸாகவும் விமர்சிப்பது அதிகரித்து வருகிறது.

இந்த மாணவர் மற்றும் இளையோர் சக்திதான் இந்தியாவின் எதிர்காலம். இனிவரும் காலத்தில் ஆட்சிக்கு வர விரும்பும் எந்த ஓர் அரசியல் தரப்பினரும் இந்த இளையோர் சக்தி இல்லாமல் வெல்வது பகல் கனவுதான். இந்த மாணவர் சக்தியினர் எந்த அரசியல் தரப்பையும் சேர்ந்தவர்கள் அல்ல என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்.

இந்தியாவில் இளைஞர்கள் வாக்களிக்கும் விகிதம் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் கடைசி சட்டமன்றத் தேர்தலில் இளையோர் வாக்குவிகிதம் ஏழு சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது என்கிறார்கள். முந்தைய தலைமுறை இளைஞர்கள் அரசியல் ஒரு சாக்கடை என்று அதிலிருந்து விலகிச் சென்றார்கள்.

இன்றைய தலைமுறையோ கொஞ்சம் கொஞ்சமாக அரசியலைக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறது. இதன் வெளிப்பாடுதான் இந்தியா முழுதும் பரவலாக எழுச்சி பெற்று வரும் மாணவர் போராட்டங்கள். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்படி மாணவர் சக்தி எழுச்சி பெற்றுவருவது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்!

இளங்கோ கிருஷ்ணன்